கர்மவினை பற்றிய பேச்சுக்களை இந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் நிறையவே கேட்டிருப்பீர்கள். எனினும் செயல் - கர்மவினை, அல்லது காரணம் - காரியம் எனும் முடிவே இல்லாதது போலத் தோன்றும் சுழற்சியிலிருந்து எப்படி மீள்வது? முக்திக்கான பாதையில் செய்வதற்கு சிறந்த செயல்கள் ஏதும் உள்ளனவா? உண்மையைச் சொன்னால், செயல் எதுவும் செய்யாதிருப்பதே சிறந்தது - உடலளவிலும் மனதளவிலும் எந்த அசைவும் இல்லாதிருப்பதே சிறந்தது. ஆனால் எவ்வளவு பேரால் அப்படி இருக்கமுடியும்? ஆங்கிலேய ஆட்சியின் இறுதிகாலத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வலுவடைந்திருந்த அச்சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு தங்கள் ஆட்சி சீக்கிரமே முடிந்துவிடும் என்பது தெரிந்திருந்தது. அவர்கள் வெளியேறுவதற்கு முன்பு, முடிந்த அளவு செல்வங்களை அபகரித்துச் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். பெரியளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதையும் பாதித்தபோது, அவர்கள் கவனம் தென்னிந்திய கோயில்கள் மீது திரும்பியது. மக்கள் ஏழ்மையிலும் பட்டினியிலும் வாடியிருந்தபோதும், தங்கள் கடவுள்களை நன்றாக கவனித்துக்கொண்டனர். அதனால் கோயில்கள் மிகப்பெரிய புதையல்களை கோக்கரித்து வைத்திருந்தன.

கோயில்களை வருமானத்திற்கு வற்றா வழியாகப் பார்த்த ஆங்கிலேயர்கள், அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஒருநாள் வரிவசூலிக்கும் கலெக்டர் ஒருவர், ஒரு கோயிலின் கணக்குப் புத்தகத்தில் இப்படி ஒரு பதிவைக் கண்டார்: "ஒன்னும் பண்ணாத சாமிக்கு சாப்பாடு - மாதம் இருபத்தைந்து ரூபாய்." இதைக் கண்ட கலெக்டர், "ஏதும் செய்யாத சாமிக்கு ஏன் சாப்பாடு போடவேண்டும்? இதனை ரத்து செய்யுங்கள்." என்றார். இதனால் சஞ்சலமடைந்த கோயில் பூசாரி, கோயில் தருமகர்த்தாக்களிடம், "அவருக்கு எப்படி உணவளிக்காமல் இருப்பது?" என்று முறையிட்டார். ஒரு தருமகர்த்தா, அந்த கலெக்டரை ஒன்றும் செய்யாத சுவாமியிடம் அழைத்துச்சென்றார். அந்த தருமகர்த்தா ஏதும் செய்யாமல் சுவாமியைப் போலவே கலெக்டரை இருக்கச்சொன்னார். "இதென்ன பெரிய விஷயம்?" என்று நினைத்த கலெக்டர், ஐந்து நிமிடத்தில் "சரி, இவருக்கு சாப்பாடு கொடுங்கள்" என்று கூறிச்சென்றார். அந்த அளவு ஒன்றும் செய்யாது இருந்ததால், பிரம்மாண்டமான ஒன்று அங்கு நிகழ்ந்துகொண்டு இருந்தது. அந்த பரிமாணம் பற்றி துளியும் அறியாதபோதும் கலெக்டர் திகைத்துப்போனார், தன் முயற்சியைக் கைவிட்டார்.

இப்படி முற்றிலும் ஏதும் செய்யாத ஒருவர், கர்மப்பதிவுகள் மற்றும் கர்மத்தின் சுழற்சியிலிருந்து விடுபட்டிருக்கிறார். உங்கள் கர்மப்பதிவுகளுடன் அடையாளப்பட்டு இருக்கும்வரை, கடந்தகால நிகழ்வுகள் தம்மை மீண்டும் மீண்டும் செயல்படுத்திக் கொள்கின்றன. கர்மவினை என்பது செயலையும் பழைய பதிவுகளையும் சேர்த்தே குறிக்கிறது. உங்கள் ஞாபகங்கள் உங்களை ஆளும்வரை அதுவே உங்களை செயல்நோக்கி உந்தித்தள்ளும். உங்கள் கடந்தகால ஞாபகங்களில் இருந்து உங்களை முழுவதுமாக விலக்கிக்கொண்டால் மட்டுமே உங்களால் அசைவின்றி அமரமுடியும். நீங்கள் ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம் - பத்து நிமிடங்களுக்கு எதுவும் செய்யாதிருக்க முயற்சியுங்கள். எண்ணங்கள், உணர்வுகள், அசைவுகள் ஏதுமின்றி இருக்கவேண்டும். இது உங்களுக்கு இன்னும் சாத்தியமாகவில்லை என்றால், உங்கள் மனதில் ஆயிரம் விஷயங்கள் ஓடுகிறது, உங்களால் அசையாமல் அமரமுடியவில்லை என்றால், செயல் என்பது தவிர்க்கமுடியாத தேவையாகிவிடுறது. பெரும்பாலான மனிதர்களுக்கு இது பொருந்தும். அப்படியானால் எப்படிப்பட்ட செயலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? "பேருந்து ஓட்டுவதா? சைக்கிள் ஓட்டுவதா? நதியில் நீந்துவதா? அலுவலகத்தில் அமர்வதா? நண்பர்களிடம் கிசுகிசுப்பதா? போதைப்பொருட்கள் பயன்படுத்துவதா?" உங்கள் செயலின் தன்மை ஒரு பொருட்டல்ல, அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் விஷயம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பெரும்பாலான மனிதர்களின் உடல் மற்றும் மனம் இருக்கும் நிலையில், அவர்களுக்கு செயல் அத்தியாவசியமாகிறது. உடலையும் மனதையும் எல்லா செயல்களிலிருந்தும் விடுதலையான நிலைக்குக் கொண்டுவர, நிறையவே வேலை செய்யவேண்டும். இப்போதைக்கு, உடலையும் மனதையும் ஒரு விழிப்பான, துடிப்பான நிலையில் வைத்திருப்பது நல்லது. அப்படி வைத்திருந்தால் நேரம் வரும்போது நீங்கள் தயாராக இருப்பீர்கள். அதுவரை உங்களை நீங்கள் இடையறா செயலுக்குள் வீசிட வேண்டும். உங்களுக்கு நீங்களே இடைவெளி கொடுக்காமல் இருப்பது முக்கியம். அதோடு செயல் உங்களைப் பற்றியதாக இருக்கக்கூடாது. வேறொருவருக்குத் தேவைப்படும் ஏதோவொன்றை நீங்கள் செய்யும்போது, நீங்கள் செய்யும் செயல் உங்களுடையதாக இருக்காது. உங்களுக்கு கிடைப்பதற்கு எதுவுமில்லை, காண்பிப்பதற்கும் எதுவுமில்லை. செயலை ஒரு அர்ப்பணிப்பாக செய்வது, உங்களுக்குள் கர்மவினையைப் பதிவு செய்யும் ரிக்கார்டரை அணைத்து வைப்பதற்கான எளிமையான வழி. ஏதோவொன்றைச் செய்யும் தேவை உங்களுக்குள் இருக்கும் வரை, செயலோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக்கொள்ளும் வரை, இந்த கர்மத்தை உங்களுக்கென உங்கள் ரிக்கார்டர் பதிவு செய்யும், அதன் விளைவுகளும் பெருகும். மாறாக, உங்களுக்கென எதையும் செய்வதற்கான தேவை இல்லாமல், ஏதோவொன்று வேறொருவருக்கு அல்லது வேறொன்றுக்குத் தேவைப்படுவதால் நீங்கள் செய்தால், உங்கள் செயலினால் கர்மப்பிணைப்பு ஏற்படாது.

உங்களால் முடிந்தால், எந்த செயலும் செய்யாதிருப்பதே சிறந்தது. ஆனால் உடலளவில், மனதளவில், உணர்வளவில், என்று எந்த நிலையிலும் ஏதும் செய்யாதிருக்க நிறையவே தேவைப்படுகிறது. அந்த நிலையை அடையும்வரை, செயலுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், செயலை ஒரு அர்ப்பணிப்பாக செய்யுங்கள். செய்யத் தேவையானது ஏதாவது இருந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் சும்மா உட்காருங்கள். சுய-முக்கியத்துவத்தால் செயல் செய்யவில்லை என்றால், அதற்கு கர்மவிளைவுகள் இருக்காது. கர்மவினை என்பது சுய-திருப்தி மற்றும் சுய-முக்கியத்துவத்தால் வளர்கிறது. நீங்கள் முழு உயிரோட்டத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து புதிய கர்மப்பதிவுகளை சேகரிக்காது இருந்தால், உங்கள் பழைய கர்மவினை கரைந்துபோகத் துவங்கும். இதுதான் கர்மப்பதிவின் இயல்பு. கர்மப்பத்திவின் பசையை புதிதாக நீங்கள் சேர்த்துக்கொண்டே இருந்தால் மட்டுமே கர்மப்பதிவுகளின் பழைய அடுக்குகளால் உங்கள்மீது ஒட்டிக்கொள்ள முடியும். இன்று நிகழ்வது எதுவும் உங்கள்மீது ஒட்டவில்லை என்றால், கடந்தகாலத்தில் நடந்ததன் கர்மப்பதிவுகள் சிதைந்துபோய்விடும்.

ஒவ்வொரு செயலையும் ஒரு அர்ப்பணிப்பாக நீங்கள் செய்தால், உங்கள் கர்மத்தின் பிடி தன்னை தளர்த்திக்கொள்ளத் துவங்கும். ஏதும் செய்யாதிருக்கும் நிலையை நீங்கள் அடையும்வரை, என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் உங்களுக்குள் அதை ஒரு அர்ப்பணிப்பாக செய்யுங்கள். அர்ப்பணிக்கும் நிலையில் இருக்கும்போது, நீங்கள் அருளுக்குப் பாத்திரமாகுகிறீர்கள்.

 

அன்பும் அருளும்,