ஞானோதயம் அடைய எளிய வழி
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஞானோதயம் பற்றி கற்பனைகள் வளர்த்து கனவில் மிதப்பவர்களை சத்குரு நிலத்தில் காலூன்ற வைக்கிறார். நீங்கள் தற்போது எங்கு இருந்தாலும், உங்களை உறுதியாக ஞானோதயம் நோக்கி இட்டுச் செல்லக்கூடிய எளிமையான உக்தி ஒன்றையும் நமக்கு வழங்குகின்றார், “நிஷ்ச்சல தத்வே ஜீவன் முக்தி!”
ஒரு இதயத்துடிப்பில்.
மென்மையான ஒரு
சுவாசத்தில். துடிக்கும்
இரத்த நாளத்தில். உயிர்
நடக்கிறது, மரணமும்தான்.
கடக்கும் ஒரு கணப்பொழுது,
படைப்பின் நடனத்தையும்,
Subscribe
அதன் மூலத்தின் நிச்சலனத்தையும் உள்ளடக்கியுள்ளது.
வீடியோவின் எழுத்தாக்கம்
கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, நான் 100% நேர்மையாக ஞானோதயத்தை தேடவில்லை. ஏனென்றால், என் எல்லைகளை பார்க்கும்போது, இது என் வாழ்நாளில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என்னுடைய இந்த மனநிலையை நான் எப்படி மாற்றுவது? மனிதர்கள் இந்த சாத்தியத்திற்கு நெருக்கமாக வருவதை நீங்கள் கண்டதுண்டா? எனக்கான வாய்ப்புகள் என்ன?
சத்குரு:
ஞானோதயத்தை தேடிப்போகாதீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒன்றை எப்படி தேடுவீர்கள்? உங்களுக்கு தெரிந்ததைத்தான் உங்களால் தேடமுடியும்? உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத் தேடி என்ன பயன்? உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றின் பின்னால் ஓடுவதால் என்ன பயன்? உங்களுக்கு தெரியாத ஒன்றிற்குள் காலடி எடுத்துவைக்க ஒரே வழி, தொடர்ந்து நடப்பதுதான். திசைமாறாமல் தொடர்ந்து நடந்துசெல்ல வேண்டும். அது தவறான திசையாக இருக்கலாம். அது விஷயமல்ல, ஆனால் தொடர்ந்து நடக்கவேண்டும்.
இடையறாது நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள எப்போதுமே இடமிருக்கிறது. அப்படி மேம்படுத்துங்கள், நீங்கள் எங்கு சென்றடைகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பூமி உருண்டையானது. ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வராமல், நீங்கள் தொடர்ந்து நேராக நடந்துசென்றால், ஏதோவொரு இடத்தை நிச்சயமாக சென்றடைவீர்கள். அதை எவராலும் உங்களிடமிருந்து தட்டிப்பறிக்க முடியாது. தற்போது பிரச்சனை என்னவென்றால்... உங்கள் வீட்டில் நாய் இருந்தால் இது உங்களுக்கு தெரிந்திருக்கும், அதன் வாலை நீங்கள் தொட்டுவிட்டு விலகினால், அவர் தனது வாலைத் துரத்தி சுற்றிச் சுற்றி நடக்கும். மனிதர்கள் பலர் அதைத்தான் செய்கிறார்கள். தங்கள் வாலையே துரத்துகிறார்கள். ஞானோதயம் தேடுவதும், ஒருவர் தன் வாலை தானே துரத்துவதும் வெவ்வேறல்ல. ஞானோதயம் என்பது அவரவர் புனையும் கதை, அப்படி ஒன்று இருக்கிறதென்று வேறு எவரும் உங்களுக்கு சொல்லவில்லை.
ஆனால் நிச்சயமாக, இரு மனிதர்களுக்கிடையே, ஒருவர் இருக்கும் விதத்திலேயே இன்னொருவரைவிட வெற்றிகரமாக இருப்பார். அவருடைய பணத்தால் அல்ல, செல்வச்செழிப்பால் அல்ல, அவர்களின் கல்வித்தகுதியால் அல்ல. இருக்கும் விதத்தினாலேயே அப்படி இருப்பார். இடையறாது நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள எப்போதுமே இடமிருக்கிறது. அப்படி மேம்படுத்துங்கள், நீங்கள் எங்கு சென்றடைகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஞானோதயம் பற்றி நீங்கள் கற்பனை வளர்த்தால், அந்த சொற்பமான எண்ணத்தைத்தான் நீங்கள் துரத்துவீர்கள். ஆனால் அந்த எண்ணம் ஞானோதயம் ஆகிவிடாது, ஏனென்றால் அது உங்கள் எண்ணம். நீங்கள் உணராத ஒன்றைப்பற்றி நீங்கள் கற்பனை செய்யமுடியாது.
இதற்கு அளவுகோல் எதுவும் இல்லை. “இதுதான் ஞானோதயம்” என்று எதுவுமில்லை.
உங்கள் எண்ணங்கள், கவலைகள் மற்றும் இதுவரை அறிந்த விஷயங்கள் அனைத்தும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த பல விஷயங்களை பல்வேறு விதங்களாக கலந்த கதம்பமாக இருக்கக்கூடும். இது கடவுளைப் போன்றது. நீங்கள் மனிதராக இருப்பதால் கடவுள் ஒரு மிகப்பெரிய மனிதர் என்று நினைக்கிறீர்கள், இல்லையா? நம் கலாச்சாரத்தில் நாம் இன்னும் கொஞ்சம் தாராளமாக இருக்கிறோம், நாம் விலங்குகளையும், பாம்புகளையும், யானைகளையும், பசுக்களையும், எல்லாவற்றையும் கடவுளாக்கியுள்ளோம். ஏனென்றால் அவரவர் தனக்கென ஒரு கடவுளை வைத்துக்கொள்ளலாம் என்பதைப் புரிந்திருக்கிறோம்.
ஞானோதயம் பற்றி யோசிக்காதீர்கள். உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்வீர்கள், நின்ற இடத்தையே சுற்றுச்சுற்றி வருவீர்கள். நீங்கள் எவ்வித நிபந்தனையுமின்றி அற்புதமான ஒரு மனிதராக மாறினால், நீங்கள் ஞானோதயம் அடைந்துவிட்டீர்களா இல்லையா என்று கவலைப்படாதீர்கள். மற்றவர்கள் வேண்டுமானால், “என்னோடு ஒப்பிடும்போது இவர் ஞானோதயம் அடைந்தவர் போல் இருக்கிறார்” என்று சொல்லலாம். எல்லோரும் யாரோ ஒருவரோடு தங்களை ஒப்பிட்டு, அவர் ஞானம் அடைந்தவர் என்று அழைக்கிறார்கள், “நான் எப்படி இருக்கிறேன் என்று பாருங்கள், அவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள், அவர் ஞானோதயம் அடைந்தவராகத்தான் இருக்கக்கூடும்.” இதற்கு அளவுகோல் எதுவும் இல்லை. “இதுதான் ஞானோதயம்” என்று எதுவுமில்லை. தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும்போது அனைவரும் அற்புதமானவர்களே. நீங்கள் விரும்பும் விதமாக அனைவரும் நடந்துகொண்டால், நீங்களும் அற்புதமானவர்தான். நீங்கள் விரும்பும் விதமாக மக்கள் நடந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் விரும்பும் விதமாக வாழ்க்கை நடக்கவில்லை என்றால், அப்போதும் அற்புதமாக இருப்பதற்கு, உங்களுக்கு வேறொரு நிலையிலான உறுதி தேவைப்படுகிறது.
உங்கள் வாழ்க்கையில் எல்லாம் தவறாக நடக்கும்போது - உங்கள் குடும்பத்தில், வேலையில், வாழ்வில், உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் தவறாக நடக்கும்போதும் நீங்கள் அற்புதமாக இருந்தால், உங்களை ஞானோதயம் அடைந்தவர் என்றே தற்போது சொல்லாம். ஒரு அளவுகோல் வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அற்புதமான ஏதோ ஒன்று உங்களுக்குள் நடந்தால், அதை எதுவும் பாதிக்கமுடியாத அளவு அது அற்புதமாக இருந்தால், பிறர் உங்களை ஞானமடைந்தவர் என்று சொல்வார்கள், நீங்கள் சொல்லமாட்டீர்கள்.
“நான் ஞானோதயம் தேடுகிறேன்” என்றால், ஒருநாள், “நான் ஞானம் அடைந்துவிட்டேன்” என்று அறிவிக்கக் காத்திருக்கிறீர்கள். அப்போது எல்லோரும் உங்களை பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள். பிறர் உங்களைக் கண்டு, “இவர் ஞானோதயம் அடைந்துவிட்டார்” என்று சொன்னால் அற்புதம். நீங்களே “நான் ஞானோதயம் அடைந்துவிட்டேன்” என்று சொன்னால், உங்களுக்கு பைத்தியமாகத்தான் இருக்கமுடியும், இல்லையா? நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள், ஆனால் அதற்கு நீங்கள் விசுவாசமாக இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், சிலசமயம் பரவசமாக இருக்கிறீர்கள், அன்பாகக்கூட இருக்கிறீர்கள், ஆனால் அந்த குணங்களுக்கு நீங்கள் விசுவாசமாக இல்லை. ஒரு மலரை எடுத்துக்கொண்டால், ஒரு அழகிய மலர், நறுமணம் வீசுகிறது.
உங்கள் அற்புதமான குணத்தின்மேல் உங்களுக்கு விசுவாசமில்லை. ஆனால் அந்த மலர் அதன் குணத்திற்கு மிகுந்த விசுவாசத்துடன் இருக்கிறது - நீங்கள் அதனை பறித்தாலும் நறுமணமாக இருக்கிறது, ஒரு பசு அதனை மென்று தின்றாலும் நறுமணமாக இருக்கிறது, தேனீக்கள் மொய்த்தாலும் நறுமணமாக இருக்கிறது, கோபப்பட்டு துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. ஒரு சமயம் அற்புதமாக இருப்பீர்கள், யாரோ சற்றே சீண்டினால்கூட, உடனே துர்நாற்றம் வீசத் துவங்குவீர்கள். உங்கள் அற்புதமான குணத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இல்லை.
ஒருமுறை இப்படி நடந்தது - சங்கரன் பிள்ளை செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அங்கு ஒரு அழகிய கோல்டன் ரெட்ரீவர் நாய் இருந்தது. ஒருவர் அந்த பெரிய நாயை வாங்க வந்தார். “விலை எவ்வளவு?” என்று கேட்டார். “2000 டாலர்” என்று சங்கரன் பிள்ளை கூறினார். “என்ன? நாய்க்கு 2000 டாலரா? இது அதிகமில்லையா?” என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, “இந்த நாயைப் பாருங்கள், இது மிகவும் அழகாக இருக்கிறதல்லவா?” என்றார். வந்தவர் நாயைப் பார்த்து, ”ஆம்! இது மிகவும் அழகாக இருக்கிறது” என்றார். அவர் பணத்தை கொடுத்துவிட்டு நாயை கூட்டிச்செல்லும் தருணத்தில், “இந்த நாய் விசுவாசமாக இருக்குமா?” என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை, “மிகுந்த விசுவாசத்துடன் இருக்கும்! நான் ஏழுமுறை இந்த நாயை விற்றபோதும், கிளம்பிய சிலமணி நேரத்திலேயே என்னிடம் திரும்பி வந்துவிட்டது” என்றார்.
எனவே உங்கள் அற்புதமான குணத்திற்கு நீங்கள் விசுவாசத்துடன் இருக்கிறீர்களா? நீங்கள் இவ்வளவுதான் செய்ய வேண்டும். ஞானோதயம் தேடுவதற்கு பதிலாக, இதைச் செய்யுங்கள்: ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அது என்ன என்பதை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன், சந்தோஷம், பரவசம், அன்பு, கோபம், வெறுப்பு, என்று எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஒன்றிற்கு, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதும் விசுவாசமாக இருங்கள். அப்போது ஞானோதயம் அடைவீர்கள்.
இப்போது விசுவாசம்தான் பிரச்சனை. உங்கள் வாலையே துரத்திச் செல்கிறீர்கள். நிச்சயம் இடைவிடாமல் ஓடுகிறீர்கள், எங்கோ செல்வதாக நினைக்கிறீர்கள், ஆனால் நின்ற இடத்திலேயே நிற்கிறீர்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே ஒரு குணத்திற்கு விசுவாசமாக இருங்கள். அது என்னவென்று கூட நான் சொல்லமாட்டேன், அன்போ, ஆனந்தமோ, பரவசமோ - அதுவும் அவசியமில்லை.- உங்களுக்கு கோபம், வெறுப்பு, அல்லது பொறாமைதான் பிடிக்கும் என்றால், அதற்கு நீங்கள் விசுவாசமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணப்பொழுதும் நீங்கள் அப்படியே இருக்கவேண்டும். அப்போது இலக்கை அடைவோம். உண்மையில் இவ்வளவுதான் தேவைப்படுகிறது - என்ன நடந்தாலும் சரி, ஒரே ஒரு குணத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்!
“நிஷ்ச்சல தத்வம் ஜீவன் முக்தி” - நீங்கள் அசையாமல் ஒரே திசைநோக்கி செல்லவேண்டும் - இவ்வளவுதான் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கணப்பொழுதும் உங்கள் விசுவாசம் மாறிக்கொண்டே இருக்கிறது, இல்லையா? நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, “சத்குரு!” என்கிறீர்கள். ஏதோ ஒன்றை தேர்ந்தெடுங்கள், எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள், அந்த ஒரு விஷயத்திற்கு உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் விசுவாசமாக இருங்கள், அப்போது இது நிச்சயம் நிகழும்.