என்னே ஒர் இரவு!
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இரவுமுழுதும் நடந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த தனது செய்தியை சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். படித்து மகிழ்வதோடு, ஆங்கிலத்தில் சத்குரு பேசிப் பதிந்துள்ள செய்தியுடன் நிகழ்ச்சி சுருக்கத்தையும் காணுங்கள். அதோடு ஈடு இணையில்லா இந்நிகழ்ச்சியின் சிறப்புப் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்!
மஹாசிவராத்திரி 2018 நிகழ்ச்சி குறித்து சத்குருவின் நேரடி செய்தி
என்னே ஒர் இரவு - மஹாசிவராத்திரி! மக்கள் காலை 6 மணிவரை நெருப்பாய் இருந்தார்கள். அற்புதமான கலை நிகழ்ச்சிகள்! குறிப்பாக நம் சம்ஸ்க்ருதி குழந்தைகள், உண்மையாகவே வளர்ந்து முதிர்ந்துள்ளார்கள். மற்ற அனுபவம்மிக்க கலைஞர்கள் மத்தியில் அவர்களின் கலைநிகழ்ச்சி தனிச்சிறப்பு வாய்ந்ததாய் தனித்து நின்றது. நம் குழந்தைகள் மிக நேர்த்தியானதொரு நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார்கள்.
மக்கள், காலை 6 மணிக்குக்கூட உற்சாகப்பெருக்கில் துள்ளிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் இன்னும் பல மணி நேரம் கூட அவர்கள் அயராது விழித்திருந்திருப்பார்கள் - உயிர்சக்தியின் அத்தகையதொரு மகத்தான எழுச்சி! ஆதியோகி திறந்துவைக்கப்பட்டதற்குப் பிறகு நடக்கும் முதல் மஹாசிவராத்திரி இது. அவர் அருளில் திளைத்திருப்பது அற்புதமான அனுபவமாய் இருந்தது.
நம் நாட்டிலிருந்தும், உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தோராயமாக 65 தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக கோடான கோடி மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். ஆதியோகி சிவனின் திருமுகம் அவர்கள் மனதில் கட்டாயம் பதிந்திருக்கும். 20 ஆண்டுகளாக மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகள் நடத்திவந்ததில், இங்கு ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி நிகழ்ச்சி மிக அற்புதமாக உருவெடுத்துவிட்டது. இது தேசத்திலேயே மகத்தானதொரு நிகழ்ச்சியாக தனித்து நிற்கிறது, மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளில் மிகச்சிறப்பானது இதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.
நம் பிரம்மச்சாரிகள், தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்துள்ள பணி இது. இதை நிகழ்த்துவதற்காக, கடந்த சில மாதங்களாக அவர்கள் வேலை செய்திருக்கும் விதம்... குறிப்பாக கடந்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களாக இரவு - பகல் பாராமல் இந்நிகழ்ச்சியை நடத்த, பல வேலைகள் நடந்தவண்ணம் இருந்துள்ளன. இதைச் செய்பவர்களை நீங்கள் முன்னால் பார்ப்பதுமில்லை, பின்னால் இருந்தபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். எந்த அளவு அர்ப்பணிப்பும் பக்தியும் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், இதை நடத்த எந்த அளவு ஈடுபாடு வேண்டும் என்று எனக்குத் தெரியும், அவர்கள் இதற்காக எதிர்கொள்ளும் விஷயங்களும் தெரியும்.
தாங்கள் செய்யும் செயல்மீது இவ்வளவு அர்ப்பணிப்பாகவும் பக்தியாகவும் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் மத்தியில், இங்கு ஈஷா யோகா மையத்தில் இருப்பதுபோன்ற மக்கள் மத்தியில் வாழ்வது மிகவும் அற்புதமானது! இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். இது ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி உருவாக்கவேண்டிய ஒரு சூழ்நிலை. ஒரு சிறு குழுவாகவேனும், மக்கள் ஏதோவொன்றின்மீது முழு அர்ப்பணிப்புடன், தன் தனிப்பட்ட தேவைகளைத் தாண்டி அதன்மீது முழு பக்தியுடன் இருக்கவேண்டும். இதுதான் ஈஷா யோகா மையம்! மஹாசிவராத்திரி நிகழ்ச்சி, இந்த பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அற்புதமானதொரு வெளிப்பாடு! அற்புதம்! இப்போது எல்லோரும் சற்று தூங்கி ஓய்வெடுங்கள்!
Subscribe