இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நமக்குள் உள்ள உண்மையில் நாம் வேரூன்றியிருந்து, அதற்குப் பின் சுற்றியிருக்கும் உலகை கையாள்வதன் முக்கியத்துவம் குறித்து அழகாக எழுதியுள்ளார் சத்குரு.

ஈஷாவில் எப்போது மீட்டிங் இருந்தாலும், அசத்தோமா சத்கமய உச்சாடனத்துடன் துவங்கச்சொல்லி நான் வலியுறுத்துவேன். இது ஏதோவொரு கலாச்சாரம் கொண்டுவருவதற்காக அல்ல. அசத்தோமா சத்கமய என்பது ஒரு உள்ளெழுச்சிப்பாடலும் ஒரு நினைவூட்டலுமாக இருக்கிறது. நீங்கள் உருவாக்குவது எல்லோருடைய நல்வாழ்வுக்காகவும் வேலைசெய்யுமா செய்யாதா என்பதற்கான நினைவூட்டலது. நாம் உருவாக்கும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும் - நமக்குள் உருவாக்கும் எண்ணங்களும் உணர்வுகளுமாக இருந்தாலும், வெளியில் பணம் சம்பாதிப்பது, தொழில் செய்வது, பிழைப்பை சம்பாதிப்பது, அல்லது பெரிய அரங்கில் நிகழும் விஷயங்களான அரசியல், பொருளாதாரம், போர், என்று எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அடிப்படையான கேள்வி, "இது எல்லோருடைய நலனுக்காக வேலை செய்கிறதா இல்லையா?" அல்லது குறைந்தபட்சம் அது பெரும்பாலான மக்களின் நலனுக்கு வேலை செய்கிறதா? ஏதோவொன்றை அது எப்படி வேலை செய்கிறதோ அப்படியே நீங்கள் செய்யவேண்டும் என்றால், வாழ்க்கையின் அந்த அம்சம் குறித்த உண்மையை நீங்கள் கண்டுணர வேண்டும். இதை உங்களைச் சுற்றியுள்ள உலகம், உங்கள் உள்தன்மை என்று இருவிதங்களிலும் நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

உங்கள் உடல், மனம், சக்தி, உணர்வு, உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் உட்பட, எல்லாவற்றையும் இன்னும் சிறப்பாக இயங்கச்செய்வது நோக்கிய வாழ்க்கைக்கு நகர்வதே யோகா. இந்த வரிசையை நீங்கள் பின்பற்றினால், அதாவது முதலில் உடல் எப்படி இயங்குகிறது என்பதை உணர்ந்து, மனதை இயங்கச்செய்வது என்னவென்பதை உணர்ந்து, உங்கள் உணர்வுகளை இனிமையாக்குவது என்னவென்று உணர்ந்து, உங்கள் சக்திகளை நல்லவிதத்தில் நடக்கச்செய்வது என்னவென்று உணர்ந்தால், உலகை நல்லவிதத்தில் இயங்கச்செய்வது என்னவென்று கண்டுபிடிப்பது கடினமல்ல. ஆனால் இப்போது உங்கள் உடலும் மனதும் எப்படி இயங்குகிறது என்பதை நீங்கள் பொருட்படுத்தாத ஒரு சமுதாய சூழ்நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு உங்கள் வங்கிக்கணக்கு இயங்கினால் போதும். இப்படியிருக்கையில் பாதிப்பை உங்களால் தவிர்க்க இயலாது. உங்கள் கால்களை வலுவாக்காமல் நீங்கள் நடக்க முயன்றால், உங்கள் முகத்தை தரை பதம்பார்த்துவிடும். உங்களுக்கு உண்மையில் முக்கியமானவற்றுக்கு முறையே முக்கியத்துவம் தருவது அதிமுக்கியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேலை செய்வது எதுவாயினும் எனக்கு அவற்றின் மீது ஆர்வமுண்டு. பொதுவாக இயந்திரங்கள் சரியாக இயங்கக்கூடியவை. அதனால் நான் சில சமயங்களில் கார் விளம்பரங்கள் வாசிப்பேன். ஆனால் பொதுவாக நான் அவற்றில் காண்பதெல்லாம் அதிலுள்ள ஸ்டீரியோ அமைப்பு, சீட் அமைப்பு, விசேஷ வண்ணப்பூச்சு, என்று கூடுதல் வசதிகள் குறித்த தகவல்களே. இந்நாட்களில் மக்களுக்கு பாதுகாப்பு குறித்த பதற்றம் தொற்றிவிட்டதால் அதன் ஏர்பேக் அமைப்பு குறித்த தகவலும் விளம்பரப்படுத்தப்படுகிறது. எஞ்ஜின் அமைப்பு, டிரான்ஸ்மிஷன், ஓட்டுவதில் அந்த காரிலிருக்கும் நுட்பங்கள் போன்றவை குறித்த ஒரு வார்த்தை கூட வருவதில்லை. பெரும்பாலான மக்கள் வாழும் வாழ்க்கையின் அறிகுறியாகவே இதை நான் காண்கிறேன். அவர்களுக்கு தோற்றத்தின் மீதும் கேட்ஜெட்கள் மீதும் ஆர்வம். மக்களுக்கு ஆயுள் காப்பீடு இருக்கிறது, ஆனால் ஆயுள்காலத்தில் வாழ்வதற்கு வாழ்க்கையில்லை. அவர்கள் தங்கள் துயரத்தைத்தான் காப்பீடு செய்கிறார்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே முக்கியமானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, எல்லாம் நல்லவிதத்தில் இயங்கும்விதமாகச் செய்வதே ஆன்மீக செயல்முறை. உங்களுக்கு உண்மையில் முக்கியமானவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் தராத பட்சத்தில், அமைதியாக அமர்வது எப்படி என்பதைக் கூட நீங்கள் அறியமாட்டீர்கள். மக்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதத்தினருக்கு அமைதியாக இருப்பது எப்படி என்பதற்கு பாடம் தேவை. ஒரு பசுவும் கழுதையும் வயிறு நிறைந்துவிட்டால் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும், ஆனால் மனிதர்கள் அதற்கு போராடுகிறார்கள். வெளி உதவி இல்லாமல், மக்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லமுடியாத துயரங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஏதோவொன்று அவர்களுக்கு விருப்பமில்லாதது நடந்துவிட்டால், மக்கள் துயரமடைவார்கள். ஏதோவொன்று அவர்களுக்கு விருப்பமானது நடக்காவிட்டால், அவர்கள் இன்னும் அதிகமாக துயரமடைவார்கள். ஆன்மீக செயல்முறை என்பது வேறொரு இடத்திற்கு செல்வது குறித்ததல்ல. அது எல்லாவற்றையும் சரியாக உள்வாங்கிக்கொள்வது குறித்தது. எல்லாவற்றையும் நீங்கள் இருக்கும்படியே பார்த்தீர்களானால், உரிய வரிசைப்படி முக்கியமானவற்றுக்கு முறையே முக்கியத்துவம் வழங்கப்படும்.

ஒரு மரம் வளர்க்க விரும்பினால், சட்டென கண்களுக்குத் தென்படும் பாகங்களான இலைகள், கிளைகள் மற்றும் தண்டிற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டுமா, அல்லது சாதாரணமாக கண்ணிக்குத் தெரியாத வேருக்கு ஊட்டமளிக்க வேண்டுமா? தோராயமாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் அருகில் எனக்கு பண்ணை இருந்தபோது, அதிசய திரவம் என்று சொல்லிக்கொண்டு என்னிடம் ஒரு பொருளை விற்பனை செய்ய சிலர் முயன்றார்கள். என் தோட்டத்தில் நிறைய மாமரங்கள் இருந்தன. நான் இந்த திரவத்தை அந்த பழங்கள் மீது தெளித்தால், அவை பெரிதாகிவிடும் என்றார்கள். நான் அப்போது ஞானோதயம் அடையாதபோதும், எனக்கு இதை உணரப் போதுமான அறிவுக்கூர்மை இருந்தது. அவர்களுடைய வாசகம், "வேருக்கில்லை, பழத்திற்கு" என்பதே. இந்த எண்ணமே மிக அபத்தமாக இருந்ததால், இது எங்கள் பகுதியில் மிகப்பெரிய கேலிக்கூத்தாகிவிட்டது. இதை அவர்கள் உணர்ந்ததும் அவர்கள் திட்டத்தை கைவிட்டுவிட்டனர். இதற்கு நேர்மாறானதே உண்மை. வேருக்கு நீங்கள் ஊட்டமளித்தால், பழத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, அது இயற்கையாகவே நிகழும்.

ஒருநாள் நான் ஒருவரை சந்தித்தபோது அவர்களிடம் விளையாட்டாக இப்படிக் கேட்டேன், "நீங்கள் செய்யும் பணிகளுக்கு உங்களை போற்றுகிறார்களா?" அவர் சொன்னார், "என்ன செய்தாலும் சரி, ஈஷாவில் எதற்கும் எவரும் எவரையும் புகழ்வதில்லை. என்ன தவறாகிப்போனது என்பதை மட்டும்தான் சொல்கிறார்கள்." அதற்கு நான் சொன்னேன், "இந்த ஒரு கலாச்சாரத்தை அவர்கள் என்னிடமிருந்து கற்றுக்கொண்டது நல்லது. எது வேலை செய்யவில்லையோ அதற்கு மட்டும்தான் கவனம் தேவை." நீங்கள் நன்றாக செய்யும் செயலுக்காக நான் உங்களை புகழவேண்டிய அவசியமில்லை. எப்படியும் பழங்கள் கனிந்து அதனை நீங்கள் ருசிப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல் படைப்பின் அடிப்படைகளுடன் ஒத்திசைவாக இல்லாத விதமாக இருந்தால், அது வேலைசெய்யாது. வேர்களின் வீரியம் தான் பழத்தை உற்பத்தி செய்கிறது. சிலநாட்களிலேயே பழத்தை செயற்கையாக பெரிதாக்கக்கூடிய ஒரு ரசாயனத்தை நீங்கள் கண்டுபிடித்தாலும், அது அம்மரத்தையும் வேரையும் எப்படி பாதிக்கும் என்பது நமக்குத் தெரியாது.

ஆன்மீகம் என்பது, இது வேர் பற்றியது, பழத்தைப் பற்றியதல்ல என்பதைப் புரிந்துகொள்வது. இது எப்படியென்றால், செயலின் பலன் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது என்று கீதை சொல்கிறது. "யோகஸ்த குரு கர்மானி" என்றும் கீதை சொல்கிறது. அதாவது முதலில் உன்னை நீ யோகத்தில் வேரூன்றிக்கொள், பிறகு என்ன வேண்டுமானாலும் செய், அது வேலை செய்யும். யோகத்தில் வேரூன்றி இருப்பது என்றால், சங்கமத்தில் வேரூன்றியிருப்பது. அதாவது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றுடனும் நீங்கள் ஒன்றியிருப்பது. இந்த விழிப்புணர்வுடன் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். விழிப்புணர்வு என்பது ஒரு கோட்பாடு கிடையாது. யோக அனுபவத்தில் நீங்கள் வேரூன்றி இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் சரி, வாழ்க்கையின் பழத்தை ருசிப்பீர்கள்.

எப்படிப்பட்ட பழம் வரும் என்பது நீங்கள் எப்படிப்பட்ட மரம் என்பதைப் பொருத்தது. நீங்கள் தென்னை மரமாக இருந்து மாம்பழத்திற்குக் கனாக்கண்டால், தோல்வி நிச்சயம். ஒரு தேங்காய் வந்தால், அதை ஒரு பழமாக அடையாளம் காணமாட்டீர்கள். பல மனிதர்களுக்கு இப்படி நடப்பதை நான் காண்கிறேன். மிக அற்புதமான விஷயங்கள் அவர்கள் வழி வரும்போது, அவற்றை அடையாளம் காணும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு நடக்கவே முடியாத ஒன்றிற்கு அவர்கள் ஆசைப்படுவார்கள். இங்கு இருக்கும் பழத்தை எப்படி ருசிப்பது என்று தெரியாமல், வராத ஒரு பழத்தை எதிர்பார்த்திருப்பதில் வாழ்க்கை வீணாகிப்போகும். தவறான எதிர்பார்ப்புகள் மக்களை பைத்தியம் பிடிக்கும் நிலைகளுக்குத் தள்ளுகிறது. இப்படி நடப்பதற்குக் காரணம், சமுதாயங்கள் இலக்கில் மட்டுமே கவனம் கொண்டவையாக மாறிவிட்டன. மக்களுக்கு அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் கவனமில்லை, அவர்களுக்கு என்ன கிடைக்கவேண்டும் என்பதில் மட்டுமே கவனம். இன்று சமுதாயம் உங்களிடம் என்ன இருக்கிறது என்பதற்காகவே உங்களை அங்கீகரிக்கிறது, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதற்காக அங்கீகரிப்பதில்லை. யாரோ ஒருவரை அவர் "பெரிய ஆளு" என்றால், அவருக்கு பெரிய மூளை, பெரிய இதயம், மிகுந்த விவேகம் இருக்கிறது என்று அர்த்தமல்ல, அவருக்கு பெரிய வங்கிக்கணக்கு இருக்கிறது. "அவரிடம் என்ன இருக்கிறது?" என்பது மட்டுமே இன்று ஒரு பொருட்டாக இருக்கிறது. தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரே வழி, மென்மேலும் எதையாவது சேர்த்துக்கொள்வது என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும், நாம் பூமியிலிருந்தே கொள்ளையடித்தோம். நம் பிழைப்பிற்குத் தேவையானதை நாம் ஓரளவு செய்தாகவேண்டும். ஆனால் இங்கே சும்மா அமர்ந்தபடி எப்படி முழுமையான பேரானந்தத்தில் இருப்பது என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தால், நாம் எல்லாவற்றையும் எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு மட்டுமே செய்வோம், அதற்கு அதிகமாகவும் செய்யமாட்டோம், குறைவாகவும் செய்யமாட்டோம். நீங்கள் யாரென்பதை உங்களைச் சுற்றியுள்ள தட்டுமுட்டுப் பொருட்களும் பிற பொருட்களும் நிர்ணயிக்கும்போது, நீங்கள் எல்லாவற்றையும் மிகையாகச் செய்து பூமியை அழித்துக்கொண்டு இருப்பீர்கள். அதனை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. ஏனென்றால் ஒருவர் ஆடம்பரம் என்று நினைக்கும் ஒன்றை இன்னொருவர் அத்தியாவசியம் என்று நினைக்கிறார். அவரவர் சமுதாய அனுபவங்களுக்கேற்ப கண்ணோட்டங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அது உங்கள் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பதில்லை. அதனால்தான் "அசத்தோமா சத்கமய". முதலில் உங்களை நீங்களே "உண்மை"யில் நிலைநாட்டுங்கள், பிறகு உங்களைச் சுற்றியுள்ள உலகிற்குள் பிரவேசியுங்கள். உங்களுக்குள் நீங்கள் வேரூன்றி இருக்கவில்லை என்றால், இறுதியில் உங்களுக்கு எதிராக வேலைசெய்யக்கூடிய விஷயங்களையே நீங்கள் செய்வீர்கள்.

Love & Grace