இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் "ஆதியோகி - சிவன்: யோகத்தின் மூலம்" புத்தகம் குறித்து சத்குரு நம்மோடு பகிருந்துள்ளார். அதோடு, ஆதியோகியை வரவேற்க ஈஷா யோக மையம் ஆயத்தமாகும் சமயத்தில், யோகேஷ்வர லிங்கம், ஆதியோகி பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளுக்காக அதிவிரைவாக நடைபெறும் வேலைகளை சத்குரு நேரடியாக பார்வையிடும் புகைப்படங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

மஹாசிவராத்திரி தினத்தன்று வெளியிடவிருக்கும் ஆதியோகி புத்தகத்தைப் பற்றி மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இது மிகவும் வித்தியாசமான புத்தகம் என்றே நான் சொல்வேன்.

இதில் மூன்று வேறு பரிமாணங்கள் பின்னிப்பிணைந்துள்ளன. ஒன்று, சிவன் பற்றிய நம்பமுடியாத புராணக் கதைகளும் அவர் வாழ்க்கையும். புராணக்கதைகளும் அதில் உள்ள மாயாஜாலமான விஷயங்களும் எப்போதும் தர்க்கத்துக்குள் அடங்காது. கதைகளுக்கு இணைக்கோடாக, சுத்தமான அறிவியலின் பரிமாணம் ஓடும். மூன்றாவது பரிமாணம் என்னுடைய உள்அனுபவம். புராணம், அறிவியல், மற்றும் என் உள்அனுபவம் ஒன்றாக பின்னப்பட்டுள்ளது. இது இந்த புத்தகத்தை மிகவும் தனித்துவமானதாக்குகிறது.

புத்தகத்தின் மாதிரி ஒன்றைக் காட்டியதும், ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் புத்தகத்தின் ஆங்கில பிரதியை பதிப்பிக்க ஆர்வம் காட்டினார்கள் -அப்படியானால் இது நிச்சயம் நல்ல புத்தகம்தான். இந்த புத்தகம் தமிழிலும் வெளியிடப்படும். சர்வதேச வாசகர்களுக்கு பொருந்தும் விதமாக, இதனை ஆங்கிலத்தில் மறுதிருத்தம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த கலாச்சாரத்துடன் தொடர்பில்லாத அயல்நாட்டவர்களுக்கு இந்தியர்களைவிட அதிக விளக்கம் வேண்டியிருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கலாச்சாரத்தில் நாம் ஏறக்குறைய இந்தக் கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்தோம், வாய்வழியாகவே இக்கதைகள் தலைமுறை தலைமுறையாக பரிமாறப்பட்டு வந்துள்ளன. இணையத்திலுள்ள விற்பனைத் தளங்கள் மூலம் எப்படியும் இந்த புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியதாக இருக்கும், ஆனால் கொஞ்ச காலத்திற்கு இதை இந்தியாவிற்கு வெளியே வெளியிடமாட்டோம்.

ஒருசில வாரங்கள் எடுத்துக்கொண்டு, கூடுதல் விளக்கங்கள் சேர்த்து திருத்தியபிறகு சர்வதேச அளவில் வெளியிட விரும்புகிறேன். இந்த புத்தகத்தை நான் அருந்ததியுடன் இணைந்து எழுதியுள்ளேன். அருந்ததி என்னுடைய வாழ்க்கை சரிதமான, "More Than a Life" புத்தகத்தை எழுதியவர். அவருடைய கேள்விகள் நிறைந்த கண்ணோட்டம் இதற்கு கூடுதல் நயத்தை சேர்க்கிறது.

ஆதியோகி புத்தகத்தின் இந்த மூன்று அம்சங்கள் - கதை, அறிவியல், உள்அனுபவம் - மூன்றும் ஒன்றாக நெய்யப்பட்டுள்ளன. இது மிகப்புதிதான புத்தக வகையாக இருக்கும். புராணம், அறிவியல், ஆன்மீக சுய-உதவி என்று இதுவரை வகுக்கப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட புத்தக வகையையும் சேர்ந்ததாக இது இருக்காது. இந்த புத்தகத்தில் உள்ளவை பூகோளரீதியாக தோன்றிய இடமும் இதன் மறைஞானரீதியான அழகைக் கூட்டி, வேற்றுலகத்திலிருந்து வந்தது போன்ற ஒரு நடையை வழங்குகிறது. 15,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதியோகி தோன்றிய இமயமலையின் மேல்பகுதிகளில்தான் இந்த புத்தகத்திற்கான கரு உருவானது.

சிவனின் பூமியின் ஊடே, கைலாயத்திற்கு சென்று திரும்பும் என் பயணத்தின்போது நான் பேசியதிலிருந்தே இந்த புத்தகத்தின் பெரும்பாலான பகுதி தோன்றியுள்ளது. அதனால்தான் இதில் பயணநூல் போன்ற ஒரு தன்மையும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த புத்தகம் ஆதியோகி பற்றியது, சிவனின் கதையும் மாயாஜாலமும் பற்றியது, யோக அறிவியலைப் பற்றியது.

தொன்மையான, அதிநவீனமான உள்நிலை வளங்களை வழங்கக்கக்கூடிய தொழில்நுட்பங்களின் பிரநிதியாய் ஆதியோகி இருக்கிறார். மிகத் தெளிவான, பிரிவினைகள் இல்லாத அவர் வழங்கிய அறிவியலை அரவணைக்க, இன்று உலகம் தயாராகிவிட்டதை போலத் தெரிகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவு கேள்வி கேட்கும் மனங்களுக்குப் பொருந்தும் விதமாக நெய்யப்பட்டுள்ள அறிவியல் இது. இந்த புத்தகத்தின் நோக்கம், ஆதியோகியை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே. ஏனெனில், அவர் கடந்தகாலத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் எதிர்காலத்திற்கு சொந்தமானவர்.

யோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டை, 112 அடி உயர ஆதியோகி சிலை பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளை முன்னிட்டு, இங்கு ஈஷா யோக மையத்தில் இரவும் பகலுமாக பணிகள் நடந்தவண்ணம் உள்ளன. இந்த வரலாற்று நிகழ்வில் அனைவரும் அங்கமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். இது ஈடுஇணையில்லா ஒரு நிகழ்வு. இதில் நான் முழுவீச்சில் இருப்பேன், என் கூட்டாளியான முதல் யோகியும் அப்படியே இருப்பார். போதனைகள் வழியாக இல்லாமல் ஒரு சக்திமூலத்தை நிறுவுவதன் வழியாக, யோகா எனும் உள்நிலைப் பரிமாணத்தின் புனிதத்தை பாதுகாப்பதற்கான படியாக இது விளங்கும்.

Love & Grace

சத்குரு மற்றும் அருந்ததி சுப்பிரமணியம் எழுதியுள்ள "Adiyogi: The Source of Yoga" ஆங்கில புத்தகம், வரும் பிப்ரவரி 24ஆம் தேதி, மஹாசிவராத்திரி இரவில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் புத்தகம், மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. "ஆதியோகி - சிவன், யோகத்தின் மூலம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தகமும் மஹாசிவராத்திரி அன்று வெளியிடப்படுகிறது.

அமேசான் இந்தியா இணையதளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.