பில்லி-சூனியத்திலிருந்து விடுவிக்குமா தியானலிங்கம்?
தியானலிங்கத்திற்கு அருகில் சத்குரு ஏன் அடிக்கடி செல்வதில்லை? பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தியானலிங்கத்திற்கு வரும்போது, அவை அகன்றுவிடும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படியானால், இது எப்படி சாத்தியமாகிறது? இந்த வாரப் பகுதியில் தெரிந்துகொள்ளுங்கள்!
தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 18
தியானலிங்கத்திற்கு அருகில் சத்குரு ஏன் அடிக்கடி செல்வதில்லை? பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தியானலிங்கத்திற்கு வரும்போது, அவை அகன்றுவிடும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படியானால், இது எப்படி சாத்தியமாகிறது? இந்த வாரப் பகுதியில் தெரிந்துகொள்ளுங்கள்!
பட்டுக்கோட்டை பிரபாகர்:
ஜோதிர்லிங்க தரிசனம் தனக்கு உடல்ரீதியான பாதிப்புகளைத் தரக்கூடுமென்று சத்குரு எதிர்பார்க்கவில்லை. அந்த ஜோதிர்லிங்கம் அத்தனை சக்திமிக்கதாய் இருந்ததால், சத்குருவை கடும் காய்ச்சலில் தள்ளியது. மூன்று நாட்களாயின, அவர் குணமடைவதற்கு.
பிராணப் பிரதிஷ்டைக்குப் பிறகு சத்குருவின் உடலில் சக்திநிலையில் பல வகையான பாதிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அவரின் சக்திநிலை எப்போதுமே உடலிலிருந்து குதிப்பதற்குத் தயாராக இருக்கிறது. ஆகவே, ஈஷா யோகா மையத்தில் இருக்கும்போது தியானலிங்கம் அருகில் சத்குரு அதிகம் செல்வதில்லை. அந்த உஜ்ஜயினி ஜோதிர்லிங்கத்தை விடவும் பல மடங்கு சக்தி கொண்ட நிலையில் இருக்கும் தியானலிங்கம் பல வகையிலும் மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
Subscribe
ஒரு மனிதர் மந்திரங்களின் எதிர்மறையான விளைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மீண்டும் சமநிலைக்கு வரவும் தியானலிங்கம் உதவியாக இருக்கும்.
தியானலிங்க வளாகத்தில், வனஸ்ரீக்கும் பதஞ்சலி முனிவருக்குமான சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தியானலிங்கத்துக்கு 15 டிகிரி கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தியானலிங்க வளாகத்துக்கு தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் வரும்போது, அவர்கள் தியானலிங்கத்தின் முன்புறம் அல்லது பின்புறம் 15 டிகிரி கோணத்தில் அவரவர் பிரச்சனையின் தன்மைக்கேற்ப அமர வைக்கப்படுகிறார்கள்.
நம் நம்பிக்கை, நம்பிக்கையின்மை என இரண்டையும் கடந்து பார்த்தால், சக்தி நிலையை ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துதல் என்பது சாத்தியமான விஷயம். அப்படி பில்லி, சூன்யம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வரும்போது, அவை அகன்றுவிடுகிற வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில்லை, பொதுவாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய தன்மைகள் கொஞ்சம் இருக்கவே செய்கின்றன. ஒரு பழத்தில் இன்னொருவர் நச்சுத் தன்மையைச் செலுத்தலாம் அல்லது, இயல்பிலேயே ஒரு பழம் நச்சுத்தன்மையடையலாம். அப்படி அடுத்தவர் முயற்சி இல்லாமல்கூட நம் உள்ளே தீய தன்மைகள் சில சேகரிக்கப்படுகின்றன.
யாராக இருந்தாலும் சரி, தியானலிங்க வளாகத்தின் நுழைவாயிலில் நுழைந்து தியானலிங்கம் நோக்கி நடந்து வரும்போதே அவர்களுக்குள் தெரிந்தும் தெரியாமலும் படிந்திருக்கும் தீய தன்மைகள் அகற்றப்படுகின்றன. ஆகவேதான் இங்கு வந்து செல்பவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நல்ல மாற்றங்களை உணர்வதாகச் சொல்கிறார்கள்.
இதெல்லாம் இந்தக் குறிப்பிட்ட தியானலிங்கத்தால் எப்படிச் சாத்தியமாகிறது? ஏனென்றால் இந்த ஒரு லிங்கம் மட்டுமே சக்தி நிலையின் உச்சத்தில் உருவாக்கப்பட்டது. மற்ற லட்சக்கணக்கான லிங்கங்கள் எல்லாமே மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பபட்டவை. ஆகவே, அந்த லிங்கங்களின் சக்திநிலை பலவீனமடைந்துவிடுகின்றன.
பலவீனமான சக்தியைக்கொண்ட லிங்கங்களை வழிபடும்போது, அந்த பலவீனம் மனிதர்களையும் தொற்றிக்கொள்ளும். ஆகவேதான், மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகங்களுக்கு, அடிக்கடி பூஜைகள், அபிஷேகங்கள், கும்பாபிஷேகங்கள் என்று செய்து சக்திநிலை பலப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது.
ஆன்மிக வழியில் உள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கலாம்... நம் வீட்டில் ஒரு கல் விக்கிரகம் இருந்தால் அதற்குப் பூஜை செய்ய வேண்டும், அப்படி பூஜைகள் எதுவும் செய்யாத கல் விக்கிரகங்களை ஆற்றிலோ, குளத்திலோ போட்டுவிட வேண்டும் என்பார்கள். சக்தி நிலையில் பலவீனப்படும் விக்கிரகங்கள் மனித ஆற்றலை உறிஞ்சவல்லவை. ஆனால், தியானலிங்கத்துக்கு மீண்டும் சக்தியூட்டுதலோ, பலப்படுத்துதலோ அவசியமே இல்லை. இன்னும் 5000 வருடங்களுக்குக்கூட தியானலிங்கத்துக்கு எந்தப் பராமரிப்பும் தேவை இல்லை. காரணம், அது வற்றாத சக்தியின் மூலம்!
அடுத்த வாரம்...
உடலற்ற ஒரு யோகியை தியானலிங்க பிரதிஷ்டையில் பயன்படுத்தினாரா சத்குரு?! இது எப்படி நிகழ்ந்தது? விடையறிய காத்திருங்கள், அடுத்த வாரப் பகுதிக்காக...!
இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை