ஒரு வாழ்நாள் பயணம்

ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

திபெத்திலிருந்து கைலாயத்தை அடைந்த அந்த வழித்தடங்களும் தருணங்களும் உங்கள் கண்முன்னே… திபெத் பீடபூமியின் அசரவைக்கும் அதீத அழகைக் காண்பதற்கான தயார் நிலையில் நான் இல்லை என்றுதான் கூறவேண்டும். பரந்து விரிந்த தொடுவானமும், மரங்களற்றதும், புல்பூண்டுகளும், புதர்களுமற்ற நிலத்தோற்றத்துடன், பறவைகளும்,பட்டாம்பூச்சிகளும் இல்லாமல், மனித அரவமற்ற தொலைதூர வெற்றிடப் பரப்பும் அந்த அளவுக்கு என்னை மயக்கியது. இதற்கு முன்பு, என் கண்கள் கண்டிராத ஒரு காட்சி. இதெல்லாம் என்ன நிஜமா அல்லது நான் காண்பது கனவா என்று நிச்சயமில்லாத நிலை. நேபாள- சீன எல்லையிலிருந்து, கரடு முரடான பாதையில் செலுத்தக் கூடிய வண்டிகளில் நாங்கள் கிளம்பியிருந்தோம். சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டோம். எங்களது குழுவின் மற்ற வண்டிகள் வந்தடைவதற்காகக் காத்திருந்தோம். முடிவில்லாமல் நீண்டு கிடந்த வெற்றுவெளியுடன், தொடக்கமும் இலக்கும் இல்லாமல், எண்ணற்ற மர்மங்களை உள்ளடக்கிய ஆழமான நீல வானத்தில் மட்டுமே பார்வை நிலைத்திருக்கக் காத்து நின்ற அந்தத் தருணமானது, 'நான்' என்று அழைத்துக் கொள்ளும் இந்த உடலின் முக்கியத்துவமற்ற தன்மையை இடையறாது நினைவூட்டுவதாக இருந்தது. கடைசி வண்டி வந்தடைந்தபொழுது, இருள் கவிந்துவிட்ட நிலையில், நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

நாங்கள் ஸாகாவை அடைந்தோம்-நேபாள திபெத்திய எல்லைக்கும், கைலாயத்துக்கும் இடைப்பட்ட வழியில் எங்கோ ஒரு நகரம். அங்குள்ள ஒரே நகரம் ஸாகா. நான் உணர்த்த வருவது என்னவென்றால், ஸாகாவில்தான் அதிக உயரத்தின் காரணமாக ஏற்படும் உடல் அசௌகரியங்கள் உங்களை பாதிக்கத் தொடங்குகிறது. தொடர்ச்சியான வலியின் அலைகள் உங்கள் தலைக்குள் ஊடுருவுவதுடன், மிக அற்பமான காரணங்களுக்காகவும் தன் உள்ளிருப்புகளை வெளியில் தள்ளுவதற்கு வயிறு பயமுறுத்துகிறது. நுரையீரல் பிரச்சனைகளினால் கீழே வந்துவிடாமல் நம்மால் ஸாகாவைக் கடந்து விட முடிந்தால்,மீதமுள்ள பயணமும் சிறப்பாக இருக்கும் என்று திபெத்திய வழிகாட்டிகள் எங்களிடம் கூறினர். எங்களது ஒட்டுமொத்த குழுவினரும் அதைக் கடந்துவிட்டதற்கு நன்றிகள்; ஒருவரும் நேபாளத்திற்குத் திரும்பிச் செல்ல நேரவில்லை.

பயணத்தின் அடுத்தகட்டம் எங்களை ப்ரயாக் நோக்கி அழைத்துச் சென்றது, மானசரோவருக்கு முந்தைய கடைசி இரவுத்தங்கல். பாதையில், ஒவ்வொன்றும் நேரடித் தாக்குதல் தொடுப்பதாகவே தோன்றியது: துளைத்து ஊடுறுவிப் பாயும் ஒளி வெள்ளம், இரக்கமற்ற காற்றின் அசுரவேகம், தோலை வெடித்துப் பெயர்த்த மணல் துகள்களின் மோதல், இவை அனைத்துமே மனிதர்களாகிய நாம் எந்த அளவுக்குத் துளியளவு இருக்கிறோம் அல்லது எவ்வளவு சின்னஞ்சிறு அணுவிலும் அணுவானவர்கள் என்பதை உணர்த்தியவாறு இருந்தன. வானும், மண்ணும் அவளுடைய மக்களுடனும் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு எங்களில் பலருக்குள்ளேயும் ஒரு வெறுமையை செதுக்கிவிட்டது, உலகின் வேறு எந்த இடத்தினாலும் பிரதிபலிக்கவோ அல்லது வார்த்தையால் விளக்கவோ முடியாத ஒரு வெறுமை.

ப்ரயாகில் கழித்த அந்த இரவு, மானசரோவரை அடைவதற்கான காத்திருப்பு தாங்கவியலாததாக இருந்தது. அடுத்த நாள் காலை தொடங்கிய பயணத்தில், என் இதயம் பலமாகத் துடிக்க ஆரம்பித்தது.

ப்ரயாகில் கழித்த அந்த இரவு, மானசரோவரை அடைவதற்கான காத்திருப்பு தாங்கவியலாததாக இருந்தது. அடுத்த நாள் காலை தொடங்கிய பயணத்தில், என் இதயம் பலமாகத் துடிக்க ஆரம்பித்தது. அந்த அகன்ற சமவெளியில் வாழ்ந்திருந்த நாடோடிகள் அவ்வப்போது என் கவனத்தை ஈர்த்தனர். பல நூற்றாண்டுகளாக அங்கு இருப்பதைப் போன்றதொரு வாழ்க்கை அவர்களுடையது; அமைதியான, குறுக்கீடுகளற்ற ஒரு வாழ்க்கை. அவர்களின் அரிதான வாழ்க்கை உயிர் பிழைத்திருத்தலுக்கான ஒரு போராட்டமா, அல்லது மனித குலத்தின் வெற்றியா என்று வியந்துகொண்டேன்.

இறுதியாக நாங்கள் மானசரோவரை அடைந்தபொழுது, அந்தப் பரந்தவெளியினால் நான் மூழ்கடிக்கப்பட்டேன் - நிசப்தமாக, மாசற்ற அமைதியுடன், மனித அறிவுக்குப் புலப்படாத மர்மங்களை அடக்கியதாகத் தோன்றியது. ஆழ்ந்த நீலமும் பச்சையுமான ஏரி, வாழ்த்துப் பாடும் வானம் மற்றும் முடிவில்லா தொடுவானத்தின் விளிம்பில் பெரும் மலைகள் ஒவ்வொன்றும் அதனதன் வேறுபட்ட பிரகாசத்துடன்,பனி போர்த்திய சில முகடுகளின் ஒளி கண்களைப் பறிக்க மற்றும் சில மலைகள் பழுப்பு, சாம்பல் நிறத்தின் பலவண்ண பேதங்களுடன் நிமிர்ந்து நின்றிருந்தன. உடனே என் மனதில் கேள்விகள் எழுந்தன. இத்தனைக்கும் மத்தியில், நான் யார்? இந்த வாழ்க்கை குறித்த விஷயங்களெல்லாம்தான் என்ன? இப்படிபட்ட பல கேள்விகளுடன் பகற்பொழுது கரைந்து, இருள் கவிழ்ந்து நிறைந்தது. காற்று பலமாக வீசத் தொடங்க, இருளும் ஒளியும் ஒன்றோடு ஒன்று உள்ளும் புறமும் கைகோர்த்தன.

அடுத்த நாளன்று, சத்குருவினால் வழி நடத்தப்பட்ட ஒரு தியான செயல்முறைக்குப் பிறகு, நாங்கள் புனித நீரில் மூழ்கி எழுந்தோம். உறையவைக்கும் நீரில் இருந்த அந்த கணங்கள் பரவசமானவை. மேகங்கள் கருணைகொண்டு விலகவும் காணக் கிடைக்கும் கைலாயத்தின் தரிசனம் வேண்டிக் காத்திருந்த நிலையில், மானசரோவர் ஏரியின் பேரொளியில் என்னை நானே மூழ்கடித்துக்கொண்டது போல இருந்தது

அன்றைய இரவு நாங்கள் மானசரோவரில் தங்கினோம். காலைப்பொழுதில்,சட்டென்று பேரானந்தமான ஒரு கணம் எங்களை ஆட்கொண்டது: மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்த வானம் சற்றே திறந்ததில், தொலைதூரப் புனித மலை தென்படப் போதுமானதாக அது இருந்தது,

ஒளிரும் வெண்பனியால் போர்த்தப்பட்ட அதன் முகடு, சூரியனின் பொற்கதிர்களின் தெறிப்பில் பிரகாசித்தது. என் ஆன்மாவைத் தட்டி எழுப்பிய காட்சி; கண்டதும் காதல் கிளர்ந்தது - புராதனக் கதைகளுக்கு உரித்தான கைலாயம்!

மறுநாள், கைலாயத்திற்கு நடைப்பயணம் தொடங்கியபொழுது, ஒவ்வொருவருடைய மனோ நிலையும் எதிர்பார்ப்புடன் கூடிய பரவசத்தில் இருந்தது. அதனுடன் இயற்கை எங்களை வரவேற்பது போல, பனிப்பொழிவு தொடங்கியது. நடைப்பயணமாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு புனித மந்திரம் எங்களை நகர்த்தியது. சுவாசம் ஒரு மௌனமான பிரார்த்தனையானது. ஒரு தெய்வீக சக்தியுடன் தொடர்புடைய இறைமை பொருந்திய கணம் எங்களுக்கு உயிரூட்டியவாறு இருந்தது. அறிவு என்ற பெயாரால் எனக்குள் இருந்த எல்லாவற்றையும் நான் கேள்வி கேட்கத் தொடங்கினேன். நான் என்னவாக இருந்தேன்? நான் யாராக இருந்தேன்? நான் ஏன் இருந்தேன்? போன்ற கேள்விகள். மேலும் முன்னேறிச் செல்கையில், ஏகாந்தமான ஒன்றின் இருவேறு முகங்களை நாங்கள் கண்டோம். அவைகளை ஒரே மலையின் இரண்டு பக்கங்களாக என்னால் காண முடியாத அளவுக்கு, இரண்டுக்கும் இடையே தத்ரூபமான ஒரு மாற்றம் இருந்தது.

மாலைப்பொழுதில், நாங்கள் தங்கவிருந்த ஆசிரமத்தை அடைந்தோம். இது கைலாயத்தின் வடக்கு முகமாகிய, பிரகாசமாக ஒளி வீசியபடி ஓங்கி உயர்ந்து நின்றிருந்த ஒற்றைக் கருங்கல்லின் அடிவாரத்தில் இருந்தது. அந்த பனிமூடிய மலையின் மீதிருந்து என் கண்களை எடுக்க முடியவில்லை; ஏதோ சக்தியால் நான் உள்ளே இழுக்கப்படுவது போல் இருந்தது, ஒரு பிரம்மாண்டமான ஈர்ப்புவிசையாக அது இருந்தது.

மறுநாள் மலையின் உட்பரிக்கிரம பாதையில் ப்ரதக்ஷணம் செய்துவர கிளம்பினோம். அங்கு நமது குருவினால் வழி நடத்தப்பட்ட ஒரு தீட்சை செயல்முறையானது இந்தப் புனித வெளியினை உணர்வதற்கான திறனை எங்களுக்கு அளித்தது. எனக்குள் நான் வெடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்

மறுநாள் மலையின் உட்பரிக்கிரம பாதையில் ப்ரதக்ஷணம் செய்துவர கிளம்பினோம். அங்கு நமது குருவினால் வழி நடத்தப்பட்ட ஒரு தீட்சை செயல்முறையானது இந்தப் புனித வெளியினை உணர்வதற்கான திறனை எங்களுக்கு அளித்தது. எனக்குள் நான் வெடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன் - அந்த இடத்தில் வாழ்வதற்கு விரும்பிய அதே கணத்தில் அங்கேயே மரித்துப்போகவும் விரும்பினேன். நான் முற்றிலுமாக விடுபட்டது போல உணர்ந்தேன், எங்கும் போவதற்கில்லை,எங்கிருந்தும் வருவதற்குமில்லை, அந்தக் காற்றுவெளியிலேயே முழுவதுமாகக் கரைந்துகொண்டே இருந்தேன்.

மறு நாள் அங்கிருந்து இறங்கும்பொழுது, கைலாயம் செல்லும் பாதையில் மூன்று திபெத்தியர்களைக் கண்டோம். கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கும் இயற்கையின் இயல்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள எதுவுமில்லாமல்,கைலாயம் நோக்கி தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சாஷ்டாங்கமாக நமஸ்காரித்துக் கொண்டே சென்றுகொண்டிருந்தனர். பக்தி என்றால் என்ன என்று என்னை அவர்கள் ஆச்சாரியம்கொள்ள வைத்தனர்.

வழக்கமாக, எந்த ஒரு யாத்திரைக்கும் குறிப்பிட்ட ஒரு இலக்கு இருக்கிறது, ஆனால் இந்தப் பயணமே இலக்காகிவிட்டது. என் புரிதலுக்கு அப்பால் ஏதோ ஒன்று, மிக ஆழமாக என்னைத் தொட்ட ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது. ஆனால் அந்த அண்ட வெளியை, அந்த சக்தியை உணர்வதற்கும், அளப்பரிய கைலாயத்தின் அருளைப் பெறுவதற்கும் மீண்டும் மீண்டும் அங்கே செல்லவேண்டும் என்பதை மட்டும் நான் அறிந்துகொண்டேன்.

உண்மையில், இந்த யாத்திரையை, வார்த்தைகளால் ஒருபோதும் விவாரிக்கவோ அல்லது விளக்கவோ முடியாது; இது உணரப்பட வேண்டும்.