வாழ்க்கைப் பிழைப்பா? சிதைப்பா?

சத்குரு: 'பிழைப்பதற்கு பணம் சம்பாதிக்க வேண்டும்' என்று என் வாழ்வில் நான் என்றுமே நினைத்தில்லை. என் தந்தைக்கு இதுவே பெருங்கவலையாக இருந்தது. “பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறானே... இவன் வாழ்க்கை என்னவாகப் போகிறதோ..?” என்று. என்னை பொறுத்தவரை, 'பயம்' என்பதுதான் பிரச்சினை. ஆனால் இப்போது 'பயமில்லை' என்பதல்லவா பிரச்சினையாகிப் போனது!

என் தந்தை ஒரு மருத்துவர் என்பதால், பிற்காலத்தில் நானும் ஒரு மருத்துவராக வருவேன் என்று எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் எனக்குப் பத்துவயது ஆகும்போதே, டாக்டராக மட்டும் நான் ஆகவே மாட்டேன் என்று அவரிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அதுமட்டுமல்ல, "என் வாழ்வில் நான் என்றுமே வேலைக்குப் போகவேண்டும் என்று விண்ணப்பம் செய்யமாட்டேன். தேவைப்பட்டால், காட்டிற்குச் சென்று, தேவையானதை அங்கு தோண்டி உண்பேனே தவிர, வேலைக்கு மட்டும் போகமாட்டேன்" என்றேன். "ஏன்? வேலை செய்வதில் அப்படி என்ன பிரச்சினை உனக்கு?" என்று என் தந்தை கேட்டபோது, “நாளெல்லாம் ஒரு மேஜையில் உட்கார்ந்து, பிழைப்பிற்காக பணம் சம்பாதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதைமட்டும் என் வாழ்வில் நான் நிச்சயம் செய்யவேமாட்டேன். தேவையெனில் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்து கொள்வேன். காட்டில் பிழைப்பை சம்பாதிக்க அவசியமில்லை... அதோடு அங்கு வாழ்வது எனக்கும் பரிச்சயம்தான்” என்பேன். இது நிஜம்தான். ஏனெனில், அதற்கு முன்பே காட்டில் சில நாட்கள் வசித்த அனுபவம் எனக்குண்டு. ஆம்.. அங்கு கிடைக்கும் தேன், கரையான், இப்படி எதேதோ உண்டு நான் வாழ்ந்திருக்கிறேன். என்னால் அங்கு சமாளித்துக் கொள்ளமுடியும் என்பது எனக்குத் தெரியும்... என் ஒருவனுக்கேனும் போதுமான அளவு காடு இருந்தது.

அது ஏனோ, பிழைப்பைத் தேடி வேறொரு இடத்திற்குச் செல்வது எனக்குப் பிடிக்கவில்லை.

மனித மூளையில் லட்சத்தில் ஒரு பாகமோ, அதைவிடக் குறைவாகவோ மூளையுடைய ஒரு எறும்பிற்குக் கூட தன் பிழைப்பை எப்படி நடத்திக்கொள்ள வேண்டுமென்று தெரியும். அப்படியிருக்க இத்தனை பெரிய மூளை கொண்ட மனிதனுக்கு பிழைப்பு ஏன் பிரச்சினையாக இருக்கவேண்டும்? மனித விழிப்புணர்வுடன் ஒப்பிட்டால் பிழைப்பு என்பது அற்பமான விஷயம்... ஆனால் மனித இனம் முழுவதும் ஒருசேர தன் சக்தியையும் புத்தியையும் இந்தப் பிழைப்பை நடத்திக் கொள்வதற்கு மட்டுமே செலவு செய்துகொண்டிருப்பது பெரும் துரதிர்ஷ்டம். மனிதனுடைய ஆக்க-சக்தி முழுவதும் ‘நான் எப்படி பணம் சம்பாதிப்பது? பிழைப்பை நடத்திக்கொள்வது?’ என்ற எண்ணத்திலேயே அமிழ்ந்து காணாமற் போய்க் கொண்டிருக்கிறது.

வாழ்வில் பணம் சம்பாதித்து, சம்பாதித்து, சம்பாதித்து பின் ஒருநாள் இறந்துபோனாலும், உங்களுக்கு மிஞ்சப்போவது என்னவோ சாம்பல் மட்டும்தான். என்னவொன்று அந்த சாம்பல் ஒரு விலையுயர்ந்த பெட்டியில் இருக்கலாம்... அதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை!

உங்கள் உடல், மனம், சக்தியை ஓரளவிற்கு நீங்கள் சரியாகக் கையாண்டால், உங்கள் பிழைப்பை நடத்திக்கொள்ள ஒருநாளிற்கு நான்கு மணிநேரமே போதுமானதாக இருக்கும். 'என் வாழ்வில் நான் செய்யக்கூடிய மிகமிக உயர்ந்த விஷயம் என்ன?' என்று நீங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நான் எள்ளவும்கூட பொறுப்பில்லாதவன் என்றே என் தந்தை எண்ணினார். ஆனால் நான் பொறுப்பில்லாதவனல்ல. அப்போதும்கூட நான் அவ்வாறு இருக்கவில்லை. 'உயிர்-வாழ்க்கை' என்பது என்னவென்று நான் அறிய விரும்பினேன். அந்த ஒன்று என்னை முழுவதுமாய் ஆட்கொண்டது. நான் எங்கு இருந்தாலும், அந்த ஒன்றுதான் என் கவனத்தில் இருக்கும். எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் அந்த ஒன்றுதான் எனக்குப் பிரதானமாக இருக்கும்.