பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்களின் நிலை குறித்து சத்குரு பகிர்ந்துகொள்கிறார். அதோடு உண்மையில் ஆணும் பெண்ணும் எப்போது உலகில் சரிசமமான பங்கு வகிக்கமுடியும் என்பது குறித்தும், அதற்கான தேவையையும் சத்குரு விளக்குகிறார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்களின் நிலை குறித்து சத்குரு பகிர்ந்துகொள்கிறார். அதோடு உண்மையில் ஆணும் பெண்ணும் எப்போது உலகில் சரிசமமான பங்கு வகிக்கமுடியும் என்பது குறித்தும், அதற்கான தேவையையும் சத்குரு விளக்குகிறார்.
பொருள்நிலை பிரதிபலிப்புகள் அனைத்தும் இருமுனைகளுக்கு இடையே மட்டுமே நிகழமுடியும், நேர்மறை-எதிர்மறை, ஆண்தன்மை-பெண்தன்மை, சிவா-சக்தி, ஆண்-பெண். இருமுனைகளுக்கு இடையே ஒரு பிரிவினையை நாம் உருவாக்கும் அக்கணமே, இரண்டுக்கும் இடையே உயர்ந்தது தாழ்ந்தது எனும் முடிவுகள் எழுகின்றன. இந்த முடிவுகளால் பல அடுக்குகளில் குழப்பங்களும் அசிங்கங்களும் தவறுகளும் நிகழ்ந்துள்ளன. ஆண்தன்மை அல்லது பெண்தன்மை மிகையாக இருப்பதன் பிரதிபலிப்பாகவே ஆண் என்பதும் பெண் என்பதும் உள்ளது. இங்கே நீங்கள் ஒரு பெண்ணாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குள் உங்கள் தந்தை இல்லை என்றல்ல, இதுவே ஆண்களுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் பொருந்தும். இந்த உண்மையை உணர்ந்து, உங்களுக்குள் உள்ள ஆண்தன்மையும் பெண்தன்மையுன் ஒரே மட்டத்தில் இருக்கும் விதமாக பேணி வளர்த்தால், நீங்கள் ஒரு சமநிலையான மனிதராக இருப்பீர்கள். ஆண்தன்மையை மட்டுமே நீங்கள் பேணி வளர்த்தால், ஆண்மையின் மூர்க்கம் மட்டுமே வெளிப்படும். பெண்தன்மையை மட்டுமே நீங்கள் பேணி வளர்த்தால், அதிகப்படியான அலங்காரமும் உணர்ச்சிப்பெருக்கும் மட்டுமே வெளிப்படும்.
பலவிதங்களில், பெண் என்பவள் மனித இனத்தின் மலரைப் போன்றவள். வேரின்றி செடியில்லை, ஆனால் மலரின்றி வாழ்க்கையில் நிறைவில்லை. வாழ்க்கையின் பெண்தன்மை ததும்பும் அம்சங்களான இசை, கலை, அழகுணர்வு போன்றவை, பொருளாதாரம், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்திற்கு இணையான முக்கியத்துவம் வகிக்கும் ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். இன்றைய காலத்தில், பெண்கள் எப்படியாவது ஆண்களைப் போல இருந்திடவேண்டும் என முனைகிறார்கள், ஏனென்றால் ஆணைப்போல இருப்பதே வெற்றியின் இலக்கணமாக இருக்கிறது. நம் வாழ்க்கை அழகாக இருக்கவேண்டும் என நாம் விரும்பினால், பெண்தன்மை என்பது சமுதாயத்தில் அதற்குரிய இடத்தை கண்டுகொள்ள வேண்டும். பயன்தருவதும் அழகுசேர்ப்பதும் சமுதாயத்தில் சரிசமமாக தேவைப்படுகிறது. எது பயன்தருவது எது பயனற்றது என்று மட்டும் நாம் சிந்தித்தால், மலர்கள் அனைத்தையும் ஒழித்து நாம் காய்கனிகள் மட்டுமே வளர்க்கவேண்டும். நம் வாழ்க்கைக்கு நேர்த்தியும் அழகும் இல்லாவிட்டால், வாழ்க்கை பயனற்றுப் போய்விடும்.
Subscribe
பாரம்பரியமாக, இந்தியக் கலாச்சாரம் எப்போதுமே பெண்தன்மையை ஆண்தன்மைக்கு இணையான முக்கியத்துவம் கொண்டதாகவே கருதியது. மீண்டும் மீண்டும் நிகழ்ந்த படையெடுப்புகளால் தான், கடந்த சில நூற்றாண்டுகளில் சமுதாய சூழ்நிலை மாறியிருக்கிறது. படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் கைவைத்தது உங்கள் மனைவி மீதும் மகள் மீதும் தான். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை வீட்டிற்குள் முடக்க ஆரம்பித்தோம். பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட ஒன்று காலப்போக்கில் வழக்கமாக மாறியது. இன்று இந்தியா ஒரு சுதந்திரமான நாடாக இருக்கிறது, அதனால் இதை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது. அப்படியானால் மேற்கத்திய நாடுகளைப் போல நாம் பெண்களை ஆண்களைப் போல மாற்றவோ, பெண்களை பார்பீ பொம்மைகள் போல மாற்றவோ அவசியமில்லை. துரதிர்ஷ்டவசமாக, அற்பமாக நடந்துகொள்வதும் கற்பனையில் மிதப்பதும் பெண்தன்மையாக கருதப்படுகின்றன. அதில் ஆழமும், உள்ளிருந்து மிளிரும் அழகும் இருப்பதில்லை.
சமுதாயத்தில் ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசமமான விகிதத்தில் இருப்பது மிகவும் முக்கியம். மலரமுடியாது போகும் வேரோ செடியோ இயற்கையாகவே சோர்ந்துவிடுகிறது. பெண்தன்மை வெளிப்படவில்லை என்றால், இது மனச்சோர்விற்கு வழிவகுக்கும். முற்றிலும் ஆண்தன்மையாக இருக்கும் மனம், இருண்டு, உயிரற்றுப்போய், சோர்ந்துவிடும். உலகில் நீங்கள் இதைத்தான் பார்க்கிறீர்கள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் மனச்சோர்வு மிகுந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம், இப்போது இது இந்தியாவிலும் பெருகத் துவங்கிவிட்டது. உங்களுக்குள் இருக்கும் பெண்தன்மை உயிர்ப்பாக இருந்தால், சின்னச்சின்ன விஷயங்களிலிருந்து அழகான விஷயங்களை உருவாக்கும் வழிகளை அது கண்டறிகிறது. மாறாக, உங்களுக்குள் உள்ள பெண்தன்மையை நீங்கள் முற்றிலுமாக அழித்திருந்தால், வெளியில் எல்லாம் சரியாகத் தெரியும், ஆனால் அது உங்களுக்கு வேலைசெய்யாது.
எப்போதும் செயல்திறன் மிகுந்த விதத்திலும், போட்டியிட்டு, மற்றவரைவிட சிறந்து விளங்க விரும்புவது, சமுதாயத்தை அதிகப்படியான ஆண்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஒரு சமுதாயம் அதிக ஆண்தன்மை கொண்டதாய் மாறும்போது, பொருளாதார செழிப்பு வரும், ஆனால் பொருளாதார செயல்முறை நிகழ்வதற்கான கருவிகளாக மனிதர்கள் இருப்பார்களே தவிர, மனித நல்வாழ்விற்கான கருவியாக பொருளாதார செயல்முறை இருக்காது. இன்று பொருளாதார எஞ்ஜின் என்பது மனிதகுலம் எனும் எரிவாயுவால் ஓடுகிறது. நம் கல்விமுறைகளோ நம் பிள்ளைகளை பொருளாதாரமெனும் இயந்திரம் இயங்கத் தேவையான பாகங்களாக மாற்றும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த விதத்தில் பார்த்தால், அவர்கள் பிறக்கும் கணத்திலிருந்து கல்லறைக்குச் செல்லும் கணம் வரை, மனிதர்கள் இன்னும் சிறப்பாக பிழைப்பை நடத்திக்கொள்ள மட்டுமே பாடுபடுகின்றனர். நம் சமுதாயங்கள், ஆண்தன்மை மேலோங்கியிருக்கும் சமுதாயங்களாக மாறிவருகின்றன.
இதை மாற்றும் நேரம் வந்துவிட்டது. எல்லாப்பக்கமும் பொருளாதாரமே வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக மாறிவரும் சூழ்நிலையில், பொருளாதாரத்தில் பெண்கள் பங்குவகித்து அதை மென்மையானதாக மாற்றுவது மிகவும் முக்கியமாக இருக்கிறது. இன்று நம் பொருளாதார செயல்பாடுகள், பூமிக்கு போர்களைக் காட்டிலும் அதிக சேதம் செய்கின்றன. அதிகப்படியான ஆண்தன்மை கொண்ட இந்த அணுகுமுறையை குறைத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. பொருளாதார தலைமையில், உலகின் போர்டுரூம்களில், ஆண்களைவிட அதிக ஆண்தன்மையுடன் நடக்க முயலாமல், தங்களுக்குள் சற்றாவது பெண்தன்மை இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பெண்கள் தேவை. தேவைப்படும்போது பெண்தன்மையுடன் இருப்பதற்கு வெட்கப்படாத ஆண்களும் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். சமுதாயத்தில் இந்த சமநிலையைக் கொண்டுவர வேண்டும். சமநிலையில் மட்டும்தான் சக்தி இருக்கிறது. ஆண்தன்மையை பெண்தன்மையை விட உயர்ந்ததாக்கியதற்கு நாம் பெரிய விலை கொடுக்கத் தேவையிருக்கும். (பெண்தன்மை ஆண்தன்மையைவிட உயர்ந்ததானாலும் அதே நிலைதான்.) நமக்குள் ஒரு சமநிலை இருந்தால் மட்டுமே நமக்கு நல்வாழ்வு வரும். அது நிகழவேண்டும் என்றால், நம் உடலமைப்பைத் தாண்டி நம் அடையாளம் உயரவேண்டும். தினசரி அளவில் மனிதர்களை ஆண் யார் பெண் யார் என்று பார்ப்பதற்கான தேவைதான் என்ன? இனப்பெருக்கத்திற்கான உறுப்புகளுடன் அடையாளப்பட்டு இருப்பது, வாழ்தற்கு மிக அற்பமான வழி.
ஆன்மீக செயல்முறை என்றால் உங்கள் உடலமைப்பைத் தாண்டிய ஒரு பரிமாணத்திற்கு அனுபவப்பூர்வமாக நகர்வது. உங்கள் வாழ்க்கை அனுபவம் உங்களின் பொருள்தன்மையைத் தாண்டிச் சென்றால், நீங்கள் ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன? வாழ்க்கையின் சில அம்சங்களில் நமக்கு ஆணோ பெண்ணோ தேவைப்படலாம். அதற்கு மேல் பாலின அடையாளத்தை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுமக்கவேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளால் நாம் பாலின அடையாளத்தை மிகைப்படுத்துகிறோம், இது பெண்களின் நல்வாழ்விற்கு வழிவகுக்கப் போவதில்லை. நாம் எப்படிப்பட்ட சமுதாயம் உருவாக்கவேண்டும் என்றால், என்ன தேவைப்படுகிறதோ அதைச் செய்யும்வரை செய்பவர் ஆணா பெண்ணா என்பது நமக்கு ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது. யார் எந்த பாலினம் என்பது மட்டுமே உங்கள் கவனத்தில் இருந்தால், நீங்கள் மனிதர்களை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று முடிவெடுப்பதை தவிர்க்கமுடியாது. பல்வேறு மனிதர்கள் பல்வேறு முடிவுகளுக்கு வருவார்கள், அதனால் பாரபட்சமும் பிரிவினையும் ஏற்படும். பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களுடனும் ஒத்திசைவாக நாம் ஒன்றி இயங்காவிட்டாலும், மனிதர்களாக ஒரே இனமாகவாவது நாம் இயங்கவேண்டும். ஏதோவொன்றை உயர்வாகப் பார்ப்பதும், ஏதோவொன்றைத் தாழ்வாகப் பார்ப்பதும், முதிராத புத்திசாலித்தனத்தின் இயல்பு. மனிதர்களிடம் இருக்கும் பெரும்பாலான முன்முடிவுகளும் பாரபட்சமும், அவர்களுக்கு பலவிதங்களில் கற்பிக்கப்படுகின்றன. எதையும் மேலே வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை, எதையும் கீழே வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை.
ஆதியோகி, அதாவது சிவன், பார்வதியை தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொண்டு, பாதி ஆணும் பாதி பெண்ணுமான அர்த்தநாரியாக மாறிய கதை உங்களுக்குத் தெரியும். அவனின் ஒருபாதி பெண்ணாக இருப்பதால் அவன் முழுநிறைவான மனிதனாகக் கருதப்படுகிறான். இது உங்கள் இருப்பின் இயல்பை நினைவுபடுத்தவே கூறப்படுகிறது. உங்களுக்கு ஆண் உடல் இருப்பதால் உங்களுக்குள் இருக்கும் பெண்தன்மை கொல்லப்படவேண்டும் என்றோ, பெண் உடல் இருப்பதால் ஆண்தன்மை கொல்லப்பட வேண்டும் என்றோ கிடையாது. உங்களுள் உள்ள ஆண்தன்மைக்கும் பெண்தன்மைக்கும் இடையே, சரிசமமான நிலையைக் கொண்டுவருவது மட்டுமே, புத்தியளவிலும் அனுபவப்பூர்வமாகவும் உயிரின் ஆழமான பரிமாணங்களை உணர்வதற்கான ஒரே வழி. இந்த இருமுனைக்கொள்கை, யோகாவின் அடிப்படையான வடிவங்களுள் ஒன்றான ஹட யோகாவிலும் பிரதிபலிக்கிறது. 'ஹ' என்றால் சூரியன், 'ட' என்றால் சந்திரன். ஹடயோகா என்பது, உடலின் வடிவியல் மீது வேலைசெய்து, உங்கள் இருப்பின் சூரியன் மற்றும் சந்திரன் சார்ந்த பரிமாணங்களின் இடையே சமநிலையைக் கொண்டுவருவது. அப்போது அவ்விரண்டு பரிமாணங்களிலிருந்தும் சிறந்தது உங்களுக்குக் கிடைக்கும். ஆண்தன்மை அல்லது பெண்தன்மை ஒருதலைபட்சமாக இருந்தால், அதற்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.
மனிதகுலம் முழுவதும் சமநிலை எனும் வல்லமைபடைத்ததாக இருந்தால் மட்டுமே பெண்தன்மை என்பது உண்மையில் சக்திவாய்ந்ததாக மாறும். சமுதாயத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தால், இயற்கையாகவே ஆண் ஆதிக்கம் செலுத்துவான். சமநிலையான, ஸ்திரமான சமுதாயத்தில் தான் பெண்களால் தங்கள் திறமைகள் அனைத்தையும் ஆராய்ந்துணர முடியும். மிகக் குறைவான சமூகங்களே அதில் பெண்கள் தங்களை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். ஆண்களும் பெண்களும் சரிசமமான அளவு பங்குவகிக்கக்கூடிய ஒரு களத்தை தொழில்நுட்பம் இன்று உருவாக்கிக் கொடுத்துள்ளது. மனதளவிலும் ஆன்மீகரீதியாகவும் கூட ஆண்களும் பெண்களும் சரிசமமாக பங்குவகிக்கக்கூடிய ஓர் இடத்தை உருவாக்குவதற்கு இதுதான் நேரம். ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசமமாக இயங்கினால் மட்டுமே மனிதர்கள் தங்களுக்குள் மலர்ந்து வாழ்க்கையின் உச்சத்தை உணர்வார்கள்.