ஆழமான உயிர் உணர்வு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது பணி குறித்து எழுதியுள்ள கவிதையுடன், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்மீகப் பணிக்கான தேவை மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதைச் செய்வது தரும் நிறைவை நினைவுபடுத்தி, அதனை உணர்ந்தவர்களை அவருடன் இணைந்து பணியாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்.
 
 
 
 

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது பணி குறித்து எழுதியுள்ள கவிதையுடன், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்மீகப் பணிக்கான தேவை மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதைச் செய்வது தரும் நிறைவை நினைவுபடுத்தி, அதனை உணர்ந்தவர்களை அவருடன் இணைந்து பணியாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்.

எனது நாட்கள்

என் நாள் எனக்கு சொந்தமல்ல.
இன்று என்னுடைய நாள்
ஆனால் அது எனக்கு சொந்தமல்ல.
நேற்றும் இன்றும் அடுத்த நாளும்
எனக்கு சொந்தமல்ல.
மனிதராய் இருப்பதன் அழகை
பெரும்பாலானோர் உணராதிருப்பதால்,
கண்கூடான ஒன்றின் திரை விலக்க
என் நாள் ஒதுக்கப்பட்டுவிட்டது.
உடலின் எல்லைகள் உயிருக்கு
பிணைப்புகள் ஏற்படுத்திவிட்டது.
காண்பதற்கு இருப்பதெல்லாம், நாம்
உயிராய் உள்ளதை உணர்வதே.
அதை உணர்த்த என் நாள்
ஒதுக்கப்பட்டுவிட்டது.

இப்போது தோராயமாக முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் தொடர்ந்து ஊர் ஊராக பயணித்தபடி இருக்கிறேன். என் பயணங்களை நான் குறைக்க விரும்புகிறேன், ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியுடனும் நாம் மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதத்தை பார்த்தால், நீங்கள் அனைவரும் என்னை உழைத்து உழைத்தே உயிர் பிரியச் செய்துவிடுவீர்கள் என்று தோன்றுகிறது. நான் குறைபட்டுக் கொள்ளவில்லை. நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது, நம் நிகழ்ச்சியின் மொத்த அனுபவமும் பங்கேற்பாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இது பெரும்பாலும் நம் தன்னார்வத் தொண்டர்களால்தான். நான் போகும் இடமெல்லாம் நம் தன்னார்வத் தொண்டர்கள் அற்புதமானவர்கள் என்று மக்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

உங்களில் யாரெல்லாம் இன்னும் எதிலும் பிணைக்கப்படாமலும் சிக்கிப்போகாமலும் இருக்கிறீர்களோ, குறிப்பாக இளைஞர்கள், உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறீர்கள் என்று பார்க்கவேண்டும். நீங்கள் செய்ய விரும்புவதெல்லாம் உணவு உண்டு, உறங்கி, இனத்தைப் பெருக்கி ஒருநாள் மரிப்பது மட்டும்தானா? அல்லது உங்களைவிடப் பெரிதான எதையாவது உருவாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கற்பனைகூட செய்திராத பிரம்மாண்டத்திற்காக எழுந்துநிற்க விரும்புகிறீர்களா? உயிரெனும் பிரம்மாண்டத்தின் உச்சபட்ச நிலையென்பது, அதற்கு நீங்கள் முழு கவனம் கொடுக்கும்வரை வளைந்துகொடுக்காது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொருட்களையும் மக்களையும் உங்களைச் சுற்றி சேர்த்துக்கொள்வது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றாது. படைப்பு உங்களை உருவாக்கியிருக்கும் விதத்திலேயே நீங்கள் முழுமையான ஒரு உயிராக உள்ளீர்கள். முழுமையடைய உங்களுக்கு உபகரணங்கள் வேண்டியதில்லை. முற்றிலும் மனோரீதியான, பொய்யான ஒரு பற்றாக்குறை உணர்வால்தான், உங்கள் வாழ்க்கையை முழுமையாக்க ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நித்தமும் பொருட்கள் வாங்க கடைவீதி சென்றும், மென்மேலும் உங்களுக்குள் தகவல்களை திணித்துக்கொண்டும் வாழ விரும்புகிறீர்களா? அல்லது ஏதோ ஒன்றாக ஆகவேண்டிய அவசியமில்லாமல் இங்கு இருப்பதன் சுகத்தை உணர விரும்புகிறீர்களா?

மனித புத்திசாலித்தனம் முன்பு எப்போதும் இல்லாத அளவு மலர்ந்து வருகிறது. பூமியில் இவ்வளவு பேரால் முன்பு எப்போதும் தங்களுக்குத் தாங்களே சிந்திக்க முடிந்ததில்லை. அடுத்த சில ஆண்டுகளில், மிகப்பெரியதொரு மாற்றத்தை நீங்கள் கவனிப்பீர்கள். நெடுங்காலமாக மக்கள் நம்பியிருந்த அபத்தங்கள் எதுவாயினும் அவை இனி விற்காது. ஆன்மீக செயல்முறையை பெரிய அளவில் மனிதகுலத்திற்கு பரிமாறவேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் மத நம்பிக்கைகளும் சொர்க்கத்திற்கு செல்லும் உத்தரவாதங்களும் மறையும்போது, மதுவும் போதைப்பொருளும் தலைதூக்கும். ஒன்று, உலகம் முழுவதும் குடிகாரர்களாகவும், போதைப்பொருளுக்கு அடிமைகளாகவும் மாறும். அல்லது தியானித்து இருக்கும் அற்புதமான மனிதர்களாக மலர நம்மால் மக்களை வழிநடத்த முடியும். இதுவே நம் கைகளில் இப்போது இருக்கும் பொறுப்பு. உங்களில் இந்த உணர்வு கொண்டவர்கள் அனைவருமே இதற்காக எழுந்து நின்று ஏதோவொன்றைச் செய்யவேண்டும்.

இந்தத் தெளிவை உலகிற்கு பரிமாற நமக்கு மனிதர்கள் வேண்டும். இதனை ஆன்மீகம் என்று கூட அழைக்கவேண்டாம், இது ஆழமான உயிர் உணர்வு. தேர்வு உங்களிடத்தில். நீங்கள் வெறும் பிழைப்பை சம்பாதிக்க விரும்புகிறீர்களா, அல்லது துடிப்புடன் வாழ விரும்புகிறீர்களா? பிழைப்பை சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. மற்ற எல்லா உயிரினங்களும் அதனை செவ்வனே செய்கின்றன, அதுவும் சந்தோஷமாகவும் சுலபமாகவும் செய்கின்றன. அந்த சமாதானத்தைக்கூட பெரும்பாலான மனிதர்களிடத்தில் நீங்கள் காண்பதில்லை, ஏனெனில் பிரபஞ்சமயமாக இருக்கவேண்டிய அறிவும் விழிப்புணர்வும் இப்போது எல்லைக்குட்பட்டு முடங்கியிருக்கிறது. மக்கள் வேதனைப்படுவது வெளிசூழ்நிலைகளால் அல்ல, அவர்கள் அப்படி நினைத்துக்கொண்டாலும் அது அப்படியல்ல. வெளிசூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், பணக்காரர்-ஏழை, படித்தவர்-படிக்காதவர், மணமானவர்-ஆகாதவர் என்று எப்படி இருந்தாலும் மக்கள் வேதனைப்படுகின்றனர். அவர்கள் வேதனைப்படுகிறார்கள் என்றால் அவர்கள் வாழ்வில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தமல்ல. மக்கள் உண்மையில் வேதனைப்படுவது, எல்லையில்லாமல் இருப்பதற்கு பதில் எல்லைக்குள் சிக்குண்டிருக்கும் அவர்களது விழிப்புணர்வால்தான்.

இந்த குழிக்குள் நீங்கள் விழுந்துவிடக்கூடாது என்பதே எனது ஆசையும், ஆசியும். உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நீங்கள் ஒருமுறை உணர்ந்துவிட்டால், அந்த நிலையில் உங்களை உறுதிப்படுத்தி, உங்களால் முடிந்த விதங்களிலெல்லாம் எத்தனை பேருக்கு அதனை கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேருக்கு சேர்த்திடுங்கள். உங்கள் வாழ்க்கை ஒளிரப்போவது நீங்கள் சேகரித்து சொந்தமாக்கும் விஷயங்களால் அல்ல, உங்கள் வாழ்க்கை அனுபவத்தின் ஆழத்தால்தான். இதனை அனைவருக்கும் அர்ப்பணிப்பதில்தான் செயலாற்றுவதன் நிறைவு உள்ளது.

Love & Grace

முழுநேரத் தன்னார்வத் தொண்டர்களுக்கான ஒருங்கமைவு நிகழ்ச்சி, குரு பௌர்ணமி தினமான ஜூலை 9ஆம் தேதி, சத்குரு முன்னிலையில் ஈஷா யோகா மையத்தில் துவங்குகிறது. இந்த படியை நீங்கள் எடுக்க விரும்பினால், இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும். மேலும் விபரங்களுக்கு, +91-83000 98777 என்ற எண்ணை அழைக்கவும், அல்லது fulltimevolunteering@ishafoundation.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1