ஜென்னல் பகுதி 40

ஒரு ஜென் மடம். ஜென் குரு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து அடுப்பு மூட்டி தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார். "யாருக்காகத் தயாரிக்கிறீர்கள்..?" என்று கேட்டான் ஒரு சீடன்.

"அதோ அங்கே சோம்பலாக உட்கார்ந்திருக்கிறானே, அவனுக்காகத்தான்.."

மடத்தில் மற்ற மாணாக்கர்கள் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சீடன் மட்டும் எப்போதும் வேலைகளைத் தவிர்த்துக்கொண்டு சோம்பலாகவே உட்கார்ந்திருப்பான்.

"அவனுக்கு நீங்கள் எதற்கு தயாரித்துத் தரவேண்டும்..? வளர்ந்துவிட்டான். அவனே தனக்குத் தேவையான டீயைத் தயாரித்துக்கொள்ளட்டுமே..!" என்றான் சீடன்.

குரு புன்னகைத்தார். "இப்போது இங்கே நான் இருக்கிறேன்.." என்றார்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

வாழ்க்கையின் மிக முக்கியமான படிப்பினை என்ன..? உன்னால் செய்ய முடிந்ததை நீ செய். இந்த உலகத்தையே உன்னுடையதாக நீ வரித்துக்கொண்டுவிட்டால், அதன்பின் எல்லாமே உன்னுடையதுதானே..? 'இதை நான் செய்ய வேண்டும். இதை நான் செய்யக்கூடாது..’ என்று பாகுபடுத்திப் பார்ப்பதைவிட, 'இதை என்னால் செய்ய முடியும். இதை என்னால் செய்ய முடியாது..’ என்று பாகுபடுத்திப் பார்ப்பது எவ்வளவோ மேல்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்கள் உயிரின் முழுவீச்சையும் நீங்கள் உணர வேண்டும் என்றால், முதலில் எதையும், 'இது என்னுடையது, இது என்னுடையதில்லை' என்று சுருக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கை படுமோசமாக மாறிவிடும்.

'இது என் குடும்பம். இது என் மனைவி. இது என் தாய். இது என் வீடு. இது என் தெரு..’ என்று எதனுடனாவது உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது, 'இதைச் செய்வேன், இதைச் செய்ய மாட்டேன்’ என்ற தீர்மானங்களுக்கு வருகிறீர்கள்.

'என் குழந்தைக்கு அடிபட்டால் நான் ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும். வேறெந்தக் குழந்தைக்கோ அடிபட்டால், நான் எதற்குப் போக வேண்டும்..?' என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள்.

யாரும் இந்த உலகில் உங்களுக்குச் சொந்தமில்லை. நீங்கள் இந்த உலகில் வந்தது போலவே, அவர்களும் வந்து சேர்ந்தார்கள், அவ்வளவுதான்.

திருமணமானால், 'இவள் என் மனைவி!' என்கிறீர்கள். விவாகரத்து ஆனால், 'இவள் என் மனைவி அல்ல!' என்கிறீர்கள். இரண்டுமே நீங்களாக பூட்டிக்கொண்ட உறவுமுறைதான்.

திருமணம் ஆகி, இவள் என்னுடையவள் என்று சொந்தம் கொண்டாடத் துவங்கியதும், அதற்கேற்றாற்போல், உணர்வுகள், உணர்ச்சிகள், பாசம் எல்லாம் பிறக்கின்றன. எப்போது நிராகரிக்கிறீர்களோ, அப்போதே அந்த உணர்வுகள் மாறி, எரிச்சல், கோபம், வெறுப்பு என்ற உணர்வுகள் பிறக்கின்றன.

இப்படி எதையாவது சொந்தம் கொண்டாடும்போது, அதனுடன் சேர்ந்து உணர்வுகள் பிறப்பது மிகவும் பாரபட்சமான செயலாக மாறிவிடும். உங்களுடைய முழுமையான திறமையை ஒருபோதும் அது வெளிக்கொணராது.

உங்கள் உயிரின் முழுவீச்சையும் நீங்கள் உணர வேண்டும் என்றால், முதலில் எதையும், 'இது என்னுடையது, இது என்னுடையதில்லை' என்று சுருக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கை படுமோசமாக மாறிவிடும்.

ராஜுவும், மாலதியும் காதலர்கள். ஆனால், வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களுடைய குடும்பங்களோ, அவர்களைச் சேர்ந்த இனமோ ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

"சேர்ந்து வாழ முடியாதபோது, எதற்காக இந்த வாழ்க்கை..? நாம் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம் வா..!" என்று ராஜு சொன்னான்.

இருவருமாக மலை உச்சிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். கைகளைக் கோத்துக்கொண்டார்கள். குதிக்க இருந்த கடைசித் தருணத்தில், அந்தப் பெண், "ராஜு, எனக்கு பயமாக இருக்கிறது. முதலில் நீ குதி..! அதைப் பார்த்து நான் தைரியம் பெறுகிறேன்!" என்று கூறினாள்.

ராஜு, "ஐ லவ் யூ மாலதி..!" என்றான். சட்டென்று விளிம்பிலிருந்து குதித்துவிட்டான்.

யாரும் எட்ட முடியாத பள்ளத்தில் போய் ராஜு விழுந்ததை மாலதி பார்த்தாள். அவளும் குதிப்பதற்காகத் தயாரானாள். கடைசித் தருணத்தில், 'இப்போது ராஜுவே இல்லை. ராஜு இல்லை என்றால், என் காதல் இல்லை. காதல் இல்லை என்றால், ஜாதிப் பிரச்சினை இல்லை. குடும்பப் பிரச்சினை இல்லை. சமூகப் பிரச்சினை இல்லை.. பிரச்சினையே இல்லாதபோது, நான் எதற்கு என் உயிரை விடவேண்டும்..?' என்று அவளுக்குத் தோன்றியது.

கீழே பள்ளத்தைப் பார்த்து, "ராஜு, ஐ லவ் யூ..!" என்று ஒருமுறை கத்திவிட்டு, வீட்டைப் பார்த்துத் திரும்பி நடந்தாள்.

என்னுடையது, என்னுடையவன் என்று நினைக்கும்போது அதை ஒட்டிய செயல்கள் இப்படித்தான் இருக்கும்.

ஆன்மிகப் பாதையில் பயணம் செய்பவர்கள், அவ்வாறு குறுக்கிக் கொள்வதில்லை. 'இவனுக்குச் செய்வேன், இவனுக்குச் செய்ய மாட்டேன்' என்று சொல்வதில்லை. 'என்னால் இந்தத் தருணத்தில் இதைச் செய்ய முடியும். இதைச் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால், அதைச் செய்வேன்.' என்றுதான் முடிவெடுத்துச் செயல்படுவார்கள்.

இதைத்தான் ஜென் குரு அவரிடம் குறிப்பிடுகிறார்.

 


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418