பூச்சிகளின் உடலமைப்பும் வாழ்க்கைமுறையும்!
பூச்சிகளின் உடலமைப்பு, பூச்சிகளின் உடல் பாகங்கள், வாழ்க்கை சுழற்சி, பூச்சிகளின் உணவு, என அனைத்தையும் விரிவாக பேசும் இந்த பதிவு, பூச்சிகளைப் பற்றிய அறிந்திராத பலவற்றை உணர்த்தும்!
பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 2
பூச்சிகளின் உடலமைப்பு, பூச்சிகளின் உடல் பாகங்கள், வாழ்க்கை சுழற்சி, பூச்சிகளின் உணவு, என அனைத்தையும் விரிவாக பேசும் இந்த பதிவு, பூச்சிகளைப் பற்றிய அறிந்திராத பலவற்றை உணர்த்தும்!
பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்தினால் பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம் என்று முயற்சிக்கிறார்கள், உண்மையில் அவை பூச்சிக்கொல்லியல்ல, உயிர்கொல்லிகள். இவைகள் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை விலங்குகள், கால்நடைகள் மற்றும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் கொல்லக்கூடியதால் அதை உயிர்கொல்லி என்று அழைப்பதே சாலச் சிறந்தது.
பல்வேறு செயல் திறனுடன் பூச்சிக்கொல்லிகள் உருவாக்கப்படுகின்றன. இவைகளை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதே மனிதகுலத்திற்கு நல்லது. எண்டோசல்பான் போன்ற தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளும் கூட பயன்பாட்டில் உள்ளது. தாயின் கருப்பையில் வளரும் குழந்தையின் உடல் அமைப்பையே சிதைக்கக் கூடியது எண்டோசல்பான் என்பது நிரூபணமாகியும் விவசாயிகள் இன்னும் விழிக்கவில்லை.
இத்தைகைய சூழலில் பூச்சிகள் மேலாண்மை மிக முக்கியமாகிறது. பூச்சிகளை சரியாக நிர்வகிக்க தெரிந்து கொண்டால் மரபு மாற்றப் பயிரையோ, பூச்சிக்கொல்லிகளையோ நாம் நாடத்தேவையில்லை.
பூச்சிகள் நமது நண்பர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும், பூச்சிகள் நமக்கு நிச்சயமாக எதிரியல்ல! பூச்சிகளில் நல்லது என்றோ, கெட்டது என்றோ ஏதும் இல்லை; அவை அவற்றின் இயல்புப்படி வாழ்கின்றன. விவசாயம் என்று வரும்போது நமது புரிதலுக்காக பூச்சிகளை நல்லது என்றும் கெட்டது என்றும் பிரிக்கிறோம்.
பூச்சிகள பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்னா பூச்சி செல்வம் அண்ணா செல்ற பொன்மொழியை கடைபிடிங்க. ஆனா இந்த பொன்மொழியை பூச்சிகள் வகுப்புக்காக மட்டும் சொல்லல, வாழ்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் இந்த பொன்மொழி துணைக்கு வரும்.
If I hear, I may forget
If I see, I may remember
If I do, I may understand
If I Practice, I may be perfect
If I Discover, I won it
நான் கேட்டால், அதை மறந்து விடலாம்
நான் பார்த்தால், என் நினைவில் இருக்கலாம்
நான் செய்தால், அதை புரிந்து கொள்ளலாம்
நான் பயிற்சி செய்தால், என் திறமை நிறைவடையலாம்
நான் கண்டுபிடித்தால், வெற்றி எனதே!
தினம் ஒரு பூச்சியை கண்டுபிடியுங்கள், ஆய்வு செய்யுங்கள், தெரிந்து கொள்ளுங்கள், வெற்றியடையுங்கள்.
உங்கள் பண்ணையில் பூச்சிகளை கவனிங்க!
சின்ன வயதில் பட்டாம் பூச்சி, தும்பி இவைகளை பிடிச்சு விளையாடி இருப்பீங்க. அவ்வாறே தற்போது பூச்சிகள் மீது ஒரு விழிப்புணர்வை கொண்டு வாங்க.
உங்க பயிர்ல என்னென்ன பூச்சிகள் வருது?
வர்ற பூச்சியெல்லாம் பயிர்ல என்னென்ன பண்ணுது?
பூச்சிங்க எந்தெந்த நேரத்துல வருது?
பூச்சிங்க எங்க இருந்து வருது?
ஒரு பூச்சிக்கும், மற்றொரு பூச்சிக்கும் என்ன வித்தியாசம்?
பூச்சிங்க எப்படி இனப்பெருக்கம் செய்து?
Subscribe
பயிர் இல்லாத போது அந்த பூச்சிங்க எங்க இருக்கு?
இப்படி பல விஷயங்கள கவனிங்க. நீங்க தொடர்ந்து கவனிச்சீங்கன்னா பூச்சிகள பத்தின பல விஷயங்கள் உங்களுக்கு புரியும். நீங்க கவனிக்கிற பூச்சிகள பத்தி சின்ன குறிப்பு எடுத்து வச்சுக்கோங்க, ஏன்னா எல்லா பூச்சிகளையும் எல்லா பருவகாலத்துலயும் பாக்க முடியாது.
பூச்சிகளின் உடல் அமைப்பு
பூச்சிகளின் உடல் அமைப்பை விவசாயி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவேண்டாம். பூச்சிகளை கவனித்து அவை நன்மை செய்யும் பூச்சியா? அல்லது தீமை செய்யும் பூச்சியா? என்று தெரிந்துகொள்ள பூச்சிகளின் அடையாளங்களை நாம் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களது கவனிக்கும் தன்மை அதிகரிப்பதற்காக பூச்சிகளின் உடல் அமைப்பு பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பூச்சியின் உடலை தலை, மார்பு, வயிறு என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
தலை
தலையில் கண்கள், வாய், உணர் கொம்புகள் போன்றவை இருக்கின்றன.
கண்கள்
ஒரு ஜோடி கண்கள் உள்ளது. இது பொதுவாக கூட்டுகண்களாக இருக்கும். இந்த கூட்டுக்கண்கள் நூற்றுக்கணக்கான கண்கள் சேர்ந்த ஒரு அமைப்பாகும்.
வாய்
பூச்சிகளின் வாய் அமைப்பு பல வகைகளில் உள்ளது.
நீண்ட உறிஞ்சு குழல் - கொசு
சுருண்ட உறிஞ்சு குழல் - பட்டாம்பூச்சி
வெட்டும் ரம்பம் போன்ற வாய் - நாவாய் பூச்சிகள்
பஞ்சு போன்ற உறிஞ்சும் வாய் - வீட்டு ஈ
பூச்சி கடித்த இலைகள், எந்த மாதிரி சேதம் அடைந்துள்ளது, கடிக்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து கவனித்தால், அந்த அடையாளங்களை வைத்தே எந்தவகையான பூச்சி அந்த இலையை கடித்தது என்று ஊகித்து அறிய முடியும். ஏனெனில் சில பூச்சிகள் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வாய் அமைப்பை பெற்றுள்ளது.
உணர்கொம்பு
ஒரு ஜோடி உணர் கொம்புகள் உள்ளன. பூச்சிகளுக்கு மூக்கு கிடையாது மூக்கு செய்ய வேண்டிய பணிகளை உணர்கொம்புகள் செய்கின்றன.
மார்பு
பெரும்பாலும் எல்லா வளர்ந்த பூச்சிகளுக்கும் இறக்கை இருக்கும், இரண்டு ஜோடி இறக்கைகள், அரிதாக ஒரு ஜோடி இறக்கை மட்டும் காணப்படும், மூன்று ஜோடி கால்கள், அதாவது ஆறு கால்கள் இருக்கும். இறக்கை, கால் போன்றவை மார்பு பகுதியில் இணைந்திருக்கும்.
எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் இருக்கேன்னு கேட்காதிங்க. இது பூச்சி இனத்தில் வராது. பூச்சிகளோட வாழிடத்தில் அதுவும் வாழ்றதால அதையும் பூச்சிங்க போலவே கருதலாம்.
வயிறு
தலை, மார்பைவிட வயிற்றுப்பகுதி சற்று மென்மையானது. வயிற்றுப்பகுதி அடுக்கடுக்காக பிரித்தது போன்று காணப்படும், சில பூச்சிகளில் இந்த வித்தியாசம் தெரியாது.
பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி
பூச்சிகளின் வாழ்க்கை பருவம் முட்டை, புழு, கூட்டுப்புழு, முழு வளர்ச்சியடைந்த பூச்சி என்று நான்கு நிலைகளைக் கொண்டது. பொதுவாக 80 சதவீத பூச்சிகள் இத்தகையை வாழ்க்கை சுழற்சியைக் கொண்டுள்ளது. இத்தகைய வாழ்க்கை சுழற்சி உருமாற்றம் எனப்படும்.
பூச்சிகளின் முட்டைகளை, தனித்தனி முட்டைகளாகவோ அல்லது முட்டை அடுக்குளாகவோ இலைகளின் மீது நாம் பார்த்திருப்போம். இந்த முட்டைகளில் இருந்து முதலில் புழுக்கள் வெளிவரும். அந்த புழுக்கள் இலைகளை உண்டு சில நாட்களில் முழுமையா வளர்ந்துவிடும்.
முழு வளர்ச்சியடைந்த இந்த புழு இலையை சுருட்டிக்கொண்டோ, தண்டின் உட்பகுதிக்கு சென்றோ அல்லது மண்ணின் சிறிது ஆழத்திற்கு சென்றோ கூட்டுப்புழு நிலையை அடைகிறது.
இந்த கூட்டுப்புழுக்கள் ஒரிரு வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை அந்த நிலையிலேயே இருக்கும். சாதகமான சூழ்நிலை இருக்கும் போது அல்லது மழைபொழியும் போது கூட்டுபுழுவில் இருந்து வளர்ந்த பூச்சிகள் வெளிவருகின்றன.
இந்த வளர்ந்த பூச்சிகள் மீண்டும் இனப்பெருக்கத்தை தொடங்கி முட்டையிடும். ஒரு பூச்சி, புழுநிலையில் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது பூச்சியாக அதிக சேதத்தை விளைவிக்கிறதா? என்பதை பொறுத்து இந்த பருவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு சில வகை பூச்சிகள் இத்தகையை வாழ்க்கையில் இருந்து மாறுபட்டும் உள்ளது. உதாரணமாக கதிர் நாவாய் பூச்சிகள் முட்டையிலிருந்து நேரடியாக குஞ்சாக வெளிவரக்கூடியது, புழு மற்றும் கூட்டுப்புழுப் பருவம் இதில் இல்லை.
ஒரு சில பூச்சி தனது முழுமையான வாழ்க்கை சுழற்சியை நிலத்திலேயே முடித்துவிடும். வேறு சில பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சிக்கு தண்ணீர் மிக அவசியமாகிறது. உதாரணமாக கொசுக்கள் நீரில் முட்டையிட்டு அதில் லார்வா வளர்ந்து பின்னர் வளர்ந்த கொசுவாக வெளிவருகிறது.
தும்பிகள் முட்டை பருவம், புழுப்பருவம், கூட்டுப்புழுப் பருவம் தண்ணீரிலும், வளர்ந்த பூச்சி மட்டும் நிலத்திலும் வாழ்கிறது. அசுவினிப் பூச்சிகள் முட்டையிடாமல் நேரடியாகக் குட்டி போடக் கூடியவை.
புழுவிற்கும் பூச்சிக்கும் என்ன வித்தியாசம்
புழு உருமாற்றம் அடையும்; புழுக்களில் கால் போன்ற உறுப்பு இருக்கும், புழுக்களின் வகையை பொறுத்து இக்கால்களின் எண்ணிக்கை மாறும். புழுவின் தோல் மென்மையாக இருக்கும்; இனப்பெருக்கம் செய்யும் திறன் அற்றவை; அதிக தூரத்திற்கு இடம்பெயர்ந்து செல்ல முடியாது.
பூச்சி உருமாற்றம் அடையாது; மூன்று ஜோடிக் கால்கள் கொண்டவை; தோல் கெட்டியானது; முட்டையிட்டு அல்லது குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்யக்கூடியவை; அதிக தூரத்திற்கு இடம்பெயர்ந்து செல்ல முடியும்.
புழுவின் ஒரு நாள் உணவு எவ்வளவு தெரியுமா?
70 கிலோ எடை கொண்ட மனிதன் ஒரு நாள் சாப்பிடக்கூடிய உணவின் எடை தண்ணீருடன் சேர்த்து வெறும் இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ மட்டும் தான். ஆனால் ஒரு பூச்சி அதன் எடையைப் போல் 50 மடங்கு உணவை ஒரு நாளில் உண்கிறது.
அதாவது ஒரு கிராம் எடையுள்ள பூச்சி 50 கிராம் எடையுள்ள இலையை தின்கிறது. இதில் 48 கிராம் அளவை கழிவாக வெளியேற்றி விடுகிறது. வெறும் 2 கிராம் அளவை மட்டும்தான் உடலில் சேர்த்துக்கொள்கிறது. இப்படி அபரிமிதமாக உண்பதினால் பூச்சிகள் பயிர்களுக்கு மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன.
பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...