உண்மை என்பது
சுமக்க முடியாத அளவுக்கு
ஒரு பாரமாக மாறும்போது
அர்த்தமுள்ளதின் இடத்தை அவமதிப்புகள் நிறைக்கும்
ஆதாரமற்ற அவதூறுகள் ஞானத்தை களங்கப்படுத்தும்
அவதூறு – அது கையாலாகதவர்கள் பேசும் மொழி.
பூமியின் வடிவம் உருண்டை என்று
புரிந்து கொண்டதற்காக
கொல்லப்படுகிறார் ஒருவர்.
மனிதர்கள் வாழும் சமுதாயத்தின்
இயல்பை அறிந்து கொள்ளுங்கள்.
ஞானமும் தெளிவும் ஆளவேண்டிய இடத்தில்
கயமையும் வஞ்சகமும்;
ஆழமான புரிதலால் தோன்றிய தெளிவு இல்லை,
அகங்காரத்திலிருந்து பிறந்த துணிச்சல் மட்டுமே.
ஞானமும் விவேகமும் உரக்கத் தெளிவாக பேசாவிட்டால்,
அறியாமையால் கயமையிலும், வஞ்சகத்திலும்
தொலைந்து கிடக்கும் மூடர்கள் கையில்
இந்த உலகம் சிக்கிச் சீரழியும்.
ஆதாரமற்ற நம்பிக்கைகளால் உந்தப்பட்டு,
மேன்மேலும் ஆக்கிரமிக்கத் துடிக்கும்
பேராசை கொண்ட பைத்தியக்காரர்களின்
சூழ்ச்சிகளுக்கு அது வழிவகுக்கும்.
மானுடர் எல்லாம் தங்களின், அதாவது உயிரின்
அழகையும் பிரம்மாண்டத்தையும்
இனிதாக உணர்ந்து
ஆனந்தமாய் வாழ்வதற்கு வழிவகுக்க
தெளிவின் குரலாகுங்கள்!
ஞானத்தின் குரலாகுங்கள்!