இந்தவார சத்குரு ஸ்பாட்டில், குடும்பம் முதல் சமுதாயம் வரை கண்மூடித்தனமான கீழ்ப்படிதல் ஏன் ஒரு தீர்வாகாது என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு உள்ளதை உள்ளபடி பார்த்து உண்மையான தீர்வுகள் காண தேவைப்படும் அடிப்படை என்னவென்றும் தெளிவுதருகிறார்.

கீழ்ப்படிதல், குறிப்பாக வயதில் மூத்தவர்களுக்கு கீழ்ப்படிதல் என்பது ஒரு பாரம்பரிய நற்குணமாக சித்தரிக்கப்படுகிறது. நான் என்ன சொல்வேன் என்றால், கேள்வி கேட்காமல் கீழ்ப்படிவது ஒரு சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் அழிந்துபோகச் செய்யும். கீழ்ப்படிதல் என்றால் ஒரு அதிகாரம் இருப்பதைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரம் பெற்றோராக இருக்கலாம், பண்டிதராக இருக்கலாம், கடவுளாக இருக்கலாம், அல்லது புனிதநூலாக இருக்கலாம். அந்த அதிகாரத்தையே நீங்கள் உண்மையாக்கினால், அது மனித புத்திசாலித்தனத்தை அழிக்கிறது. உண்மைதான் ஒரே அதிகாரமாக இருக்கவேண்டும். அடுத்த தலைமுறை என்பது நாம் கற்பனையிலும் நினைத்திராத ஒன்றை செய்யவேண்டும். நாம் அடுத்த தலைமுறையை உருவாக்குவதே, நாம் அதை ஒரு புதிய சாத்தியமாக நினைப்பதால்தான். அது ஒரு புதிய சாத்தியமாக இல்லாமல், எல்லா நிலைகளிலும் நம்மிடமிருந்து கட்டளைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு நாம் விரும்புவதை மட்டுமே செய்கின்றன என்றால், ஒரு புதிய தலைமுறையாக அது அர்த்தமற்றுப் போய்விடும். அதில் "புதிதாக" எதுவும் இருக்காது. இது கடந்தகாலத்தில் புதைந்தது எதிர்காலத்தில் முளைத்தெழுவதைப் போல, வாழ்க்கையை வீணாக்குகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தங்கள் பிள்ளைகளிடமிருந்து தேவையான அன்பையும் அரவணைப்பையும் சம்பாதிக்க முடியாதவர்கள், தங்களுடைய அதிகார குணத்தால், கீழ்ப்படிதலைக் கேட்கிறார்கள். அன்பு, அக்கறை மற்றும் மரியாதையை நாம் சம்பாதித்திட வேண்டும். குறிப்பாக பெற்றோர்-பிள்ளைகள் உறவில் இது மிகவும் முக்கியம். கீழ்ப்படிதலைக் கேட்கும் அந்தத் தருணமே, நீங்கள் அதிகாரம் செலுத்தத் துவங்குகிறீர்கள். நீங்கள் அதிகாரம் செலுத்தத் துவங்கினால், உங்களை எப்போதுமே வெறுக்கத்தான் செய்வார்கள். ஒரு உறவில் வெறுப்பு வந்துவிட்டால், அது அசிங்கமாகிவிடும். அதிகாரம் செலுத்தும் ஒரு போக்கு, ஒரு சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் தேங்கிப்போகச் செய்து, காலப்போக்கில் அழியச்செய்கிறது. பெற்றோர்கள் கற்பனையிலும் நினைத்திராத ஏதோவொன்றை இளைய தலைமுறை செய்தால்தான் ஒரு சமுதாயத்தால் பரிணமித்து வளரமுடியும்.

இப்போது நாம் கடந்தகாலத்தின் கட்டளைகளைப் பின்பற்றவேண்டுமா அல்லது புதிதாக ஏதோவொன்று செய்யவேண்டுமா? கடந்தகாலத்தின் விதிகளை உடைக்கவேண்டும் என்றும் எவ்வித கட்டாயமும் இருக்கக்கூடாது, கடந்தகாலத்தைப் போலவே இப்போதும் இயங்கவேண்டும் என்றும் எவ்வித கட்டாயமும் இருக்கக்கூடாது. ஒவ்வொரு தலைமுறையும் உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்ன தேவையில்லை என்பதைப் பார்ப்பது முக்கியம். வீட்டில் சேரும் குப்பைகளை நீங்கள் அப்புறப்படுத்தவில்லை என்றால், சில நாட்களில் உங்கள் வீடு முழுவதும் குப்பைத்தொட்டியாக மாறிவிடும். தினமும் நீங்கள் குப்பையை வெளியே கொட்டவேண்டும், அப்போதுதான் வீடு சுத்தமாக இருக்கும். அதேபோல நம் வாழ்வில் வேலைசெய்யாததை நாம் தினமும் வெளியே வீசிட வேண்டும். தனிமனிதர்களாகவும் ஒரு சமுதாயமாகவும் நாம் அப்படிச் செய்யவில்லை என்றால், நாம் தேங்கிப்போகிறோம், சிக்கிப்போகிறோம், அதற்குப் பிறகு எதுவும் வேலை செய்வதில்லை.

பழைய அச்சை உடைப்பது சமுதாயத்தில் பெரிய கொந்தளிப்பாக எழவேண்டிய அவசியமில்லை. புரட்சி என்பது நாம் சிந்திக்கும் விதத்தில் நிகழலாம். மிக எளிய விஷயங்களில் இருந்து மிக முக்கியமானவை வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான வழிகளை நாம் தொடர்ந்து தேடவேண்டும். அமர்ந்திடவும், சுவாசிக்கவும், சாப்பிடவும், உடலைக் கையாளவும் சிறந்த முறைகளைத் தேடினால், நீங்கள் யோகா செய்யத் துவங்குவீர்கள். அதாவது உங்கள் உடல் மற்றும் மன நலனை நீங்கள் அறிவியல்பூர்வமாக அணுகத் துவங்குவீர்கள். உண்மை என்பது நீங்கள் உணரும் ஒன்று. அதை நீங்கள் உருவாக்கினால், அது பொய்யாகிவிடும். ஏதோவொன்றைச் செய்வதற்கான சிறந்த வழியை உண்மையாகவே நீங்கள் தேடினால், நீங்கள் ஒரு அறிவியலைத்தான் கண்டுபிடிப்பீர்கள். இல்லாவிட்டால் அதனைச்சுற்றி ஒரு தத்துவத்தை நெய்திட முற்படுவீர்கள். கடந்தகாலத்தின் தத்துவங்கள் ஒருகாலகட்டத்தில் அர்த்தமுள்ளதாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில், தத்துவமாக இருந்த ஒன்று கட்டளையாக மாறி, பிறகு விதியாக, பிறகு நம்பிக்கை முறையாக, கடைசியில் மதமாக மாறிவிட்டது. அதற்கு பதிலாக, நாம் எல்லாவற்றையும் பற்றிய உண்மையை உணரும்விதமாக மாறவேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் முழுமுதல் பதிலை நாம் அடைவோமா? ஒருவேளை அது நடக்காமல் போகலாம். நிதர்சனம் என்பது மாறிக்கொண்டே வருகிறது.

வாழ்க்கையை அணுகுவதற்கான ஒரு அடிப்படையான வழி இதுதான்: நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதுதான் உங்கள் உடலும் மூளையும் அவற்றின் முழுத்திறனுக்கு செயல்படுகின்றன என்பதற்கு போதுமான அறிவியல்பூர்வமான, மருத்துவரீதியான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் உடலும் மூளையும் நல்லபடியாக வேலைசெய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் உங்கள் இயல்பாலே சந்தோஷமாக மாறவேண்டும். பெரும்பாலானவர்கள் இந்த அடிப்படையையே இன்னும் கவனித்துக் கொள்ளவில்லை. மாறாக, மக்கள் சந்தோஷத் தேடுதலில் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது ஏதோவொரு கட்டத்தில் அடையும் ஒன்று என்று நினைக்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையின் கடைசி காலங்களில் அடையக்கூடிய ஒன்று என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது தவறான புரிதல். உங்கள் இயல்பிலேயே சந்தோஷமாக இருப்பதுதான் முதன்முதலில் தேவைப்படுவது. நீங்கள் சந்தோஷத் தேடுதலில் இருந்தால், நிர்பந்தங்கள் உங்களை கட்டிப்போடும். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் எதுவும் உங்களை கட்டிப்போடாது.

நீங்கள் ஆனந்தமாக இருந்தால், எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே பார்க்கமுடியும், தினமும் இன்னும் சிறப்பான தீர்வுகளைத் தரமுடியும். உங்கள் கிரகிப்புத் திறனை, உங்கள் முன்முடிவுகள் மேகம்போல் சூழ்ந்திருந்தால், நீங்கள் எப்படி தீர்வுகாண முடியும்? நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது தீர்வுகள் கண்டுபிடிப்பீர்கள். சந்தோஷமான நிலையில் வளைந்துகொடுக்கும் தன்மை இருக்கிறது. இந்த வளைந்துகொடுக்கும் தன்மையில் இருந்தே தீர்வுகள் பிறக்கின்றன.

Love & Grace