உலக யோகா தினத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்கும் சத்குரு, தியான அன்பர்களை இந்த பணியில் ஈடுபட்டு நம்மை சுற்றியிருக்கும் அனைவருக்கும் இதை கொண்டு செல்லுமாறு அழைப்பு விடுக்கிறார்...

சுமார் 15000 வருடங்களுக்கு முன்பு, மனித நுட்பம், பிரபஞ்ச வெளி மற்றும் இவை இரண்டுக்கும் இடையே உள்ள உறவை ஆதியோகி ஆராய்ந்தறிந்தார். தனி மனிதன் இவ்விரண்டு பரிமாணங்களையும் உணர வழிவகுத்த அவர் மனித இனம் முழுவதும் இதை பயன்படுத்தும் என்பதையும், ஒரு காலகட்டத்தில் உலகின் பெரும்பகுதி இதை பெரிய அளவில் இயக்கமாக கொண்டு செல்லும் என்பதையும் கண்டார். ஆனால் கால மாற்றத்தால் மனித அறிவு எச்சரிக்கையுணர்வு, விழிப்புணர்வு, அறிவு கூர்மை இவற்றில் இருந்து கொள்கைகள், நம்பிக்கைகள், அவர்கள் பார்த்தே இராத கடவுள் என்று திசை திரும்ப, யோகா மெல்ல தேய்ந்து போனது. மீண்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மனித அறிவு சுடர்விடும் நேரம் வருகிறது. 1000 வருடங்களுக்கு முன் பார்த்தீர்கள் என்றால் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு அறிவாளி இருப்பார். அனைவரும் அவர் சொல்படி செயல்படுவார்கள். ஆனால் இன்று பலரும் தங்களுக்கு என்று சொந்தமாக யோசிக்கிறார்கள். சரியான முறையில் சிந்திக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் சிந்திக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நல வாழ்வை அடைய மேலே பார்த்ததால் விசித்திரமான கற்பனைகளில் மனித இனம் மூழ்கியதோடு, பெரும் அளவில் வன்முறை, வெறுப்பு, சொல்லத் தகாத செயல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. பலர் மேலே பார்ப்பதை விட்டு விட்டு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் வெளியே பார்க்க ஆரம்பித்த பின் இந்த பூமிக்கும் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் சொல்ல முடியாத வன்முறை நிகழ்கிறது. மனிதனுக்கு நலவாழ்வு கிடைக்க வேண்டுமென்றால் உள்நோக்கிப் பார்பதுதான் ஒரே வழி. ஏனென்றால் துக்கமோ மகிழ்ச்சியோ, வலியோ இன்பமோ, வேதனையோ பரவசமோ உங்களின் உள்ளேதான் ஏற்படுகிறது. இருளும், ஒளியும் உங்கள் உள்ளேதான் இருக்கிறது. உள் நோக்கி பார்க்காமல், இந்த பூமியில், உங்கள் அனுபவத்தின் இயல்பை நிர்ணயிப்பது சாத்தியம் இல்லை. யோகா என்றால் இதுதான்: யோகா என்பது மேலேயோ வெளியேயோ அல்ல, உள்ளேதான் இருக்கிறது. அது ஒன்றே வழி.

மனித அறிவு ஒரு சிகரத்தைத் தொடும் இந்த நேரத்தில், உலகில் யோகாவை ஒரு அதிகாரபூர்வமான செயல்முறையாக ஆக்க நமது பிரதமர் மேற்கொண்ட முயற்சி அற்புதமானது. ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க உலகின் 177 நாடுகள் தீர்மானம் இயற்றியுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதைப் பற்றி பேசுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏதோ ஒன்று செய்வதற்கு முன் நாம் இதை பற்றி வதந்தி பரப்ப வேண்டும். நீங்கள் எங்கே இருந்தாலும் யோகா பற்றி பேசுவது மிக முக்கியமானது. வதந்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம். செய்தித்தாள், தொலைக்காட்சியை விட வதந்தி சக்தி வாய்ந்தது. டிஜிட்டல் வதந்தி கூட பரப்பலாம். இதற்கு சமூக வலைத்தளங்கள் என்று பெயர். அதிகாரபூர்வ செய்திகளை விட மக்கள் வதந்திகளையே அதிகம் நம்புகிறார்கள்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு தனி நபர்களும், பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்திய அரசாங்கம் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. நமது பிரதமரின் தனிப்பட்ட ஆதரவும் இருக்கிறது. ஈஷாவில் நாம் பிரமிக்கத்தக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். உலகம், யோகாவின் ருசியை அறியும் வண்ணம் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய, உபயோகா போன்ற எளிமையான கருவிகளை நாம் வழங்கவேண்டிய நேரம் இது. அவர்கள் யோகிகள் ஆவார்கள் என்றில்லை. ஆனால் யோகாவின் ருசி அறிந்து கொள்வார்கள். இன்று ருசியை அறிந்து விட்டால் என்றோ ஒரு நாள் வாழ்க்கை அவர்கள் தலையில் குட்டும் பொழுது, யோகி ஆக வேண்டும் என்ற முனைப்பு அவர்களுக்கு வரும். இல்லையென்றால் வாழ்க்கை அவர்கள் தலையில் குட்டும் பொழுது குடிகாரர்கள் ஆகி விடலாம்! மிகப்பலர், வாழ்க்கை தங்கள் தலையில் குட்டும்போது, மனச்சோர்வு, போதை மருந்துகள், குடி இவற்றில் வீழ்ந்து விடுகிறார்கள். ஆனால் இப்பொழுது யோகாவின் ருசியை அறிந்து விட்டால், வாழ்க்கை தலையில் குட்டும் பொழுது நிச்சயமாக யோகாவைத் தேர்வு செய்வார்கள்.

நீங்களும் அந்த நாளில் ஒரு ஆசிரியர் ஆகி உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு, மாற்றத்துக்கான கருவிகளை வழங்க முடியும். இன்னொரு மனிதர் உங்கள் முன் மலர்வதில் ஏற்படும் ஆனந்தம் மற்றும் நிறைவை உணர முடியும். எளிமையான யோகா செயல்முறை ஒன்றை நாம் உருவாக்கி இருக்கிறோம். இதற்கு வயது வரம்பு இல்லை, உடல் தகுதி இல்லை. யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். முழுக்க முழுக்க டிவிடி யில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் சூழ்நிலையைக் கையாண்டு, திருத்தங்களை சொன்னால் போதும். இந்த ஒரு நாளுக்காக ஏறத்தாழ 35,600 ஆசிரியர்கள் உருவாக்கப் போகிறோம். உலகில் 1,00,000 இடங்களில் எளிமையான கருவியான உப யோகா வழங்குவது, அதற்கு ஏற்பாடு செய்வது நமது திறமைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவாலாக இருக்கிறது. இதற்கென உருவாக்கப்பட்ட நமது இணையதளம் (YogaYoga.org) 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உப யோகாவை பரிமாறும் இந்த வாய்ப்பை உங்களை மாற்றும் ஒரு வழியாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இது மாற்றத்துக்கான ஒரு கருவி, மற்றவர்களுக்கு போதனை கொடுப்பதற்காக இல்லை அதே நேரம், எளிமையான ஒன்றை செய்ததன் மூலம், மற்றவர் வாழ்வை தொட்ட ஆனந்தத்தை, மற்றவர்கள் உங்கள் கண் முன் மலர்வதை பார்க்கும் ஆனந்தத்தை நீங்கள் உணர முடியும். வாட்டமான முகத்தோடு நம் யோக நிகழ்ச்சிக்கு வருபவர்கள், நிகழ்ச்சி முடிந்து போகும்பொழுது மலர்ச்சியோடு செல்கிறார்கள். உங்கள் தோட்டத்தில் ஒரு செடி நட்டு வளர்த்து வரும்போது, அதில் முதல் பூ பூக்கும் பொழுது ஏற்படும் ஆனந்தம் அலாதியானது.

இதை நிகழ்த்தும் சக்தி, சிறப்பு, பொறுப்பு உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவருக்கும் இது நிகழ வழி ஏற்படுத்துங்கள்.

Love & Grace