வீட்டு வாசலில் கடவுள் காத்திருக்கிறார்... நமக்காக! அவரிடம் வரங்கள் கேட்பதற்கு உங்கள் மனம் கற்பனையில் லயிக்கும் முன், வந்திருக்கும் கடவுளை உள்ளே அழைக்க வேண்டாமா? வாசல் முழுமையாய் திறக்கட்டும்! இந்த வார சத்குரு ஸ்பாட், தெய்வீகத்திற்கு வாயிற் கதவாய்!

இந்தியாவில் மக்கள் தெய்வங்களை மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் பயன்படுத்துகிறார்கள். எண்ணற்ற தேவி பக்தர்கள், தேவி முன்னால் உட்காரும்போது, அவர்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஒரு பெரும் புரிதலை பெறுகிறார்கள். ஆனால் அவ்விடத்தை விட்டு வெளியேறிய பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு என்ன பேசினார்கள் என்றே தெரியாத அப்பாவியாக இருப்பார்கள்!

எனக்கு 9 வயதிருக்கும் என நினைக்கிறேன்... அச்சமயம் நான் ஆந்திர மாநிலம் குண்டுக்கல்லில் இருந்தபோது நடந்த சுவாரசியமான சம்பவம் நினைவிற்கு வருகிறது... அங்கு 2 வருடங்கள் படித்தேன். அங்கு தெருவோரத்திலிருந்த மிகச் சிறிய கோவில் ஒன்றில், சடாமுடியுடன் மிகச்சிறிய உருவம் கொண்ட மூதாட்டி ஒருவர் தங்கியிருந்தார்.

அவருக்கு 80 வயது இருக்கும் என்று நினைக்கிறேன்... வயததானதால் குருவி போல சுறுங்கிப் போய் சிறிதாய் இருந்தார். ஒரு நாள் என் பாட்டியுடன் அங்கே சென்றிருந்தேன். என் பாட்டி ஒரு வகையான தியானத்திற்கு தீட்சை அளிப்பவராக இருந்தார்.

ஒரு குரு, என் பாட்டிக்கு மந்திர தீட்சை அளித்திருந்தார். என் பாட்டியும் பிறருக்கு தீட்சை வழங்கினார். சில குடும்பங்கள் அவரை குரு மாதாவாகக் கொண்டிருந்தார்கள். மிக நெருங்கிய வட்டங்களில், என் பாட்டியை "மைசூர் அம்மா" என அழைத்தார்கள். என் பாட்டி, அந்த பெயரால் பொதுவாக ஊராரால் அறியப்படவில்லை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் பாட்டியும் நானும் சென்று இந்த சிறிய கோவில் உள்ளே அமர்ந்தோம். செங்கல் மற்றும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சிறுகோவிலாக அது இருந்தது. கோவிலை கவனித்துக் கொண்டிருந்த அந்த பெண் தன் தேவி முன்னால் உட்கார்ந்து தியானம் போன்றதொரு நிலைக்கு சென்றார்...

சிறிது நேரத்தில், அவர் "ஹாஊ... ஹாஊ..." என பலவிதமான சத்தங்களை எழுப்பத் தொடங்கினார். பிறகு அவர் 'மைசூர் அம்மா! மைசூர் அம்மா!' என்றார். இது யாரும் எளிதில் தெரிந்துகொள்ளும் பெயர் அல்ல! அவர் எனக்கு முன்பாகவே என் பாட்டி பற்றி பல விஷயங்கள் கூற ஆரம்பித்தார். இது என் பாட்டிக்கு மிகவும் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது.

ஏற்கனவே என்னால் அவருக்கு நிறைய சிரமம் இருந்தது. என் பாட்டி குறுக்கிட்டு, "இல்லை, இல்லை... அப்படி இல்லை!' என்று சொல்ல முயற்சி செய்தார். ஆனால் அந்த மூதாட்டி என் பாட்டியை பேசக்கூடாதெனக் கூறி, பாட்டி பற்றிய தர்ம சங்கடமான உண்மைகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

தியானலிங்கம் எப்படி வாயிற்கதவாக முடியும் என்பது பற்றி நான் கடந்த காலங்களில் பேசியுள்ளேன். அதனை உங்களுக்கு திறக்கத் தெரிந்தால் இந்த முழு பிரபஞ்சத்தையும் அது உங்களுக்காக திறக்கும்.

ராமானுஜன் அற்புதமான கணித அறிஞர், தமிழ்நாட்டில் தோன்றியவர். அவர் முறைப்படி கற்ற கல்வி மிகக் குறைவே. ஆனால் சுயமாய் கற்று கேம்பிரிட்ஜ் வரை சென்றார். அங்கு பல்வேறு கணிதவியலாளர்களுடன் பணியாற்றினார். நான் "கணிதம்" என்று சொல்வதை, நீங்கள் ஒரு பள்ளிப் பாடம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. நீங்கள் இந்த படைப்பு முழுவதையும் எண்களாக மாற்ற முடியும். அதுவே கணிதம்!

உலகின் மிகப் பெரிய கணிதமேதைகளுக்குக் கூட, அவரது பணியை புரிந்து கொள்ள பல வருடங்கள் பிடித்தது... அவர் பல கோட்பாடுகள் செய்துவிட்டு, "என் தேவி நாமகிரி அருளினார்," என்பார். அவர் ஆரம்பக் காலத்தில், இந்தியாவை விட்டு வெளியே பயணம் செய்ய மறுத்தார். நாமகிரி, அவரது தாயாருக்கு கனவில் அனுமதியளித்த பின்பே இங்கிலாந்து செல்ல ஒப்புக்கொண்டார்.

1920 ஆம் ஆண்டு, தன் மரணப் படுக்கையில் ராமானுஜன் தன்னுடைய அறிவுரையாளரும் ஆங்கில கணித வல்லுனருமான ஹார்டிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் முன்னெப்போதும் அறியப்படாத பல புதிய கணித தேற்றங்களைக் (theorems) குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி அவரது வார்த்தைகளில்...

"தூங்கும் போது, எனக்கு ஒரு அசாதாரண அனுபவம். வழிந்தோடிய இரத்தத்தில் ஒரு சிவப்புத் திரை உருவானது. நான் அதனை அவதானித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு கை திரையில் எழுதத் தொடங்கியது. அந்த கை நீள்வளையத் தொகையீடுகள்(elliptic integrals) பலவற்றை எழுதியது. நான் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினேன். அவை என் மனதில் ஒட்டிக்கொண்டது. நான் எழுந்தவுடனேயே அவற்றை எழுதுவதாக முடிவு செய்தேன்."

கடந்த 90 ஆண்டுகளில், அவருடைய தேற்றம் யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவை மிக மகத்தானது என்று மட்டும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. 2010ல் தான் இந்த தேற்றம் கருப்பு துளைகளின்(Black Hole) பல்வேறு நடவடிக்கைகளை விவரிக்கிறதென்று கண்டுபிடித்தனர்.

தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் கருப்பு துளைகள் பற்றி பேசவுமில்லை அறிந்திருக்கவுமில்லை. ஆனால் ராமானுஜன் அவரது மரணப் படுக்கையில் ஒரு கணித படிமத்தை உருவாக்கி, "என் தேவி அதை எனக்கு கொடுத்தாள்," என்றார். அவருக்கு அவருடைய தேவி தான் நுழைவு வாயில்.

தனதளவிலேயே, ஈஷா யோகா இறைநிலைக்கு ஒரு வாயிலாக அமைந்துள்ளது. பெரும்பாலும் ஈஷா யோகா வரும் அனைவரும் இந்த வாயிலைத் திறந்து "ஆகா... அற்புதம்!" என்று கூறிவிட்டு மீண்டும் தாழிட்டுக் கொள்கிறார்கள்! உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இது நடப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். நீங்களும் அப்படித்தானே?

போதுமான அளவு எட்டிப்பார்த்து விட்டு, வாயிலை மூட வேண்டாமே! நன்றாக திறந்தே வையுங்கள்... இறைநிலையின் வாயில் கடப்பதற்கே, அடைப்பதற்கு அல்ல...!

Love & Grace