உங்கள் குழந்தைக்காக கனவு காண்பவரா நீங்கள்?

ஒரு குழந்தை புத்திசாலி மற்றொரு குழந்தை மந்தம் என்று முத்திரைக் குத்தி பழகிவிட்ட நம் சமூகத்தின் மனநிலையைப் பற்றியும், பெற்றோரின் மனநிலைப் பற்றியும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார் சத்குரு. சமூகத்து கண்ணோட்டத்தையே மாற்றி அமைக்கும் சிறப்பு பதிவு இது...
 
 
 
 

ஒரு குழந்தை புத்திசாலி மற்றொரு குழந்தை மந்தம் என்று முத்திரைக் குத்தி பழகிவிட்ட நம் சமூகத்தின் மனநிலையைப் பற்றியும், பெற்றோரின் மனநிலைப் பற்றியும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார் சத்குரு. சமூகத்து கண்ணோட்டத்தையே மாற்றி அமைக்கும் சிறப்பு பதிவு இது...

கேள்வி: நான் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். ஒரு குழந்தையை கையாள்வதில் தவறு ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், அக்குழந்தைக்கு ஊக்கமளித்து அதனை நல்முறைப் படுத்துவது எப்படி என்பது பற்றியும் தாங்கள் எனக்கு யோசனை வழங்க வேண்டும். என் வகுப்பில் 50 சதவிகித குழந்தைகள், 'கவனப் பற்றாக்குறை பிரச்சனை '(Attention deficit disorder), அல்லது 'அதீத செயல்பாட்டால் கவனப் பற்றாக்குறை '(Attention deficit hyperactive disorder) பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருப்பதால், அவர்கள் 'ரிடலின்' மருந்தை தினமும் உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இக்குழந்தைகளை நான் எப்படிக் கையாள வேண்டும்?

பல தரப்பட்ட மருத்துவர்களும், மனோதத்துவ நிபுணர்களும் வந்துவிட்ட இக்காலத்தில் 'குறை இல்லா' குழந்தை என்று ஒன்று பிறக்க வாய்ப்பே இல்லை. பிறக்கும் குழந்தை எப்படி இருந்தாலும், அந்நிலைக்கும் ஏதோ ஒரு பெயரை அவர்கள் வைத்திருப்பார்கள். குழந்தை அதிக சுறுசுறுப்பாக இருந்தால், அது 'அதீத செயல்பாடு' இது ஒரு குறை என்பார்கள். செயல் சற்றே குறைவாக இருந்தால், அது வேறொரு குறைபாடு என்பார்கள். குழந்தைகள் எப்படியே இருந்தாலும், அந்நிலைக்கு ஒரு பெயர் இட்டு, அதை அவர்கள் மீது திணித்து, வாழ்நாள் முழுவதும் அதை அவர்கள் சுமக்குமாறு செய்துவிடுவார்கள். யாரோ ஒருவர் படு வேகமக ஓடலாம், அல்லது நொண்டி நடக்கும் நிலையில் இருக்கலாம், அல்லது வேறு ஏதோ ஒரு நிலையில் இருக்கலாம், இவை எதுவுமே குறையல்ல. மனிதர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். எல்லோரையும் ஒரே அளவுகோலால் அளந்திட முற்படுவதால்தான் அவர்களுக்கு குறை இருப்பது போல் தெரிகிறது.

இது நீங்கள் ஃப்லைட்டில் செல்லும்போது எடுத்துச் செல்லும் பெட்டி போன்றது. ஏர்போர்ட்டில், உங்கள் பெட்டியை அளந்திட ஒரு மெஷின் இருக்கும். வலியுறுத்த்தப் பட்டிருக்கும் அளவுகளுக்குள் எந்தப் பெட்டியுமே கனகச்சிதமாக அடங்கிடாது. ஒரு சில தீவிரவாதிகள் மட்டுமே சரியான அளவு கொண்ட பெட்டிகளை கொண்டு வருவார்கள். ஆனால் சாதாரண மக்களுக்கு அவர்கள் பயணப்படும் போது பல்வேறு பொருட்கள் தேவைப்படும். அல்லது பல்வேறு பொருட்களை அவர்கள் பலருக்கு வாங்கிச் செல்ல வேண்டியிருக்கும். அவை அனைத்தையுமே பெட்டிக்குள் திணித்து அதை எடுத்து வரும்போது, அந்தப் பெட்டி ஒருபோதும் குறிப்பிடப் பட்டிருக்கும் அளவுகளுக்குள் பொருந்தாது. அப்படிப் பார்த்தால் இவர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்.

கனகச்சிதமான மாமரத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அதே போல கனகச்சிதமான மனிதனை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மெஷின் வைத்துத் தயாரித்தாலே அன்றி 'மிகத் துள்ளியமான, கச்சிதமான' மனிதர்களை தயாரிக்க முடியாது. நம்முடைய கண்ணோட்டத்தில் 'சரியானது' என்பதை நாம் மிகத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். நம்மைப் பொருத்தவரை, ஒரு ஓட்டையை வைத்துக் கொண்டு, அதற்குள் யாரெல்லாம் பொருந்துகிறார்களோ, அவர்கள் மட்டும்தான் குறை இல்லாதவர்கள். ஒரே விதமான கல்வி முறையில் அனைவரையும் திணித்து, வெளி வருபவர்கள் எல்லாம் டாக்டராகவோ, இஞ்சினியராகவோ தான் வெளிவர வேண்டும். இப்படிப்பட்ட கொடுமைகளைத்தான் உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் திணித்து வருகிறீர்கள். அதனால்தான் சில குழந்தைகளுக்கு ADD/ADHD போன்ற குறைகள் இருப்பது போலத் தெரிகிறது. இல்லையென்றால், ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விதமான திறமை இருக்கிறது. சிலர் எல்லாம், இயல்பாகவே மிக சந்தோஷமாக இருப்பதால், அவர்கள் ஏதும் செய்யக்கூட மாட்டார்கள்.

காட்டில் வாழும் மான்களைப் பாருங்கள். சுமார் எட்டு முப்பது மணியளவில், அவை எல்லாம் ஒன்றாகக் கூடும். சும்மா. ஏதோ சாப்பிடும், இங்கும் அங்கும் துள்ளிக் குதித்து ஓடும், வேலை எல்லாம் செய்யாது. விதையடிக்கப்பட்ட காளை மாடு இந்த மான்களைக் கண்டால், 'அந்த உபயோகமற்ற மான்களைப் பார்... ஒரு வேலையும் செய்வதில்லை' என்றுதான் சொல்லும். என்ன செய்வது? யானை கூடத்தான் ஒன்றும் செய்வதில்லை. அது துள்ளிக் குதிக்காது, ஏறி மிதித்து நசுக்கி சின்னாபின்னம் ஆக்கிச் செல்லும். பரவாயில்லை. அவை அப்படித்தான் இருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக நாம் இயந்திர வர்க்கத்தினராக ஆகிவிட்ட படியால், நமது சக்கரங்களுக்கு அச்சாணிகள்தான் தேவைப்படுகிறது. நமக்கு இனி மனிதர்கள் தேவையில்லை. நமக்கு நாம் உருவாக்கியிருக்கும் அமைப்பில் நன்கு பொருந்திக் கொள்கிற ஆணிகளும் திருகாணிகளும்தான் வேண்டும். இதில் ஓரளவிற்கு நாம் வெற்றியும் கண்டுவிட்டோம். வேறெப்படியும் சிந்திக்கத் தெரியாத அச்சுகள் பல நாம் ஏற்கனவே உருவாக்கிவிட்டோம்.

இந்த கண்ணோட்டத்திலேயே நாம் பார்ப்பதால்தான் பலருக்குக் குறை இருப்பது போல் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் குறை இருக்கிறது என்று முத்திரையிட்டிருக்கும் அந்த 50 சதவிகிதக் குழந்தைகள் தான் 'குறையற்ற' குழந்தைகளாக இருக்கும். மற்ற குழந்தைகள் எல்லாம் மெஷினில் வடிவமைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இது சற்றே அதிகப்படியாகத் தோன்றினாலும், துரதிர்ஷ்டவசமாக நாம் அவ்வழியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வாழ்வதைப் பற்றி சிந்திப்பதில்லை. எப்பொழுதும் லாபக் கணக்கு மட்டுமே பார்க்கிறோம். அதனால் லாபம் அதிகமாகத் தரக்கூடிய மெஷின்களை உருவாக்குவதிலே தான் நம் கவனம் முழுவதும் இருக்கிறது. இப்படி இருப்பதால், எது ஒன்று நீங்கள் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லையோ, அது திடீரென 'குறை உள்ளதாக'த் தெரிகிறது.

நாம் அனைவரும் ஒரே விதமான செயல்திறன் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. சிலரால் நடக்க முடியும், சிலரால் தவழ முடியும், சிலரால் பறக்க முடியும், பரவாயில்லை. 'இந்த அளவேனும்' செய்ய முடிந்தால்தான் சராசரி மனிதன் என்ற முட்டாள்தனமான அளவுகோள் எதற்கு? இதுபோன்ற அளவுகோள் தேவையே இல்லை. இன்னும் சொல்லப் போனால், உங்கள் குழந்தைக்கு என்ன ஏது என்று விளங்கும் முன்னர், அதனை அடுத்த வீட்டுக் குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்து, 'இது குறை, அது குறை' என்று முத்திரையிட்டு, உங்கள் முட்டாள்தனத்தின் விளைவை அதன் வாழ்நாள் முழுவதும் அது சுமக்குமாறு நீங்கள் செய்வது மிகப் பெரிய குற்றம்.

நமது கல்வியமைப்பு நாளையே மாறி விடுவதற்கு வாய்ப்பில்லை, என்றாலும் உங்களுடன் இன்று இருப்பவர்களை குறைந்தபட்சம் முத்திரையிடாமல் இருக்க முடியும் அல்லவா? வேறொரு குழந்தையால் செய்ய முடிந்ததை உங்கள் குழந்தையால் செய்ய முடியாமல் போகலாம். பரவாயில்லை. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியாது. இதை நான் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். அமெரிக்காவில் இருந்து சில மருத்துவர்கள், மைசூரில் இருக்கும் என் தந்தையை, எனக்குத் தெரிவிக்காமலே சென்று சந்திக்க முடிவு செய்தனர். எனது தந்தையைப் பொருத்தவரை வாழ்வில் வெற்றிகரமாக இருப்பது என்றால் டாக்டராவதுதான். அவருடைய வாழ்நாள் முழுவதும் 'டாக்டராக வேண்டும்' என்றே கனவு கண்டு, டாக்டராகவும் ஆகிவிட்டார்.

அடுத்ததாக அவரது மக்கள் நால்வரும் டாக்டராக வேண்டும் என்று ஆசை கொண்டார். நாங்கள் நால்வரும், ஒவ்வொருவராக அவரது கனவை கலைத்து வந்தோம். அதிலும் நான், பதினொரு பன்னிரண்டு வயதிலேயே 'எந்நிலையிலும் டாக்டராக மட்டும் ஆகவே மாட்டேன்' என்று அறிவித்தே விட்டேன். இந்த டாக்டர்கள், அவர்களின் குரு சிறு வயதில் எப்படி இருந்தார் என்று அறிய, என் தந்தையை சந்தித்துக் கேட்டனர், 'சிறு வயதில் சத்குரு எப்படி இருந்தார் என்று எங்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்' என்று. எனது தந்தையும் சிறிது யோசித்துவிட்டு சொன்னார், 'சிறு வயதில் அவன் சிறு மந்தமாகத்தான் தெரிந்தான். ஆனால் இன்று அவன் ஒரு ஜீனியஸ் ஆகி விட்டான்.'

சொல்லமுடியாது. உங்கள் வகுப்பில் இருக்கும் அந்த 50 சதவிகிதக் குழந்தைகள் மேதைகளாகக் கூட இருக்கலாம். அது உங்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம். நீங்கள் சொல்லித்தரும் A+B = C' ஐ அவனால் ஏற்க முடியவில்லை. அவனுக்கு அது புரியவில்லை. அவனைப் பொருத்தவரை அதில் எந்த அர்த்தமுமில்லை. எதனால் A வையும் B யையும் கூட்டினால், C வர வேண்டும்? வேறு யாரோ ஒருவர் அப்படித்தான் சொன்னார்கள் என்பதாலா? இந்தக் கட்டமைப்புக்குள் அவனால் சிந்திக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் மூளையில் என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அவனால் என்னவெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அதற்கு அவன் இன்று கூனிக் குறுகிப் போகுமாறு நீங்கள் செய்துவிட்டால், அவனால் எதையெல்லாம் புரிந்து கொள்ள முடிந்ததோ அதைப் பற்றி எல்லாம் அவன் வாயே திறக்காமல் இருந்து விடுவான். இதனால் உங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படலாம் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். இவ்வளவு ஏன், இதுவரை யாருமே உணர்ந்திடாதவற்றை கூட அவன் இக்கணத்தில் உணர்ந்து கொண்டிருக்கக் கூடும்.

கல்வியால் சாதிப்பதை விட, மனிதனின் புத்திக்கூர்மையால் மிக அதிகமாகவே சாதிக்க முடியும். அதனால் கல்வியே வேண்டாமா? அப்படியல்ல. இங்கு முக்கியத் தேவை, மனிதனின் உடலும் மனமும் அதன் முழு திறனுக்கு ஏற்ப வளர்ச்சியடைய வேண்டும், அத்துடன் சேர்த்து அவற்றை சாதுர்யமாகப் பயன்படுத்தத் தேவையான சமயோசிதமும் வேண்டும். என்ன காரணத்திற்காக? எந்தப் பயனை அடைவதற்காக? குறிப்பிட்ட எந்தப் பலனிற்காகவும் அல்ல. மனிதர்கள் விவேகத்துடன் இருந்தாலே, வாழ்ந்தாலே போதுமானது.

வாழ்க்கையின் நோக்கம் வாழ்தல் மட்டுமே. வாழ்க்கையை அதன் எல்லாப் பரிமாணத்திலும் உணர்வதுதான் முழுமையான வாழ்க்கை. இது நிகழ வேண்டுமென்றால், ஆசிரியர்களோ, பாதிரியார்களோ, பூசாரிகளோ, அல்லது அவர்கள் எடுத்துரைக்கும் புனித நூல்களோ சொல்லும் கொள்கைக் கோட்பாடுகளை நம்புபவர்களாக இல்லாமல் நாம் பிரபஞ்சத்து உண்மையை நாடுபவராக இருக்க வேண்டும்.

Love & Grace

 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் க்கு முன்னர்

very usefull matter to all the parents and teachers

5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

எதார்த்தமான பதில். ஆழமாக கவனித்து நம்மை நாமே திருத்திக்கொள்ள சத்குருவின் பதில் ஒரு சந்தர்ப்பம்.