நமது தேசத்தை உருவாக்குவோம்!

பாரதம் என்பதன் அர்த்தமென்ன, அது ஒர் ஆன்மீகப் பெட்டகமாக அனைவரையும் எப்படி ஒன்றிணைத்து வைத்திருக்கிறது என்பதை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் சத்குரு. இந்தியாவின் ஆன்மீக ஆழத்தை அடிக்கோடிட்டு காண்பிக்கும் சத்குரு, இதில் நம் தேசத்தை எப்படி இன்னும் மேம்படச் செய்வது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேசங்கள் இனம், மதம், மொழி மற்றும் பாரம்பரிய அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன, ஒன்றிணைக்கப்பட்டன. ஒன்று போல் இருப்பதே தேசத்தை உருவாக்குவதற்கு ஃபார்முலாவாக இருக்கிறது. ஆனால் இந்தியா இந்த நடுத்தரமான கோட்பாடிலிருந்து விலகி, நிமிர்ந்து நிற்கிறது.200க்கும் மேற்பட்ட குறுநிலராஜ்ஜியங்கள் ஒன்றிணைந்த "பாரதவர்ஷம்", ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைத்து நின்றிருக்கிறது. 'பரத'மன்னன் குறு ராஜ்ஜியங்களை சேர்த்தணைத்து தனது ராஜாங்கத்தை விரிவுபடுத்தினானே அன்றி, அவர்களை அடக்கி ஒடுக்கி தன் எல்லைகளை விஸ்தரிக்கவில்லை.

"பரத" என்ற வார்த்தையில், "ப" பாவத்தையும் (bhava), "ர" ராகத்தையும், "த" தாளத்தையும் குறிக்கிறது. இவை மூன்றும் இசை மற்றும் நாட்டியக் கலைகளுக்கு உயிர்நாடியாய் இருப்பவை. இக்கலைகள் இந்நாட்டில் அமோகமாக வளர்ந்தது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, உலகின் பிற இடங்களில் மக்கள் நாடோடிக் குழுமங்களாய், பிழைப்பதற்கு போராடிக்கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவில் இசை, கணிதம், வானியல் மற்றும் அறிவியல் வளர்ச்சி தன் உச்சத்தை எட்டியிருந்தது.

ஒரேவிதமான வாழ்க்கை முறையில் அல்லாமல், வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்களை ஒரு தேசமாக ஒன்றிணைத்ததில் நாம் பெருமை கொண்டோம். இந்நாட்டில் நாம்பயணிக்கும் ஒவ்வொரு 50கிமீ க்கும் மக்களிடையே மொழி, வாழ்க்கை முறைகள் வித்தியாசப்பட்டு இருப்பதை நாம் கண்டிருக்கிறோம். பாரதம் என்பது வெறும் ஒரு நாடாக அல்லாமல், ஒரு மனிதனாக, 'பாரதமாதா'வாகவே பாவிக்கப்பட்டது. வெவ்வேறு உடற்பாகங்கள் சேர்ந்து ஒரு உடலாக இருப்பதுபோல், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நாடாக வாழ்ந்தனர். நம் மூக்கும் சுண்டு விரலும் ஒரே விதமாக இயங்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் அவை ஒன்றாகவே இருக்கின்றன. மனிதருக்கிடையே இருக்கும் ஒற்றுமையை இந்தக் கலாச்சாரம் பேணிப் பாதுகாத்து, வலுவான ஆன்மீகக் கயிற்றால் அனைவரையும் கட்டி வைத்திருந்தது.

ஒருவர் அரசனாக இருந்தாலும் சரி, வியாபாரியானாலும் சரி, குடும்பஸ்தராக இருந்தாலுமே, இந்தியாவில் ஒருவரது வாழ்க்கையின் உச்சபட்ச குறிக்கோள் முக்தியாகத்தான் இருந்தது. கடவுளோ சொர்க்கமோ அத்தனை முக்கியம் வாய்ந்ததாய் இருந்ததில்லை. கடவுள் என்பவர் முக்திக்கான படிக்கல்லாக மட்டுமே இருந்திருக்கிறார். இந்தப்பூமியில் "கடவுளற்ற" ஒரே தேசம், நம் இந்திய தேசம்தான். ஏனென்றால், இங்கே கடவுளையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதை நாம் நன்றாகவே அறிந்திருந்தோம். "கடவுளை படைக்கும்" ஆழமான விஞ்ஞானத்தை உருவாக்கி, அதைக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிரியமான 'இஷ்ட தெய்வத்தை' அவர்களே உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்திருந்தோம். முப்பத்து மூன்றிலிருந்து முப்பத்திமூன்று கோடி வரையிலானஆண், பெண் தெய்வங்கள் இருக்கும் நாடு நம்முடையது!

வலியுறுத்தப்பட்ட அறநெறிகளோ, நம்பிக்கை முறைகளோ இந்தியாவில் இருந்ததில்லை. இங்கே உயிரோட்டமான ஆன்மீகம் மட்டுமே இருந்தது. அதுதான் நம்மை வழிநடத்திச் செல்லும் சக்தியாய் செயல்பட்டது. ஆனால் இன்று, இந்தியா ஒரு அபாயக் கட்டத்தில் இருக்கிறது. அதன் உயிர்நாடியாய் செயல்பட்டுவரும் ஆன்மீகக் கயிற்றை பல இடங்களில் திட்டவட்டமாக, படிப்படியாக உருக்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது துண்டிக்கப்பட்டால், மீண்டும் பற்றிக் கொள்வதற்கு எவ்விதமான நன்நெறிகளும் நம்மிடம் எஞ்சி இருக்காது. நம்மிடமுள்ள ஆன்மீகம் மட்டும் தொலைந்து போனால், உலகிலேயே முறைகேடான சமுதாயமாக நாம் இருப்போம். ஏனென்றால், மேற்கத்தியநாடுகளைப் போல் நம்மிடம் குற்றவுணர்ச்சி என்பது இல்லை. நம்மை பிணைத்து வைத்திருக்கும் ஆன்மீகக் கயிற்றை நம் மூடநம்பிக்கைகளாலும், வேறுசில அடையாளங்களை ஏற்றதாலும், நாம்உடைத்து விட்டோமெனில், இன்னும் இருபத்தியைந்தே வருடங்களில், "நாம் எதற்காக ஒரே நாடாக இருக்க வேண்டும்" என்ற கேள்வி எழுந்து நாம் உடைந்துபோவோம். நம்மை ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது என்ன என்பதை இந்நாட்டின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் பெருமை, அதன் ஆன்மீக சாத்தியங்களிலும், சாதனைகளிலும்தான் வேரூன்றி இருக்கிறது.

இந்த தேசம் உள்நிலையை ஆட்சி புரியும் சட்டங்களின் மீது ஆளுமை கொண்டிருந்தது. நவீனஉலகில், செல்வச் செழிப்பில் வளர்ந்தோங்கியுள்ள நாடுகளும் கூட, "இவ்வளவு தான் வாழ்க்கையா?" என்று அதிருப்தியாக, உள்நிலையில் ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் அவதியுறும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்நேரத்தில், இந்த ஏக்கங்களுக்கு மருந்தாக, அனைவரின் நன்மைக்கும் வழிகாட்டியாய் இருக்கக் கூடிய விஞ்ஞானப்பூர்வமான வழிமுறைகளை நமக்கு கையாளத் தெரிந்திருக்கிறது.

வெளிசூழ்நிலையில் சாதிக்க எத்தனிக்கும் முன்,ஒருவர் உள்நிலையில் நலமுடன் இருக்க வேண்டும். உள்சூழ்நிலை நன்றாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தனிப்பட்ட சாதனைகளைத்தாண்டி, உயர்ந்த பரிமாணத்தை நோக்கி நடக்க முடியும். இதுவே இப்போதைய அத்தியாவசியத் தேவை. ஏனென்றால், வேறெப்போதும் இல்லாதவகையில், முதன்முறையாக, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணும் திறமை, வளம், தொழில்நுட்பம் எனஅனைத்துமே, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நம்மிடம் இருக்கிறது. ஆனால் எல்லோரையும் சேர்த்திணைத்துக் கொள்ளும் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு மட்டும் நம்மிடம் இல்லை. "பாரதம்" என்று நாம் குறிப்பிடுவதற்கான ஆணிவேரே, அனைவரையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் இந்தவொரு அம்சத்தில்தான் இருக்கிறது.

பெருமைமிக்க இந்தப் பாரம்பரியம் அளிக்கக் கூடிய பலன்களை, அதன் முழு வீச்சில் அறுவடை செய்யக்கூடிய தருணமிது. அளப்பரிய சாத்தியங்களை கொண்ட தேசமிது. நாம் இதனை நிகழச் செய்வோம்!

Love & Grace