இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சமீபத்தில் தனக்கு நிகழ்ந்த ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவத்தை பகிர்ந்து, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்த்தி, அதையும் ரசித்திட வழிகாட்டுகிறார் சத்குரு. அதோடு, சத்குரு அவர்கள் கடந்த வாரம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பை புகைப்படங்களாக வழங்கியுள்ளோம். இதில் "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு சத்குரு அவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இப்போது தில்லி விமானநிலையத்தில் இருக்கிறேன், காத்மாண்டுவிற்குச் செல்லக் காத்திருக்கிறேன். பொதுவிடங்களில் மக்களைக் காணும்போது, எல்லாவற்றையும் பற்றி உறுதியான முடிவுகளுடன் மக்கள் நடமாடுவதைப் பார்ப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். இதைப் பார்க்கும்போது, சமீபத்தில் நான் அமெரிக்காவிலிருந்து தில்லிக்கு விமானத்தில் திரும்பியபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

சான்பிரான்சிஸ்கோவில் இருந்து நான் ஐரோப்பாவிற்கு பயணித்தபோது, விமானத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் கொஞ்சம் பிரச்சனை இருந்ததால், ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. பயணத்திற்கு முந்தைய இரண்டு இரவுகள் எனக்குத் தூங்க நேரம் கிடைக்கவில்லை. பத்திரிக்கைகளையும் சிலவற்றையும் பார்த்தபின், தூங்கலாம் என்று முடிவுசெய்தேன்.

இயந்திரங்களின் ரசிகனாகவும், ஹெலிகாப்டர் ஓட்டுநராகவும் இருப்பதால், எஞ்ஜினின் சத்தங்களை நான் நன்கு அறிவேன். நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தபோது, திடீரென எஞ்ஜினின் சாதாரண கர்ஜனை இல்லாமல் போனதை உணர்ந்தேன். உடனே எழுந்து உட்கார்ந்தேன். மறுபுறம் இருந்த எஞ்ஜின் சத்தமாக கர்ஜித்துக்கொண்டு இருந்தது. என் பக்கம் இருந்த எஞ்ஜினில் சத்தமே வரவில்லை. நான் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, டர்போ ஃபேன் போல எஞ்ஜின் சுற்றிக்கொண்டு இருந்ததைக் கண்டேன்.

உடனே விமான பணிப்பெண்ணை அழைத்தேன். அவர் வந்தவுடன், "எஞ்ஜின் வேலை செய்யவில்லை - ஏன் எங்களிடம் சொல்லவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஓ, நான் கேப்டனை அழைக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். பிறகு கேப்டன் வந்தபோது, ஜெர்மானியரின் ஆங்கில உச்சரிப்புடன், "ஆ, மிஸ்டர் வாசுதாவ், நோ பிராப்ளம்" என்றார். நான் மறுபடியும், "எஞ்ஜின் வேலை செய்யவில்லை - ஏன் எங்களிடம் சொல்லவில்லை?" என்று கேட்டேன். "நோ, நோ, நோ பிராப்ளம்! நாம் பாதுகாப்பாக தரையிறங்குவோம், சற்று மெதுவாகச் செல்கிறோம், அவ்வளவுதான்," என்றார். அதற்கு நான், "நாம் என்ன வேகத்தில் பயணம் செய்கிறோம்?" என்று கேட்டேன். "ஓ, நாம் 220 நாட் வேகத்தில் பயணிக்கிறோம்," என்றார். அது 500 நாட் வேகத்தில் பயணிக்க வேண்டிய விமானம்.

நான், "எவ்வளவு தாமதமாகும்?" என்று கேட்டேன். அவர், "நான்கு மணி நேரம் தாமதமாகலாம். பட் நோ பிராப்ளம், மிஸ்டர் வாசுதாவ்," என்றார். நான், "நோ பிராப்ளம்! சரி!" என்றேன். அணிந்திருந்த குர்தாவை கழற்றிவிட்டு, டி-ஷர்ட் மாட்டிக்கொண்டேன். அட்லாண்டிக் கடலில் நீச்சலடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சௌகரியமாக இருக்கும்.

அன்று அதுவரை நான் எதுவும் சாப்பிடவில்லை. விமான பணிப்பெண்ணை அழைத்து எல்லா சாக்லேட்களையும் கொண்டுவரச் சொல்லி எல்லாவற்றையும் சாப்பிட்டேன். விமானம் எதிர்பாராத விதமாகத் தரையிறங்க நேர்ந்தால், போதுமான ஓய்வெடுத்திருப்பேன், சரியான உடை அணிந்திருப்பேன், உடலில் போதுமான சக்தியிருக்கும், உயிர்பிழைக்கச் சற்று வாய்ப்பிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் தூங்கச்சென்றேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விமான நிலையத்தில் தடுமாற்றத்துடன் விமானம் கீழிறங்கும் என்றே நினைத்தேன். ஆனால், நான்கு மணி நேரத்தை விடச் சற்று அதிக நேரத்தில், விமானத்தை பைலட் மிகக் கச்சிதமாக தரையிறக்கினார். அவர் திறமை அற்புதம் என்றே நான் நினைத்தேன்.

விமானத்தில் இருந்த பெரும்பாலான மனிதர்கள், தரையிலிருந்து 40,000 அடி உயரத்தில், ஒரு தகர டப்பாவில் பயணம் செய்கிறார்கள் என்பதை உணராமலே பயணிக்கிறார்கள். விமானம் என்று நினைத்தால், "இன்னும் விமானம் கிளம்பவில்லையே, இன்னும் தரையிறங்கவில்லையே, ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டதே. என் அலைபேசி இன்னும் வேலைசெய்யவில்லையே," என்றுதான் நினைக்கிறார்கள்.

வெறும் தகர டப்பா ஒன்று, 300 பேரைச் சுமந்துகொண்டு வானத்தில் பறக்கிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. விமானத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான அமைப்புகளில் ஒரே ஒரு சிறிய அமைப்பு வேலை செய்யாவிட்டாலும், உங்களையும் சேர்த்து, 300 பேரும் அப்படியே மறைந்துபோக நேரிடும். விமானத்தில் ஏறும் ஒவ்வொரு முறையும் இதை அறிந்தே நீங்கள் ஏறவேண்டும். இதை அறிந்து உங்களுக்குள் சிலிர்க்க வேண்டும், அதை நீங்கள் ரசிக்கவேண்டும்.

இந்தியாவில் ஒரு சிறிய விமானத்தில் நான் ஏறியபோது, விமான ஓட்டுநர் என்னிடம், "இது மழைக்காலம் சத்குரு. காற்றும், மழையும் அதிகமாக இருக்கும். நீங்கள் சீட்பெல்ட் அணிந்துகொள்ள வேண்டும்," என்றார். அதற்கு நான், "கவலைப்படாதீர்கள் - நான் புயலை ரசிப்பவன்," என்றேன். அதற்கு அவர் "ஹிஹிஹி" என்று சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "நானும் புயல் காற்றை ரசிப்பேன்," என்றார்.

நீங்கள் எதற்குள் நுழைகிறீர்கள் என்று அறியாமலே நுழைவதும் உங்களுக்கு ஆனந்தத்தைத் தரலாம், ஆங்கிலத்தில் 'அறியாமை பேரானந்தம்' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் வாழ்க்கையில் அற்புதமானது என்னவென்றால், எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, அப்போதும் அவற்றைச் செய்வது. அதில் வேறு விதமான ஆனந்தம் இருக்கிறது.

மக்கள் தங்களுக்குத் தாங்களே, அல்லது ஒருவருக்கொருவர், கற்பனைக் கதைகளைச் சொல்லி பொய்யானதொரு உறுதியை உருவாக்க முயற்சிக்கிறார்கள். சில சமயம் புனிதநூல்கள், சில சமயம் மதம், சில சமயம் காதல் என்று அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.

எப்படியாவது வாழ்க்கையைக் கடந்துசெல்ல கற்பனைக் கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால், வாழ்க்கை தலையில் குட்டும்போது, திடீரென இவ்விஷயங்கள் உடைந்துவிடுகின்றன, நீங்கள் குழப்பமடைந்து, பயப்படுகிறீர்கள். நிதர்சன உண்மைக்குத் திரும்பி வந்திருப்பதால் பயம் ஏற்படுகிறது. நிஜத்திற்குத் திரும்புவது ஒரு ஆசீர்வாதம். நீங்கள் தவறான வழியில் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென நீங்கள் குழம்பியிருப்பதை உணர்ந்தால், அது நல்ல விஷயம்.

நீங்கள் காட்டில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்களுக்கு வழியும் தெரியும். ஆனால், எங்கு செல்கிறீர்கள் என்று தெரியவில்லை என்பதை நீங்கள் திடீரென உணர்கிறீர்கள். எது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் குழப்பமாக இருக்கும்போது, முதலில் நிற்கவேண்டும், பிறகு எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்திற்கும் கவனம் செலுத்தவேண்டும். எங்காவது செல்லவேண்டிய திசையைச் சுட்டிக்காட்டும் ஏதேனும் அடையாளம் இருக்கலாம்.

சூரிய ஒளி எப்படி விழுகிறது என்று பாருங்கள், இரவாக இருந்தால் நட்சத்திரங்களைப் பாருங்கள், தெரிந்த ஒரு இடத்தைத் தேடுங்கள், அல்லது யானையின் சாணம் எந்தத் திசையில் போகிறது என்றாவது பாருங்கள். அது உங்களை நகரத்திற்குக் கூட்டிச் செல்லாவிட்டாலும், தண்ணீர் இருக்கும் இடத்திற்காவது கொண்டுசேர்க்கும். நீங்கள் குழம்பியிருந்தால், பித்துப்பிடித்தது போல எல்லாப் பக்கமும் ஓடித் திரியாதீர்கள்.

உலகம் முழுவதுமே போராட்டங்களையும், குழப்பங்களையும் எதிர்கொள்கிறது, ஆனால் அதில் எவ்வளவுபேர் சரியான திசையில் ஒரு படியாவது எடுத்து வைப்பார்கள்? முட்டாள்தனமான முடிவுகளைவிட குழப்பமே மேலானது. நான் கட்டாயம் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கண்மூடித்தனமான மக்களோடு ஒப்பிடும்போது, நீங்கள் குழப்பத்திலாவது இருக்கிறீர்களே என்று சந்தோஷமாக இருங்கள்.

நீங்கள் குழப்பத்தில் இருக்கும்போது பயப்படுவீர்கள். எதுவும் தெரியாமலே முட்டாள்தனமான உறுதியுடன் நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்ததும் பயம் வருகிறது. வாழ்க்கையைப் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்ததும் திடீரென பயம் எழுகிறது. வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது புதிதல்ல. ஆனால், உங்கள் அபத்தமான முடிவுகள் ஏதோ காரணத்தால் இப்போது உடைந்துவிட்டன - இதை வாழ்க்கையும் உங்களுக்குச் செய்திருக்கலாம், அல்லது நானும் உங்களுக்குச் செய்திருக்கலாம்.

முழுவதும் தவறாக செல்வதற்கு பதிலாக, பாதி வாழ்க்கையில் நீங்கள் குழப்பமடைந்தால், அது நல்ல விஷயம்தானே? இல்லாவிட்டால் நீங்கள் இறக்கும் தருணத்தில் பேதலித்துப் போவீர்கள் - அது இறப்பதற்கு மோசமான வழி.

துரதிர்ஷ்டவசமாக, 80 சதவிகித மக்கள் பேதலித்துப் போய்தான் உயிர்விடுகிறார்கள். அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்பதை அவர்கள் உணரவேயில்லை. எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் குழம்புகிறீர்களோ, அவ்வளவு நல்லது. குழப்பம் நேருகிறது என்றால் உங்கள் முடிவுகள் எதுவும் தாக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் முற்றிலும் குழம்பியிருக்கும்போது, உங்கள் புலன்கள் அனைத்தும் புத்தியும் கூர்மையாகும். இன்னும் சிறப்பாக பார்ப்பீர்கள், கேட்பீர்கள்.

நீங்கள் காட்டுவழியே காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நடந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். புலி உறுமினாலும் உங்கள் காதில் விழவில்லை. திடீரென நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை என்பதை உணர்ந்து, ஹெட்போனை கழற்றினீர்கள். அப்போது முற்றிலும் குழம்பியிருப்பீர்கள், சற்று பயப்படவும் செய்வீர்கள். இந்தக் குழப்பம் பழகிவிட்டால், இது ஒரு நல்ல விஷயம் என்று கவனிப்பீர்கள். நீங்கள் இதில் தனியாக இல்லை என்பதையும் உணர்வீர்கள்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்கள் இந்தக் குழப்பத்தையும், போராட்டத்தையும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டியிருக்கிறது. வேறு வழி ஏதும் இல்லையா? இருக்கிறது! இல்லாவிட்டால் நான் எதற்காக இங்கு இருக்கப் போகிறேன்? ஆனால், 3 ஜென்மங்களுக்குப் பிறகு, நான் அனுபவசாலியாக மாறிவிட்டேன். இது என் கடைசி சுற்று. சாத்தியம் திறந்திருக்கிறது, ஆனால், எல்லோரும் அவர்களாகவே குதிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஏதோவொன்று அவர்களைத் தள்ளவேண்டும்.

நீங்கள் குழம்பியிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தால், தவறான திசையில் மென்மேலும் முதலீடு செய்யாதீர்கள். நில்லுங்கள், காத்திருங்கள், கவனித்துப்பாருங்கள். போகவேண்டிய திசையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் குழம்பியிருக்கும்போது, உங்கள் புத்தி, கூர்மையாக இருக்கிறது, துடிப்பாக வேலைசெய்கிறது, தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் நீங்கள் இருக்கவேண்டும். அதை ஆனந்தமாக செய்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். தெளிவு என்பது உங்கள் குழப்பத்தை விழிப்புணர்வாகக் கையாளுவதன் விளைவாகவே வருகிறது.

Love & Grace