செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய "க்யூரியாஸிட்டி" ரோவர், செவ்வாய் கிரகத்திலிருந்து கடந்த ஒரு வாரமாக ட்வீட்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் ஆணாதிக்கத்தின் கடைசி கோட்டைச் சுவரும் உடைந்து போனதா? இல்லை, இல்லை. கவலைப்படாதீர்கள், நாம் வெள்ளி கிரகத்தையும் கைப்பற்றி விடலாம். (ஆங்கில வழக்கில், செவ்வாய் கிரகம் - ஆண் குணங்களையும், வெள்ளி கிரகம் பெண் குணங்களையும் குறிப்பிடும்)

மனிதனின் அறியாமை, தொழில்நுட்பத்தால் வல்லமை பெறும்போது அது வாழ்நாள் முடியும் முன்னரே வாழ்வை அழித்து விடக்கூடிய வலிமையான ஆயுதமாகிறது. மிகவும் நவீனமான தொழில்நுட்பங்கள் எல்லாம் முதலில் ராணுவ பயன்பாட்டிற்கே செல்லும் என்பது நாம் அறிந்ததே.

முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் தொழில்நுட்பத்தின் அகோரமான முகங்களாய் வெளிப்பட்டன. அதன் பிறகு மிக அதிகமான தொழில்நுட்ப வளர்ச்சி நிகழ்ந்துவிட்டது. அது நம் வாழ்க்கையை நிச்சயமாக மிக அற்புதமான வழிகளில் மாற்றி அமைத்திருந்தாலும், தலைக்கு மேல் கத்தியைப் போல் அதன் அச்சுறுத்தல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

இந்த 21வது நூற்றாண்டு மரண வாடை நிரம்பியதாக இருக்கிறது. 2000மாவது ஆண்டிலிருந்து கிட்டதட்ட 10 லட்சம் மக்கள் சண்டை சச்சரவுகளில் கொல்லப்பட்டுள்ளனர். மூடத்தனமான தீவிரவாத தாக்குதலில் தொடங்கி, இன்று தொடர்ச்சியான யுத்தங்கள் வரை அது நீண்டுவிட்டது. ஆனால் தற்சமயம் போர்கள் "வசந்தம்" என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஆங்கிலத்தில் ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் வசந்தகாலம், எப்போதும் வாழ்வை அதன் மேலான நிலையிலேயே உணர்த்தி வந்துள்ளது. உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் அன்பு, களிப்பு, கொண்டாட்டம் போன்றவற்றின் சின்னமாகவே வசந்தகாலம் இருந்து வந்துள்ளது.

ஆனால் இப்போது வசந்தம் என்றால் சூழ்ச்சி, ரத்தம், மரணம், துக்கம் என்று பொருளாகிவிட்டது. இவை அனைத்தும் புரட்சி, அர்ப்பணிப்பு மற்றும் உயிர் தியாகங்களுக்கு உதாரணங்களாய் திரிக்கப்பட்டுவிட்டன.

விழிப்புணர்வும் கருணையும் உடைய கைகளில் இல்லாவிட்டால், தொழில்நுட்பம் இவ்வுலகை கொன்று நஞ்சாக்கிவிடலாம். நாம் உயிருக்கு உயர்ந்தபட்ச மதிப்பு வழங்கும்போது மட்டும்தான், தொழில்நுட்பம் மக்களுக்கு நல்வாழ்வை கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு இருக்க முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று இந்தியாவிற்கு சுதந்திர தினம். இந்த நாடு இந்த பூமியிலேயே மிகவும் தனித்துவம் வாய்ந்த நாடு. நம்புங்கள், தேசப்பற்றின் காரணமாக நான் இதை சொல்லவில்லை. மாறாக பல தேசங்களின் கலாச்சார அடிப்படைகளை நுட்பமாக கவனித்தவன் என்கிற விதத்தில் சொல்கிறேன்.

அனைத்தையும் தன்னுள் இயல்பாகவே இணைத்துக் கொள்ளக்கூடிய மனித விழிப்புணர்வை மேம்படுத்த நாம் முயற்சிக்காமல் போனால், பிறகு, தொழில்நுட்பம் என்பது வரமாக இருப்பதற்குப் பதிலாக சாபமாக மாறிவிடும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்னர் நான் முதன்முதலில் "க்யூரியாஸிட்டி" ரோவரிலிருந்து ட்வீட்கள் கேட்க ஆரம்பத்திலிருந்து 2 கவிதைகளைப் புனைந்துள்ளேன். சற்றே என்னை பொறுத்துக் கொள்ளுங்கள்.

க்யூரியாஸிட்டி

(நாள் - 9 ஆகஸ்ட், 2012 - கோலாலம்பூர் விமானம், காலை 10.30 மணி, விமான ஓடுகளத்தில்)
வெற்று வானம் வல்லமையுள்ளது
ஆயினும் நாணம் உடையது
எல்லையில்லா சாத்தியம் மாய மூடுபனியின் மறைப்பில்
இது தெய்வீகத்தின் சித்தமா
இல்லை இயற்கையின் நாணமா?

எல்லா வகையிலும் திறந்து கிடக்கும் இங்கு
எங்கும் செல்வதற்கில்லை; செல்ல வழியுமில்லை
சுதந்திரத்தின் இழையில் சுற்றப்பட்ட பிணைப்புகள்
சர்வமும் மிதக்கிறது சூனியத்தில்
சூனியமே அனைத்துமாக
பெருங்குழப்பம் ஆனால் மிகக் கச்சிதமான ஓழுங்குடன்.
வெறும் ஆவலினால் இவையனைத்தையும்
அறிந்திடலாம் என எண்ணுகிறீரோ?

 

 

வெற்றிக் கொள்ளும் வீணான வேட்கை

(நாள் - 9 ஆகஸ்ட், 2012 - மெல்போர்ன் நகரிலிருந்து கிளம்பிய 1 மணி நேரத்தில்)
வெள்ளியிலோ செவ்வாயிலோ நாம் கொண்ட விருப்பம்
ஆவலினாலோ அன்பினாலோ அல்ல
புத்தியற்ற பேராசையாலும் வெற்றிக் கொள்ளும் வேட்கையாலும்தான்
வெள்ளியும், செவ்வாயும் இங்கு விஷயம் அல்ல
வேண்டும் வேண்டும் என்னும் முடிவேயில்லா தேவைகளால்தான்
இந்த முடிவற்ற அறியாமையை
எதனாலும் இட்டு நிரப்ப இயலாது.

உங்கள் இயல்புக்கு
இன்னும் கொஞ்சம் மட்டும் போதாது எல்லாமும் வேண்டும்
அனைத்தையும் உள்ளிணைத்து அரவணைத்துக் கொண்டால்
சர்வமும் உங்களுக்கே உள்ளது உள்ளபடி
இதனை நீங்கள் ஆவலினாலோ வேட்கையாலோ
அறிந்துக் கொள்ள முடியாது

 

Love and Blessings

 

* Photo courtesy NASA