ஜென் மார்க்கம், ஜென் துறவிகளின் எளிய வாழ்க்கை, உண்மை ததும்பும் அற்புதமான கதைகள், என ஏதோ ஒருவிதத்தில் ஜென் பற்றி எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். சத்குருவும் கூட பல ஜென் கதைகளை சொல்லியிருக்கிறார். இதன் தொகுப்பாக 'ஜென்னல்' புத்தகம் கூட வெளிவந்திருக்கிறது. உண்மையில் ஜென் என்றால் என்ன? நம் யோகத்தில் இருந்து அது எப்படி வித்தியாசப்படுகிறது? சத்குருவின் பதில் இங்கே...

Question: ஜென் என்றால் என்ன? யோகாவிலிருந்து அது எப்படி வித்தியாசப்படுகிறது?

சத்குரு:

ஜென் என்கிற சொல், சமஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லிலிருந்து வருகிறது. கௌதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார். போதி தர்மா சீனநாட்டுக்கு தியானத்தைக் கொண்டு சேர்த்தார். அது அங்கே ச்யான் என்று ஆனது. இந்த ச்யான் கிழக்கு ஆசியநாடுகளுக்குச் சென்ற போது ஜென் என்று ஆனது. ஈஷா யோகாவும் அதன் தன்மையில், அடிப்படையில் ஜென்தான். ஜென் என்பது சாஸ்திரங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத, புத்தகங்கள் இல்லாத, குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவில் இருந்து வேறுபட்டதல்ல. அதுதான் யோகா.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: ஆனால் யோகாவில், பாதை என ஒன்று இருக்கிறதே? இதைச் செய்தால் ஞானோதயம் அடைந்த மனிதரை உருவாக்க முடியும் எனக் கூறியுள்ளீர்களே? அதற்காகத்தானே நாங்கள் ஆன்மீகப் பயிற்சிகளை செய்கிறோம். இல்லையா?

சத்குரு:

யோகாவில் எதை அறிவியலாகத் தருகிறோமோ, ஜென் மார்க்கத்தில் அதையே ஒரு கலையாக கருதுகிறார்கள். கலை வடிவத்தை ரசிப்பதற்கு, ஒரு உள்நிலை வளர்ச்சி தேவை. ஆனால் அறிவியலின் பலனை எல்லோருமே அனுபவிக்க முடியும். எதை நாம் யோகா என்கிறோமோ, அதையே அவர்கள் ஜென் என்கிறார்கள். ஆனால் ஜென் பிரபலமானதற்குக் காரணம், சில அற்புதமான ஞானிகள், மூன்று, நான்கு நூற்றாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக ஜென்மார்க்கத்தில் தோன்றினார்கள். இது ஒரு அரிய நிகழ்வு. இதன் காரணமாக ஜென்னிற்கு ஒரு உயர்ந்த தன்மை ஏற்பட்டுவிட்டது. அடிப்படையில் பார்த்தால், ஜென்னும் ஈஷா யோகாதான். இரண்டிலுமே, நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.

அடிப்படையில் பார்த்தால், ஜென்னும் ஈஷா யோகாதான். இரண்டிலுமே, நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.

என்றாலும் 'ஜென்' பல புதிய பரிமாணங்களை அடைந்துவிட்டது. தொடர்ச்சியாக வந்த குருமார்கள் அதற்கொரு காரணம். ஒவ்வொருவரும், ஜென் மார்க்கத்தைத் தங்கள் தனிப்பட்ட தன்மையில் மேம்படுத்தினார்கள். அவர்கள் வழியில் ஜென் மார்க்கத்தைப் பரப்பினார்கள். ஒவ்வொரு குருவும் அதை பிறருக்கு கற்பித்த விதத்தில் ஒரு தனித்தன்மை இருந்தது. இந்தக் காலசுழற்சியில் எப்போதாவது ஒருமுறை அப்படியொரு தொடர்ச்சி ஏற்படும். தன்னை முழுதாக உணர்ந்த ஞானிகள் பலர் தொடர்ந்து வந்து, அந்த ஞானத்தை மற்றவர்களுக்குத் தர, பல அற்புதமான வழிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப செய்வதென்பது இயலாது. அதை அப்படியே திரும்பச் செய்தால், அது 'ஜென்'னும் அல்ல. ஏனெனில், ஜென் என்பது இயல்பாக நிகழ்வது.

ஜென் மார்க்கத்தில் ‘ஹியூட்டி’ என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை. ஆனால் அவரும் ஒரு குருவாக அறியப்பட்டார். தோளிலே ஒரு பெரிய பையை சுமந்து கொண்டு, அவர் எங்காவது சென்று கொண்டிருப்பார். அதில் பல பொருட்கள் இருக்கும். பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும். அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்வர். அவர் இனிப்புகளை விநியோகிப்பார். பிறகு சென்றுவிடுவார். அவ்வளவுதான். மக்கள் அவரிடம் வந்து போதனைகளைக் கேட்பார்கள். அவர் சிரித்துவிட்டு நகர்ந்து விடுவார்.

இவரை இன்னொரு புகழ்பெற்ற ஜென் குருவான ‘எபானின்(ebanin)’ சந்திக்க வந்தார். ஹியூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அவர் தெரிந்து கொள்ள நினைத்தார். அதனால் அவர் ஹியூட்டியிடம், ‘ஜென் என்பது என்ன?' என்றார். உடனே ஹியூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அடுத்து 'ஜென்னின் நோக்கம் என்ன?' என்று கேட்டார். ஹியூட்டி அந்த சாக்கை எடுத்துத் தன் தோள்களில் போட்டுக் கொண்டு நகர்ந்து விட்டார். இதுவேதான் யோகா என்பதும். நாம் செய்யும் எல்லா பயிற்சிகளும் கூட இதற்குத்தான்.

எனவே, நீங்கள் யோகாவையோ, ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால், உங்களிடம் இருக்கிற சுமையைக் கீழே போட்டு விட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சுதந்திரமாக, நேராக நிற்கவேண்டும். இதுதான் முக்கியம். உங்கள் சுமையோடு அதைச் செய்ய உங்களால் முடியாது. சிலசமயம் சுமையோடும் அதைச் செய்ய முடியும். அது மிக மிக அரிது. லட்சத்தில் ஒருவரால் தான் அது முடியும். எனவே, சுமையைக் கீழே போடுங்கள்.

அப்படியானால் யோகாவின் நோக்கம் என்ன? முழு சுமையையும் மறுபடியும் எடுத்துக் கொள்வதுதான். இப்போது அது கூடுதல் சுமை. ஆனால் சுமை போலத் தெரியாது. காரணம், 'சுமை இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது இல்லை' என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் இருந்தாலும், இறந்தாலும் அதனால் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை. "ஓ! நான் போய்விட்டால் என் குழந்தைகள் என்னாகும், அதற்கென்னாகும், இதற்கென்னாகும்?" என்று உங்களுக்குப் பல விஷயங்கள் பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் இவ்வுலகைப் பொறுத்தவரை ஒரு வித்தியாசமும் இருக்காது. எதுவும் மாறாது. சில முட்டாள்கள் அழக்கூடும். சில முட்டாள்கள் கதறக்கூடும். ஆனால் அவர்களும் இறப்பார்கள். ஒருநாள் மறுபடியும் அவர்கள் பிறப்பார்கள். புனரபி ஜனனம், புனரபி மரணம்.

ஒருவேளை, நீங்கள் இறந்தால் அவர்கள் 'வாழ்க்கை என்றால் என்ன?' என்றாவது யோசிக்கத் தொடங்குவார்கள். வாழ்ந்து கொண்டேயிருந்தால், அவர்கள் அதைப்பற்றி யோசிக்கவே மாட்டார்கள். பலர் தங்கள் வசதியோடு நன்றாகப் பொருந்தி வாழத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் இறப்பே இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்தால், உங்களுக்கு இறப்பே இல்லாதது போலவும், நீங்கள் இங்கேயே நிலையாக வாழப்போகிறவர்கள் போலவும் தோன்றுகிறது. இதைத்தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது முழுக்க முழுக்க முட்டாள்தனம்.

நீங்கள் யோகாவையோ, ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால், உங்களிடம் இருக்கிற சுமையைக் கீழே போட்டு விட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சுதந்திரமாக, நேராக நிற்கவேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பை நீங்கள் உணராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தது உங்கள் வாழ்விலும் மரணம் நிகழும், நீங்களும் இறப்பீர்கள், அது உங்கள் இயல்பு என்பதாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுகூடத் தெரியாதவர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாதவர்கள். ஒரு பெரிய ஞானம் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம். இவ்வுலகமே நிரந்தரம் என்றும் கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானம் இவ்வுலகில் எதுவுமே திடத்தன்மையற்றது, தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டது. நீங்கள் உலகம் என்று சொல்வது, தொடர்பு நிலையியான உண்மை மட்டுமே. இது உங்களுக்குப் புரியவில்லை எனில், 'நீங்கள்' என்பது நிரந்தரமல்ல, ஒருநாள் நிச்சயம் இறந்துவிடுவீர்கள் என்று, உங்கள் அளவிலான நிலையற்ற தன்மையையேனும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் மறந்து விட்டீர்கள். செய்யும் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் நிலைத்து நிற்கப்போவது போல் நடந்து கொண்டிருக்கிறீர்கள். 70 வயது, 90 வயது 100 வயதில் மரணம் வந்தால் கூட, நீங்கள் இறப்பதற்கு தயாராக இல்லை. சரி, இத்தனை ஆண்டுகளில் பயனுள்ள எதையேனும் செய்தீர்களா என்றால், அதுவுமில்லை. வாழ்க்கை முழுவதும் குறைகளும், குற்றச்சாட்டுகளும், வருத்தமும், கோபமும் தான் மிஞ்சுகிறது. பலருக்கு இப்படித்தான் இருக்கிறது. 60-வயதை சராசரி என்று வைத்துக் கொண்டால், அதில் எத்தனை வினாடிகள் வாழ்க்கையை அனுபவித்திருப்பீர்கள் என்று கணக்கிட்டால், அது மிக சொற்பமாகவே இருக்கும்.

60 வயது வாழ்க்கையில், துயரத்தின் சாயலில்லா ஆனந்தமான வினாடிகள் என்பது, உங்கள் வாழ்வில் எத்தனை? அல்லது உங்கள் 30, 40 வயதுகளில் துன்பமற்ற மகிழ்ச்சியான வினாடிகள் எவ்வளவு இருந்திருக்கும்? அன்பை மறந்துவிடுங்கள், உங்கள் சிரிப்பு கூட இங்கு ஒரு அளவோடு அல்லவா இருக்கிறது! உங்கள் கண்ணீருக்கும் ஒரு அளவு வைத்திருக்கிறீர்கள். எதைச் செய்தாலும், அதற்கு ஒரு அளவு, ஒரு கணக்கு, ஒரு மதிப்பீடு. இப்படி எல்லாவற்றையும் கணக்கு போட்டு வாழ்ந்தால், நீங்கள் 60 ஆண்டுகள் வாழ்ந்தால் என்ன? 6 ஆண்டுகள் வாழ்ந்தால் தான் என்ன? அதில் பெரிதாய் ஒரு வித்தியாசமும் இருக்காது. ஆனால் நீங்கள் வாழ்வதென்றால், குறைந்தது மற்றவர்களுக்காவது பயன்பட வேண்டும். உங்களுக்கு பயன் என்பது, நீங்கள் கரைந்து போவது மட்டும்தான். ஒன்றுமற்ற தன்மையில் கரைந்து போவதுதான் இதன் உச்சகட்ட நிலை.