உங்கள் முகத்தில் சிரிப்பும், மூளையில் யோசனையும் ஏற்படுத்தக் கூடிய சத்குரு சொல்லும் குட்டிக் கதைகள் உங்களுக்காக இங்கே...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏறுக்கு மாறான மனைவி!

ஒருமுறை சங்கரன் பிள்ளையின் மனைவி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். இதைப் பார்த்த மக்கள் ஓடிப் போய் சங்கரன் பிள்ளையிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஆற்றில் குதித்து ஆற்று நீரோட்டத்துக்கு எதிர்திசையில் எதிர்நீச்சல் போட ஆரம்பித்தார். இதைப் பார்த்த மக்கள், ‘என்னய்யா இது, எதிர்நீச்சல் போடுகிறீரே?’ என்று கேட்டனர். அதற்கு சங்கரன் பிள்ளை, ‘என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியாதா? எதைச் செய்தாலும் ஏறுக்கு மாறாக செய்வதுதான் அவளது பழக்கம்’ என்றார்.

சங்கரன் பிள்ளையின் மனைவிக்கு 2வது திருமணம்!

சங்கரன் பிள்ளை மரணப் படுக்கையில் இருந்ததால், தனது உயிலில் சில கடைசி நேர மாற்றங்களை செய்ய முடிவெடுத்தார். தனது பெயரில் இருந்த பங்கு பத்திரங்கள், சொத்துக்கள் அனைத்தையும் தன் மனைவியின் பெயரில் எழுதி வைத்தார். ஆனால் இவற்றையெல்லாம் அனுபவிப்பதற்கு, தன் மனைவி தான் இறந்த ஆறு மாதத்திற்குள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் விதித்தார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அவரது வழக்கறிஞர், ‘ஏன் இப்படி ஒரு நிபந்தனை? உங்கள் மனைவிக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, இப்படி ஒரு நிபந்தனையையும் விதிக்கிறீர்களே?’ என்று கேட்டார். அதற்கு சங்கரன் பிள்ளை சொன்னார், ‘நான் இறந்ததற்கு குறைந்தபட்சம் ஒருவராவது வருத்தப்பட வேண்டாமா?’

விடுதலை

ஒரு தம்பதியினருக்கு திருமணமாகி 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய அந்த தருணத்தில், அந்தக் கணவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவி அவரைக் கனிவாகப் பார்த்து, "நம் திருமணத்தை எண்ணி உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்" என்றார். அதற்கு அந்தக் கணவர் தன் கண்ணைக் கசக்கிக் கொண்டே, "நீதிபதியாக இருந்த உன் அப்பா, 25 வருடங்களுக்கு முன்னால் என்னிடம், 'என் பெண்ணை ஏமாற்றி அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாய். அவளை நீ திருமணம் செய்து கொள்ளா விட்டால், உன் மீது ஏதாவது வழக்கைப் போட்டு 25 வருடங்கள் சிறையில் தள்ளி விடுவேன்' என்றார். அப்படி நான் சிறையில் தள்ளப் பட்டிருந்தால் கூட, இன்று நான் விடுதலை ஆகியிருப்பேன். அதை எண்ணி தான் அழுகிறேன்" என்றார்.