Question: யாத்திரையின் பயன் என்ன?

சத்குரு:

மக்கள் பலர் சுற்றுலா செல்கிறார்கள். நடைப்பயணம் செய்கிறார்கள், மலையேற்றம் செய்கிறார்கள். எதையோ சாதிக்க வேண்டும் என்று அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள். அதன் மூலம் தம் வாழ்வை ஒரு படி உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் யாத்திரையின் நோக்கமே உங்களிடத்தில் பணிவைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

ஒரு யாத்திரிகரின் குறிக்கோள் உறுதியானது. என்ன ஆனாலும் சரி, அவ்விடத்தை சென்றடைய வேண்டும் என்ற அவர் எண்ணம் தளர்வதில்லை. வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அங்கே போயே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்.

பல விஷயங்களுக்காக மக்கள் பயணம் செய்கிறார்கள். சிலர் எதையோ ஆய்வு செய்வதற்காக பயணம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தினசரி அலுவல்களில் இருந்தும், சிலர் தங்கள் குடும்பத்தின் தொந்தரவுகளில் இருந்து சிறிது விடுபட வேண்டும் என்றும் பயணம் செய்கிறார்கள் (சிரிப்பலை). ஆனால் ஒரு புனித யாத்திரையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது. இது எதையோ அடையவேண்டும் என்றோ, எதையோ அறியவேண்டும் என்றோ, எதையோ பெறவேண்டும் என்றோ மேற்கொள்ளப்படுவது அல்ல. யாத்திரை என்பது உங்களைப் பணிவுள்ளவராக மாற்றும் ஒரு செயல்முறை.

யாத்திரை என்றால், வேறு ஒரு தன்மை உங்களை ஆட்கொள்ள நீங்கள் அனுமதிக்கிறீர்கள். யாத்திரைக்காக நாம் ஏன் இமயத்தைத் தேர்ந்தெடுத்தோம், தெரியுமா? அது நிச்சயமாக உங்களை சிறியவராக உணரச் செய்யும், வேறு வழியேயில்லை. நீங்கள் எவ்வளவு திறன் படைத்தவராக இருந்தாலும் சரி, இமயத்தின் முன் நீங்கள் சிறியவராக உணர்வதைத் தவிர்க்க முடியாது. கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தால், உங்களை ஒரு மிகச்சிறிய உயிரினம் போல் உணர்வீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும்போது ஒரு எறும்பு எப்படி தன்னை உணருமோ, அப்படி இமயத்தின் முன்னிலையில் நீங்கள் உங்களை உணர்வீர்கள்.

இந்த முழு படைப்பில், நீங்கள் ஒரு சிறிய உயிரினம் என்று உணரவைப்பது தான் யாத்திரையின் நோக்கம். இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு தூசி என்று அறிந்துகொள்ளத்தான் இந்த பயணம். அந்தச் சிறிய நிலையை அறிவதும் அனுபவிப்பதும் கொண்டாடுவதும்தான் இப்பயணத்தின் நோக்கம். நாம் தூசு போன்றவர்தான். ஆனால் விருப்பத்துடன் இருந்தால் இந்த முழு உலகையும் நமக்குள் அடக்கிக்கொள்ளவும் முடியும். அதுதான் மனிதராக இருப்பதன் மகத்துவம். நான்தான் பெரியவன் என்ற மமதையுடன் இங்கு உங்களில் யாராவது சிலர் இருக்கிறீர்களா? உங்கள் குழு வந்த பேருந்தில் அப்படி நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்களா? (சிரிக்கிறார்). எப்படியும் அப்படிப்பட்டவர்கள் சிலராவது இருப்பார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்படி பெரிய மனிதத் தோரணையுடன் உலவும்போது, அவர் மிகவும் சிறியவராக மாறிவிடுகிறார், இல்லையா? ஒருவர் தன்னை மிகச் சிறியவன் என்று உணராத பட்சத்தில், அவர் மற்ற ஒவ்வொன்றையும் தனக்குள் இணைத்துக்கொள்ளத் தவறிவிடுகிறார். நான் சிறியவன்தான் என்று அவர் அறியும்போது அவருக்கான எல்லைகள் உடைந்து விடுகிறது. மனிதப் பிறவியின் அற்புதம் இதுதான். இதுதான் மனித இனத்தின் போராட்டமும் கூட. பெரிதாக ஆகவேண்டும் என்ற பெருமுயற்சியில் அவர்கள் சிறிதாகிப் போகிறார்கள்.

இந்த யாத்திரை எல்லையற்றுப் போவதற்கான திசையில் உங்களை நடத்திச் செல்கிறது. மிகச் சிறியவர் என்று உணரச்செய்கிறது. நீங்கள் சிறியவராக ஆக, உங்களை முழு விருப்பத்துடன் நீங்கள் அனுமதிக்கும்போது, அது உங்களை பெரிதாக்கும். நான் ஒன்றுமில்லை என்று பணியும்போது, நீங்கள் உண்மையில் எல்லையற்றுப் போகிறீர்கள்.

ஒவ்வொரு மனிதரும் தன் எல்லைகள் உடைவதைத்தான் விரும்புகிறார். ஆனால் அதற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார். நோக்கம் சரியாக இருந்தாலும் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். நான் பெரியவன் என்ற உணர்வை விட்டு, தன்னைக் கரைத்துக் கொள்வதால் மட்டுமே எல்லையற்றுப் போகமுடியும் என்று புரிந்துகொள்வதற்கு அதிக விழிப்புணர்வு தேவை.

இதை உணர்ந்துகொள்ள மனிதர்களுக்கு அதிக காலம் ஆகிறது. இதை உணர பெரும்பாலானவர்களுக்கு பல பிறவிகள்கூட ஆகிவிடும். நான்கு பேர் ஓரிடத்தில் இருக்கிறார்கள், அங்கு யார் பெரியவர் என்ற கேள்வி வந்துவிடுகிறது. நான்கு கூட வேண்டாம், இரண்டு பேர் ஓரிடத்தில் இருந்தால்கூட, அவர்களில் யார் பெரியவர் என்ற கேள்வி வந்துவிடுகிறது. இந்தக் கேள்வி நிச்சயமாக வருகிறது. உடனே தங்களை பெரிதாக காண்பித்துக்கொள்ள முயற்சிகள் செய்து அற்பமாகி விடுகிறார்கள். மிகவும் முட்டாள்தனமான செயல்களை தங்கள் வாழ்வில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எப்போது மனிதர்கள் தங்களை முக்கியமானவராகக் காட்டிக்கொள்ள ஏதேதோ செய்கிறார்களோ, அப்போது மிகவும் முட்டாள்தனமான செயல்களை செய்து விடுகிறார்கள்.

அறிவியல், தொழில்நுட்பம், மனித உயிரின் கூரிய அறிவுத்திறன், இவை எல்லாமே அற்புதமான விஷயங்கள். இந்தப் பிரபஞ்சத்தையும் நமது தொழில்நுட்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தொழில்நுட்பம் என்பது மிகவும் சிறியது. இது அந்த துறையில் இருக்கும் விஞ்ஞானிகள் அறிவார்கள். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் தம்மை மிகவும் பெரியவர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். ஒரு பேருந்தையோ, காரையோ ஓட்டுவதாலோ அல்லது காரில் பயணம் செய்து அதிக தூரத்தை எளிதில் கடப்பதாலோ தாங்கள் மிகவும் பெரியவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். தம்மைச் சுற்றி என்ன இருக்கிறது என்று பார்க்க மறந்து விடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் அப்படி இருக்கக்கூடாது. இது ஒரு சுற்றுலா அல்ல, ஒரு யாத்திரை என்று நீங்கள் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வதற்கும், புனிதப் பயணம் செல்வதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நீங்கள் தற்போது இவ்விரண்டிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறீர்கள்... (சிரிக்கிறார்).

அவ்வப்போது ஒரு யாத்திரிகரின் உறுதியுடன் தான் இருக்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் தூய்மை குறைவான கழிவறையைப் பார்க்கும் போதும்... (சிரிக்கிறார்), செங்குத்தான மலைச்சரிவில் ஏறும்போதும், சுற்றுலாப் பயணிபோல் ஆகிவிடுகிறீர்கள். மனம் தளர்கிறது. ஆனால் ஒரு யாத்திரிகரின் குறிக்கோள் உறுதியானது. என்ன ஆனாலும் சரி, அவ்விடத்தை சென்றடைய வேண்டும் என்ற அவர் எண்ணம் தளர்வதில்லை. வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அங்கே போயே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்.

ஒரு சுற்றுலா பயணி அப்படியில்லை. அவர் தனக்கு வசதியான இடங்களுக்கு மட்டுமே செல்வார். அது தவறு என்று சொல்லமாட்டேன். நாம் இப்படி எல்லைகளோடு வாழும்போது, வாழ்க்கையும் நமக்கு சில எல்லைகளை விதித்து விடுகிறது. நீங்கள் உங்களுக்குள் இருக்கும் எல்லைகளை உடைக்கும்போது தான், வாழ்க்கை அதன் முழுமையான தன்மையில் திறந்து கொள்கிறது.

இந்த இமயப் பயணம் என்பது உங்களை அற்பமானவராக ஆக்கிவிட வேண்டும். அதே தன்மையுடன் நீங்கள் வாழ்வை அணுகும்போது, நீங்கள் அற்புதமான உயிராக மாறிவிடுவீர்கள். ஒருவர் தன்னை மிகவும் பெரிய மனிதராக நினைத்துக்கொண்டு வாழ்வை அணுகும்போதுதான், மிகவும் மோசமான மனிதராக இருக்கிறார். ‘நீங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தால் ஒரு கொள்ளைக்காரன் போலத்தான் வாழ்க்கை நடத்துவீர்கள். அதேசமயம், ‘நான் எவ்வளவு சிறியவன்’ என்று கவனித்து, நன்றியுணர்வுடன், வாழ்வின் ஒவ்வொரு அடியையும் மென்மையாக எடுத்து வைத்து நடந்தால், உங்கள் வாழ்வே ஒரு புனித யாத்திரையாக இருக்கும்.

இப்போது போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டதால், இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இத்தகைய வசதிகள் இல்லாத போதும் கூட இந்த மலைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக யாத்திரிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது. பண்டைய காலத்தில், ஞானமடைந்தவர்கள், மக்கள் கூட்டத்திலிருந்து தப்பிக்க இமயமலைக்கு வந்தார்கள். மக்கள் விடாமல் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். இப்போது, அப்படிக்கூடத் தப்பிக்க முடியாது. எல்லா இடங்களிலும் சாலைகள் அமைத்து, பயணங்களை சுலபமாக ஆக்கிவிட்டார்கள். இப்படி சாலை வசதிகள் அதிகமாக அதிகமாக, மக்கள் இமயமலையை தங்கள் விடுமுறை இலக்காக நிர்ணயித்து விடுவார்கள் போலிருக்கிறது (சிரிக்கிறார்). ஒருவிதத்தில் பார்த்தால் இது நல்லது. ஆனால், இன்னொருவிதமாக பார்த்தால் இது நல்லதே அல்ல.

ஈஷாவின் புனிதப் பயணங்கள் பற்றி அறிந்து கொள்ள: www.sacredwalks.org