"வாழ்வில் ஏற்ற இறக்கமெல்லாம் சாதாரணம்ப்பா...! டேக் இட் ஈஸி" இப்படி பலர் போகிற போக்கில் அட்வைஸ் செய்துவிட்டு செல்வதைப் பார்க்கிறோம். ஆனால், ஒருவர் துன்பப்படும்போது அதற்கான தீர்வையும், துன்பம் உருவானதற்கான மூல காரணத்தையும் பற்றி யாரும் கவனம் கொள்வதில்லை. நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை எப்படி கையாள்வது? இதோ சத்குரு சொல்லும் தீர்வு!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏற்றத் தாழ்வுகள் இல்லை சூழ்நிலைகள் மட்டுமே...

ஏற்ற இறக்கங்கள் என்று எதுவுமில்லை. வாழ்வெனும் நதி பல வழிகளில் பாய்கிறது. உலகம் என்பது சூழ்நிலைகளால் ஆனது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழ்நிலைகள் அமைகின்றன. அவைகளை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலைதான் ஏற்ற இறக்கங்கள் கூடியதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் மனதை சமநிலைக்கு கொண்டு வந்துவிட்டால் அழகான மலைகளின் உயரத்தையும் பள்ளத்தாக்குகளின் ஆழத்தையும் ஒரேமாதிரி வியந்து ரசிக்க முடியும். ஆனால் இப்போது வாழ்வின் சூழ்நிலைகள் உயர்ந்திருந்தாலும், தாழ்ந்து இருந்தாலும் நீங்கள் துன்புறுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே நீங்கள் இந்த கேள்வியை என் முன் வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் துன்பத்திற்கு விஷேசமாக எந்த காரணமும் தேவையில்லை.

ஏன் துன்பம்?

வாழ்வில் நடப்பவற்றை உங்கள் அனுபவத்தில் நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்களோ அதைப் பொறுத்துத்தான்

வாழும்போதும் சரி, சாகும்போதும் சரி, நீங்கள் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இல்லை. நீங்கள் எப்போதுதான் துன்பப்படாமல் இருந்திருக்கிறீர்கள்?

உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது. உடம்பில் ஏற்படும் வலியானது வெளியிலுள்ள சூழ்நிலைகளால் ஏற்படக்கூடும். ஆனால் துன்பப்படுதல் என்ற உணர்ச்சி மனதால் நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். உண்மையில் அகநிலை நடைமுறைகளை, மாற்றங்களை நாமே உருவாக்கிக் கொள்ளமுடியும். சரியான விழிப்புணர்வுடன் மனதை நாம் கையாண்டால் புறசூழ்நிலை எப்படி இருந்தாலும் நாம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். ஆனால் மனம் உங்கள் கட்டுக்குள் இல்லாதிருக்கும்போது, நடக்கின்ற விஷயங்கள் எப்படி இருந்தாலும் அது உங்களுக்கு துன்பம் விளைவிப்பதாக இருக்கிறது.

யோசித்துப் பாருங்கள், எதை எடுத்தாலும் உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, அல்லவா? திருமணமாகவில்லையே என்று கவலைப்படுகிறீர்கள், திருமணம் ஆனபிறகும் அதனால் கஷ்டப்படுகிறீர்கள், குழந்தைகள் இருந்தாலும் துன்பம், இல்லையென்றாலும் துன்பம். வேலை கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கஷ்டம். வாழும்போதும் சரி, சாகும்போதும் சரி, நீங்கள் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இல்லை. நீங்கள் எப்போதுதான் துன்பப்படாமல் இருந்திருக்கிறீர்கள்?

சரியான உள்சூழ்நிலை உருவாக்குங்கள்

எது நடந்தது எது நடக்கவில்லை என்பதல்ல பிரச்சனை. நடப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுதான். இப்போது உங்கள் எண்ண ஓட்டங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளமுடியும் என்று நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், கட்டாயமாக உங்களுக்கு வேண்டிய வகையில் தான் அதை அமைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு வேண்டிய வகையில் உங்கள் எண்ணத்தை அமைத்துக்கொள்ள முடியும் என்றால், பின் சூழ்நிலை எப்படி நிகழ்ந்தாலும், அதையும் இனிமையாய் நீங்கள் நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள். அப்போது சூழ்நிலையை நல்லது என்றும் கெட்டது என்று பிரித்துப் பார்க்க மாட்டீர்கள்.

'நான் நினைப்பது போல் நடக்கவில்லையே' இதுதானே உங்கள் கவலை? உங்கள் உள்நிலையை நீங்கள் சரியாகக் கையாள முடிந்தால், வெளிச்சூழ்நிலை எதிர்பாராத விதங்களில் நடந்தாலும், உங்கள் முழுத்திறனிற்கு அனுசாரமாய் அதை நீங்கள் சமாளிக்க முடியும். எந்த ஒரு மனிதனும் அதிகபட்சமாய் அதைத் தான் செய்யமுடியும். வாழ்வின் சூழ்நிலை எப்படி அமைந்தாலும், தன்னை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்க ஒருவன் அறிந்திருந்தால், அவன் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டான் என்றே அர்த்தம். அப்போது முக்தியை யாரும் அவனுக்கு தடை செய்ய முடியாது.