Question: சமீபத்தில் எனக்கு ஒரு கார் விபத்து நிகழ்ந்தது. இன்னொரு காரோடு மோதி என் கார் தலைகீழாக விழுந்து ஓட்டுநரின் கதவு உள்ளே நசுங்கியது. நான் பெரிதாகக் காயப்படவில்லை. மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்தார்கள். காலில் அங்குமிங்கும் சில சிராய்ப்புகள் இருந்தன, அவ்வளவுதான். அங்கிருந்த நர்சுகள் மறுநாள் நான் மிகவும் களைப்பாயிருப்பேன் என்றார்கள். ஆனால் நான் களைப்படையவில்லை. ஒருவேளை உடலிலிருந்து நான் விலகியிருக்கிற தன்மை யோகாவால் வந்திருக்கிறதா?

சத்குரு:

நீங்கள் இதை கவனித்தீர்களோ, இல்லையோ? பரிசோதிக்கிறீர்களோ, இல்லையோ? தொடர்ந்து உங்கள் பயிற்சிகளை செய்து வருவீர்களேயானால், உடல் சார்ந்த தன்மை குறைந்து கொண்டே வரும். முன்பிருந்ததைவிட உடல் மீதான சார்பு குறையும். இதுபோல ஓரிரு சம்பவங்களில் இதை நீங்கள் காண முடியும். ஆனால் தினமும் சரியான முறையில் பயிற்சிகளைச் செய்தால் உடல் மீதான சார்புத்தன்மை நிச்சயமாகக் குறையும். ஒருநாள் உங்கள் உடல் இங்கேயிருக்கும். ஆனால் உடலுடன் உங்களுக்கு எந்த அடையாளமும் இருக்காது.

உங்கள் சக்திநிலை முதிர்ச்சி அடைய அடைய உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் நடுவில், ஒரு நல்ல இடைவெளியை உருவாக்க முடியும். இந்த இடைவெளி தெளிவாயிருக்கிறபோது, உடல் சார்ந்து இல்லாதபோது நீங்கள் எதையுமே சார்ந்திருக்க மாட்டீர்கள்.

இத்தகைய அனுபவங்கள், சம்யமாவிலோ, ஏன் சூன்ய தியானத்திலோ சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் என்ன சிக்கல் என்றால் மறுபடியும் வாழ்க்கைக்குள் வருகிறபோது, இந்த உடலோடு அவர்கள் சிக்கிப்போய் விடுகிறார்கள். அது பரவாயில்லை. உங்கள் சக்திநிலை முதிர்ச்சி அடைய அடைய உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் நடுவில், ஒரு நல்ல இடைவெளியை உருவாக்க முடியும். இந்த இடைவெளி தெளிவாயிருக்கிறபோது, உடல் சார்ந்து இல்லாதபோது நீங்கள் எதையுமே சார்ந்திருக்க மாட்டீர்கள். உங்கள் சார்புத் தன்மையெல்லாம் அந்த ஒரு தொடர்பிலிருந்துதான் வருகிறது. ஒரு விநாடி வரும். அப்போது எல்லாவற்றையும் உதறி விட்டு, உடலையும் உதறிவிட்டு நீங்கள் நடக்கத் தயார் ஆவீர்கள். இப்படிப் போகிற நிலை வரும்.

வாழ்க்கையில் சில சம்பவங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். கட்டிடம் செங்கல் மீது செங்கல்லாகக் கட்டப்படுகிற போது அதில் ஏதும் பரபரப்பில்லை. ஆனால் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறபோது, ஆச்சரியமாக இருக்கும். எனவே நாடகத்தன்மை பொருந்திய சம்பவங்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது தேவையில்லை. உங்களை ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யும் நாடகங்களே போதும் (சிரிப்பு). நீங்கள் அதனால் உந்தப்பட்டு தொடர்ந்தாலே போதும். இல்லையென்றால் நாடகங்கள் தேவையில்லை. மிக மென்மையாக ஒரு மனிதரால் வளர முடியும். குறிப்பாக இந்த சமூகத்தில் சில நாடகங்கள் தேவை. இல்லையென்றால் உங்கள் பயிற்சிகளையே நிறுத்திவிடுவீர்கள் (சிரிப்பு). எனவே, எப்போதாவது நான் வந்து சில நாடங்கள் நடத்துவேன். மற்ற நேரங்களில் இயல்பாகச் செயல்படுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.