உள்ளடக்கம்

சத்குரு:

தற்போது வாழ்வின் போக்கில் மக்கள் காயம்பட்டுக் கிடக்கிறார்கள். அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும், ஒரு நாள் இறந்து போகவும் எவ்வளவு வலியையும் வேதனையையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? ஏனென்றால், இன்னமும் உயிர்த்தன்மையோடு எப்படி தொடர்பு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தியானநிலையில் இருந்தால் அந்த மனிதனுக்கு துன்பம் என்பதே இருக்காது. தியானநிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் போக்குகள் அவரைத் தொடாமல் அவரது வாழ்வில் அவர் விரும்பியதைச் செய்யலாம்.

தியானநிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் போக்குகள் அவரைத் தொடாமல் அவரது வாழ்வில் அவர் விரும்பியதைச் செய்யலாம்.

தியானம் என்றால் என்ன?

கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பலவிஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தை குவிக்க முடியும், ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன.

‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத் தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா?

இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாக சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். எனவே ‘மனம்' என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள்தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான்.

தியானம்- எப்படி செயல்படுகிறது?

தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களை தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல. எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல் தான். எந்தவிதமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பம், பெற்றோர், சென்று வந்த பள்ளி, செய்யும் வேலை என்பவற்றைப் பொறுத்தே உங்கள் மனம் இருக்கிறது. இது உங்கள் மனமல்ல. இது நீங்கள் சமூகச்சூழலின் மூலம் சேகரித்த ஒன்று. எனவே நீங்கள் மனமல்ல என்ற தெளிவான இடைவெளியைக் காண்கிறீர்கள்.

எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல, நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு.

வெளியிலிருந்து சேகரித்த உடல், மனம் இவற்றுக்கும் உங்களுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உணர்ந்து நீங்கள் தியானத்தன்மையில் இருந்தால், அவை இரண்டையும் எப்படி உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வீர்கள், அவ்வளவுதான். ஆனால் அதுவே நீங்களல்ல. உங்கள் அனுபவத்தில் இந்த இரண்டோடும் அடையாளம் கொள்ளாமல் இருந்தால், துன்பம் என்பதே இருக்காது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். ஒருவர் விருப்பத்தோடு இருந்தால் நிச்சயம் இது சாத்தியம். இந்த சூழ்நிலையை நமக்குள் எப்படி உருவாக்குவது என்பதற்கு ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது. எனவே இதை நாம் எல்லாவகையான மக்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். குற்றவாளிகள், கிராமமக்கள், படிக்காதவர்கள், மெத்தப் படித்தவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் என பலருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

வெளிச்சூழ்நிலை என்று வரும்போது நமது திறமை என்பது வித்தியாசப்படுகிறது. நான் செய்வதை நீங்கள் செய்ய முடியாது. நீங்கள் செய்வதை நான் செய்ய முடியாது. வெளிச்சூழல் திறன் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது. ஆனால் உள்நிலையைப் பொறுத்தவரை, எல்லோரும் ஒரேவிதமான திறனுடன் இருக்கிறோம். நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது.

தியானம் எனும் போது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதற்கான விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? யார் அதை வேண்டாமென சொல்லப் போகிறார்கள்? எல்லோருக்கும் அதுதான் தேவை. ஆனால் பலருக்கும் இதைப்பற்றி தெரியவில்லை என்பதுதான் விஷயம். எனவே நமது வேலை, தியானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான். இது ஏதோ மலைக் குகைகளுக்கு செல்வதைப் பற்றியல்ல; இமயமலைக்குச் சென்று அமர்வதைப் பற்றியல்ல; இது, துன்பங்களில் இருந்து முற்றிலுமாய் விடுபட்டு வாழக் கற்றுக் கொள்வது. நீங்கள் விரும்பும் விதமாக வாழ்வோடு விளையாட முடியும். ஆனால் வாழ்க்கை உங்கள் மீது ஒரு சிறு தழும்பைக் கூட ஏற்படுத்தாது.

தியானம் செய்வது எப்படி?

சத்குருவால் வழங்கப்பட்டுள்ள எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த ஒரு பயிற்சி ஈஷா கிரியா. குறிப்புகளுடன் இப்பயிற்சியை கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டும் இந்த வீடியோவை பார்த்து பலன்பெறுங்கள்!

ஈஷா கிரியா - பகுதி 1

ஈஷா கிரியா - பகுதி 2

தியானத்தின் பலன்கள் என்ன?

பொதுவாக ஒவ்வொரு மனிதரும் விரும்புவது ஆரோக்கியத்தையும் அமைதியையும் சந்தோஷத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ளமுடியும். தியானம் என்ற தன்மை நமக்குள் வந்துவிட்டால், அமைதியும் சந்தோஷமும் இயல்பானவை ஆகிவிடும்.

தியானம் என்பது செயல் அல்ல, அது ஒரு நிலை. வாழ்க்கையே தியானநிலையில் இருக்கவேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏதோ பத்து நிமிடங்களுக்கு கண்ணை மூடி அமர்வதைப் பற்றி நாம் பேசவில்லை. எதைச் செய்தாலும் தியான நிலையில் செய்வதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தன்மையையே நமது வாழ்வில் கொண்டுவர விரும்புகிறோம். அப்படி நடந்தால் ஆரோக்கியமாக இருப்பது, அமைதியாக இருப்பது, ஆனந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கும்.

தியானத்தின் தன்மை அப்படிப்பட்டது. ஒரு மனிதன் இப்படி இருந்தால் அவனது உடல், மன செயல்பாடுகள் ஒருமுகப்பட்டும் கூர்மையுடனும் இருக்கும். ஒரு மனிதர் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் போது மட்டுமே அவரது புத்திசாலித்தனம் சிறந்த முறையில் செயல்படும்.

பூஜை, வழிபாட்டிலிருந்து தியானம் எவ்வாறு வேறுபடுகிறது? சடங்குகள் செய்வதால் பலன் கிடைப்பதைப்போல், தியானம் செய்தால் விரும்பியவாறு நல்ல நிலையை அடைய முடியுமா?

meditation in tamil, தியானம், thiyanam

கேள்வியிலேயே ஒரு தூண்டில் உள்ளது. "நான் விரும்பும் நல்லவற்றை அடைய முடியுமா?" இது உங்களுக்கு இருக்கும் பிரச்சனை. நல்ல நிலை மட்டும் போதாது, அந்த நல்ல நிலை நீங்கள் விரும்பியவாறும் இருக்க வேண்டும். வாழ்க்கை நீங்கள் விரும்பியவாறு நடக்கவில்லை என்பதுதான் தற்போது உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒரே பிரச்சனை. அதே நேரத்தில் நீங்கள் கடவுளை நம்புவதாகவும் சொல்லிக் கொள்கிறீர்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றால், கடவுளின் விருப்பப்படியே உங்கள் வாழ்க்கை நடக்கிறது என்று அர்த்தம், இல்லையா? அப்போது, நீங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதில்லையே? உங்கள் நம்பிக்கை மேலோட்டமாக இருப்பதால் அது வேலை செய்வதில்லை.

நான் வழிபாடு செய்தால் மட்டும் போதாதா?

அச்சத்திலும் பேராசையிலுமே பெரும்பான்மையான நேரங்களில் உங்கள் வழிபாடு அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு பக்தியை எப்படி தெய்வீகத்துடன் தொடர்புப்படுத்துவது? படைப்புக்கும் இதுபோன்ற நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களிடம் இல்லாததை அடைவதற்காக, நீங்கள் தேடுவதையும் விரும்புவதையும் அடைவதற்காக, அவற்றைக் கடவுள் உங்களுக்குத் தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள். இல்லையா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் வாழ்க்கையை இலவசமாகப் பெற்றுவிடலாம் என்று நம்புகிறீர்கள். வாழ்க்கையை சுமாரான விலைக்கு பேரம் பேசி பெற்றுவிடலாம் என்று நம்புகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, பிரார்த்தனை வேலை செய்யவில்லை. அச்சத்தோடும் அமைதியற்ற மனதோடும் வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

வழிபாட்டுக்கும் தியானத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?

வழிபாட்டின்போது நீங்கள் மட்டுமே பேச முயற்சி செய்கிறீர்கள், கடவுளைப் பேசவிடுவதில்லை. உங்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்று அரை மணி நேரத்திற்கு அவரை ஒரு வார்த்தையும் பேச விடாதீர்கள். நீங்களே தொடர்ந்து பேசிக் கொண்டிருங்கள். அடுத்த முறை அவர் வீட்டுக் கதவைத் தட்டினால், அவர் வீட்டில் இருந்தாலும் இல்லை என்ற பதில் தானே கிடைக்கும்? நீங்கள் பத்து விஷயத்தைப் பேசும்போது, நண்பருக்கு ஒன்றையாவது பேச அனுமதித்தால் தானே அங்கே உறவு மலரும்? ஆனால் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நண்பர் உங்களுடன் இருக்க விரும்புவாரா?

அதுதான் உங்களுக்கும் கடவுளுக்குமிடையே நடந்திருக்கிறது. கடவுள் அங்கே முழுமையாக இருந்தாலும் உங்களுடன் இருக்கும்போது அவர் இல்லாதது போல் காணாமல் போய்விடுகிறார். நீங்களே எல்லாவற்றையும் பேசிவிடுவதால் அவர் உங்களைக் கண்டு பயப்படுகிறார்.

தியானம், நீங்கள் பேசுவதற்கான நேரம் அல்ல. நீங்கள் செய்யும் சப்தங்களை நிறுத்திவிட்டு இன்னொன்றுக்கு செவி மடுப்பதே தியானம். நாள் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கும் நீங்கள், ஒரு நாளின் சில மணி நேரமாவது கடவுளைப் பேச அனுமதியுங்கள். கடவுள் என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்போம்.

நான் தியானம் செய்யும்போது சில சமயம் என் கற்பனை சக்தியைப் பயன்படுத்துகிறேன். இது சரியா?

 

meditation in tamil, தியானம், thiyanam

சத்குரு:

வேண்டாம். தியானத்தின்போது கற்பனைகள் பயன்படுத்த வேண்டாம். கற்பனை என்பதே மனம் சார்ந்ததல்லவா?

கேள்வியாளர்: ஆனால் கற்பனையை பயன்படுத்தும் போது ஓரளவு சக்தி கிடைக்கிறது, அது என் தியானத்திற்கு உதவுகிறது.

வேண்டாம். தியானத்தின்போது கற்பனைகள் பயன்படுத்த வேண்டாம். கற்பனை என்பதே மனம் சார்ந்ததல்லவா?

சத்குரு:

எதை செய்வதற்கும் நமக்கு சக்தி தேவை. ஒரு எண்ணம் உருவாக்குவதற்குக் கூட நமக்கு சக்தி தேவைப்படுகிறது. சக்தி செலவிடாமல், மனத்தில் உந்து சக்தி உருவாக்கிக் கொள்ள முடியாது. எனவே உங்கள் கற்பனையைத் தூண்டிவிடவும் நீங்கள் சக்தி செலவிடுகிறீர்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சிவன் உங்களுடன் இருக்கிறார் என்று நம்பினால் உங்களுக்கு எக்காரியம் செய்யவும் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆனால் அந்த செயல் தானாக நடந்துவிடாது. இது நீங்கள் விரும்பும் முக்தியையும் வாங்கித் தராது.

தற்போது உங்களுடைய மூன்றாவது கண் திறக்கிறது என்று கற்பனை செய்து பார்த்தால், நிச்சயமாக ஒருவித சக்தி உண்டாவதைக் காணலாம். கற்பனை என்பது அந்த அளவிற்கு சக்தியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உண்மையில் நீங்கள் எதையும் பார்க்க முடியாது. நீங்கள் பார்ப்பது எல்லாம் மனம் உருவாக்கிய அந்தக் கற்பனையை மட்டுமே. கற்பனையில் கண்டால், அது உங்களுக்கு எவ்வளவு உயரியதாக இருப்பினும் அது உண்மை அல்லவே! ஆக, கற்பனை என்பது மனம் சார்ந்து இருப்பதால், மனத்தை தாண்டி நீங்கள் வேறு எதையும் பார்க்க முடியாது.

கற்பனை சக்தியை சில சமயங்களில் உங்களுக்கு உறுதுணையாக நீங்கள் பயன்படுத்த முடியும். ஒருவேளை நீங்கள் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். “சிவன் எப்போதுமே, ஒவ்வொரு கணமுமே என்னுடன் இருக்கிறார்.” இதனால் உங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். எந்த விஷயத்தையும் தைரியமாக, எவ்வித தயக்கமும் இன்றி நீங்கள் செய்யமுடியும். கவனிக்க, இதே விஷயத்தை எந்த அறிவுள்ள மனிதனும் நிச்சயம் செய்ய முடியும், ஆனால் அவர்களுக்கு பயமும் தயக்கமும் தடையாக இருக்கக் கூடும். ஒரு புதிய சூழ்நிலை வரும்போது, நாம் வெளிக் காட்டுவது பய அதிர்வலைகள் தானே தவிர்த்து, புத்திசாலித்தனம் அல்ல. சிவன் உங்களுடன் இருக்கிறார் என்று நம்பினால் உங்களுக்கு எக்காரியம் செய்யவும் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆனால் அந்த செயல் தானாக நடந்துவிடாது. இது நீங்கள் விரும்பும் முக்தியையும் வாங்கித் தராது. உங்களுக்கு நம்பிக்கை வரும். ஆறுதலாய் இருக்கும். இதனால் மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் சற்றே அதிகத் திறன் படைத்தவராய் இருக்கக்கூடும்.

மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் மக்களுக்கு கற்பனைசக்தி என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி. ஆனால் நீங்கள் முக்தி பெற விரும்பினால், இது உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படாது. முக்தியை வேண்டுவோர் கற்பனையில் சிக்கிக் கொண்டால், பின் முக்தி என்பதும் கற்பனையாகவே மாறிவிடும். அதனால் முக்தி என்பது உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் முதலில் உங்கள் கற்பனையிலிருந்து விடுபடுங்கள், அதைவிடப் பெரிய வலைப்பொறி உங்களுக்கு இருக்கமுடியாது. உங்களுடைய ஞாபகசக்தி கற்பனைசக்தி இரண்டும், இரு வலைப்பொறிகள். ஒரு கால் ஞாபக சக்தியிலும் இன்னொரு கால் கற்பனையிலும் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டால், தியானம் இயற்கையாகவே நிகழும்.

அதனால் மனதின் திறனான கற்பனையில் மூழ்கிவிடாதீர்கள். மனதின் எந்த ஒரு திறனைப் பயன்படுத்தினாலும் அதன் ஆழ்நிலையை உங்களால் அடையமுடியாது. மனதின் ஆழ்நிலையை அடைய எவ்வித கருவிகளும் கிடையாது. நீங்கள் மனதிற்கு வெளியே இருந்தால் மட்டும்தான் அதை உள்ளது உள்ளவாறு பார்க்க முடியும். நீங்களே அதனுள் சிக்கி இருந்தால், பிறகு உங்களை நீங்களே பகுத்தறிந்து பார்க்கமுடியாது. அடுத்தவரை நீங்கள் ஆராய முடியும், ஆனால் உங்களை நீங்களே ஆராயமுடியாது. அப்படியே முயற்சி செய்தாலும் ஏதேனும் ஒரு பகுதியை ஆராயலாம், ஆனால் உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியாது.

கற்பனையாக கடவுளைப்பற்றி நினைப்பது, கற்பனையாக பேயைப்பற்றி நினைப்பதை விட நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. பேயைப் பற்றி கற்பனை செய்தாலாவது, விரைவில் அதை விடுக்க விரும்புவீர்கள் (சிரிக்கிறார்). ஆனால் கடவுளைப் பற்றிய கற்பனையில் சிக்கினால், அதிலிருந்து வெளிவர விரும்பமாட்டீர்கள். அப்படித்தானே?

'பல பக்தர்கள் கற்பனையில் வாழ்ந்து உயர்ந்தும் இருக்கிறார்களே. அவர்களுக்கு அது வேலை செய்த போது, எனக்கு வேலை செய்யாதா?' கற்பனைசக்தியைப் பற்றிய தவறான புரிதல்கள் இருக்கக் காரணம் - சில பக்தர்களின் செயலை, ஏன், என்ன என்று புரிந்து கொள்ளாமல் அதை அப்படியே மக்கள் பின்பற்றுவதுதான். உலகத்தில் ஒரு சிலர் மட்டுமே ஆழ்ந்த பக்திமான்களாக இருக்க முடியும். மற்றவர்கள் வரையறைக்கு உட்பட்டு, தங்களைத் தானே பக்தர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள்.

பக்திக்கு உதாரணம் என்றால், பூசலார். அவர் ஒரு ஏழை. அவர் சிவபெருமானுக்கு பிரம்மாண்டமான கோவில் ஒன்றைக் கட்ட விரும்பினார். ஆனால் தேவையான செல்வம் இல்லாமற் போனதால், அவர் கட்ட விரும்பிய கோவிலை, ஒவ்வொரு கல்லாக, ஒவ்வொரு செங்கல்லாக தினந்தோறும் தன் மனதிலேயே கட்டத் துவங்கினார். அதற்கு பல ஆண்டுகள் பிடித்தன. உண்மையிலேயே கட்டுவதாக நினைத்து தன் மனதிற்குள்ளேயே அவர் மும்முரமாகக் கட்டினார். கட்டி முடித்தபிறகு அடுத்து வரும் ஒரு நாளில் திறப்பதற்குத் திட்டமிட்டிருந்தார். அந்த நாட்டு அரசனும் சிவபெருமானுக்கு ஒரு பெரிய கோவிலைக் கட்டினான். அதே நாளில் திறப்பதாகத் திட்டமிட்டிருந்தான். அரசனுக்கு அந்த கோவிலைக் கட்டிமுடிக்க 16 அல்லது 17 ஆண்டுகள் ஆயிற்று. அந்த குறிப்பிட்ட நாளில் திறப்பதற்கு ஆர்வமாக இருந்தான். அதற்கு முந்தைய நாள் இரவில் அந்த அரசன் ஒரு கனவு கண்டான். அவன் கனவில் சிவபெருமான் சொன்னார். “என்னை மன்னிக்க வேண்டும். நாளைய தினம் உன்னுடைய கோவிலுக்கு என்னால் வரமுடியாது, ஏனென்றால் அதே நாளில் பூசலாரின் கோவிலை நான் திறந்து வைக்கவேண்டும். அதற்கு நான் கட்டாயம் போகவேண்டும்” என்றார்.

அரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'நான் கட்டிய கோவிலைவிட சிறந்த கோவில் எங்கே இருக்கிறது? சிவபெருமான் வேறு ஒரு கோவிலுக்குப் போகவேண்டும் என்கிறாரே! உடனே பூசலாரைத் தேடுங்கள்' என்றான். பூசலாரைத் தேடிக் கண்டுபிடித்தனர். பூசலார் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதியில் ஒரு குடிசையில் இருந்தார். அவரைப் பார்த்து அரசன் கேட்டான். "உங்களுடைய கோவில் எங்கே இருக்கிறது?" பூசலார் சொன்னார், “என் கோவிலா? நான் என்னுடைய இதயத்தில் அல்லவா கோவிலைக் கட்டினேன். வேறு எங்கும் எந்தக் கோவிலையும் நான் கட்டவில்லையே. என்னிடம் அதற்கான செல்வமும் கிடையாதே.” என்றார். இருப்பினும் அரசன் சொன்னான், “இல்லை, நேற்று நான் ஒரு கனவு கண்டேன். அதில் சிவபெருமான் உங்களுடைய கோவிலுக்கு வர வேண்டியிருப்பதால் என்னுடைய கோவிலுக்கு வர இயலாது என்று சொன்னார்.”

இவர்தான் பக்தர். அவர் கற்பனையில் தான் கோவில் கட்டினார் என்றாலும், அவர் முற்றிலும் வேறொரு நிலையில் இருந்தார். அவருடைய விழிப்புணர்வு மிகவும் கூர்மையாக இருந்தது. அவர் நினைப்பதை உருவாக்கி விடும் படைப்பின் சக்தியாகவே அவர் மாறியிருந்தார். எது உண்மை எது உண்மையல்ல என்பதற்கான வேறுபாடு அவரிடம் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டது. இத்தகைய ஒரு மனிதர் சிவபெருமானை அழைத்தால், அவர் நிச்சயம் போவார். சிவபெருமான் உண்மையிலேயே ஒரு உருவமெடுத்து அவர் முன்பு நடந்து போவார். அந்த பக்தரின் விழிப்புணர்வு அடைந்திருந்த நிலையில், அவரே கடவுள் போல ஆனார். அவர் ஒரு உருவத்தின் மீது நம்பிக்கை வைத்தால், அவ்வுருவமே அவர் முன் நடந்து வரும். இது கற்பனை அல்ல. இது படைப்பு.

ராமகிருஷ்ணரின் வாழ்விலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் காளிக்கு உணவு ஊட்டுவதாக நினைத்தார். உண்மையிலேயே காளி உணவை உண்டார். ஆம், உண்மையில் அங்கு ராமகிருஷ்ணர் காளியை 'படைத்தார்'. அப்போது ராமகிருஷ்ணர் படைப்பின் மூலமாகவே ஆகியிருந்தார். அவர் இனியும் பக்தர் அல்ல, இருப்பினும் அவர் தன்னை ஒரு பக்தனாகவே நினைத்தார். அவ்வளவுதான். அவர் எல்லைகளை அழித்து விட்டார். இறைவனுடன் ஒன்றி விட்டார். இது ஒரு மாறுபட்ட நிலை. மற்ற பக்தர்களைப் பாருங்கள். இவரைப் போல ஆவதற்கு தங்கள் கற்பனையைப் பயன்படுத்துகிறார்கள். தர்க்க அடிப்படையில் இயங்கும் மனம் இருக்கும் வரையில் பக்தனாக முயற்சி செய்யாதீர்கள். அது நேரத்தை வீணாக்குவதாகும். தர்க்கம் என்பது செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போது, அது தொடர்ந்து பிரித்துக் கொண்டே இருக்கும். இணைவது என்பதற்கு இடமே இல்லை.

இசை மூலம் தியானம் சாத்தியமா?

பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம், தான் கடம் வாசிக்கும்போது, ஒருசில கணங்கள் தியானத்தை உணர்வதாக சத்குருவிடம் பகிர்ந்துகொள்கிறார். அப்படியானால், உண்மையில் இசையின் மூலம் தியான நிலையை அடைய முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ.

 

தியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும்?

யாருக்காவது நீங்கள் தியானம்-யோகாவை அறிமுகம் செய்ய நேர்ந்தால் இதை நீங்கள் கேட்க நேரிடலாம் “இதனால் எனக்கு என்ன பயன் கிடைக்கும்?”. தியானம் நமக்கு எதை வழங்கும் என்பதை சத்குரு இந்த வீடியோவில் எடுத்துரைப்பதோடு, உண்மையில் தியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.

 

உடலெங்கும் புன்னகை... தியானம்!

meditation in tamil, தியானம், thiyanam

தியானம் என்பது சீரியஸான ஒரு பிசினஸ். பல பேர் அதை சீரியஸாகக் கையாள்கின்றனர். நான் ஈஷா தியான அன்பர்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், உலகம் முழுக்க உள்ள தியானியர்கள் தியானத்தை மிக சீரியஸாகப் பார்க்கின்றனர் என்கிறேன். விழிப்புணர்வாய் இருக்க வேண்டும் என்னும் தங்களுடைய முயற்சியால் சிரிப்பதைக்கூட மறந்துவிட்டனர். அனைத்தையும் மறந்துவிட்டனர்.

தியானம் என்றால், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பல்லிளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் எலும்பிலிருந்து சிரித்திடுங்கள். உங்களது ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் சிரிக்கப் பழகுங்கள். உங்கள் பற்களைக் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் உதட்டைப் பயன்படுத்தாமல், புன்னகைக்கப் பழகுங்களேன். உண்மையாகவே சொல்கிறேன்.

பல்லைக் காட்டாமல் சிரியுங்கள். உங்களால் சிரிக்க முடியுமா எனப் பாருங்கள்; சிரியுங்கள். உங்கள் கைகளால் சிரிக்க இயலுமா எனப் பாருங்கள். உடலிலுள்ள எலும்பும் கூட சிரிக்கத் துவங்கினால், அது தியானம். உங்களுக்குள் விறைப்பாகாமல், உறைந்து போகாமல் இருப்பதே தியானம். இறுதியில், நீங்கள் நித்தியமாய் இளைப்பாற இது சிறந்த பயிற்சி. மயானத்திற்கு நல்ல ஆயத்தப் பயிற்சி இது.

அதனால், வெறும் பல்லை மட்டும் காட்டி, உதடுகளிலிருந்து சிரிக்காதீர்கள், எலும்புகளிலிருந்து சிரித்திடுங்கள். தியானம் என்பது ஒரு மலர் மலர்வதைப் போல! மலர், பகுதி பகுதியாக மலராது. அது மலரும்போது, முழுவதுமாக மலரும். நீங்களும் அதுபோல் இருக்க, அது கண்கள் மூடிய நிலையோ திறந்த நிலையோ, உங்கள் முகத்தில் ஒரு புன்னகை இருக்கட்டும். புன்னகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனைத்துமே அதன் முழுச் சிறப்புடன் இருக்கட்டும். இது மலர்தல். இது தியானம்.

உங்கள் கண்முழி மேல்நோக்கிச் சுழன்றபடி அமர்வது, உதட்டில் இருக்கும் சிரிப்பை உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றுவதற்காகத்தான். புன்னகையினை உட்கொள்ள பிரயத்தனப்படுகிறீர்கள். புன்னகை என்பது ஒரு வெளிப்பாடு அல்ல. மற்றவர்கள் அதனை வெளிப்பாடாகப் பார்ப்பார்கள், ஆனால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தளர்வு நிலையில் இருந்தால், சுகானுபவத்தில் இருந்தால், உங்களைச் சுற்றி யார் இல்லாமல் இருந்தாலும், உங்கள் முகத்தில் புன்னகை குடிகொண்டிருக்கும்.

தியானத்தில் நான் எந்த அளவு முன்னேற்றத்தை எட்டியிருக்கிறேன் என்பதை எப்படி அளவிடுவது?

meditation in tamil, தியானம், thiyanam

அளவுகோல்களைப் பயன்படுத்துவது எதற்காக? ஒப்பிடுவதற்காக. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பும்போதுதான் அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது. அளந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, உங்களிடம் தியான நிலை இல்லை என்று தான் அர்த்தம்.

தியானம் என்ற அம்சம் யாருடனும் போட்டியில் ஈடுபடுவதல்ல. முன்னே போகிறோமா, பின்னால் போகிறோமா என்பதைக் கூட கவனிக்க வேண்டியிருக்காத ஓர் இடத்தை அடைந்து விட்டால், அங்கே இருப்பதே போதுமானது.

தியானத்தின் போது ஏன் கண்களை மூட வேண்டும்?

தூங்குவதற்காக மட்டுமே நீங்கள் கண்களை மூடி பழக்கப்பட்டு விட்டீர்கள். தூக்கம் என்பது விழிப்புணர்வற்ற ஒரு நிலை. ஆனால் தியானம் என்பது உள்நோக்கிப் பார்ப்பது. அதற்கு விழிப்புணர்வு வேண்டும். உங்களுக்கு தியானமே தெரியவில்லை என்றாலும் தினம் பத்து நிமிடம் விழிப்புணர்வாக கொஞ்சம் கண்ணை மூடி உட்கார்ந்து பாருங்கள். உங்கள் உடல்நிலை, மனநிலையில் பெரிய மாற்றம் வரும். வித்தியாசம் நன்கு புரியும்.

காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் ஏன் புலித்தோல், மான்தோல் ஆகியவற்றை தியானம் செய்வதற்காக பயன்படுத்தினர்?

தியானம் செய்யும்போது சக்தி சிதறாமல் மேல்நோக்கி நகர அனுமதிக்க வேண்டும். ஆனால் குளிர்ந்த தரையில் உட்கார்வது எப்போதும் சக்தியை சிதறடிக்கும். முனிவர்கள் பொதுவாக காடுகளில் உள்ள குகைகள் மற்றும் குடிசைகளில்தான் வசித்து வந்தனர். எனவே குளிர்ந்த தரையை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. காடுகளில் வசித்தமையால் அவர்களுக்கு இறந்த விலங்குகளின் தோல் எளிதாக கிடைத்தது. எனவேதான் அவற்றை பயன்படுத்தினர். ஆனால் அப்போதும் கூட புல்லை கட்டுகளாகக் கட்டி அதன்மீது உட்கார்ந்து தியானம் செய்வதுதான் பொதுவாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது. புல்லும் நல்ல வெதுவெதுப்பைத் தரும். நீங்கள் இப்போது தியானம் செய்வதற்கு கம்பளியை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அதுவும் உங்கள் சக்தி சிதறுவதைத் தடுக்கும்.

இந்தப் பிறவியில் நான் முக்தி பெறவில்லை எனில், நான் இன்று செய்துவரும் பயிற்சிகள், அடுத்த பிறவியில் எனக்கு பயன்படுமா?

meditation in tamil, தியானம், thiyanam

 

‘சேசின கர்மமு, சேதனி பதார்த்தமு’ என்று சொல்வார்கள். அதாவது, 'கர்மா என்பது அழிந்து போகக் கூடியதல்ல'. அதற்காக, "தியானத்தை இங்கு விட்டேன். அடுத்தமுறை அங்கேயே தொடங்கிடுவேனா?". இது அதுபோல் அல்ல. 'கர்மா' என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். செய்யும் செயல் எல்லாம் கர்மா ஆகிவிடாது. ஒரு செயலை செய்யத் தூண்டும் நோக்கம் தான் கர்மாவாக உருவெடுக்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கசாப்புக் கடைக்காரர் என்று வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உணவு படைக்க நீங்கள் தினமும் விலங்குகளைக் கொல்கிறீர்கள். அவற்றை கொல்ல வேண்டும் என்ற ஆசையால் இல்லாமல், அதை ஒரு தொழிலாக மட்டுமே செய்கிறீர்கள். எனவே கொலை செய்கிற கர்மா உங்களைச் சேர்வதில்லை. உங்களுக்கு அறியாமையின் கர்மா மட்டும்தான். ஆனால் இதுவே, அந்த விலங்கை கோபத்துடனோ, பழி வாங்கும் உணர்வுடனோ அல்லது அது துடிப்பதைப் பார்ப்பதற்கோ கொன்றால், அது வேறுவிதமான கர்மாவாக உங்களை வந்தடைகிறது.

துரதிர்ஷ்டவசமாக சிலரின் வலி, சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. விலங்குகளை வேட்டையாடுவதை ஒரு பொழுதுபோக்காக செய்கிறார்கள். கொன்ற விலங்கினை, உண்பதற்காகக் கொன்றிருந்தால் கூட பரவாயில்லை. எல்லோருக்கும் உணவு வேண்டும். நீங்கள் உங்கள் உணவை (விலங்கை) தேர்ந்தெடுத்தீர்கள் என்று கொள்ளலாம். ஆனால், கொலை செய்வதில் இருக்கிற மகிழ்ச்சிக்காகவே கொல்வது, வேறு விதமான கர்மாவை ஏற்படுத்துகிறது. நாம் வாழவேண்டுமெனில், சுயமாய் உணவு தயாரிக்க முடியாது என்பதால், நம் உணவிற்காக வேறொன்றை கொல்ல வேண்டும் தான். சிலர் 'கேரட்'டைக் கொல்கிறார்கள். சிலர் கோழிகளைக் கொல்கிறார்கள். சிலர் மான்களைக் கொல்கிறார்கள். ஏதோ ஒன்று கொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு, தினமும் வேர்க்கடலைகளை வாயில் போட்டு மெல்கிறபோது, கண்களை மூடி முழுமையாய் அதை உணருங்கள். வேர்க்கடலையில் உயிர்த்தன்மை நிறைந்திருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொரு முறை வேர்க்கடலையை மெல்லும்போது, அதில் உயிர்த்தன்மை நிரம்பியிருப்பதையும், அவை வாழத் தவிப்பதையும், நீங்கள் அவற்றைக் கொல்வதையும் உணர்ந்தால், உங்களால் அவற்றைச் சாப்பிட முடியாது. ஆனால், உங்களுக்குப் போதிய மனமுதிர்ச்சி இருந்தால், நன்றி உணர்வோடு அவற்றைச் சாப்பிடுவீர்கள். இந்த வேர்க்கடலைகள் உங்களுக்காக தம் உயிரையே தருவதை நன்றிப்பெருக்கோடு நினைப்பீர்கள். பொதுவாக வாழ்வின் சில கணங்களிலாவது உங்கள் தாய்மீது அதீத நன்றியுணர்வோடு இருந்திருப்பீர்கள். அதே உணர்வை இந்த வேர்க்கடலையின் மீதும் நீங்கள் செலுத்த வேண்டும். அத்தகைய மனநிலையில் நீங்கள் இருந்தால் நெகிழ்ந்து விடுவீர்கள். எனவே, கர்மா என்பது செயலல்ல. நோக்கம்தான்.

இப்போது ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். அடுத்த பிறவியில் தாயின் கருவிலிருந்து வெளிப்பட்டவுடனேயே, நீங்கள் எழுந்து, அமர்ந்து தியானம் செய்யப் போவதில்லை. மற்றவர்கள் போலவே முட்டாள்தனமாகத்தான் வாழ்வீர்கள். ஆனால் மெல்ல மெல்ல ஒரு சூழ்நிலை உருவாகும். அதற்கான வாய்ப்புகளை வாழ்க்கை உங்களுக்கு வழங்கத் துவங்கும். உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக் கவலைப்படும் நிலை, பொதுவாக ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு இருக்காது. அதைவிட உயர்ந்த ஒன்றை நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், வசதிகள், பதவிகள், போன்றவற்றில் சிக்குண்டு அவற்றிலேயே அமிழ்ந்து விடுவீர்கள். எனவே உங்கள் போராட்டம் மறுபடியும் வேறொரு நிலையில் தொடங்குகிறது. மற்றபடி, வாழ்வின் வாய்ப்புகளை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் விட்ட இடத்திலிருந்தே துவங்கலாம்.