சத்குரு:

மேலைநாடுகளில் பலரும் புத்த மதம் திபெத்தில் உருவானதென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கௌதம புத்தர் அதிகம் உலவிய பகுதிகள் இந்தியாவிலுள்ள உத்திரப் பிரதேசம், பீகார் ஆகியவைதான்.

sg-at-dhamek-stupa-sarnath-up

 

புத்தரின் காலத்துக்குப் பிறகுதான் பௌத்தம் தனி மதமாக அறியப்பட்டது. அதுவரை இந்தியாவிலுள்ள எத்தனையோ ஆன்மீக இயக்கங்களில் ஒன்றாகவே அது இருந்தது. இந்த தேசத்தில் ஆன்மீகத் தேடலை மீண்டும் தீவிரப்படுத்த அவர் முனைந்தார். ஏனெனில், ஒரு காலத்தில் ஆன்மீகத் தேடல் மிகுதியாக காணப்பட்ட இந்த நாடு அவர் தோன்றிய காலங்களில் சடங்குகளின் பிடியில் ஆட்பட்டிருந்தது.

இந்தச் சூழலை அவர் மாற்ற முற்பட்டார். பின்னர் அவருடைய சீடர்கள், புத்தமதம் எனும் கட்டமைப்பை உருவாக்கினர். ஆனால், கௌதம புத்தர் மதமாக மாற்றக்கூடிய எந்த அம்சம் குறித்தும் பேசவேயில்லை.

புத்தருடைய வழிகளும் யோகப் பாரம்பரியத்தின் வழிகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல. சொல்லப்போனால் கௌதம புத்தர் தன் தேடலின் எட்டாண்டுகளும் தொடர்ந்து பல யோகிகளிடம் சென்றுகொண்டே இருந்தார். எனவே இந்தியர்கள் அவரை மற்றுமொரு யோகியாகவே பார்த்தனர். அதனால்தான் மற்ற நாடுகளில் வளர்ந்த அளவுக்கு இந்தியாவில் பௌத்தம் வளரவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தக் கலாச்சாரத்திற்கு வெளியே, இத்தகைய ஞானம் குறித்து யாரும் கேள்விப்பட்டதே இல்லை. அவர்களுக்கு அது மிகவும் புதிதாக இருந்தது. எனவே பல தேசங்கள் முழுமையாக அவருடைய வழிக்குத் திரும்பின. இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருக்கும் எத்தனையோ வழிமுறைகளில் பௌத்தமும் ஒன்று, அவ்வளவுதான்.

 

ஒரு கலாச்சார அலை

guru-rimpoche-at-samdruptse

 

திபெத்திய பௌத்தத்தின் அடிப்படை நெறிகளும், பத்ம ஷாம்பவர் போன்ற பௌத்த ஆச்சாரியர்களும், யோக மரபையும் தாந்திரீக மரபையும் அடிப்படையாகக் கொண்டவர்கள்தான். பத்ம ஷாம்பவர் திபெத்துக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தார். அவர் பான் மதத்தை அடிப்படையாகக் கொண்டு, பௌத்த தாந்திரீக மரபை அதில் பொதித்து நன்கு கட்டமைக்கப்பட்ட முறை ஒன்றினை உருவாக்கினார்.

இன்று திபெத்திய பௌத்த முறையைப் பார்த்தால் அதில் இருக்கும் தாந்திரீக முறை உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால், அவர்களின் ஓவியங்கள், மண்டலங்கள், மந்திரங்கள் ஆகியவற்றைப் பார்த்தால், அதில், யோக மார்க்கத்தில் இருந்தும், தாந்திரீக மார்க்கத்தில் இருந்தும் சில அம்சங்கள், குறிப்பாக காஷ்மீர சைவத்தின் அம்சங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

அதன் பின்னர் பௌத்த மதம், யோக மரபின் அம்சங்களையும் தாந்திரீக மரபின் அம்சங்களையும் நன்றாக உள்வாங்கி, அவற்றின் கலவையாய் மலர்ந்தது. அதன் தொடக்க காலத்தில் அது மிகவும் இறுக்கமானதாக இருந்தது. ஏனெனில், ஆதிகால பௌத்தம் சந்நியாசிகளுக்கானதே தவிர பொது மக்களுக்கானதல்ல. காலப்போக்கில் ஞானோதயம் பெற்ற பலர் அவற்றில் இந்தக் கலாச்சாரங்களை எல்லாம் கலந்து பௌத்தத்தை ஒரு வாழ்க்கை முறையாக வடிவமைத்தனர்.

பத்ம ஷாம்பவர் திபெத்துக்கு வந்து, பான் மதத்தில் இவற்றைக் கலந்தார். அதுவரை பான் மதம் என்பது பெருமளவில் மாந்திரீகத்தை சார்ந்ததாகவே இருந்தது. புதிதாக ஒன்றை உருவாக்குவதற்கு பதில் பான் மதத்தை அடிப்படையாகக் கொண்டு யோகம் தாந்திரீகம் பௌத்தம் ஆகியவற்றை அவர் கலந்த விதம், மிகவும் துல்லியமாக அமைந்ததால், இன்று பௌத்தம் பன்முகத் தன்மைகள் கொண்டதாகத் திகழ்கிறது.

கதம்பம்போல கோர்க்கப்பட்ட புத்தமதம்

பின்னர் பல ஆச்சாரியர்கள் திபெத்துக்கு சென்றார்கள். திபெத்தை அவர்கள் தேர்ந்தெடுத்து செல்லவில்லை. மாறாக வட இந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்பு நேர்ந்தபோது, ஆன்மீகத் தலங்களே முதலில் தாக்கப்பட்டன. எனவே அவர்கள் இமயப் பகுதிகளில் நுழைந்து அங்கிருந்து திபெத்திய பகுதிகளுக்கு சென்றனர். இன்று திபெத்திய பௌத்த முறையைப் பார்த்தால் அதில் இருக்கும் தாந்திரீக முறை உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால், அவர்களின் ஓவியங்கள், மண்டலங்கள், மந்திரங்கள் ஆகியவற்றைப் பார்த்தால், அதில், யோக மார்க்கத்தில் இருந்தும், தாந்திரீக மார்க்கத்தில் இருந்தும் சில அம்சங்கள், குறிப்பாக காஷ்மீர சைவத்தின் அம்சங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

tibetan-thangka-of-white-tara

 

அவர்கள் சின்னச் சின்னத் துணுக்குகளைக் கொண்டு ஒரு பொம்மையைச் செய்யத்தான் முற்பட்டார்கள். ஆனால், அது ஒரு விண்வெளிக் கலனாக உருவாகிவிட்டது. இது திபெத்திய பௌத்தத்தின் அழகையும் எளிமையையும் மட்டுமின்றி, அதன் மென்மையையும் காட்டுகிறது. எனவே பற்பல வகைகளில் திபெத்திய பௌத்தம் தனித்தன்மை கொண்டது.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

sg-tamil-app-banner