சமீபகாலமாக நம் நாட்டில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்கள், அவற்றை ஒடுக்குவது எப்படி என்பவைப் பற்றி சத்குருவின் பார்வை...

சத்குரு:

சமீப காலமாக, வன்முறை, தீவிரவாதச் செயல்கள், குண்டுவெடிப்பு, அப்பாவி மக்களை அங்கவீனப்படுத்துதல் போன்ற விஷயங்கள் யாவும் இன்று நம் தேசத்தில் வழக்கமாகிப்போனது வருத்தமளிக்கும் ஒரு செய்தி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகளைச் சுட்டுப் பொசுக்கும், குண்டெறியும் நோக்குடன் உள்ளவர்களைக் கறாராகக் கையாள்வது மிக மிக அவசியம்.

தீவிரவாதத்தின் நோக்கம் போரல்ல, மக்களை பயத்தினால் முடக்குவதுதான். மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி, சமூகத்தைப் பிரித்து, தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தை தடம்புரட்டிப் போட்டு, சச்சரவுகளை உருவாக்கி, வன்முறையை ஏற்படுத்தி, சட்டம் செயலிழக்கும் சூழ்நிலையை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்தி, தேசத்தை செயல்படவிடாமல், செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கம்.

எல்லாவித தீவிரவாதத்திலும், மதம் சார்ந்த தீவிரவாதம் மிக மிக ஆபத்தானது. வேறெதற்காக மனிதன் சண்டையிட்டாலும், அவனிடம் நாம் காரண காரியங்களைப் பற்றிப் பேச முடியும். ஆனால், ஒரு மனிதன் ஏதோ ஒன்றன் மீது தீவிர நம்பிக்கை வைத்து, அதற்காகச் சண்டையிடும்போது, தன் கடவுளுக்காகப் போரிடும்போது, அவனிடம் காரண அறிவு இருக்காது. பணம், சொத்து போன்ற ஏதோ ஒன்றிற்காக மக்கள் போராடும்போது, அவர்களிடம் நாம் பேரம் பேச முடியும். ஏனெனில், அவர்கள் உயிர் சார்ந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், கடவுளுக்காகப் போராடுகிறேன் என நினைப்பவர்களோ, கடவுளுக்காக வேலை செய்து, கடவுளுடைய வேலையைச் செய்பவர்களாகத் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் சாவதற்குத் துடிக்கும் அதேசமயம், நம்மையும் தன்னுடன் கூட்டிச் செல்ல விரும்புகிறார்கள்.

ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட அன்னியப் படையெடுப்புகள், அன்னிய ஆக்கிரமிப்புகள், கொடுமையான வறுமை, இவற்றையெல்லாம் கடந்து தற்சமயம் இந்த தேசம் பெரும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாயிற்படியில் நிற்கிறது. இந்த வாய்ப்பு இலவசமாய் வந்துவிடவில்லை. கடுமையான வலி, வேதனை, பல தலைமுறை மக்களின் தியாகம் இவை யாவும் நம் முன் நிற்கின்றன. அதனால், அத்தனை பேருடைய முயற்சிகளுக்கும் பலனளிக்கும் விதமாக, அவர்தம் கனவுகள் நினைவுபெறும் விதமாகச் செயல்படுவது நம் கடமை. இந்தத் தேசம் வல்லமை பெறாமல் இருக்க, சில சக்திகள் மிகுந்த விருப்பத்துடன் இருப்பது தெளிவாய்த் தெரிகிறது. இந்தக் கொடிய சக்திகளின் சதித் திட்டங்கள் வீழ்த்தப்பட்டு, இந்த தேசத்தை தேசவிரோத சக்திகளிடமிருந்து இனியும் தாமதிக்காமல் காப்பாற்ற வேண்டியது அவசியம்.

இரும்புக் கரத்துடன் திடமான உறுதிப்பாடு!

தேசம் எனும் அமைப்பின் மீது நம்பிக்கை அற்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை நாம் மென்மையாகக் கையாள இயலாது. இந்த தேசத்தின் இறையாண்மையைக் காத்து, பேணி வளர்க்க நாம் விரும்பினால், இந்த தேசத்தின் அடிப்படையுடன் ஒத்துப் போகாதவர்களை, திடமான உறுதிப்பாட்டுடன் இரும்புக்கரம் கொண்டு நாம் கையாள வேண்டும். வீதியில் நடந்து செல்லும் அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகளைச் சுட்டுப் பொசுக்கும், குண்டெறியும் நோக்குடன் உள்ளவர்களைக் கறாராகக் கையாள்வது மிக மிக அவசியம்.

நாம் இங்கு ஒரு தேசமாய் நிலைத்திருக்க வேண்டுமென்றால், இந்த தேசத்தின் இறையாண்மையைக் காப்பது எப்படி என்பதன் அடிப்படையை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்தச் சமூகத்தின் இயல்பு வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிப்பவர்களை ஒடுக்குவது மிக மிக அவசியம். நீண்ட காலத் தீர்வுகள் பற்றி ஒரு பக்கம் சிந்திக்க வேண்டி இருந்தாலும், இப்படி ‘கடவுளுக்காக சண்டை போடுகிறேன்’ என்று கொதிப்பவர்களை நாம் ஒடுக்கத்தான் வேண்டும். சமுதாயத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் செய்தாலும், இது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

இந்த தீவிரவாதிகள், அரசியல் பகடைக் காய்களாகவோ, மாற்றார் கையில் சிக்கி அவர்களுக்குக் கருவியாகவோ செயல்படுகிறார்கள். இதுபோன்ற சக்திகளுக்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், “நாம் போரிடச் செல்வோம், கடவுளுக்காக மக்களைக் கொல்வோம்” என ஒருவர் கிளம்புகையில், அதில் நீங்கள் நேரடியாக ஈடுபடுகிறீர்களோ இல்லையோ, உங்கள் வழியே சரியானது என்று நீங்கள் நம்பும்வரை, இதுபோன்ற செயல்களுக்கு நீங்களும் உடந்தைதான். நம்முள் இதுபோன்ற நம்பிக்கைகள், நோக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது நாம் பார்க்க மறுக்கும் உண்மை. மனதின் எங்கோ ஒரு மூளையில், எல்லைக்கு வெளியே இருந்து யாரோ சிலர் இவற்றை நடத்துவதாக நாம் நினைக்கிறோம். வெளியே இருந்து உதவிகள் வரக் காரணம், இங்குள்ள மக்கள் இந்த நோக்கத்துடன் இருப்பதால்தான்.

விரிவான கண்ணோட்டம்

வேகமாய் வளர்ந்து வரும் இந்தச் சூழ்நிலைக்குப் பிரம்மாண்டமான, நீண்ட நாள் தீர்வுகள் உள்ளன. தேசத்தின் நேர்மையை வளர்த்து, வெவ்வேறு சமுதாய, இன, மத வேறுபாடுகளைக் களைந்து மக்களுக்குள் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்துவது அவசியம். எல்லா நிலைகளிலும் சமமான கல்விப் பகிர்மானம், பொருளாதார வாய்ப்புகள், வளம், நலம் ஆகியவற்றை நாம் வழங்க வேண்டும். சமூகப் பொருளாதார முன்னேற்றம் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதனால் இளைஞர்கள் தீவிரவாதத்தின்பால் ஈர்க்கப்படாமல் இருப்பார்கள். இவை யாவும், காலப்போக்கில் நாம் கையாள வேண்டிய விஷயங்கள். ஆனால், உடனடி நடவடிக்கையாக, தீவிரவாதம் வலுக்கட்டாயமாய் நீக்கப்பட வேண்டும். சட்டமீறல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

விரிவான கண்ணோட்டத்தில் பார்த்தால், தேசத்திற்கும் உலகிற்கும் பிறரை தனக்குள் இணைத்துக் கொள்ளும் தனிமனிதர்களும் சமூக அமைப்பும் தேவை. இணைத்துக் கொள்ளுதல் என்பது ஆன்மிகத்தின் அடிப்படை இயல்பு மட்டுமல்ல, வாழ்வின் அடிப்படை இலட்சியமும் அதுதான்.

இந்நேரத்தில், மதம், ஜாதி, இனம், அரசியல் சார்ந்த அடையாளம் போன்ற பாகுபாடுகளைக் கடந்து ஒரு தேசமாய் நாம் ஒன்றி நின்று, நம் பாதுகாப்பு படைகள் தங்கள் கடமைகளை, எல்லா நிலைகளிலும் சரியாய் செய்ய அனுமதிப்பது மிக மிக அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் நாம் நமது ஆன்மிக பலம், சமநிலை போன்றவற்றை வெளிக்காட்டி, நிலையான தீர்வினை நோக்கி உறுதியான நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.