ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற தரிசன நேரத்தில் தன் குழந்தையை இழந்த ஒரு தாய் தன் பிரிவு தாங்காமல் சத்குருவிடம் அது பற்றி கேள்வி கேட்க, சத்குரு அளித்த விளக்கத்தில், இப்படியும் ஒரு பரிமாணம் உள்ளதா என அர்த்தம் புரிந்தது...

Question: சத்குரு கடந்த வாரம் நான் என் மகளை இழந்துவிட்டேன். அவளுக்கு காலபைரவ கர்மா செய்வதற்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளேன். அவளுக்கு என்னால் வேறெதாவது செய்ய இயலுமா?

சத்குரு:

இவ்விஷயம் உங்களை உணர்வளவில் அதிகமாக பாதிக்கும் என்றாலும், இதை சற்றே விஞ்ஞானப்பூர்வமாக அணுகுவது நல்லது. ஆறுதலுக்காக சொல்லும் வார்த்தைகள் தற்காலிக ஆறுதல் தரலாம், ஆனால் நாளையே நீங்கள் மீண்டும் துயரத்தில் மூழ்கிப் போவீர்கள். இதில் இருந்து மீள, இதை சிறிதேனும் புரிந்துகொள்வது நல்லது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நம் குழந்தைகளுக்கு முன் நாம் இறந்துவிடுவதே சிறந்தது. இதுவே இயற்கை அமைத்திருக்கும் வரிசையும்கூட.

ஒரு குழந்தை நான்கு வயதிற்குள் இறந்துபோனால், நம்மை பிழிந்தெடுக்கும் வலி அங்கு இருக்காது. இது அக்குழந்தையோடு உங்களுக்கு பிணைப்பு இல்லை என்பதால் அல்ல. ஒரே ஒரு நாள் போதும் நாம் ஒருவருடன் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ள. நான் சொல்வது அதில்லை.

நான்கு வயதிற்கு முன் அந்த உயிர், அந்த உடலில் தன்னை நிலைநிறுத்தி இருக்காது. அது முழு வீச்சில் தன்னுள் செயல்படத் துவங்கி இருக்காது. நான்கு வயது வரை ஒரு குழந்தையை நீங்கள் எவ்வளவு தூக்கி சுமந்தாலும், உங்களுக்கும் அவர்களுக்கும் வலிமையான தொடர்பு இருக்காது. ஆனால், குழந்தை பிறந்து நாற்பதிலிருந்து நாற்பதெட்டு மாதங்கள் ஆகும்போது, உங்களுக்கும் குழந்தைக்குமான உடல்ரீதியான தொடர்பு பன்மடங்கு பெருகிடும். இந்நேரத்தில் அந்தக் குழந்தை உங்களில் ஒரு பாகமாக மாறுவதையும், அப்போது உங்களுக்குள் சுகமான ஒரு உணர்வு ஏற்படுவதையும் நீங்கள் கவனிக்க முடியும்.

அந்த உயிர், நீங்கள் வழங்கிய உடலுக்குள் தன்னை முழுமையாய் பொருத்திக் கொள்ளும் போது, உங்கள் உடலமைப்பிற்குள் ஓர் இடத்தையும் அந்த உயிர் நிரப்பிவிடும். இதனால், 21 வயது ஆகும் வரை அந்தக் குழந்தையுடனான பிணைப்பு தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு 21 வயதாகும்போது, இருவருக்கும் இடையிலான பிணைப்பு பலவீனமாகி கலையத் துவங்கும். சந்ததியை காத்து, வளர்த்து, தேவைப்படும் போது அதனிடமிருந்து விடுபடுவதற்காக இயற்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அற்புத அமைப்பு இது. இதனால்தான் ஒரு குழந்தை 21 வயதை நெருங்கும்போது அவன் உங்களுக்கு புதிய மனிதனாய், அந்நியனாய் தெரிவான். அவன் உங்கள் பிள்ளை தானா என்கிற சந்தேகமே எழுந்துவிடும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

நம் குழந்தைகளுக்கு முன் நாம் இறந்துவிடுவதே சிறந்தது. இதுவே இயற்கை அமைத்திருக்கும் வரிசையும்கூட. துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில், சிலருக்கு இந்த வரிசையில் மரணம் சம்பவிக்காமல் போய்விடுகிறது. இந்நிலையில், உங்களுக்குள் ஆழமாகப் பார்த்து, பிறப்பு, இறப்பு, பிணைப்பு எனும் இந்த செயல்முறைகளை புரிந்து கொள்ள முயலுங்கள்.

குழந்தைகள் நம் மூலமாக உலகிற்கு வருகிறார்கள், ஆனால் அவர்கள் நம்மிலிருந்து வருவதில்லை.

உங்களுக்குள் உங்கள் குழந்தை நிரப்பியிருக்கும் அவ்விடத்தைத்தான் நீங்கள் குழந்தை என்று நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் குழந்தைக்குள்ளோ நீங்கள் நிரப்பும்படியான வெற்றிடம் ஏதும் இல்லை. அதனால் உங்கள் குழந்தை மேல் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் எதை எதையோ செய்ய வேண்டியதில்லை. உங்களுக்குள் உள்ள அந்த சிறிய இடத்தை அறிந்து கொண்டு, அதனை நீங்கள் குறிப்பிட்ட விதத்தில் வைத்துக் கொண்டால், எல்லாம் சிறப்பாகவே நிகழும். இதுவே ஒரு குழந்தை மீது பெற்றோர் வைத்திருக்கும் ரிமோட் கன்ட்ரோல்.

இறந்த உங்கள் குழந்தையை உங்கள் எண்ணத்தால், உணர்வால், செய்கையால் தொட முயற்சித்தால், அதற்கு சாத்தியமில்லை. மாறாக நீங்கள் உள்முகமாக திரும்பி, உங்களுக்குள் ஒரு இனிமையான சூழ்நிலையை உருவாக்கினால் அந்த உயிர் தனக்குள்ளும் ஓர் இனிமையை உணரும். அந்த உயிர் மற்றொரு உடலை அடையும்முன் உங்களால் அதன்மீது தாக்கம் ஏற்படுத்த முடியும். மற்றொரு உடலுக்குள் தஞ்சம் புகுந்தவுடன் அந்த உயிருக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.

தன் பிள்ளையை இழந்தவர்களில் ஒரு சிலர் படும் பாட்டை பார்த்துவிட்டு இவர்கள் இதிலிருந்து தேருவார்களா எனும் எண்ணம் நமக்குள் எழலாம். ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் அவர்கள் அதிலிருந்து மீண்டெழுந்து, இயல்பாய், சுமூகமாய் வாழ்வார்கள். இது நிகழும் போது, அந்த உயிர் வேறொரு உடலில் சேர்ந்திருக்கும். அப்போது, அந்தக் குழந்தையின் பெற்றோர், தம் நகம், முடி, தோலின் தன்மை, உடல் செயல்படும் முறை, சுவாசம் என அனைத்திலும் ஒருவிதமான மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.

குழந்தைகள் நம் மூலமாக உலகிற்கு வருகிறார்கள், ஆனால் அவர்கள் நம்மிலிருந்து வருவதில்லை. யாரோ ஒருவர் உங்கள் மூலமாக இவ்வுலகிற்குள் அடியெடுத்து வைப்பது நீங்கள் செய்த பாக்கியம். நாம் அவர்களை சொந்தம் கொண்டாட முடியாது, அவர்கள் மீது உரிமை கொள்ள இயலாது. உங்களுக்கு கிடைத்த அந்த பாக்கியத்தை நெஞ்சார சீராட்டுங்கள். அவள் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிய நினைவுகளை ஆனந்தமாய் நினைவுகூறுங்கள். அந்த உயிர் மற்றொரு உடலைத் தேர்ந்தெடுக்கும் வரை, நீங்கள் உங்களை இனிமையாய் வைத்துக் கொள்வது தான், அவளுக்கு நீங்கள் செய்யக்கூடிய நல்லது.

குறிப்பு: இறந்தவர்களுக்காக லிங்கபைரவியில் செய்யப்படும் காலபைரவ கர்மா மற்றும் காலபைரவ சாந்தி சடங்குகள் பற்றி மேலும் விவரங்கள் அறிய, 94433 65631 அல்லது 94864 94865 என்ற எண்களை அழையுங்கள்.

இணைய முகவரி: www.lingabhairavi.org
மின்னஞ்சல்: kbprocess@lingabhairavi.org