Question: போலி சாமியார்கள் அதிகம் ஆகிவிட்டதால் உங்களைப் போன்ற உயர்ந்தவர்களையும் நம்ப மறுப்பவர்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

சத்குரு:

உங்கள் வீட்டில் 4 பேர் இருந்தாலும் அங்கேயே சின்ன சின்ன ஏமாற்று வேலை நடக்கிறதா, இல்லையா? வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகூட ஏமாற்றிவிடும். அவ்வப்போது அதை சரிசெய்து கொண்டே போகவேண்டும். சமூகத்தில் மற்றும் தொழில்களில், ஊழல்களும், ஏமாற்றுக்களும் இருக்கிறது. ஆனால் அவ்வப்போது அவற்றை களையெடுத்துவிட்டால், ஓரளவிற்கு அது குறைந்துவிடும். நாம் அதற்கெதிரான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஊழல் அதிகரித்து விடுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
தொழிலில் பிரச்சினை என்றால், மேலும் அதை புரிந்து கொண்டு ஆழமாகக் கால் பதிக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, ஹோமம் போன்ற செயல்களைச் செய்வது பைத்தியக்காரத்தனமானது.

அதேபோல்தான் ஆன்மீகத்தின் பாதையில் நடக்க வேண்டும் என்று இருந்தவர்கள் சிலருக்கு சிறிது ஆசை வந்துவிட்டது. நாம் அவ்வப்போது அவர்களை அடக்க வேண்டும்.

இல்லையென்றால் அப்படியே வளர்ந்து விடுவார்கள். எதிலேயும் தூய்மை இல்லாமல் செய்துவிடுவார்கள். இப்போது அரசியல்வாதி என்றால் ஓ! அப்படித்தான் என்று முடிவெடுத்து விட்டீர்கள். இது மிகவும் தப்பான முடிவு. இவற்றை சரி செய்வது நம்முடைய பொறுப்புதான்.

சாமியார் என்றால் ‘சாமி’ என்றால் யார்? என்ற தேடுதலையுடையவர்கள். மாறாக, அனைத்தும் புரிந்தாற்போல நாடகமாடினால், நீங்கள் தான் கேட்க வேண்டும். எங்கும் ஏமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. எந்தத் தொழில் மிகவும் லாபகரமானது என்று தேர்ந்தெடுத்து அப்படிப் போகிறார்கள். விவேகானந்தர் போல முதலில் உடை உடுத்தினார்கள். அப்புறம் இராமகிருஷ்ணர் போல வேடமணிய ஆரம்பித்தார்கள். அவர்களைப் போல் நடித்து, ஏமாற்றத் துவங்கிவிட்டனர். ஆகவே இது ஆன்மீகம் தொடர்பற்றது. உள்ளுணர்வு ஏதும் அவருக்கு இல்லை. சமூகத்தில் ஆன்மீகம் பற்றிய கவனம் இல்லை. உங்களுக்கு நன்மை நடந்தால் போதும் என்கின்ற குறுகிய மனோபாவத்திலேயே வந்துவிட்டீர்கள். பணப்பிரச்சினை, தொழிலில் நஷ்டம் என்றால் ஹோமம் செய்தால் நன்மை ஏற்பட்டுவிடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து சாமான்ய மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படியே சாமான்ய மக்களை திறமை இல்லாமல் செய்துவிட்டனர்.

நம் நாட்டில் உள்ள அனைவரும் திறமையாக, கூர்மதியோடு இருந்தால், நம் முன்னேற்றத்தை யாரேனும் தடுக்க முடியுமா? தொழிலில் பிரச்சினை என்றால், மேலும் அதை புரிந்து கொண்டு ஆழமாகக் கால் பதிக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, ஹோமம் போன்ற செயல்களைச் செய்வது பைத்தியக்காரத்தனமானது.

இப்போது ஒரு பைலட் இருக்கிறார். அவருக்கு எந்த சாமியையும் தெரியாது. ஆனால் விமானம் நன்றாக ஓட்டத் தெரியும். இன்னொருவர் சாமியார். அவர் கை சுழற்றினாலே எல்லாமே நடக்கிறது. அவருக்கு விமானம் என்றால் என்ன என்று தெரியாது. இப்போது உங்கள் விமானத்தை ஓட்ட யாரைக் கூப்பிடுவீர்கள்? பைலட் தானே வேண்டும். அவருக்கு கடவுள் என்றால் என்ன என்று புரியவில்லை. ஆனால் விமானம் தெரியும். உங்களுக்கு வாழ ஆசை இருக்கிறது அல்லவா? இங்கே வாழ்வதற்கு அடிப்படை தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரி பொய்யான சத்தியம், பொய்யான வாக்குறுதி கொடுத்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

நமக்கு 1947-இல் சுதந்திரம் கிடைத்தபோது, ஒரு இந்தியனுடைய சராசரி ஆயுள் 28 வயது என்பதாகத்தான் இருந்தது. குழந்தை இறந்துவிட்டால் கூட கடவுள் இச்சை அதுதான் என்று சமாதானம் செய்து கொள்வார்கள். கடவுள் மடியில் விடுவதற்காகவா குழந்தை பெற்றீர்கள்? இல்லை, அவன் நன்றாக வளர்ந்து வாழவேண்டும் என்று பெற்றீர்களா? இந்தவிதமான மனோபாவங்களை வளர்க்கின்ற ஏமாற்று வேலைகள் அதிகமாக நிகழ்ந்துவிட்டன.

உங்களுடைய வாழ்க்கையில் சிக்கலில்லாமல் சுதந்திரமாக இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்கின்ற தொழில் நுட்பம் தான் நான் கற்றுத்தருகிறேன்.

இப்போது ஆன்மீகம் என்பதை விஞ்ஞானபூர்வமாக வெளிப்படுத்தியது ஏனென்றால் நீங்கள் திறமைக்கேற்ப செயல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். நான் கை உயர்த்தினால் அநேக செயல் நிகழும். ஆனால் நீங்கள் பொறுப்பை மறந்து, சத்குரு பார்த்துக் கொள்வார்கள் என்று செயலற்றுப் போய்விடுவீர்கள். ஆகவே, உங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தி, அதற்கு மேல், ஒரு தூண்டுதல் தேவையென்றால், நான் உதவிக்கு வரமுடியும். மற்றபடி போலி சத்தியங்கள் நிலவும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம். உங்களுடைய திறமையில், உங்கள் சொந்தக்கால்களில் நிற்பதற்குத்தானே இங்கு வந்தீர்கள்? நீங்கள் சாகும்வரை உங்கள் கால்மேல் நிற்பதற்கு உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அப்படி இருந்தால் நாம் பொறுப்பாக, உறுதியாக வாழ்வது எப்படி என்று பார்த்துக்கொள்ளலாம்.

அப்படியென்றால், தெய்வீகம் என்பது இல்லையா? இன்னொரு தன்மை இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தால், அது உங்களைத் தொடாது. அதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கினால்தான், அந்தத் தொடர்பு நிகழும். அது வெளியில் எங்கோ இருக்கின்ற தன்மையல்ல. உள்ளேயே இருக்கின்ற ஒரு தன்மை. உள்ளேயே இருந்தாலும், நாம் சூழ்நிலை உருவாக்காமல் இருப்பதனால், அந்தத் தன்மையோடு தொடர்பு இல்லாமல் இருக்கிறது.

அதனால் ஆன்மீகம் என்றால், இப்போது நாம் உங்களுக்குத் தெய்வீகம் சொல்லிக் கொடுக்கவில்லை, உயரே பார்ப்பது, கடவுளைப் பார்ப்பது என்பதையெல்லாம் கற்றுத் தரவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் சிக்கலில்லாமல் சுதந்திரமாக இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்கின்ற தொழில் நுட்பம் தான் நான் கற்றுத்தருகிறேன். ஒரு செடியோ, மரமோ வளர்ந்து, அதிலிருந்து ஒரு பூவை, பழத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது போலவே, வாழ்க்கை ஒரு உயர்ந்த நிலையில் நிகழவேண்டுமென்றாலும், என்னை உணர வேண்டுமென்றாலும், கடவுளை உணர வேண்டுமென்றாலும், அதற்கு ஏற்ற அனுசரணையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், எதைக் கொடுத்தாலும் பயனில்லை.

கண்களை மூடியே வைத்திருந்தால், வெளிச்சம் காண முடியுமா? கண்கள் திறந்தால்தானே வெளிச்சம் உணர முடிகிறது? இதனால் தேவையற்ற, பொய்யான ஆன்மீகத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். நீங்கள் எதனுடன் ஐக்கியமாகியிருந்தாலும், அதில் சிக்கல் இன்றி, சுதந்திரமாக செயல்படுகிறீர்களா என்று பார்க்க வேண்டும். ஈஷா யோகாவினால் சிக்கல் வருகிறதா? அல்லது சுதந்திரம் வருகிறதா? இதனைத் தினமும் நீங்கள் கவனிக்க வேண்டும். சுதந்திரம் உணர்வது போல இருந்தால், வேறு கவனம் இன்றி ஒரே நோக்கமாக பயணப்பட வேண்டும்.