கேள்வி : வாழ்க்கையில் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு நான் எதைக் கருத்தில் கொள்ளவேண்டும்?

சத்குரு:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியைத்தான் நீங்கள் முன்வைக்கிறீர்கள். எந்த விதமான வேலையைத் தேர்வு செய்வது அல்லது எந்த வகையான கல்வியைப் பயில்வது என்பதன் அடிப்படையில் சிந்திக்கவேண்டாம். எல்லாவற்றையும்விட இந்த வாழ்க்கை முக்கியமானது. ஒவ்வொருவருக்கும், அவரவர் வாழ்க்கை மதிப்பு மிகுந்ததுதானே. இந்த மதிப்பு மிகுந்த வாழ்க்கையை எதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்? நீங்கள் இந்த விதமாகப் பார்த்தால், உண்மையிலேயே செய்யத்தகுதியான ஏதோ ஒன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். பிழைப்புக்கு எப்படி பணம் சம்பாதிப்பது, வாழ்க்கையில் எப்படி ஆதாயம் அடைவது என்பதன் அடிப்படையில் நீங்கள் சிந்தித்தால், உங்கள் வாழ்வின் எஞ்சிய காலங்களில் வருந்தும்படியான அற்பமான ஏதோ ஒன்றை நீங்கள் செய்துவிடுவீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு மண்புழு தன் பிழைப்பைத் தேடிக்கொள்ளும்போது, இவ்வளவு பெரிய மூளை படைத்த ஒரு மனிதருக்கு பிழைப்பை சம்பாதித்துக்கொள்வது ஒரு பெரும்பிரச்சனை அல்ல.

தங்களின் முந்தைய முடிவுகளுக்கே இன்னும் வருந்திக் கொண்டிருப்பதால்தான், பெரும்பாலான மக்கள் ஆனந்தம் இல்லாமல் சுற்றி வந்துகொண்டிருக்கி்றார்கள். என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அதை அவர்கள் செய்வதில்லை. தனக்கு உண்மையாக எது வேண்டுமோ அதை உருவாக்குவதற்குப் பதிலாக, பிழைப்புக்காக ஏதோ ஒன்றை அவர்கள் செய்கி்றார்கள்‌. புழு, பூச்சி, பறவை, விலங்குகள் என்று ஒவ்வொரு ஜீவராசியும் தமது உணவை தாமேதானே தேடிக்கொள்கின்றன.

ஒரு மனிதருக்கு பிழைப்பு சம்பாதிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. துரதிர்ஷ்டவசமாக, இந்த தேசத்தில் பத்து, இருபது தலைமுறைகளாக நிலவும் வறுமை காரணமாக, மக்கள் இந்தவிதமான மனோபாவத்தை அடைந்துவிட்டனர். பிழைப்புக்கு எப்படி சம்பாதிப்பது என்ற கேள்வியை கேட்டே பெற்றோர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகளை வறுத்தெடுக்கிறார்கள். ஒரு மண்புழு தன் பிழைப்பைத் தேடிக்கொள்ளும்போது, இவ்வளவு பெரிய மூளை படைத்த ஒரு மனிதருக்கு பிழைப்பை சம்பாதித்துக்கொள்வது ஒரு பெரும்பிரச்சனை அல்ல.

எவ்வளவு பெரியதோ அல்லது சிறியதோ, பரவாயில்லை. ஏதோ ஒன்று உண்மையிலேயே உயர்ந்தது என்பதை நீங்கள் உணர்ந்து, அதில் உங்களது வாழ்க்கையை முதலீடு செய்தால், அப்போது இது ஒரு முழுமையடைந்த வாழ்க்கையாக இருக்கும்.

உங்கள் வாழ்வில் நீங்கள் உருவாக்கப்போவது என்ன என்பதுதான் கேள்வி. உங்களுக்கு இருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு காலம் மற்றும் சக்தி.. இந்த இரண்டையும்தான் உங்களது வாழ்க்கை என்று அழைக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை எனும் இந்த சக்தியை நீங்கள் எப்படி முதலீடு செய்யப்போகிறீர்கள்? முற்றிலும் மேன்மையான ஏதோ ஒன்றை நீங்கள் செய்கிறீர்கள் என்றால், என்ன நிகழ்கிறது என்பதை நீங்கள் அறிவதற்கு முன்பாக வாழ்வு முடிந்துவிடுகிறது. நீங்கள் உபயோகமில்லாத ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால்தான், மிக நீண்ட வாழ்க்கையாகத் தோன்றுகிறது. இதை நீங்கள் கவனித்துப் பார்த்ததுண்டா? ஒரு குறிப்பிட்ட நாளன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தபோது, 24 – மணி நேரம் என்பது ஒரு ஷணம் போல் பறந்துவிடுகிறது. மாறாக, நீங்கள் துன்பத்தில் இருந்தால், 24 – மணி நேரமே பத்து வருடங்கள் போலத் தோன்றுகிறது.

இளமையாக இருக்கும்போதே ஒவ்வொருவரும் நிச்சயமாக செய்து பார்க்கவேண்டிய ஒரு விஷயம் இது. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உங்களுடைய நண்பர்கள், ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் ஆகியோரின் தாக்கம் இல்லாமல் தனித்திருங்கள். இந்த மதிப்பு மிகுந்த வாழ்க்கையை எதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்க்கமாக கவனித்துப் பாருங்கள். அது எவ்வளவு பெரியதோ அல்லது சிறியதோ, பரவாயில்லை. ஏதோ ஒன்று உண்மையிலேயே உயர்ந்தது என்பதை நீங்கள் உணர்ந்து, அதில் உங்களது வாழ்க்கையை முதலீடு செய்தால், அப்போது இது ஒரு முழுமையடைந்த வாழ்க்கையாக இருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

SGTamilApp