சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 8

சத்குருவிற்குக் கடிதம் எழுதிய அந்த ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவன், சத்குருவைச் சந்தித்து என்ன பேசினான்; சத்குரு அவனிடம் கேட்ட கேள்விகள் என்ன. இந்த வாரம் இடம்பெறும் 'சத்குருவுடன் சேகர் கபூர்' தொடரில் சுவாரஸ்யமாக அமைகிறது அந்த உரையாடல்.

சத்குரு : அந்தச் சிறுவன் வந்து பேசினான், "சத்குரு, இந்த வாழ்க்கையின் உண்மை பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என் பெற்றோர் செய்வது போல சாதாரண விஷயங்களை நானும் செய்து நாட்களை வீணாக்க விரும்பவில்லை. அவர்கள் செய்வதெல்லாம் அற்ப விஷயங்களாகவே உள்ளது. நான் உயர்ந்த நோக்கத்தோடு இருக்க விரும்புகிறேன்."

உடனே நான் சொன்னேன், "நிறுத்து (சேகர் சிரிக்கிறார்), அதைப்பற்றி நீ இப்போது பேசாதே. முட்டாள்தனம் என்று நீ நினைக்கும் விஷயங்களை உன் பெற்றோர் செய்ததால்தான் நீ இப்போது இங்கிருக்கிறாய்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒரு தென்னை மரம் எந்த அளவு முக்கியமோ அதே அளவு ஒரு சிறிய புல்லும் முக்கியம்தான். புல் ஒன்றும் முக்கியம் குறைந்தது அல்ல, அது வித்தியாசமானது, என்று பார்க்க கற்றுக் கொள்வதுதான் கல்வி.

இப்போது இங்கு தியானலிங்கம் கோவில் இருக்கிறது. நாளை காலை நான் கோவிலை மூடி விடுகிறேன். 6 மணி ஆகியும் கோவில் திறக்கவில்லை, ஓ, சத்குரு ஏதோ உயர்ந்த நோக்கத்திற்காகத்தான் கோவிலை மூடி வைத்திருப்பார் என்று நினைத்து மக்கள் மேலும் ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ காத்திருப்பார்கள். அப்புறமும் கோவில் திறக்கவில்லை என்றால் சரி, என்று அவரவர் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அப்புறம் தினசரி வந்து பார்ப்பார்கள், ம்... இன்னமும் திறக்கவில்லை என்று போய் விடுவார்கள்.

அதே போல நான் எந்த விளக்கமும் சொல்லாமல் சமையலறையை மூடிவிடுகிறேன் என்று வைத்துக்கொள். காலை 10 மணிக்கு வந்து சமையலறை மூடியிருப்பதைப் பார்த்தால், ஓ, சத்குரு காரணமாகத்தான் செய்திருப்பார், ஏதோ ஆன்மீக நோக்கம் காரணமாகத்தான் சாப்பாட்டை நிறுத்தியிருப்பார். ஒரு வேளை இரவு பெரிய விருந்து இருந்தாலும் இருக்கலாம் என்று மக்கள் நினைப்பார்கள். இரவும் மூடியிருக்கிறது, அடுத்த நாள் காலை வருகிறார்கள், அப்போதும் சமையலறை மூடியிருக்கிறது. இப்போது ஆன்மீகத்தை மறந்து விடுவார்கள், ஆசிரமத்தில் புரட்சி வெடிக்க ஆரம்பிக்கும், இல்லையா?"

சேகர் கபூர்: ஆமாம் (சிரிக்கிறார்)

சத்குரு: ஒரு வேளை எந்த விளக்கமுமின்றி ஆசிரமத்தில் இருக்கும் எல்லா கழிப்பிடங்களையும் மூடிவிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். 2 மணி நேரத்திற்குள்ளேயே ஆசிரமத்தில் புரட்சி ஆரம்பித்து விடும், இல்லையா? இதையெல்லாம் அந்த சிறுவனிடம் சொல்லி, "சொல், எது முக்கியம், கோவில் அல்லது டாய்லெட்?" என்று கேட்டேன். ம், ம், ம்.... என்று சொன்னானே தவிர அவனால் எந்த பதிலும் கூறமுடியவில்லை. பிறகு அவனுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில்கூறி அனுப்பினேன்.

எனவே ஒன்றை விட இன்னொன்றை உயரத்தில் வைத்துப் பார்த்தால், இந்த உலகில் உங்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. இப்படித்தான் உங்கள் புரிந்து கொள்ளும் தன்மையே முழுமையாக சின்னாபின்னமாகி உள்ளது. போட்டியின் அடிப்படையும் அதுதான். ஏதோ ஒன்றை இன்னொன்றை விட உயரத்தில் வைக்க முயற்சிப்பது. ஒன்று பெரியது இன்னொன்று சிறியது; ஒன்று உச்சம் இன்னொன்று மட்டம்; ஒன்று தெய்வீகம் இன்னொன்று அசிங்கம் என்று எப்போது பார்க்கிறீர்களோ அப்போதே முழு பிரபஞ்சத்தையும் நழுவ விடுகிறீர்கள். எனவே கல்வியின் சாரமே உங்கள் புரிதலின் தன்மையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர போட்டியை புகுத்துவதாக இருக்கக்கூடாது.

ஒரு தென்னை மரம் எந்த அளவு முக்கியமோ அதே அளவு ஒரு சிறிய புல்லும் முக்கியம்தான். புல் ஒன்றும் முக்கியம் குறைந்தது அல்ல, அது வித்தியாசமானது, என்று பார்க்க கற்றுக் கொள்வதுதான் கல்வி. நாடு, மொழி, கலாச்சாரம், இனம், ஆண்பெண், இவை ஒவ்வொன்றிற்குள்ளும் உள்ள வித்தியாசத்தை பகுத்துப் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக நமது கல்வியின் தன்மை இப்படித்தான் பார்க்க வைக்கிறது.

இந்தப் பள்ளியின் முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு எதுவும் கற்பிக்கப்படுவதில்லை. எல்லாமே செய்முறை விளக்கங்களாக கண் எதிரிலேயே உள்ளன. இங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் மிகவும் படித்தவர்கள். குழந்தைகளுக்கு சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கு முழுநேரத் தன்னார்வத் தொண்டர்களாக இருக்கின்றனர்.

நிற்பது, உட்கார்வது, நடப்பது, சாப்பிடுவது இவையெல்லாமே இங்கு கவனிக்கப்படுகின்றன. இவையெல்லாம்தான் இங்கு முக்கியமாக இருக்கின்றன. புத்தகப் படிப்பு என்று வரும்போது நாங்கள் ICSE சிலபஸை கடைப்பிடிக்கிறோம். ஆனால் நாங்கள் மிகவும் முக்கியமாக கவனிக்கும் விஷயம் பள்ளிக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலைதான். இதன் காரணமாகத்தான் இங்குள்ள குழந்தைகள் மிகவும் மனவலிமையுடன் இருக்கிறார்கள். அதை நீங்களும் கவனித்திருக்க முடியும். நகரத்திலுள்ள பெரிய பள்ளிகளில் இதை நீங்கள் கவனிக்க முடியாது.

சேகர் கபூர்: ஆமாம், இந்த ஹோம் ஸ்கூல் குழந்தைகளைப் பார்க்கும்பாது, அவர்கள் எப்போதும் விழிப்பாக இருப்பதைக் கவனிக்க முடிகிறது. சிரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு ஏதோ ஒன்று செய்தபடி இருக்கிறார்கள். நான் இதையெல்லாம் மிகவும் சந்தோஷமாக கவனித்து வருகிறேன்.

சத்குரு: யாருக்குமே புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது மகிழ்ச்சியைத் தருவதாகத்தான் இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பள்ளிக் கல்வி என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.


அடுத்த வாரம்...

ஈஷா ஹோம் ஸ்கூல் தனித்துவமாக இருப்பதற்கான காரணத்தையும் குழந்தைப் பருவம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியும் சத்குரு பேசுகிறார்.