சங்கர் மகாதேவன்: ஷங்கர்-எஹசான்-லாய் ஆகிய நாங்கள் மூவரும் கடந்த இருபத்திமூன்று ஆண்டுகளாக இசையமைத்து வருகிறோம். மூன்று எனும் எண் என்னை எப்போதுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூட்ரான்-எலக்ட்ரான்-பிரோட்டான், பிரம்மா-விஷ்ணு-மஹேஷ் என பல விஷயங்களில் மூன்று என்பது இருப்பதை கவனிக்கிறேன். எனவே மூன்றின் அர்த்தம், மகத்துவம், முக்கியத்துவம் என்ன?

சத்குரு: ஷங்கர்-எஹசான்-லாய் மும்மூர்த்தியருக்கு நமஸ்காரம்! திரிமூர்த்தி, திரிநேத்ரா, திரிசூலா, திரிகாலா - இவையனைத்தும் மனித வாழ்க்கையின் அடிப்படை அனுபவத்திலுருந்து பரிணமித்த கருத்துக்களே.

கடந்தகாலமும் எதிர்காலமும் இப்போது நிஜமாகவே இருக்கிறது, ஏனென்றால் இப்போதுதான் உங்களால் நினைவுகூர்ந்திடவும், கற்பனைசெய்யவும் முடியும்.

அடிப்படையில் மனித வாழ்க்கை அனுபவம் என்பது, கடந்தகால நினைவுகளைக் குறிக்கும் 'பூதகாலா', நிகழ்கால வாழ்க்கை அனுபவத்தைக் குறிக்கும் 'வர்தமானா', மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளையும் இலட்சியங்களையும் குறிக்கும் 'பவிஷ்யா' ஆகிய மூன்றுக்கும் இடையே நடக்கிறது. இம்மூன்று அனுபவங்களில் இருந்து உதிக்கும் பல்வேறு அம்சங்களை, நம் கலாச்சாரத்தில் "திரி" எனச் சேர்த்து திரிநேத்ரா, திரிகாலா, திரிசூலா, உங்கள் பெயரான திரிமூர்த்தி என்று வர்ணித்தார்கள்.

இம்மூன்று பரிமாணங்களும் 'வர்தமானா' அல்லது நிகழ்காலத்திலேயே இருக்கிறது என்ற அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்தகாலமும் எதிர்காலமும் இப்போது நிஜமாகவே இருக்கிறது, ஏனென்றால் இப்போதுதான் உங்களால் நினைவுகூர்ந்திடவும், கற்பனைசெய்யவும் முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் இந்தக் கணத்தில் இல்லாமல் வேறெங்கு இருக்கமுடியும்?

உலகெங்கும் நிறையவே இப்படி போதனைகள் உலவுகின்றன - குறிப்பாக அமெரிக்காவில் இது இருக்கிறது, ஆனால் இப்போது இந்தியாவிற்கும் இறக்குமதியாகிவிட்டது - "இந்தக் கணத்தில் இருங்கள்" என்கிறார்கள். இவர்கள் நிகழ்காலத்தை வழிபடுகிறர்கள்! ஆனால், இக்கணத்தில் இருக்கச்சொல்லி இன்னொருவர் எதற்காக சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை, ஏனென்றால் உங்களால் வேறெங்கும் இருக்கமுடியாது. நீங்கள் இந்தக் கணத்தில் இல்லாமல் வேறெங்கு இருக்கமுடியும்? நாம் எப்போதுமே 'வர்தமானா'வில் வேரூன்றியிருக்கிறோம்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "கடந்தகாலம் பற்றி நினைக்காதீர்கள், எதிர்காலம் பற்றி நினைக்காதீர்கள்" என்கிறார்கள். நம் மூளையின் திறனை இந்த அளவு நுட்பத்துக்கும், இவ்வளவு விரிவான ஞாபகத்திற்கும், அற்புதமான கற்பனைத் திறனுக்கும் வளர்ப்பதற்கு கோடான கோடி வருடங்கள் எடுத்தன. இப்போது யாரோ உங்களிடம், "அவற்றை குப்பையென தூக்கியெறிந்து மண்புழுவைப் போல இருப்போம்" என்கிறார்கள். மண்புழுவை நான் குறை சொல்லவில்லை - அது சுற்றுச்சூழலின் நண்பன் - ஆனால் பரிணாம வளர்ச்சியில் முன்னேறி இவ்வளவு அபாரமான மூளைத்திறனை வளர்த்த பிறகு, அதனை இப்படியரு எளிய தத்துவத்திற்கு விட்டுக்கொடுக்கக் கூடாது.

மக்கள் இப்படி, 'இந்தக் கணத்தில் இருங்கள்' என்று சொல்வதற்குக் காரணம், அவர்கள் வாழ்க்கையால் வேதனைப்படவில்லை, தங்கள் ஞாபகத்தாலும் கற்பனையாலும் வேதனைப்படுகிறார்கள். ஒரு மனிதருக்கு இருக்கும் இரண்டு அபாரமான சக்திகளால் வேதனைப்படுகிறார்கள். அவர்களின் துயரத்திற்கு இதுதான் அடிப்படை - மனிதர்கள் பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயத்தாலும் வேதனைப்பட முடியும், அல்லது நாளை மறுநாள் நடக்கவிருக்கும் விஷயத்தாலும் வேதனைப்பட முடியும்!

அவர்கள் இவ்விரு அபாரமான சக்திகளை விட்டுக்கொடுக்க விரும்புவது, தங்கள் எண்ணத்தையும் உணர்வையும் எப்படி கையாள்வது என்று தெரியாததால்தான். ஆனந்தமாக கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட முடிந்தால், மிகுந்த உற்சாகத்துடனும் பரவசத்துடனும் எதிர்காலம் பற்றி கற்பனை செய்ய முடிந்தால், அவற்றை விட்டுக்கொடுக்க விரும்புவீர்களா? பழைய ஞாபகங்களும் கற்பனையும் நிர்பந்தங்களாக மாறிவிட்டதுதான் பிரச்சனை. அதனால் அவை மிகுந்த துயரத்தை உருவாக்குகின்றன. அதனால்தான் கடந்தகாலத்தை மறக்கவும், எதிர்காலம் பற்றி நினைக்காதிருக்கவும் சொல்கிறார்கள். மனித வாழ்க்கையை நடத்துவதற்கு இது வழியல்ல.

இம்மூன்று பரிமாணங்களும் இருப்பது மிகவும் முக்கியம், அதனால்தான் திரிகாலா, திரிசூலா, திரிநேத்ரா என்றார்கள். இம்மூன்றும் வாழ்க்கையைக் காண்பதற்கும் அனுபவிப்பதற்குமான மூன்று பரிமாணங்கள். ஷங்கர்-எஹசான்-லாய் திரிமூர்த்திகள் நம்முடன் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அற்புதமான இசையை உருவாக்கிடுங்கள்!

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

 

YAT18_Newsletter-650x120