சத்குரு:

ஈடுபாடு கொள்வது என்றால் நீங்கள் எங்கேயோ சென்று, ஏதோ செயல் செய்யவேண்டும் என்பது பொருளல்ல. சுற்றிலும் இருக்கும் மனிதர்களைப் பார்ப்பதில் மட்டுமே ஈடுபாட்டுடன் இருக்க முடியும். ஒரு ஈடுபாட்டுடன் ஆகாயத்தைப் பார்க்கமுடியும். ஒவ்வொரு உயிரையும் ஈடுபாட்டுடன் பார்க்கமுடியும். உங்கள் கண்களை மூடிய நிலையிலும் ஈடுபாட்டுடன் இருக்கமுடியும். ஈடுபாடு என்பது ஒரு செயல் அல்ல. அது வாழ்க்கையுடன் விருப்பத்துடன் இருக்கும் ஒரு நிலை. வாழ்வின் அத்தனை நிகழ்வுகளிலும் நீங்கள் விருப்பம் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் எதனுடனாவது  அடையாளம் கொண்டால், வாழ்க்கையின்  போக்கில் விருப்பம் கொள்ள மாட்டீர்கள். தேர்ந்தெடுத்த சிலவற்றின் மீது மட்டும் விருப்பம் கொண்டு, வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் விருப்பமற்று இருக்கிறீர்கள். இத்தகைய விருப்பமின்மைதான், ஒரு மனிதருக்குள் இருக்கும் உயிரோட்டத்தைக் குறைத்துவிடுகிறது.

தேர்ந்தெடுத்த சிலவற்றின் மீது மட்டும் விருப்பம் கொண்டு, வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் விருப்பமற்று இருக்கிறீர்கள். இத்தகைய விருப்பமின்மைதான், ஒரு மனிதருக்குள் இருக்கும் உயிரோட்டத்தைக் குறைத்துவிடுகிறது.

உங்களையே நீங்கள் கவனித்துப் பாருங்களேன், நீங்கள் ஐந்து வயதாக இருந்தபோது எந்த அளவுக்கு உயிர்த்துடிப்புடன் இருந்தீர்கள்? இப்போது எந்த அளவுக்கு உயிரோட்டமாக இருக்கிறீர்கள்? உங்களது உயிரோட்டம் வெகுவாகக் குறைந்துதானே போய்விட்டது? உண்மையாகவே குறைந்துவிட்டது! வயது அதிகரிக்கும்போது நமது உடல் திறன்கள் குறைந்து போகலாம். ஆனால் உயிரோட்டம் குறையத் தேவையில்லை. நீங்கள் நூறு வயதை அடைந்தாலும், ஒரு குழந்தையைப் போன்ற உயிர்த்துடிப்புடன் இருக்கமுடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுடைய உயிரோட்டம் குறைந்துகொண்டே போவது ஏனென்றால், தேர்ந்தெடுத்த சிலவற்றின் மீது அல்லது சிலரின் மீது மட்டும் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு, தவணை முறைகளில் நீங்கள் தற்கொலை செய்துகொள்கிறீர்கள். நீங்கள் விருப்பத்துடன் எதைச் செய்தாலும், அது உங்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது. நீங்கள் விருப்பமின்றிச் செய்யும் எதுவும், உங்களுக்கு நரகம்தான். விருப்பமின்றி செய்யும்போது, மிகவும் அழகானதாகக் கருதப்படுவது, மிகவும் மோசமாகிவிடலாம். இனிய காதல் உறவுகூட, உங்கள் விருப்பமின்றி நிகழும்போது, பாலியல் பலாத்காரமாக மாறிவிடுகிறது. ஒரே வித்தியாசம் விருப்பமும், விருப்பமின்மையும்தான். விருப்பம் இல்லாத நிலையில், வாழ்வின் போக்கு இயல்பாகவே துயரமாகிறது.

வாழ்க்கை உங்களுக்கு நிகழ, நீங்கள் முழுமையான விருப்பத்துடன் அனுமதிக்கிறீர்களா அல்லது விருப்பமில்லாமல் அனுமதிக்கிறீர்களா என்பதைப் பொறுத்துதான், உங்கள் மனம் என்பது உங்களுக்கு ஒரு அற்புதமாகவோ அல்லது ஒரு துயரக் கூடமாகவோ ஆகிறது. நீங்கள் வாழ்க்கையுடன் காதலில் இருக்கிறீர்களா அல்லது வாழ்க்கை உங்களுக்கு வன்முறையாக இருக்கிறதா? அதுதான் கேள்வி. வாழ்க்கை உங்களிடம் வன்முறை உறவு கொண்டிருந்தால், மனம் ஒரு துயரக்கூடம்தான். வாழ்க்கை உங்களுக்குக் காதல் உறவாக இருந்தால், அதன் பிறகு வாழ்க்கையே பரவசம்தான், இந்த மனமும்கூட பரவசமே.

மனம் என்கிற சர்க்கஸ் ஒரு ஒத்திசைவோடு, அதனுடைய உச்சபட்சத்தை எட்டவேண்டுமென்றால், நீங்கள் தேர்ந்தெடுத்து ஈடுபடக்கூடாது. நீங்கள் சர்க்கஸில், ட்ரபீஸ் கம்பியில் ஆடும் கலைஞர்களைப் பார்த்திருக்கலாம் - அந்த வித்தையில் ஈடுபடும் குழுவினர் தங்கள் முழுவீச்சில் ஊஞ்சலாடினால்தான், மறுமுனையில் இருப்பவரை அடையமுடியும் - ட்ரபீஸ் கம்பிகளும், கயிறுகளும் அதற்கேற்ற விதமாகத்தான் கட்டப்பட்டிருக்கும். அவர்களில் யாரேனும் ஒருவர் விருப்பமற்று இருந்தாலும், சர்க்கஸ் வித்தை நிலைகுலைந்துவிடும். அவர்கள் அனைவரும் முழுவீச்சில் ஆடவேண்டும் - இல்லையென்றால் அந்த வித்தை அவ்வளவு அழகாக நிகழமுடியாது. நீங்களும் கூட இந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். முழுவீச்சுடன்தான் வாழ்க்கையில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? வாழ்க்கையுடன் நீங்கள் முழுமையாக ஈடுபாடுகொண்டால், அதுவே மனதை அமைதிப்படுத்தும்.

உங்களுடைய அன்பிற்குரியவரையும், உங்கள் குழந்தையையும் எந்த மாதிரியான தீவிர ஈடுபாட்டுடன் பார்க்கிறீர்களோ, அதே ஈடுபாட்டு உணர்வுடன் இந்த வானத்தையும், மரங்களையும், மண்ணையும் பாருங்கள். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் ஒரே விதமான தீவிர உணர்வும், ஈடுபாடும் கொண்டிருந்தால், மனம் ஒரு துயரம் அல்ல. அது ஒரு அழகான சர்க்கஸ். “சர்க்கஸ்” என்பது ஒரு எதிர்மறையான வார்த்தை அல்ல. ஒரு சர்க்கஸ் என்பது மிகப் பெரிய அளவில், ஒத்திசைவோடு ஒருங்கிணைக்கப்பட்ட செயல்களின் தொகுப்பு. அதே விதமாகத்தான் மனித மூளையும் செயல்படுகிறது. ஏற்கனவே திரட்டப்பட்ட செய்திப்பதிவுகளின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். அந்தப் பழைய பதிவுகளிலிருந்துதான் மனதின் செயல்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்தப் பதிவுகளுக்கு உங்களுடைய பிறப்பையும் கடந்து ஒரு அடித்தளம் இருக்கிறது.

நீங்கள் பிறந்த கணத்திலிருந்து இந்த கணம் வரையிலும், நீங்கள் பார்த்த, கேட்ட, முகர்ந்த,  சுவைத்த, தொட்ட மற்றும் ஐந்து புலன்களின் மூலம் நீங்கள் புரிந்திருக்கின்ற ஒவ்வொன்றும் உங்கள் மனதில் பதிவாகி இருக்கின்றது. உங்களுடைய விழிப்புணர்வுடன் நீங்கள் கண் விழித்திருக்கும்போதோ அல்லது உறக்கத்தில் இருக்கும்போதோ கூட பதிவு நிகழ்ந்திருக்கிறது. இதனை மிக எளிதாகச் சோதித்துப் பார்க்கலாம். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரோ உங்களிடம் கூறியதை, ஒரு குறிப்பிட்ட செயல்முறையின் மூலம், நீங்கள் உறக்கத்தில் கேட்டவற்றை மறுபடியும் உங்களைக் கூறவைக்க முடியும். மனோவசிய நிலைகளில் இவைகள் பரிசோதனைகளாகச் செய்து காட்டப்பட்டுள்ளன. ஆனால் யோக வழிமுறையில் நாம் இதை எப்போதும் அறிந்தே வந்திருக்கிறோம்.

முழுவீச்சுடன்தான் வாழ்க்கையில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? வாழ்க்கையுடன் நீங்கள் முழுமையாக ஈடுபாடுகொண்டால், அதுவே மனதை அமைதிப்படுத்தும்.

பாரத தேசத்தில் நமக்கு இது தெரிந்த ஒன்றுதான். தாயின் கருவறைக்குள் இருக்கும் நேரம்தான், ஒரு மனிதனுக்குள் உயர்ந்த விஷயங்களைப் புகட்டக்கூடிய அருமையான காலம் என்பதை நாம் அறிந்திருந்தோம். அதனால்தான் கர்ப்பமான ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்றும், என்ன மாதிரியான சூழலில் அவள் இருக்கவேண்டும் என்றும், எந்த விதமாக அவள் நடத்தப்பட வேண்டும் என்றும், எந்த விதமாக அவள் நடத்தப்படக் கூடாது என்றும் ஒரு விரிவான கவனிப்பு முறை நடைமுறையில் இருந்தது. குறிப்பிட்ட சில மனிதர்களை சந்திக்கக்கூட அவள் அனுமதிக்கப்படவில்லை. மிகவும் அன்பான மனிதர்களும், அறிவும், புத்திசாலித்தனமும் நிரம்பிய மனிதர்களும் மட்டுமே அவளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கருவைத் தாங்கியிருப்பவளை எந்த விதமான எதிர்மறை உணர்வுகளுக்கோ, எந்த விதமான எதிர்மறை சூழல்களுக்கோ ஆட்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஏனெனில் அந்தக் கருவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு அப்போதுதான் நன்றாக கற்பிக்க முடியும். மிக ஆழமான உறக்க நிலையில் இருக்கும்போது போதிப்பது மிகவும் எளிது. ஒரு மனிதர் விழித்திருக்கும்போது அதிகமான கவனச் சிதறல்கள் இருக்கின்றன. நீங்களே கவனித்திருக்கலாம் - உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போது பலவழிகளில் நீங்கள் உடலைப்பற்றிய உணர்வில் இருக்கிறீர்கள். உடலை சொறிந்துகொள்வது, சுற்றிலும் பார்வையிடுவது, அப்படியும், இப்படியும் திரும்புவது என்று  இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது இத்தகைய செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அப்போது உங்களுடைய கிரகிக்கும் திறன் முழுமையாக உள்ளது.

ஆகவே, உங்களது விழிப்பு நிலையிலோ அல்லது உறக்க நிலையிலோ, நீங்கள் பார்க்கும், கேட்கும், முகரும், சுவைக்கும் மற்றும் தொட்டு உணரும் ஒவ்வொரு விஷயமும் பதிவாகிறது. இந்த அத்தனை செய்திகளும் அங்கு இருக்கின்றன. இந்தச் செய்திகளை எவ்வளவு ஒத்திசைவுடன் உபயோகிக்கிறோம் என்பதுதான் மனதின் திறனாக வெளிப்படுகிறது. அல்லது திறனற்ற, குழப்பமான மனதைப் பொறுத்து, இந்தச் செய்திகள் குளறுபடியாகி விடுகின்றன.

இதை முறையாக ஒழுங்குபடுத்த, மனிதர்கள் பல்வேறு விஷயங்களைச் செயல்படுத்தியுள்ளனர். அனைத்து விதமான முறைகளும், பயிற்சிகளும் பரிசோதிக்கப்படுகிறது. ஆம், சிறிய திருத்தங்களைச் செய்யவும், முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகத் திறமையுள்ளவராக உங்களை மாற்றிக்கொள்ளவும் நிறைய வழிமுறைகள் உள்ளன. ஆனால் உண்மையிலேயே நீங்கள் மனதைக் கட்டவிழ்க்க விரும்பினால் - மனதைக் கட்டுப்படுத்துவது அல்ல - மனம் என்கிற சக்தியை உண்மையிலேயே நீங்கள் வெளிப்படுத்த விரும்பினால், உங்களுடைய அறிவானது எதனுடனும் அடையாளம் கொள்ளாமல் இருக்க வேண்டியது மிகவும் அடிப்படையானது. அப்போது உங்களது புரிதல் முற்றிலுமாகத் தெளிவு பெறுகிறது. அதன் பிறகு, மனம் இயல்பாகவே தன்னை ஒருங்கிணைத்துக் கொள்கிறது. முயற்சியெடுத்து நீங்கள் உங்கள் மனதை ஒருங்கிணைக்க வேண்டியதில்லை. உங்களுடைய புரிதல் தாறுமாறாக இருப்பதால்தான், மனதின் செயல்பாடும் மற்றும் அதன் வெளிப்பாடும் கூட சிதைவுபட்டுள்ளது.