சத்குரு: இந்தியாவில் சுமார் 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. ஆனால் இந்த மண்ணில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் விளைச்சலுக்கு ஏற்புடைய மண் அல்ல என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது இன்னும் இருபத்தைந்து முதல் முப்பது ஆண்டுகளில், இந்த தேசத்தில் நமக்குத் தேவையான உணவை வளர்க்க முடியாமல் போகலாம்.

அடுத்த தலைமுறையைப் பொறுத்தவரை, நாம் கொடுக்கக்கூடிய மிக அருமையான விஷயம் வணிகமோ, பணமோ அல்லது தங்கமோ அல்ல - அது வளமான மண். வளமான மண் இல்லாமல், தண்ணீர் என்ற கேள்விக்கு இடமே இல்லை.

இந்தியா பல சாதனைகளைச் செய்துள்ளது: நமது விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கும் சந்திரனுக்கும் ராக்கெட்டுகளை அனுப்புகிறார்கள்; பெரிய வணிக முன்னேற்றங்கள் மற்றும் பொறியியல் சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்திலும், மிகவும் நம்பமுடியாதது என்னவென்றால், எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாமல், பாரம்பரிய அறிவுடன், நம் விவசாயிகள் நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய சாதனை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விவசாய சமூகத்தை சுவற்றின் மூளைக்கு தள்ளியுள்ளோம். தற்போது விவசாயிகள் தங்கள் குழந்தைகள் விவசாயத்திற்கு செல்வதை விரும்பவில்லை. இது ஒருபுறம் இருக்க, நாம் மண்ணின் தரத்தை இழந்து கொண்டிருக்கிறோம், மறுபுறம் விவசாயிகள் தங்கள் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் பொருள் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில், நாம் நிச்சயமாக ஒரு பெரிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

தண்ணீரும் உணவும் இல்லாதபோது நிகழும் உள்நாட்டு நெருக்கடியின் நிலை நாட்டை பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தும். கிராமங்களில் நீர் முழுவதுமாக வற்றிவிட்டால் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் நகர மையங்களுக்கு குடிபெயரப் போகிறார்கள். இது வெகுதொலைவில் இல்லை. உள்கட்டமைப்பு இல்லாததால், அவர்கள் தெருக்களில் அமர்வார்கள். ஆனால் எவ்வளவு காலம்? தண்ணீரும் உணவும் இல்லாதபட்சத்தில், மக்கள் வீடுகளை உடைத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். நான் ஆரூடம் சொல்பவன் அல்ல, ஆனால் அடுத்த எட்டு முதல் பத்து ஆண்டுகளில், தீர்க்கமாய் ஏதோவொன்றை செய்யாவிட்டால், இதுபோன்ற பூதாகரமான சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வளமான மண் - மிக விலைமதிப்பற்ற கொடை

வெப்பமண்டல தேசத்தில் நம்மிடம் உள்ள ஒரே நீர் ஆதாரம் பருவமழை. நாற்பத்தைந்து முதல் அறுபது நாட்கள் வரை பருவமழை பூமியில் பொழிகிறது. அறுபது நாட்களில் இறங்கும் இந்த நீரை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு உணவளிக்க 365 நாட்கள் மண்ணில் பாதுகாக்க வேண்டும். கணிசமான தாவரங்கள் மரங்கள் இல்லாமல் இதை நாம் செய்ய வழி இல்லை.

மண்ணில் நீர் தங்குவதற்கான ஒரே காரணம், அதில் தாதுக்கள் இருப்பதால்தான். மரங்களின் இலைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் இந்த தாதுக்களின் மூலமாகும். மரங்களும் விலங்குகளின் கழிவுகளும் இல்லாத இடத்தில், மண்ணால் தண்ணீரைப் பிடிக்க முடியாது - அது பாய்ந்தோடிவிடும்.

ஒரு தேசத்தின் சொத்து என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது கழிவுகள் மற்றும் இலை! அடுத்த தலைமுறையைப் பொறுத்தவரை, நாம் கொடுக்கக்கூடிய மிக அருமையான விஷயம் வணிகமோ, பணமோ அல்லது தங்கமோ அல்ல - அது வளமான மண். வளமான மண் இல்லாமல், தண்ணீர் என்ற கேள்விக்கு இடமே இல்லை.

இந்தியாவில் நீங்கள் ஒரு கன மீட்டர் மண்ணை எடுத்துக்கொண்டால், அதில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிகம். எனவே, மண் குறைந்துகொண்டே இருந்தாலும், நீங்கள் அதற்கு ஒரு சிறிய உதவியைக் கொடுத்தால், அது மீண்டும் பழைய நிலைமைக்குத் தன்னை சீரமைத்துக்கொள்ளும் வலிமையையும் சக்தியையும் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக வளமான மண் மற்றும் தாவரங்களினால் இவ்வளவு உயிர்கள் காணப்பட்டன. 12,000 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலத்தில் நாம் பயிரிட்டு வந்துள்ளோம். ஆனால் கடந்த நாற்பது முதல் ஐம்பது ஆண்டுகளில் நாம் எல்லா தாவரங்களையும் அகற்றிவிட்டு அதை பாலைவனமாக்குகிறோம்.

மண்வளம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்

இந்தியாவின் மண்ணின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, இதனால் ஊட்டச்சத்தின் அளவு பேரழிவை தரும் வகையில் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்திய காய்கறிகளைப் பொறுத்தவரை, அதன் ஊட்டச்சத்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் குறைந்துள்ளது. உலகில் மற்ற எல்லா இடங்களிலும், மருத்துவர்கள் மக்களை இறைச்சியிலிருந்து சைவ உணவுக்கு மாறும்படி கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில், மருத்துவர்கள் இறைச்சிக்கு மாறும்படி அறிவுறுத்துகிறார்கள். அசைவ முறையில் இருந்து சைவ முறைக்கு மாற உலகம் ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது, பெரும்பாலும் சைவ தேசமாக வாழ்ந்த நாம், இறைச்சிக்கு மாற முயற்சிக்கிறோம், ஏனெனில் நாம் உட்கொள்ளும் உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லை.

நாம் மண்ணை கவனித்துக்கொள்ளாததுதான் இதற்குக் காரணம். மண்ணில் உள்ள நுண்ணிய ஊட்டச்சத்து வியத்தகு முறையில் குறைந்துவிட்டது, மூன்று வயதிற்குட்பட்ட நம் குழந்தைகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்று இரத்த சோகைக்கு ஆளாகியுள்ளனர்.

நீங்கள் ஒரு காட்டில் சென்று மண்ணை எடுத்தால், அது நல்ல உயிர்ப்போடு இருப்பதை காணலாம். மண் அப்படித்தான் இருக்க வேண்டும். மண்ணின் வலிமை பலவீனமடைந்தால், நம் உடலும் பலவீனமடையும் - ஊட்டச்சத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, மிக அடிப்படையான வாழ்வியலில் கூட. இதன் காரணமாக நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறை நம்மைவிட திறன் குறைந்தவர்களாக இருப்பர். இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். நமது அடுத்த தலைமுறை நம்மை விட சிறந்ததாக இருக்க வேண்டும். அவர்கள் நம்மை விட பலவீனமானவர்கள் என்றால், நாம் அடிப்படையில் ஏதோ தவறு செய்துள்ளோம் என்று அர்த்தம். மண் அதன் வலிமையை இழந்து வரும் காரணத்தால் இது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நடக்கிறது.

இன்றே செயல்படுவோம்

1960 க்கு முன்பு, இந்தியாவில் பல பஞ்சங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக கோடைகாலத்தில் வெறும் 2-3 மாதங்களில் முப்பது லட்சம் மக்களின் உயிரைப் பறித்தது. ஆறுகள் வறண்டு, மண் குறைந்துவிட்டால் நாம் மீண்டும் அந்த மாதிரியான நிலைக்குச் செல்வோம். நாம் இப்போது சரியான காரியங்களைச் செய்யாவிட்டால், இந்த நிலம் எதிர்காலத்தில் மக்களைத் தக்கவைக்காது.

Sadhguru flags off Cauvery Calling at Adiyogi on Jul 31, 2019

 

இந்தச் சூழலில்தான் நான் காவேரி கூக்குரல் இயக்கத்தை தொடங்கினேன். ஏறக்குறைய 83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள காவேரி படுகையில் 242 கோடி மரங்களை நட்டு விவசாயிகளுக்கு உதவப் பார்க்கிறோம். இதனால் காவேரியின் மூன்றில் ஒரு பகுதி, நிழலின் போர்வையின் கீழ் வந்துவிடும். இதன் மூலம் சுமார் 9 டிரில்லியன் லிட்டர் தண்ணீர் காவேரிப் படுகையில் தக்கவைக்கப்படும். இது உண்மையில் இப்போது ஆற்றில் பாயும் 40% க்கும் அதிகமான நீரின் அளவாகும் . 

விவசாயிகளை வேளாண் காடுகள் மற்றும் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றுவதன் மூலம் இதைச் செய்ய முடியும். நாங்கள் சிறிய அளவிலான மாதிரிகளை நடத்தி காட்டி 69,760 விவசாயிகளை வேளாண் காடு வளர்ப்பிற்கு மாற்றியுள்ளோம். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், அவர்களின் வருமானம் முந்நூறு முதல் எந்நூறு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. காவேரி படுகையில் இதை செயல்படுத்தக்கூடிய பெரிய அளவிலான மாதிரியாகக் காட்டியவுடன், அதை மற்ற நதிகளுக்கும் செய்து காண்பிக்க முடியும்.

 

உண்மையில் நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. இன்னும் பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு நிலையான முயற்சி எடுத்தால், முழு சூழ்நிலையையும் நாம் மிக எளிதாக மாற்ற முடியும்.

CC-ISO-WebBanner-650x120-Tam

ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி : 80009 80009