"சமாதி" என்ற வார்த்தையைக் கேட்டாலே, மரணம் என்றுதான் பலரும் அர்த்தம் கொள்வோம். ஆனால் சமாதியில் பல வகைகள் உண்டு. மஹாசமாதியைப் பற்றி இங்கே விளக்குகிறார் சத்குரு...

சத்குரு:

'மஹாசமாதி' அடைவது எப்படி?

மஹாசமாதியை பல வழிகளில் அடையலாம். ஒன்று, பக்தியின் வழியில் அப்படியே முழுமையாய் கரைந்து போவது. இதை நீங்கள் சரியாய் புரிந்துகொள்ள வேண்டும். 'பக்தி வழியை கடைபிடிக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு, வாழ்வை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக் கொள்ளவே நீங்கள் முற்படுகிறீர்களே தவிர்த்து, அதில் முழுமையாய் கரைந்து போக நீங்கள் தயாராக இல்லை. இது முட்டாள்தனம். பக்தனுக்கு ஒரே நோக்கம்... "நான் கரைந்து போகவேண்டும்" என்பதுதான். கோவிலுக்கு சென்று வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், பணம் கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் பெறவேண்டும் என வேண்டுவது முட்டாள்தனம். நாம் இப்படி இருந்தால், அதற்கு பெயர் பக்தி இல்லை, அது கபடம்.

உதாரணமாக, இப்போது எனக்கு சிவனின் மீது பக்தி என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், அங்கே "நான்" என்பதே இருக்கக்கூடாது, அங்கு சிவன் மட்டுமே இருக்க வேண்டும். இது பக்தி! கரைந்துபோக வேண்டும் என்று இருந்தால், கோவிலில் சென்று விழுந்திடுங்கள். இல்லை... வாழ்வை நன்றாக வாழவேண்டும் என்பதே உங்கள் விருப்பம் என்றால், "பக்தி" என்ற போர்வை எல்லாம் வேண்டாம். இப்போது அதையும் "பய"பக்தி என்றாக்கி விட்டீர்கள். இனி, உங்களைப் பார்த்து அந்தக் கடவுள்தான் பயப்பட வேண்டும்.

'நான் அப்படி வாழவேண்டும், இப்படி இருக்க வேண்டும்' என்பதெல்லாம் பக்திக்கும், பக்தனுக்கும் கிடையாது. ஆனால், நமக்கு வாழ வேண்டும், பற்பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. அதனால், பக்தியில் அவ்வளவு முழுமையாக நாம் போகத் தேவையில்லை. அதற்குப் பதிலாக கர்மயோகத்தையும், ஞானயோகத்தையும் நம் வழிகளாகத் தேர்ந்தெடுக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோகாவில்...

'ஈஷா யோகா'வில் பக்தி எனும் அம்சத்தை நாம் உருவாக்கவில்லை. ஆனால், உங்களுக்கு இந்நிகழ்ச்சியில் ஏற்படும் அனுபவத்தினால், பக்தி என்பது தானாக உணர்வில் உண்டாகலாம். இப்படி ஏற்படும் பக்தி நல்லது. உங்கள் நோக்கம் பக்தியாக இல்லை என்றாலும், உங்கள் மனம் பக்தியாக இருக்கும். இதுவே உங்கள் நோக்கமும் பக்தியாகிவிட்டால், 'கரைந்து போகவேண்டும்' என்பது மட்டுமே உங்களது ஒரே ஏக்கமாக இருக்கும். இதனைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதுபோன்ற ஒரு நிலைக்கு நீங்கள் இப்போது தயாராக இல்லையென்றால், அவ்வழியில் நீங்கள் செல்லக்கூடாது.

ஒரு ஞானிக்கு... உயிர் எப்படி பிறக்கிறது, எப்படி வளர்கிறது, எப்படி இறக்கிறது, மீண்டும் எப்படிப் பிறக்கிறது அனைத்தும் புரிந்திருக்கும்.

உதாரணத்திற்கு, இப்போது ஈஷா மையத்திலிருந்து இந்த சாலை சிறுவாணி செல்கிறது என வைத்துக் கொள்வோம். ஆனால், நமக்கு சிறுவாணி போக விருப்பமில்லாவிட்டால், அந்தச் சாலையில் போகக்கூடாது. அதனை விடுத்து, நமக்கு வேண்டிய வேறு வழியில் செல்ல வேண்டும் அல்லவா? ஆனால், தற்போதைய நமது ஆசை, சிறுவாணி ரோட்டில் போகவேண்டும், ஆனால் ஊட்டி போய் சேரவேண்டும் என்றிருக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில் எங்கும் போய்ச் சேருவதில்லை. வாழ்வில் வெறும் போராட்டம் மட்டுமே நடந்து கொண்டிருக்கும்.

ஈஷா யோகா வகுப்புகளில், நாம் பக்தி பற்றி பேசவில்லை. ஆனாலும் பங்கேற்பாளர்கள் பக்தி நிலைக்கு தானாகவே வருகிறார்கள், எப்படி? அனுபவம் விரிவடையும்போது, பக்தி தானாகவே ஏற்பட்டுவிடும். உங்கள் நோக்கம் 'பக்தி' இல்லை, ஆனால் உங்கள் தன்மை பக்தியாக, மனதின் நிலை பக்தியாக இருக்கிறது. இப்போது வாழ்க்கை சுகமாக நடக்கும். ஞானயோகம், கர்மயோகம் என்றால்... ஒன்று, புரிந்துகொள்கின்ற விழிப்புணர்வு நிலை, மற்றொன்று செயல்படும் நிலை.

ஞானத்தின் வழியில் மஹாசமாதி அடைபவர்கள் முற்றிலும் வேறுநிலையில் இருப்பவர்கள். அவர்கள் சக்தி, பிராணா, உடல், உயிர் எல்லாவற்றையும் முழுமையாய் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், பக்தனுக்கு 'சிவன்' மட்டுமே புரியும், வேறு எதுவும் புரியாது, அவனுக்குப் புரியவும் வேண்டாம். ஒரு ஞானிக்கு... உயிர் எப்படி பிறக்கிறது, எப்படி வளர்கிறது, எப்படி இறக்கிறது, மீண்டும் எப்படிப் பிறக்கிறது அனைத்தும் புரிந்திருக்கும். எப்போது அவர்கள் அத்தனை அம்சங்களையும் புரிந்துகொள்கிறார்களோ, அவர்கள் விரும்பும்போது உயிரைத் துறக்கலாம், தேவையானபோது மீண்டும் உடல் எடுக்கலாம். ஆனால், இந்த வாய்ப்பு பக்தனுக்கு இருக்காது. அதுமட்டுமில்லை, ஞானிகள், எப்படி உடலை விட வேண்டும், எப்படி விட்டால், அது அந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை பார்த்து, அவர்கள் முடிவு செய்து, அதன்படி உடல் நீக்குகின்றனர்.

பரமஹம்ச யோகானந்தரின் சமாதி நிலை

இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 'பரமஹம்ச யோகானந்தா' பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'ஆட்டோ பயாக்ரபி ஆஃப் எ யோகி' என்று அவர் எழுதிய சுயசரிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விடும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, 'நான் உடலை விடப்போகிறேன்' என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, 'இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்' என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார்.

மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், 'இப்போது நான் போகப்போகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, 'இந்த உடல் 33 நாட்களுக்கு அழிந்து போகாது. நீங்கள் அப்படியே வைத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு 'வியானப் பிராணா'வை அவர் தக்கவைத்துச் சென்றதால், அத்தனை நாட்களுக்கு உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்யுங்கள் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

விஞ்ஞானிகள் ஏதேதோ சோதனைகள் செய்தார்கள், என்ன செய்தாலும் ஒன்றும் புரிபடவில்லை. உயிரின் மூலம் புரியாத மனிதர்களுக்கு, இது புரியுமா என்ன? யோகப் பாரம்பரியத்தில், இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தேறி இருக்கின்றன. வெள்ளியங்கிரி மலையில், 'சத்குரு ஸ்ரீபிரம்மா' தன் உடலை நீத்ததும் இவ்வாறுதான். இது ஞானத்தின் வழியில் உடலை விடுகின்ற நிலை. இவ்வழியில்... விருப்பத்துடன் போகலாம், வரலாம். உடலின் மீது, உயிரின் மீது நமக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், பக்தி வழியில் போகின்ற மனிதன் அப்படி இல்லை, அவர் முழுமையாகக் கரைந்தே போய்விடுவார்.

சமாதி நிலையில், உடலுடனான தொடர்பு மிகக் குறைவாக இருந்தாலும், அதிலேயும் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. முழுமையான விடுதலை கிட்டியிருக்காது.

சமாதியில் 8 விதமான சமாதிகள்

சமாதி என்றால், நமக்கும் நம் உடலிற்கும் தொடர்பு மிகக் குறைவாக இருக்கும் ஓர் நிலை. வெறுமனே உயிரோடு இருப்பதற்கு எந்த அளவிற்குத் தேவையோ, அந்த அளவிற்கு மட்டுமே உடலுடன் தொடர்பு இருக்கும். பார்த்தால் இறந்தது போலவே இருப்பார்கள், ஆனால் வேண்டியபோது உயிரோடு எழுந்து தேவையானதைச் செய்வார்கள். இதுபோன்ற நிலையைத் தான் சமாதி என்கிறோம்.

8 விதமாக சமாதி நிலைகளை பிரித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு இப்படி சமாதி நிலைகளை பகுப்பதில் உடன்பாடு இல்லை. ஏனெனில், இப்படி இருந்தால் இந்த நிலை என்று பகுத்து சொல்ல முடியாது. சமாதி நிலையில், உடலுடனான தொடர்பு மிகக் குறைவாக இருந்தாலும், அதிலேயும் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. முழுமையான விடுதலை கிட்டியிருக்காது. ஆனால், மஹாசமாதி என்றால் அந்தத் தொடர்பையும் உடைத்துவிட்டு, அந்த கட்டுப்பாட்டையும் தாண்டிவிடுவது. அதாவது, உடலையும் முழுமையாக விட்டுச் செல்ல முடிகிற நிலை, 'மஹாசமாதி'.

எப்போது மனிதன் 'உயிர்தன்மை' புரியாது, ஆனந்தமாக வாழ மறந்து, வாழ்வைப் பற்றிய பயத்துடன் வாழ்கிறானோ, அவனால் இதையெல்லாம் ஜீரணிக்க முடியாது. இப்போது அதிகளவிலான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். முழு ஆரோக்கியத்துடன் இருக்கின்ற மனிதன், நன்றாக, சந்தோஷமாக, ஆனந்தமாக இருக்கின்ற மனிதன் எதற்காக போக வேண்டும் என்றே விவாதம் செய்கிறார்கள்.

ஒரு மாட்டைக் கொஞ்சம் நீளமான கயிறு கட்டி விட்டுவிடுகிறோம். அதில் அதற்கு கொஞ்சம் சுதந்திரமாக இருப்பதுபோல இருக்கிறது. ஆனால், கயிற்றின் நீளத்தை எட்டிவிட்டாலோ கயிறு கழுத்தை நெருக்க ஆரம்பித்துவிடும். ஆனால், கயிற்றை நீட்டித்து கட்டுவதன் மூலம், ஒரு இடத்தில் நகர முடியாமல் அடைபட்டு இருப்பதற்குப் பதில் கொஞ்சம் வெளியே வர முடிகிறது, சுதந்திரமாய் இருப்பதுபோல் இருந்தாலும், இது கட்டுண்ட நிலையல்லவா? இந்தக் கயிறும் வெட்டுப்பட்டால்தான் அந்த உயிர் முழுமையாகக் கரைந்து போகிறது.