நம் மனதில் இருக்கும் தீர்க்கமான கேள்விகளில், "இனக்கவர்ச்சி என்பது தவறா?" என்பது தவிர்க்கமுடியாத கேள்வியாகவே எப்போதும் உள்ளது. இக்கேள்விக்கான பதில் தேடி பல செய்திகள் நீங்கள் சேகரித்திருந்தாலும், இதைப்பற்றி சத்குருவின் கருத்தென்ன என்பதையும் அறிந்துகொள்ளலாமே...

Question: இனக்கவர்ச்சி என்பது தவறா?

சத்குரு:

இளமையாக இருக்கும்போது, அடுத்த இனத்தின்மீது ஏற்படும் வசீகரத்தை நீங்கள் தவிர்க்க நினைத்தாலும் முடியாது. அது இயற்கை. தவறா, சரியா என்று அதை ஆராயத் தேவையில்லை.

மேலை நாடுகளில் சுதந்திரமான செக்ஸ் என்று ஒரு முறையைக் கொண்டு வந்தார்கள். குடும்பம், கட்டுப்பாடு என்று சிக்காமல் சந்தோஷமாயிருக்க விரும்பினார்கள். இளமையாக இருந்தபோது, இது ஜாலியான அனுபவமாக இருந்தது. ஆனால், வயதான பின் உண்மையான உறவுகள் இல்லாமல், பலர் மனநிலை பாதிக்கப்பட்டடு பரிதாபமாகிவிட்டார்கள். பொறுப்பேற்கத் தயாராக இல்லாமல் செக்ஸை மட்டும் அனுபவித்த இவர்களால், ஒரு தலைமுறையே அடையாளமற்ற அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல் இச்சைகளைத் தாண்டி வாழ்க்கை தொடர வேண்டியுள்ளது என்பதை மறக்காதீர்கள். அதில் அதிகப்படியாக ஆழ்ந்து போனாலும் சிக்கிக் கொள்வீர்கள். அறவே ஒதுக்கப்பட்டாலும் சிக்கிக் கொள்வீர்கள்.

உறுதியும், பொறுப்பு உணர்வும் இல்லாமல் எந்த சந்தோஷத்தையும் தேடாதீர்கள். உங்கள் வாழ்க்கை இலக்கிலிருந்து கவனம் சிதறாத அளவுக்கு அதற்கு இடம் கொடுங்கள். போதும்.

Question: நான் கடவுளிடம் பிரியமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அவர் அதை கவனித்ததாகத் தெரியவில்லையே?

சத்குரு:

உங்கள் பிரச்சினையே அதுதான். காணாதபோதுதான் காதல் கொள்கிறீர்கள். அடுத்தவேளைச் சாப்பாட்டைப் பகிர்ந்துகொள்ள ஆண்டவன் வந்துவிட்டால், உங்கள் பிரியம் நீராவி போல் காணாமல் போய்விடும்.

உங்கள் கடவுளை நீங்கள் வளர்க்கும் நாயைப்போல நினைத்துவிட்டீர்கள். நாய்க்குப் போடும் பிஸ்கட்களைப் போல் ஆண்டவனுக்கும் எதையோ எறிவீர்கள். நாயிடமாவது தூக்கிப்போட்டதைத்தான் எடுத்து வரச்சொல்வீர்கள். கடவுளிடம் 'அதைக்கொடு, இதைக்கொடு' என்று மனசுக்குத் தோன்றியதையெல்லாம் கொண்டுவரச் சொல்வீர்கள். இதன் பெயரா பிரியம்?

பக்கத்தில் இருப்பவரும் கடவுளின் படைப்புதான். அவர் வாழும் போது வெறுப்பை உமிழ்கிறீர்கள். கல்லறையில் மட்டும் கவிதை எழுதி வைக்கிறீர்கள். படைப்பின்மீது வெறுப்பைச் சொரிந்துவிட்டு, படைத்தவன் மீது மட்டும் ஆசை வைத்திருப்பதாகச் சொல்வது அவனை அவமானப் படுத்துவது போலாகும். அந்தப் பிரியத்தை அவன் எப்படி கவனிப்பான்? உங்கள் ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு செயலிலும் அன்பு இருக்கட்டும். அந்த அன்பு தானாக உங்களை ஆண்டவனிடம் கொண்டு நிறுத்தும்.

Question: மதமாற்றம் பற்றி உங்கள் கருத்து?

சத்குரு:

மனிதன் தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்வதற்கான வாய்ப்பளிக்க, அவன் உள்நோக்கி அடியெடுத்து வைப்பதற்காகவே மதங்கள் உருவாக்கப்பட்டன. தெருவில் கூவி விற்பதற்காக அல்ல. எண்ணிக்கையைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணியும் மூர்க்கத்தனத்திற்குப் பெயர் மதம் அல்ல!

'நான் நம்பும் கடவுளை நீயும் நம்பு... இல்லையென்றால், கொன்று விடுவேன்' என்று கத்தி முனையில் திணிப்பது மதமல்ல. அதேபோல, பசியும், ஏழ்மையுமாக இருப்பவர்களுக்கு உணவும், கல்வியும் கொடுப்பது உன்னதமான செயல்தான். ஆனால், சாப்பாட்டைக் காட்டித் தன் பக்கம் வரச் சொல்வது எப்பேர்ப்பட்ட ஆபாசம்?

பசித்தவனுக்கு உணவுதான் கடவுள். அதை நம்பித்தான் அவன் மதம் மாறுவானே ஒழிய, அவனுக்குப் புதிய கடவுள் மேல் விசுவாசம் வந்துவிடப் போவதில்லை. தங்கள் கடவுள் மேல் உண்மையான நம்பிக்கை இருப்பவர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வளர்ந்த பாரம்பரியம் மிக்க ஒரு கலாச்சாரத்தைத் தகர்த்துத் தன் பக்கம் கூட்டம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்த ஒரு மதத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைவிட, ஒரு கலாச்சாரத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதே மனிதனுக்கு மேன்மையானது!

beta_rokkor @ flickr