குருவிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு, அதற்கு அவர் தரும் விளக்கத்தை கேட்க ஆவலோடு காத்திருப்பது ஒரு தனி இன்பம்தான். அப்படி கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் இங்கே...

Question: எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன? நான் கேட்பது, உங்களுடைய தீர்க்க தரிசனம் என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எதிர்காலம் குறித்து முன்னரே நிர்ணயித்துக் கூறுவது மனிதகுலத்திற்கு ஏற்படுத்தும் அவமானம் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் ஒரு மனிதனின் தன்மையே, இதுவரை செய்யாத எதையும் அவனால் செய்ய முடியும் என்பதுதான். அதுதான் மனிதகுலத்தின் அழகே. இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல. இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் ஒரு விஷயமே அல்ல. ஒரு மனிதனின் மனதில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று நாளை நடக்க முடியும். எனவே சாத்தியங்களை உருவாக்குவதற்குப் பதிலாக இதுதான் நடக்கப் போகிறது, அதுதான் நடக்கப் போகிறது என்று நாம் நிர்ணயித்துக் கொண்டிருந்தால், அது மனிதகுலத்திற்கு ஏற்படுத்தும் அவமானம் என்று நினைக்கிறேன். என்ன நடக்கப்போகிறது என்பதை யாருமே முன்கூட்டி நிர்ணயிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் என்ன நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதை நோக்கி அவர்கள் செயல்பட வேண்டும், அவ்வளவுதான்.

Question: மக்கள் உங்களை ‘ஆன்மீக கிளர்ச்சியாளர்’ என்று அழைக்கிறார்கள். நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சத்குரு:

ஒரு ஆன்மீக செயல்முறை என்பது ஒருபோதும் கிளர்ச்சியானதாகவோ, கலகம் மிக்கதாகவோ இருக்க முடியாது. அது எப்போதும் உங்கள் வாழ்க்கையோடு ஒத்திசைவாகத்தான் இருக்க முடியும். ஏற்கனவே உள்ள பழைய முறைகளில் ஊறிப்போன மக்கள்தான் புதிதாக ஏதேனும் வந்தால் அதை கலகம் மிக்கதாகவோ, கிளர்ச்சி மிக்கதாகவோ உணருகிறார்கள். எல்லா மக்களும் தவழ்ந்து செல்லும்போது ஒரு மனிதன் மட்டும் எழுந்து நடந்தால், பார்ப்பதற்கு அவன் ஒரு கிளர்ச்சியாளனைப் போல அவர்களுக்கு தெரிகிறது. அப்படிப் பார்த்தால் என்னையும் கிளர்ச்சியாளன் போலவே எண்ணத் தோன்றும். ஆனால் எந்தவிதத்திலும் நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் முற்றிலும் வாழ்க்கையோடு ஒத்திசைவாய் இருப்பவன். வாழ்க்கைக்கு எதிரான கலகத்தில் எனக்கு விருப்பமேயில்லை. எனக்கு அந்த தேவையுமில்லை. மக்கள் அப்படி என்னை நினைப்பார்களேயானால் அதற்கு காரணம், ஐந்து குருடர்கள் ஒரு யானையை ஒவ்வொரு விதமாக பார்ப்பதைப் போலத்தான். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அந்த அம்சத்தை அவர்கள் இன்னும் பார்க்கவில்லை. இதை, அடிப்படையை தகர்ப்பவனாகப் பார்த்தால், ஆமாம். நான் பலவிதங்களில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் கலகக்காரனா என்றால் இல்லை. அடிப்படையைத் தகர்ப்பவர் என்றால் ஆமாம்.

Question: சத்குரு, ஏதோ ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் அதற்காக நான் இஷ்டப்படவேண்டுமா? அல்லது கஷ்டப்படவேண்டுமா?

சத்குரு:

ஏதோ ஒரு இடத்துக்கு நாம் போய் சேர வேண்டும் என்றால், ஆசைப்பட்டால் மட்டும் போய் சேர மாட்டோம். ஆசையால் நமக்கு நோக்கம் மட்டுமே வரும். இப்போது மலை ஏற ஆசைப்படுகிறீர்கள். வெறும் ஆசை உங்களை மலை மீது கொண்டு சேர்த்துவிடுமா? ஆசை நோக்கம் மட்டுமே தரும். நோக்கத்தை பூர்த்தி செய்ய நீங்கள்தான் ஏதாவது செயல் செய்ய வேண்டும். அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் ஆசை மட்டுமே போதும் என்றால் நீங்கள் உட்கார்ந்த இடத்திலேயே மனதாலேயே மகாராஜாவாகக் கூட ஆகிவிடலாம். குடிசையில் உட்கார்ந்து கொண்டே மகாராஜா ஆகிவிடலாம். இவர்கள் எங்கேயும் போய் சேர மாட்டார்கள். நாம் எதையாவது அடைய வேண்டும் என்றால் நோக்கம் வேண்டும். அதைப் பூர்த்திசெய்து கொள்ளும் திறமை வேண்டும்.

எனவே திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி என்று பார்க்காமல் ஆசையை மட்டும் வளர்த்துக் கொள்வதில் பலனில்லை. திறமையை வளர்த்துக் கொள்ளவில்லையென்றால் அவர் அப்படி ஆகிவிட்டார், இவர் இப்படி ஆகிவிட்டார் என்று புலம்பமட்டுமே செய்வீர்கள். அதே போல வெறுமனே கஷ்டப்படுவதால் மட்டுமே ஒன்றை அடைய மாட்டீர்கள். எதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாமல், அதற்கான திறமை இல்லாமல், கழுதை போல் கஷ்டப்படுவதால் மட்டுமே இலக்கிற்கு போய் சேரமாட்டீர்கள். கஷ்டப்பட்டு பல நாட்கள் செய்வதை திறமையை வளர்த்துக் கொண்டால் ஒரே நாளில் கூட முடிக்கமுடியும். எனவே நோக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு திறமைதான் மிகவும் முக்கியமானது.