ஷாம்பவி மஹாமுத்ரா - ஒரு பிரதிஷ்டை

சத்குரு: தீட்சை செயல்முறையில் பல விதங்கள் இருக்கிறது. பொதுவாக நாம் எல்லாவற்றையுமே தீட்சை என அழைத்தாலும், அவற்றில் சில உண்மையில் தீட்சை இல்லை. நமது அறிமுக வகுப்பில் வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ராவை, தீட்சை என்பதைவிட - பிரதிஷ்டை என அழைப்பதே பொருத்தமானது. நாம் மக்களை பிரதிஷ்டை செய்கிறோம். எந்த அளவீட்டின்படி பார்த்தாலும், உயிருடன் உள்ள ஒரு மனிதரை பிரதிஷ்டை செய்வதுதான், இந்த ஆதியோகி லிங்கத்தை (ஈஷா யோக மையத்தில், ஆதியோகி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆதியோகி லிங்கத்தை சுட்டிக்காட்டியபடி) போன்ற உருவங்களை பிரதிஷ்டை செய்வதைவிட மிக சுலபமானது. ஒரு ஜடப்பொருளை, கிட்டத்தட்ட அசைவுள்ள உயிராக, நுட்பமான வடிவில் பரிணமிக்கச்செய்ய பெருமுயற்சி செய்ய வேண்டியதிருக்கிறது. (ஆதியோகி லிங்கத்தை சுட்டி) இவனுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்

ஷாம்பவி மஹாமுத்ரா ஒரு சக்திமிக்க பிரதிஷ்டை செயல்முறை. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், விருப்பத்துடன் திறந்த மனதுடன் இருப்பது மட்டுமே

இந்த நிலையை இவன் அடைய நாம் பல செயல்களை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் உயிருடன் வாழும் மனிதரை பிரதிஷ்டை செய்வது சுலபமானது. மனிதர்களை பிரதிஷ்டை செய்வதில் ஒரேயொரு பிரச்சினைதான் இருக்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரெதிர் திசையில் (U turn) திரும்பிச் செல்வதில் வல்லவர்கள். முதல்முறை உங்களுக்கு ஷாம்பவி செயல்முறைக்கான தீட்சையை அளித்தபோது உங்கள் நிலையே வேறு எங்கோ இருப்பது போல் இருந்தது; அதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தீர்கள். சிலர் அதை அப்படியே சில நாட்களுக்கு, வாரங்களுக்கு, மாதங்களுக்கு தக்கவைத்துக் கொண்டார்கள். சிலர் அந்த வகுப்பில் இருந்து வெளியே வந்ததும் விட்டுவிட்டார்கள். ஷாம்பவி மஹாமுத்ரா ஒரு சக்திமிக்க பிரதிஷ்டை செயல்முறை. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், விருப்பத்துடன் திறந்த மனதுடன் இருப்பது மட்டுமே. பிரதிஷ்டை செயல்முறை உங்களில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுவிட்டது என்பதை இப்படி சொல்லலாம், கோவில் ஏற்கனவே எழுப்பப்பட்டு விட்டது, நீங்கள் அங்கே சென்று அமரவேண்டும். தினமும் அதிலிருந்து பலன்களை நீங்கள் அள்ளத் துவங்க வேண்டும், அவ்வளவுதான்.

தீட்சை - கவனித்து பார்த்துக்கொள்ள வேண்டிய விதை

ஆனால் ஷூன்ய தியானம், சக்திசலன கிரியா, சம்யமா - இவைகள் எல்லாம் தீட்சை செயல்முறைகள். இவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நிகழ்கின்றன. துவக்கத்தில், நமது அறிமுக வகுப்பே ஷூன்ய தியானத்தில் இருந்தே துவங்கியது. ஷூன்ய தியானம் ஒரு முறையான தீட்சை செயல்முறை. தீட்சை என்பது ஒரு விதையைப் போன்றது. அதை நீங்கள்தான் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் - அப்போதுதான் அது வளரும். இதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். ஷூன்ய தியானத்திற்கு தீட்சை பெற்றபோது அவர்கள் அற்புதமாக இருந்தார்கள். வீட்டிற்கு திரும்பிய பிறகு தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயிற்சி செய்தார்கள், அவர்கள் வாழ்க்கை மாறியது. அவர்கள் உடலளவில் வளர்சிதை மாற்றம் மாறியது, குறைவான தூக்கம், குறைவான உணவே போதுமானதாக இருந்தது, எல்லாமும் அற்புதமாக நிகழ துவங்கியது. ஆனால் வேறு ஏதோ ஒன்றில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். சில வாரங்களுக்கு பிறகு தியானத்தை கைவிட்டார்கள். மறுபடியும் ஷூன்ய தியானம் நினைவுக்கு வந்தது. அப்போது எதுவுமில்லை, அந்த தன்மை அவர்களை விட்டு போயிருந்தது. விதையின் தன்மை என்பது இப்படிதான். சரியாக பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் நீரூற்றி வளர்க்காமல் இருந்தால் இறந்துவிடும். நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளவில்லை என்றால் அது அப்படியே இருக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
தீட்சை என்பது ஒரு விதையைப் போன்றது. அதை நீங்கள்தான் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் - அப்போதுதான் அது வளரும்.

எனவே நாம் பிரதிஷ்டை செய்யும் ஷாம்பவியை அறிமுக வகுப்பாக முன்னெடுத்தோம். இது உங்களை விட்டுப் போகாது - உங்களிடமே இருக்கும். உங்கள் வேலை இதை சுத்தப்படுத்தி பராமரிப்பது மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சூழலையும், உடனடி அனுபவத்தையும் ஷாம்பவி உருவாக்குகிறது. நீங்கள் உண்மையிலேயே அதை நன்றாக பராமரித்தால் அந்த தன்மை தன்னைத்தானே மெருகேற்றிக் கொள்கிறது. ஆனால் ஷூன்யாவைப் போல வளராது. ஷூன்யா தியானம் வளரும் தன்மையுடையது. ஒன்றுமில்லாத வெறுமைதன்மை எப்படி வளரமுடியும்? எதுவுமற்ற வெறுமைதன்மை வளர்ந்ததால்தான் இந்த பிரபஞ்சம் பரவி விரிந்திருக்கிறது. இல்லையென்றால் நூறாயிரம் கோடி நட்சத்திரங்களோ, விண்மீன் திரள் என அழைக்கப்படும் கிரக மண்டலங்களோ இவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்காது. இந்த வெறுமை விரிவடைவதே பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த வெறுமை தொடர்ந்து எல்லையற்று விரிவடையவும் முடியும்.

வகுப்புகளில் இடையே ஏற்படும் இடையூறுகள்

ஷாம்பவி ஒரு பிரதிஷ்டை என்பதால், தீட்சை நடைபெறும்போது எதாவது இடையூறுகள் நிகழ்ந்தால் அது என்னில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம் நாம் ஒரே நேரத்தில் பத்தாயிரம் மக்களுக்கு தீட்சை அளிக்கிறோம். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக, ஒரேஒரு மனிதரை போல இருந்தால் எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால் அதில் 10 அல்லது 20 பேர் பொருத்தமற்ற எதை செய்தாலும் அது என்னை மோசமாக தாக்குகிறது. நம்மை சுற்றியுள்ள மக்கள் இதை கவனித்திருக்கிறார்கள். ஒரு சமயம் அதிர்வேட்டாக தீட்சை அளித்து திரும்புவோம். வேறொரு சமயத்தில் அது நம்மை பாதிக்கிறது. அதன்பிறகு நீங்கள் ஷாம்பவி பயிற்சியை எப்படி பார்த்துக்கொள்கிறீர்கள் என்பது பெரிதாக என்னிடம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், நாம் முதலீடு மட்டுமே செய்திருக்கிறோம். நமது முதலீடு கிடைக்காமல் போகலாம், ஆனால் எனது சக்தியின் அடிப்படை வடிவத்தில் அந்தளவு பாதிப்பு ஏற்படாது.

shambhavi-class

பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை நடத்த துவங்கியதிலிருந்து, இப்போது இது ஒரு விளையாட்டு போல நடந்து கொண்டிருக்கிறது

நாம் இப்போது பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை இதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே நிகழ்த்துகிறோம். முன்பு ஒரு சமயத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள சத்திரங்கள், திருமண மண்டபங்கள் என எந்த இடம் கிடைத்தாலும் அங்கே பாவ-ஸ்பந்தனா நிகழ்ந்திருக்கிறது. முந்தைய நாள் அந்த இடத்தில் ஏதாவது திருமணமோ, விருந்தோ நடந்திருக்கும். காலையில் நம் தன்னார்வத் தொண்டர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் துவங்குவார்கள். மாலையில் நாம் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை துவங்குவோம். இதுபோன்ற இடங்களில் நமக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் எலுமிச்சை அளவு கட்டிகள் என் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்டுவிடும். சிலசமயங்களில் அவை அகல்வதற்கு பல நாட்கள் தேவைப்படும். ஆனால், நாம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியை நடத்த துவங்கியதிலிருந்து, இப்போது இது ஒரு விளையாட்டு போல நடந்து கொண்டிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக தயார் செய்யப்படாத இடங்களில் பாவ-ஸ்பந்தனா நிகழ்கிறது என்றால் அது வேறுவிதமான விளையாட்டு.

பிரதிஷ்டை நிகழ்த்தும் போது...

ஆதியோகி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது போல நாம் பிரதிஷ்டை செயல்முறையை நிகழ்த்த முயற்சிக்கும்போது பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அப்போது பிரதிஷ்டையில் கலந்துகொண்ட 14,000 பேரும் இங்கே ஒரே ஒருவர் போல இருந்தார்கள். இன்றும்கூட அவர்களை நான் வணங்குகிறேன். இதுவரை நாம் சந்தித்த அதிசயமான, அற்புதமான மக்கள் கூட்டம் அது. நாம் இப்படி சொல்வதற்கு ஒரு குறிப்பிட்ட காரணமும் இருக்கிறது. பிரதிஷ்டை செயல்முறையின் பெரும்பகுதியை மிகச்சிலருடன் தனிமையில் நிகழ்த்த முடிவு செய்திருந்தேன். ஆனால், போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை. இடைவிடாது நிகழ்ச்சிகள் இருந்ததால், பிரதிஷ்டைக்கு ஒருசில நாட்கள் இருக்கும் போதுதான் நான் ஆசிரமத்திற்கே வர முடிந்தது. இவ்வளவு மக்கள் கூட்டத்தின் முன் எப்படி இந்த பிரதிஷ்டைக்கான செயல்முறைகளை நிகழ்த்துவது என்பது சற்று யோசனையாகவே இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் பொது இடத்தில் குழுமியிருப்பவர்கள் போலவே இல்லை. அந்த சூழ்நிலையில் இருந்த பதிநான்காயிரம் பேரும் கிட்டத்தட்ட நான் ஒரே ஒருவருடன் இருப்பது போலவே இருந்தார்கள். மக்கள் இப்படி இருந்தால், நாம் அற்புதமான செயல்களை நிகழ்த்த முடியும்.

பதிநான்காயிரம் பேரும் கிட்டத்தட்ட நான் ஒரே ஒருவருடன் இருப்பது போலவே இருந்தார்கள். மக்கள் இப்படி இருந்தால், நாம் அற்புதமான செயல்களை நிகழ்த்த முடியும்.

லிங்கபைரவி பிரதிஷ்டையின் பெரும்பாலான செயல்முறைகளை நாம் குறிப்பிட்ட ஒருசில மக்களுடன் மட்டுமே மேற்கொண்டோம். ஆனால், நமக்கு தேவையான ஒழுங்குமுறையை அப்போது ஏனோ உருவாக்க முடியவில்லை. முழுவீச்சில் பிரதிஷ்டை செயல்முறையில் நான் ஈடுபடும்போது, சுற்றியிருந்த சிலர் அங்குமிங்கும் சில வேடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் என் நுகரும் திறனையும், சுவையுணர்வையும் தொலைத்தேன். எனது நுகரும் திறன் மிகவும் கூர்மையானது, எனது சுவையுணர்வும் மிக நுட்பமானது. ஆனால் அடுத்த பதினெட்டு மாதங்கள் உணவை ஏதோ பிளாஸ்டிக் போன்ற ஒரு வஸ்துவை உட்கொள்வது போன்ற உணர்வுடன் உட்கொள்ள வேண்டியதானது. என்ன சாப்பிடுகிறோம் என்பதும்கூட தெரியவில்லை. சத்துக்களுக்காக ஏதோ ஒன்றை உட்கொண்டேன். மேலும் பலவும் நடந்தது. கிட்டத்தட்ட மூன்று முறை எனது இடது பக்கமாக விழுந்துவிட நேர்ந்தது -ஒருமுறை குறிப்பிடத்தக்க காயம் ஏற்பட்டாலும், மற்ற இரண்டு முறையும் தப்பி விட்டேன். அந்த பாதிப்பும்கூட இப்போது போதுமான அளவுக்கு சரிசெய்யப்பட்டிருக்கிறது.

linga-bhairavi-consc

எல்லாமே நாம் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. சமீபத்தில் ஒருவர் நம்மிடம், "எதற்கு இத்தனை விதமான வடிவமைப்புகளில் யோகா வகுப்புகள் வழங்கப்படுகிறது" என கேட்டார். ஒவ்வொரு விதமான வடிவமும் பாதுகாப்புக்காகவே. பெற்றுக்கொள்பவர்கள், வழங்குபவர்கள் இருவருக்குமேதான். ஒரு குறிப்பிட்ட வடிவில் கொடுக்கும்போது, அதை அவர்கள் அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் அல்லது அப்படியே அதை தூக்கி எறிந்து விடவும் முடியும் - பெற்றுக்கொள்பவர்களின் விருப்பம் அது. ஆனால் வடிவமைப்பைத் தாண்டிய, சக்தி வெள்ளம் கரை புரளும் செயல்முறையில் ஈடுபடும்போது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை தேவை. இல்லையென்றால் அவர்களின் முட்டாள்தனம் உங்களை பாதித்து விடலாம் - அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அங்குமிங்கும் நாம் அதற்கான விலையைக் கொடுத்திருக்கிறோம். ஆனால், நம்மை சுற்றிலும் உள்ள உயிர்கள் மலர்ந்து நிற்கும் அற்புதத்தை பார்க்கும்போது, இந்த விலையை கொடுத்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆசிரியர் குறிப்பு: உங்கள் இடத்திற்கு அருகாமையில் நடைபெறும் ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சையினைப் பெறுங்கள். இங்கே மேலும் தகவல்கள் அறியலாம்.