நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே ஆசைகளாக உருவெடுப்பதில்லை! எனில், ஆசை எப்படி உருவாகிறது? ஆசைக்கும் எண்ணத்திற்கும் என்ன வித்தியாசம்? ஆசைப்படாமல் இருப்பது எப்போது சாத்தியமாகும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது இப்பதிவு!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, நான் சுதந்திரமாய் இருக்க விரும்புகிறேன். ஆனால் என்னுடைய இந்த ஆசை அதிகமாக ஆக ஆக, அந்த சுதந்திரத்தை அடைவது மிகக்கடினமாகத் தோன்றுகிறதே, ஏன்?

சத்குரு:

பலருக்கு சுதந்திரம் என்பது உடலளவிலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. வேலையில் இருந்து, குடும்பத்தில் இருந்து, இன்னும் பற்பல கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவதே பலருக்கும் சுதந்திரமாகத் தோன்றுகிறது. ஆனால் ‘விடுதலை பெற வேண்டும்’ என்பது கூட ஒருவகையில் உங்களை அடிமைப்படுத்தும் ஒரு விஷயம்தான். ஆசை என்பதே கூட உங்களை அடிமைப்படுத்தும் விஷயம்தான். ஆசை முளைக்கும் அந்தக்கணமே, அதனோடு சேர்ந்து ஒரு பிணைப்பும் முளைக்கிறது. நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும், உங்கள் ஐம்புலன்களால் நீங்கள் உணரும் ஒவ்வொன்றும், ஏதோ ஒரு வகையில், உங்களுக்குள் ஒரு எண்ண ஓட்டத்தை உண்டு செய்கிறது.

‘நான் இங்கு இருக்கிறேன். அங்கு வேறொன்று இருக்கிறது. அதை நான் அடைந்தால் அல்லது அது எனக்குக் கிடைத்தால், நான் முழுமையாகிவிடுவேன். அந்த இலக்கை நான் அடைந்துவிட்டால் நான் முழுமையாகிவிடுவேன்.’ ஆசையின் அடிப்படையே இது தான்.

இப்போது ஏதோ ஒரு அழகான பொருளை நீங்கள் காண்கிறீர்கள், உதாரணத்திற்கு ஒரு அழகிய காரைக் காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்: ‘ஓ! என்ன அழகாக இருக்கிறது’ என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறது. இந்த எண்ணம் தோன்றுவதற்கும், அந்த எண்ணமே அந்தக் காரை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஒரு ஆசையாக உருவாவதற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருக்கிறது. ஒரு எண்ணம் என்பது இயல்பாகவே எழுவது. இந்த ஐம்புலன்கள் தொடர்ந்து வேலை செய்வதாலும், பலவற்றை உள்வாங்கிக் கொண்டே இருப்பதாலும் எண்ணம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த எண்ணத்தை, விழிப்புணர்வின்றி, ஒரு ஆசையாக மாற்றிக்கொள்வது நாம்தான்.

அந்த எண்ணம் ஆசையாய் உருவெடுத்தவுடன், அதை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உந்துதலும் கூடவே பிறக்கிறது. உங்களிடம் அப்போது ஒரு முழுமையற்ற உணர்வு நிலவுகிறது. ஆசை என்பதின் பொருளே நீங்கள் முழுமையற்று இருக்கிறீர்கள் என்பதுதான். ஆசை என்பதே இதுதான்: ‘நான் இங்கு இருக்கிறேன். அங்கு வேறொன்று இருக்கிறது. அதை நான் அடைந்தால் அல்லது அது எனக்குக் கிடைத்தால், நான் முழுமையாகிவிடுவேன். அந்த இலக்கை நான் அடைந்துவிட்டால் நான் முழுமையாகிவிடுவேன்.’ ஆசையின் அடிப்படையே இது தான்.

ஒவ்வொரு அடியிலும், ஆசை ஒரு பிரமையை உருவாக்குகிறது: ‘இது எனக்குக் கிடைத்தால், போதும், வேறொன்றும் தேவையில்லை’. அந்த ஆசையைப்பற்றி நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்றாலும், இதுதான் ஆசையின் அடிப்படை என்பதை தயவுசெய்து பாருங்கள். இது ஒரு ஏமாற்று வேலை. ஆனால் இந்த ஏமாற்று வேலை உங்கள் வாழ்க்கை முழுவதிற்கும் தொடர்கிறது, நீங்கள் தொடர்ந்து ஆசைபட்டுக் கொண்டே போகிறீர்கள். ஏன், மரணப்படுக்கையில் படுத்திருக்கும்போதும் கூட மனிதர்கள் ஆசை கொள்கிறார்கள். இதற்குக் காரணம்... ‘இது மட்டும் நிறைவேறிவிட்டால், எல்லாமே சரியாகிவிடும்’ என்று நம்பவைக்கும் அதன் சூழ்ச்சி வலைதான். ‘எல்லாமே சரியாகிவிடும்’ என்ற உணர்வே உங்களைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சூழ்ச்சிதான் தொடர்ந்து உங்களை ஆசையின் பின்னால் ஓட வைக்கிறது.

ஆனால் ஒரு எண்ணம் ஒரு ஆசையாய் உருவெடுப்பதற்கு முன்னால் ஒரு இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை ஒருவர் உணர்ந்துவிட்டால், ஆசைகள் முழுவதுமாய் மறைந்துவிடும். அதன்பின், அங்கிருந்து நீங்கள் நகரவேண்டுமெனில், ‘இங்கிருந்து நான் செல்லவேண்டும்’ என்ற ஆசையை, விழிப்புணர்வுடன் நீங்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். மற்றபடி எதைச் செய்வதற்கும் எந்த அவசரமும் தேவையில்லை. இங்கு வெறுமனே இருப்பதே போதுமானது. உண்மையில், வெறுமனே இருப்பதே போதுமானது, வேறெங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை.