கேள்வி: ஆன்மீக பாதையில் நான் நிறைய குழப்பங்களை சந்திக்கிறேன். இந்த குழப்பத்தை நான் எப்படி சமாளிப்பது அல்லது எந்த குழப்பமும் இல்லாத ஒரு இடத்தை எப்படி அடைவது?

சத்குரு: ஆன்மீக பாதையில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். நீங்கள் ஒரு "இடம்" என்று தீர்மானிக்க ஆரம்பித்த அந்த நொடி முதல் உங்கள் மனம் ஒரு இடத்தை உருவாக்கும். அதை உங்களுக்கான சொர்க்கமாகவே ஆக்கிவிடுவீர்கள்.

ஆன்மீக பாதை என்பது நீங்கள் உருவாக்கும் மாயையின் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்வது அல்ல. மாயை முழுவதையும் அழித்து விட்டு வாழ்க்கையை யதார்த்தமாக வாழ்வது. ஏனென்றால், இந்த முயற்சி உண்மையை பற்றியது.

உண்மை என்பது யதார்த்தமாக இருப்பதே அன்றி நீங்கள் மனதின் மூலம் உருவாக்குவது அல்ல. நான் என் மனதில் ஒரு கடவுளையோ அல்லது ஒரு பிசாசையோ கூட காணலாம். இரண்டுமே தேவையில்லை. உங்கள் கலாச்சாரத்தில் சொல்லிக்கொடுத்ததை சார்ந்துதான் உங்கள் நம்பிக்கையும் இருக்கிறது. சிலருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, சிலருக்கு இல்லை. சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள், சிலர் கடவுள் இல்லை என்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் ஒரு மனிதரை பார்க்கும்போது அவரினுள் கடவுள் அல்லது பிசாசு இருப்பதை பார்க்கலாம். ஆனால் உண்மை என்பது அதுவல்ல. உண்மை என்னவென்றால் எதற்காக இங்கே பிறந்தோம், எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால், இங்கே இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. அதுதான் உங்கள் வாழ்க்கையின் உண்மை நிலை.

எதையும் நம்பாமல்

சில மதங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை மனிதர்களின் மனதில் விதைக்கின்றன. நம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு ஏற்படும் மோசமான விஷயம். இப்போது நிலைமை மோசமாக இருந்தாலும் பரவாயில்லை என்று எதிர்காலத்தை பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். நான் மிகவும் நல்லவன், ஆனால் இப்பொழுது ஏழையாக இருக்கிறேன். ஆனால் நான் சொர்க்கத்திற்கு சென்ற பிறகு, கடவுளுடைய மடியில் உட்கார்ந்துகொள்வேன்." இதைத்தான் நான் நம்பிக்கை என்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு யாராவது நம்பிக்கை கொடுத்துவிட்டால், நீங்களே இல்லாத பலவற்றை உருவாக்கிக் கொள்வீர்கள். நம்பிக்கை பொய்களை உருவாக்கும் ஒரு வழி. நீங்கள் நம்பிக்கை எதுவும் இன்றி ஆனந்தமாக இருந்தீர்களேயானால் அதுவே சிறந்தது. எது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று இருந்தால், கொஞ்ச நாளில் உங்களுக்கு நம்பிக்கை என்பதே தேவை இல்லாதது என்று தோன்றும். ஏனென்றால், உங்களுக்குள்ளே இருக்கும் உன்னதத்தை உணர்ந்துவிட்டீர்கள்

நேர்மறை எதிர்மறை, நல்லது கெட்டது, கடவுள் பிசாசு, சொர்க்கம் நரகம் போன்ற எதையும் நீங்களாக உருவாக்காமல், இருக்கும் நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

நிதர்சனத்தில் வாழ்வது என்பது மிக முக்கியமான விஷயம். அனைத்தையும் உங்கள் மனதினால் சிதைத்து பார்க்காமல் உள்ளதை உள்ளபடி பார்த்தால் முக்தி என்பது மிக நெருக்கத்தில் இருக்கும் அடுத்தபடியாகும். நீங்கள் எதுவும் செய்யாமலே காலம் உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு சேர்க்கும்.

நேர்மறை எதிர்மறை, நல்லது கெட்டது, கடவுள் பிசாசு, சொர்க்கம் நரகம் போன்ற எதையும் நீங்களாக உருவாக்காமல், இருக்கும் நிலைக்கு நீங்கள் வரவேண்டும். ஏனென்றால், அப்படி ஒன்றுமே இல்லை. இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி பார்க்கும் நிலையை எட்டினால் அதுவே போதும். சில நேரங்களில் சில செயல்களை மேற்கொள்ள, இந்த உருவாக்கம் தேவைப்படும். ஆனால், மற்ற நேரங்களில், உள்ளது உள்ளபடி பார்த்தாலே போதுமானது.

அடுத்தது: உண்மை!

நீங்கள் உள்ளதை உள்ளபடி பார்த்தால் வாழ்க்கை இந்த வடிவத்திலோ வேறு வடிவத்திலோ இல்லை என்று உங்களுக்கு புரியும். அது பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கும். "இது வாழ்க்கை, இது வாழ்க்கை அல்ல, இது உயிருள்ளது, இது உயிரற்றது, இது ஆண், இது பெண்” என்று நீங்கள் எதனுடனும் அடையாளப்படுத்தி கொள்வதை நிறுத்திவிட்டால், இது ஒரு உயிருள்ள பிரபஞ்சம் என்பதை உணர்வீர்கள். உள்ளதை உள்ளபடியே பார்ப்பீர்கள்.

நீங்கள் உள்ளதை உள்ளபடி பார்த்தால் வாழ்க்கை இந்த வடிவத்திலோ வேறு வடிவத்திலோ இல்லை என்று உங்களுக்கு புரியும். அது பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கும்...உள்ளதை உள்ளபடியே பார்ப்பீர்கள்.

நீங்கள் இந்த உயிருள்ள பிரபஞ்சத்தில் இருக்கும்போது, வாழ்க்கை வேறு விதமாக இருக்கும். அது அழகானது; அசிங்கமானது என்று இருப்பதில்லை. இப்படி அப்படி என்று இல்லாமல் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும். அனைத்தும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான் இருக்கும். உங்கள் மனம்தான் எல்லாவற்றையும் சிதைக்கின்றது. அதனை நீங்கள் நிறுத்திவிட்டு உள்ளதை உள்ளபடி பார்த்தால், வாழ்க்கை வெள்ளமென நிகழ்வதை காண்பீர்கள். நீங்கள் கோடி வருடம் இங்கு வாழ்ந்தாலும், அதனை தீவிரத்துடன் கிரகித்துக்கொண்டே இருப்பீர்கள்.

நவீன அறியாலாளர்களும் கூட இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் போவதாக குறிப்பிடுகின்றனர். எதற்கும் ஒரு முடிவென்பது இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். தற்போது நவீன அறிவியல் படிப்பவர்கள் இதை சொல்வது கொஞ்சம் விசித்திரமாகத்தான் உள்ளது. ஆனால் இதுவரையில் அவர்கள் பார்த்துவந்த விதத்தில் தவறுள்ளதாக அவர்களே உணர தொடங்கியுள்ளனர்.

எனவே, இனி இதுதான் முடிவு என்ற பேச்சுக்கு இடமே இல்லை. ஒருவேளை "இதுதான் முடிவு" என்று வந்துவிட்டால், அப்புறம் என்ன செய்வீர்கள்? நீங்கள் உண்மையின் இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அதன்பின் ஏது முடிவு? முடிவு என்பது உங்களின் மனதில் வேண்டுமானால் எழலாம், ஆனால் அது நிஜமில்லை. முடிவு என்பது மனதின் இயல்பு. நான் ஒன்றை முடித்துவிட்டு ஓ.. நான் இதை முடித்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்ளலாம். வாழ்க்கை என்பது எல்லையற்ற சாத்தியம். அதனால்தான் அது அழகாக இருக்கிறது.