சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலில் உள்ள கருத்தும், பொருளின் ஆழமும் எப்போதும் நம்மை சிந்திக்க வைப்பதாகவே இருக்கும். அப்படி கேட்கப்பட்ட கேள்விகள் சில இங்கே...

Question: ஒருவர் ஆன்மீகப் பாதைக்கு வந்தால், அவர் திறமையற்றவராகி விடுவாரா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஆன்மீகம் என்பது உள்வழி பயணம். அதற்கும் வெளியே நீங்கள் செய்யும் செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை. வெளிச்செயல்களை உங்கள் பகுத்தறியும் அறிவின்படி நடத்துகிறீர்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் நடத்தும்விதம், வேலையை கையாளும் விதம் எல்லாம் உங்கள் புத்திக்கூர்மையைப் பொருத்தே அமையும். அதற்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டால் மலைக்குகைக்கு செல்ல வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. நீங்கள் மலைகளில் அமைதியாக உணர்ந்தால், அது உங்களுடைய அமைதியாக இருக்க வாய்ப்பில்லை, அது மலைகளின் அமைதி. உங்களால் சந்தையிலும் அமைதியாக இருக்க முடியுமென்றால், அது உங்கள் அமைதி. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் ஒரு வங்கி மேலாளராக இருக்கலாம், குடும்பத் தலைவியாக இருக்கலாம், கசாப்பு கடைக்காரராகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும் ஆன்மீகத்தை உங்களுக்குள் மட்டுமே நாடிச் சென்று மேற்கொள்கிறீர்கள். இதனால், நீங்கள் வெளிப்புறத்தில் செய்யும் எந்தவொரு செயலும் பாதிப்படைய போவதில்லை என்பதே நிஜம்.

Question: ஆன்மீகத்தில் உள்ளவர்களது வாழ்க்கை, போராட்டம் நிறைந்ததாய் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், எதனால்?

சத்குரு:

இது பலபேர் என்னிடம் கேட்கும் பிரபலமான கேள்வி. இந்தக் கேள்விக்கான அடிப்படை, நீங்கள் சில விஷயங்களை நல்லவையாகவும் வேறு சில விஷயங்களை கெட்டவையாகவும் பார்ப்பதுதான். “எனக்குப்போய் இதெல்லாம் நடக்கிறதே” என்று நீங்கள் நொந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகப்பாதைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டால் வாழ்க்கை தன் முழு வேகத்தில் நடக்கத் துவங்கும். இது நல்லது, இது கெட்டது என்று எதனுடனும் நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் இந்த உலகில் கெட்டதும் நிகழவில்லை, நல்லதும் நிகழவில்லை, இங்கு வெறும் உயிர் மட்டுமே நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒருசிலர் இதனை சந்தோஷமாக எதிர்கொள்கிறார்கள், வேறுசிலரோ அவதிப்படுகிறார்கள். ஆனால், இதனை நீங்கள் சந்தோஷமாய் எதிர்கொள்வதற்குத்தான் ஆன்மீகப் பாதை. அருள் என்னை இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொள்ள நினைக்கிறது என்று சொல்வது எதிர்மறையாய் பேசும் ஒரு செயல். அதையே நேர்மறையாய் சொல்லப் போனால், இந்தப் பூமி உங்களைத் தழுவத் துடிக்கிறது, தென்றல் உங்களை குளுமைப்படுத்துகிறது, சூரியன் உங்களை கதகதப்பாக்குகிறது, அருள் உங்களை வளர வைக்கிறது என்று சொல்லலாம். நீங்கள் தற்சமயம் வாழும் கட்டுப்பாடுகளிலிருந்து அருள் உங்களை இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அதனால், நீங்கள் அருளை அழைத்துவிட்டால், அது தன் வேலையைச் செய்யத் துவங்கிவிடும். அருளிற்கு நீங்கள் நங்கூரம் இட்டால், அது உங்களை மேலிழுக்க, நீங்கள் அதற்குத் தடைபோட்டு கீழ் இழுக்க அது சரிப்பட்டு வராது. ஆன்மீகத்தால் உயிர் நிகழ்ந்தால் எனக்கு மகிழ்ச்சி. போராட்டம் நிகழ்ந்தால், நீங்கள் எதிர்வினை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

Question: மார்க் ட்வெயின், இந்தியாவைப் பற்றி உயர்வாக பேசக் கேட்டிருக்கிறேன். உங்கள் கருத்தென்ன?

சத்குரு:

பாரதம் பல தேசத்தவர்கள் நாடி வந்த வளம் கொழித்த பூமி. அப்படி நம் நாட்டை தேடி வந்த அமெரிக்கர் மார்க் ட்வெயின். முதலில் ஸ்ரீலங்காவில் கால்தடம் பதித்த அவர், பின்னர் அப்படியே தென்னிந்தியாவிற்குள் வந்து மெல்ல மேல்நோக்கி பயணம் செய்து, நமது தேசம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இங்கிருந்து விடைப் பெற்றுச் சென்ற அவர், ஒரு புத்தகம் ஒன்றை எழுதினார். அதன் பெயர் Following the Equator என்று ஞாபகம். “மனிதனால், கடவுளால் எதையெல்லாம் உருவாக்க முடியுமோ அவை அனைத்தும் இந்தத் தேசத்தில் உருவாக்கப்பட்டுவிட்டன” என்று அந்தப் புத்தகத்தில் பதித்துச் சென்றார். இந்தியா பெற்றுள்ள உயர்ந்தபட்ச பாராட்டு இது. இந்த கலாச்சாரத்தில், மனிதனையும் அவன் இயங்கும் விதத்தினைப் புரிந்துகொண்டதைப் போல் வேறெந்த கலாச்சாரத்திலும் புரிந்துகொள்ளவில்லை. நான் இந்தியாவில் பிறந்ததால் இதனைச் சொல்லவில்லை. அப்படி முதிர்ச்சி பெற்ற கலாச்சாரம் இது, அதனால் சொல்கிறேன். இமாலயமாய் உயர்ந்திருந்த நம் அறிவு இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்திருப்பது வருத்தமளிக்கும் உண்மை. ஒரு தொலைபேசி அழைப்பில் எங்கோ அமெரிக்காவில் அமர்ந்திருக்கும் ஒருவருடன் பேசத் தெரியும் நமக்கு, இந்த உயிருடன், நம்முடன் எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறையும், தகவல் பரிமாற்றத் துறையும் அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது, இருந்தும் மனிதன் தன் படைப்பின் ஆழத்தை உணர்ந்து கொண்டுள்ளானா என்றால், இல்லை என்பதே பதில்.