பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு "முக்தி" என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் - மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் - அவர்தான் ஷிவா.

பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி - முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

யோகக் கலாச்சாரத்தில் ஷிவா என்பவர் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தை பிறப்பித்தவராக அறியப்படுகிறார். மனித மனத்தினுள் முதன்முதலாக இந்த விதையை விதைத்தவர் அவர்தான். யோக மரபின்படி 15,000 ஆண்டுகளுக்கும் முன்பாக ஷிவா பூரண ஞானமடைந்து, மிகத் தீவிரமான பரவச நிலையில், இமயமலையிலே பேரானந்த தாண்டவத்தில் மூழ்கிப் போனார். அவரின் பரவசம் எப்பொழுதெல்லாம் அவர் அசைந்திடும்படி அனுமதித்ததோ, அப்பொழுதெல்லாம் அவர் கட்டுக்கடங்காத தாண்டவ ரூபமாக வெளிப்பட்டார். அந்த பரவசம் மிகுந்து அசைவையும் தாண்டியபோது, அசைவற்ற நிஷ்சல ரூபமாக வெளிப்பட்டார். இதைக் கண்டவர்கள், அதுவரை எவருமே உணர்ந்திராத ஏதோ ஒன்றை, தங்கள் அறிவுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை, இவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர!

ஆர்வம் இப்படியே வளர வளர இது என்னவென்று உணர்ந்திட விரும்பினார்கள்; வந்தார்கள், காத்திருந்தார்கள், கிளம்பிச் சென்றார்கள். ஏனென்றால், இந்த மனிதர் தன்னைச் சுற்றி பலர் இருப்பதை துளியும் கவனிக்கவில்லை. ஒன்று தீவிரத் தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை, இப்படியே இருக்கிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர! இவர்கள் ஏழு பேரும் அந்த மனிதனுக்குள் பொதிந்துள்ள பொக்கிஷத்தை எப்படியாவது தாங்களும் கற்றிட வேண்டும் என்று விடாப்பிடியாக தங்கி இருந்தனர்.

ஆனால் ஷிவா, அவர்களை முழுமையாக புறக்கணித்தார். அவர்கள் கெஞ்சினார்கள். "தயவு செய்து அருளுங்கள்! நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம்!," என்று மன்றாடினார்கள். ஷிவாவோ, "மூடர்களே! நீங்கள் இப்போது இருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர மாட்டீர்கள், இதற்கு மாபெரும் அளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கேளிக்கை கிடையாது" என்று நிராகரித்தார். ஆகவே அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாகி, வருடங்களாயின. அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஷிவாவோ அவர்களை பொருட்படுத்தவே இல்லை. இப்படியே 84 வருடங்கள் சென்றுவிட்டது. ஒரு நாள், பௌர்ணமியன்று சூரியனின் 'கதிர் திருப்பம்' உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறிய பின்பு, ஆதியோகி இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்கள், ஞானத்தை ஏந்திக்கொள்ள தகுதியுடைய கலங்களாக, அருட்களஞ்சியத்தை உள்வாங்க முற்றிலும் பழுத்தவர்களாக, மிளிறுவதை கவனித்தார். அவரால், அவர்களை அதற்கு மேலும் புறக்கணிக்க இயலவில்லை. அவர்கள் அவரது கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.