ஆகஸ்ட் 31, 2000 ல் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த, மத மற்றும் ஆன்மிக தலைவர்களுக்கான நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை.

வறுமையும் அதன் தீர்வுக்கான அவசியமும்

சத்குரு: எந்த ஒரு சமுதாயத்திலும் வறுமை ஒரு ரணம். அது ஒரு மனிதனை வாழும் ஜடப்பொருளாய்க் குறைத்துவிடும். தன் ஆதிக்கத்தை பரப்பிடும் ஆயுதமாய் வறுமையை யாரும் பயன்படுத்தக்கூடாது. உண்மையிலேயே பசி, பட்டினியில் வாடும் மக்களின் மீது நமக்கு அக்கறை இருந்தால்... நம் செயல் ஆணவத்தால் அன்றி கருணையால் வெளிப்படுகிறது என்றால், உள்ளூர் மதஅமைப்புகள் மூலம் நாம் செயல்பட வேண்டும். அவ்வாறின்றி 'வறுமையை ஒழிக்கிறோம்' என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரத்தை வேரோடு அழித்து, அவர்களை இன்னும் ஏழைகளாக்கிட வேண்டாம்.

இங்கு நாம் வறுமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்த அரங்கிலோ 'சுற்றுச்சூழல் பாதிப்பு' பற்றிய ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. 'எது வறுமை? எது வளமை?' என்று யார் தீர்மானிப்பது? மேற்கத்திய நாட்டின் வாழ்க்கைத்தரத்தைப் பின்பற்றி, அதே வளமையை 600 கோடி மக்களுக்கும் வழங்க நினைத்தால் இவ்வுலகம் நிச்சயம் அழிந்துபோகும்.

முன்னேற்றம், வளர்ச்சி என்றால் நவீன கோட்பாடின்படி அல்ல. இதை விவேகத்தோடு நாம் அணுகவேண்டும். எந்த ஊரில் வறுமையை ஒழிக்க நினைக்கிறோமோ, அந்த ஊரைப் பற்றி நன்கறிந்து, அவ்வூரின் கலைகள், கைத்திறன், வேலைப்பாடு ஆகியவற்றை வளர்த்து, அதன்மூலம் இதை நிகழச் செய்யவேண்டும். நவீன கோட்பாடின் படி வளர்ச்சியும் முன்னேற்றமும் காண நினைத்தால், நம் தேவைகளுக்கு இப்பூமி போதாது. வளம் காண்கிறேன் என்ற பெயரில் இப்பூமியை நாம் அழித்துவிடுவோம்.

இந்த ஐக்கிய நாடுகளின் சபை மூலமாக நாம் செயல்படுத்தக்கூடிய ஒரு வலுவான படி, உலக மதங்கள் அனைத்தையும் ஒப்பிட்டு ஆராயும் பாடத்தை, உலகின் அனைத்து கல்வி முறைகளிலும் நாம் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுத்திறன் கொண்டு, தன் பாதையை தானே சுதந்திரமாய்த் தேர்ந்தெடுக்க முடியும்.