ஒவ்வொருவரும் சத்குருவை ஒவ்வொரு விதத்தில் உணர்வார்கள். சிலருக்கு அவர் குரு, சிலருக்கு ஞானி, சிலருக்கு யோகி, வேறு சிலருக்கு நண்பர், வழிகாட்டி, கவிஞர், கட்டிடக்கலை நிபுணர்…. என இன்னும் பற்பல முகங்கள், பற்பல பரிமாணங்கள்! இதையெல்லாம் தாண்டி அவர் ஒரு கணவர், தந்தையும் கூட!

எல்லோராலும் விஜி என்று வாஞ்சையாக அழைக்கப்பட்டவர் சத்குருவின் மனைவி விஜயகுமாரி. சாமுண்டி மலையில் ஞானோதயம் அடைந்த சத்குரு, அதற்கு இரண்டு வருடம் கழித்து, மைசூரில் முதன்முதலாக விஜி அவர்களைச் சந்தித்தார். மைசூரில் ஒரு மதிய உணவு அழைப்பிற்கு விருந்தினராகச் சென்றிருந்த இடத்தில், இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. அதன்பின் இவர்கள் கடிதம் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டார்கள். மனம்விட்டு நிகழ்ந்த இந்த பரிமாறல்களுக்குப் பின், ஒரு மங்களகரமான மஹாசிவராத்திரி நாளன்று, 1984ல் இவர்களின் திருமணம் நடந்தது. சத்குருவின் யோகா வகுப்புகள் எப்போதும் போல் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது. தென்னிந்தியாவில் பல இடங்களில் அவர் இடைவிடாது வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். விஜியோ ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவ்வப்போது சத்குருவுடன் பயணம் செய்து, சத்குருவின் வகுப்புகளில் அவர் தன்னார்வத் தொண்டும் செய்தார்.

1990ல் சத்குருவுக்கும் விஜிக்கும் ராதே என்றொரு மகள் பிறந்தாள். இதைப் பற்றி சத்குரு சொல்லும்போது: "குழந்தை வேண்டும் என்பதில் விஜி மிக உறுதியாக இருந்தாள். அவளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணிற்கும், 'தாய்மை அடைவது' என்பது மிக முக்கியமான, அவசியமான ஒரு அனுபவம். இதில் என் விருப்பம் என்று பார்த்தால்... எனக்கு 19 வயதாகும்போது எனக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடோ... அதைப் பற்றிய எண்ணமோ துளியும் இருக்கவில்லை. அந்நேரத்தில்தான் ஆந்திர மாநிலத்தின் ரிஷி வேலியில் (Rishi Valley) ஜெ. க்ருஷ்ணமூர்த்தி ஆரம்பித்திருந்த பள்ளியைக் காண நேர்ந்தது. அப்பள்ளியைப் பார்த்த எனக்கு, “எனக்கு மட்டும் குழந்தை என்று பிறந்தால் அவளை... ஏனோ எனக்கு அவள் என்றே தோன்றியது... அவளை இப்பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும்" என்று தோன்றியது.

அதன் பிறகு, ராதே பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் நானும் விஜியும், இந்திய பாரம்பரிய நடனங்களுக்கு பெயர்பெற்ற கலாக்ஷேத்ராவிற்குச் சென்றிருந்தோம். அதைப்பார்த்தபோது, எங்களுக்கு மட்டும் மகள் பிறந்தால், அவளை கலாக்ஷேத்ராவிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தோம். அதற்குப் பிறகு அதைப் பற்றி நாங்கள் நினைக்கவே இல்லை. ஆனால் ராதே பிறந்தபோது, அவள் ரிஷி வேலி பள்ளியில் 8 வருடமும், அதைத் தொடர்ந்து கலாக்ஷேத்ராவில் நான்கு வருடமும் பயின்றாள். இன்று அவளொரு நாட்டியக் கலைஞராக வளர்ந்திருக்கிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல, சத்குருவின் கவனம் முழுவதும் தியானலிங்கத்தை பூர்த்தி செய்வதிலேயே இருந்தது. இந்த செயலில் விஜியும் முழுமையாக ஈடுபட்டிருந்தார். சத்குருவின் வார்த்தைகளில், "1996 ம் வருடம் ஜூலை மாதம் அது. தியானலிங்கப் பிரதிஷ்டையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போதுதான் தியானலிங்கப் பணிகள் முடிவடைந்ததும், தன் உடலைத் துறக்கப்போவதாக விஜி முடிவெடுத்தாள். ஒரு பௌர்ணமியைக் குறிப்பிட்டு, அன்றைய தினத்தில் தன் உடலைத் துறக்கப்போவதாக அவள் அறிவித்தாள். அதற்குத் தேவையான வகையில் தன்னைத் தயார் செய்துகொள்ளவும் ஆரம்பித்தாள். இம்முடிவை மாற்றிக்கொள்ளுமாறு நான் அவளை வலியுறுத்தினேன். “இப்போது இதற்கான அவசியம் என்ன இருக்கிறது..? இன்னும் சிறிது நாள் பொறுத்திரு” என்று கூறினேன். ஆனால் அவளோ, ‘இதுதான் எனக்குச் சரியான நேரம். என் வாழ்வில் இப்போது நான் ஒரு நிறைவை உணர்கிறேன் – வெளி சூழலிலும் சரி, என் உள்நிலையிலும் சரி நான் மிக நிறைவாய் உணர்கிறேன். நாளையே ஏதோ நடந்து இந்த சமநிலை பாதிக்கப்பட்டால், அதைத் தாங்கும் வகையில் நான் இல்லை. நான் நிறைவாய் உணரும்போதே விடைபெற்றுச் செல்ல நினைக்கிறேன். அதனால் இதுதான் எனக்கு ஏற்ற நேரம். இந்நேரத்தை தவறவிட என்னால் இயலாது” என்றாள்.

சில காரணங்களினால் அந்நேரத்தில் எங்களால் பிரதிஷ்டையை செய்துமுடிக்க முடியவில்லை. குறிப்பிட்ட அந்த பௌர்ணமியன்று, சில தியான அன்பர்களுடன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தபோது, விஜி, அவள் விரும்பியதுபோல் இவ்வுடலைத் துறந்துசென்றாள். தியானம் ஆரம்பித்த எட்டாவது நிமிடத்தில், எவ்வித பிரயத்தனமும் படாமல், முகத்தில் ஒரு புன்னகையோடு அவள் தன் உடலை நீங்கிச் சென்றாள். அப்போது அவள் முழுமையான ஆரோக்கியத்தோடு இருந்தாள். முப்பத்தி-மூன்றே வயது. உடலில் சிறு சிதைவுகூட ஏற்படுத்தாமல், அத்தனை இலகுவாக அதைப் பிரிந்துசெல்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை. மிக எளிதாக அணிந்திருக்கும் உடையை களைந்திடலாம்... ஆனால் நாம் கொண்டிருக்கும் இவ்வுடலை, ஆடையைக் களைவது போல் எளிதாக உதறிவிட்டுச் செல்வது..? அது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமல்ல!

தன் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டது, இனி இவ்வுலகில் தான் பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ ஒன்றுமில்லை என்ற நிலைக்கு ஒருவர் எப்போது வருகிறாரோ, அப்போது அவர் முழு விருப்பத்தோடு இவ்வுடலை உதறிவிட்டுச் செல்கிறார். ஒருவேளை ஏதோ போராட்டமோ, அல்லது உடலிற்கு காயமோ, தீங்கோ விளைவித்தால், அது தற்கொலை. ஆனால் போராட்டங்கள் எதுவுமின்றி, ஏதோ அறையிலிருந்து வெளியே செல்வது போல, மிக சாதாரணமாக உடலைவிட்டு ஒருவர் வெளியேறினால், அது "மஹா சமாதி".

இதுபோல் ஒருவர் முழுவிழிப்புணர்வுடன், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், தானாக உடலை உதறிச் சென்றார் என்றால், அதன்பிறகு 'ஒரு உயிராக' அவர் இங்கு இருக்கமாட்டார். சாதாரணமாக ஒருவர் இறந்தால், “அவர் போய்விட்டார். இனி அவர் இல்லை” என்று சொல்வார்கள். ஆனால் அது நிஜமில்லை. நீங்கள் அறிந்திருந்த 'நபராக' அவர் இனி இருக்கமாட்டாரே தவிர்த்து, ஒரு உயிராக அவர் இன்னும் இருப்பார். ஆனால் மஹாசமாதி அடைந்தவர்கள் 'ஒரு உயிராக'க் கூட இங்கு இருக்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே கரைந்து போய்விடுவார்கள். அவ்வளவுதான்... அவர்களைப் பொறுத்தவரை இந்த நாடகம் முடிவடைந்தது!

எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் மஹா சமாதிதான் இறுதிக் குறிக்கோள். அந்த தெய்வீகத்தில் கரைந்து போகும்போதுதான், அவர்களின் ஆன்மீகசாதனை முடிவுறும்.

"நான் விஜி என்று குறிப்பிடுவது, என் மனைவியையோ அல்லது இன்னொரு பெண்ணையோ அல்ல"

கீழ்வருவது விஜி மஹா சமாதியடைந்தஇருதினங்களுக்கு பிறகு 1997 தைபூசத்தன்று சத்குரு பேசியது.

சத்குரு:விஜி பற்றி பிறரிடம் எடுத்துரைப்பதென்பது மிகவும் கடினமானது. நான் விஜி என்று கூறும் போது, என் மனைவியாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ அவளை குறிப்பிடவில்லை. ஒரு உயிராக, என்னுடைய அனுபவத்தில் அவள் மிகவும் அற்புதமானவளாகவே என்றும் இருந்திருக்கிறாள். அவள் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என்று உங்களில் பலபேருக்கு தெரிந்திருக்கும். குழந்தையயைப் போல இருந்த அவளிடம் உணர்ச்சிகள் எப்பொழுதும் எல்லா சூழ்நிலையிலும் வெளிபட்டன. இப்போது ஆன்மீகத்தேடலில் இருப்பவரின் இறுதி இலக்கான மஹா சமாதி நிலையை சற்றும் சிரமமின்றி எட்டி அவளது மதிப்பை நிரூபித்துகாட்டிவிட்டாள்.

இது குழந்தை விளையாட்டு அல்ல; பல பிறவிகளாக ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள்கூட இந்த நிலையை அடைய போராடுவார்கள். உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உயிரை வெளியேற்றுவது என்பது வேறுவிதமான செயல். இதற்கு நிறைய சக்தியை சேகரிக்க வேண்டும்; தீவிரமான சாதனாவில் ஈடுபட வேண்டும். அதை எப்படி அடைய வேண்டுமென்ற முறையை தெரிந்து கொண்டு, அதை நோக்கி செயல்கள் செய்து கொண்டிருந்தாள். ஆனால் இந்த நேரத்தில் என்னுடைய உதவி இல்லாமல் அவளால் எவ்வாறு தேவையான சக்தியை சேகரிக்க முடிந்தது என்று கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. அவள் தன்னை இதனுள் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தாள். ஆனால் அதனை அடைந்துள்ள வேகம் - மிகவும் அதிகம். இது அன்பினால் மட்டுமே அவளுக்கு சாத்தியமடைந்துள்ளது; அவளுக்கு தெரிந்ததும் அன்பு மட்டுமே.

நடந்த நிகழ்வுகளனைத்தையும் பார்த்தால் தெய்வீகத்தின் நேரடி தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. அவள் இதயத்தின் குரலான "ஷம்போ" தான் அவளை கைப்பிடித்து அழைத்து சென்றிருக்கிறார். அன்பின் தீவிரத்தால் மட்டுமே அவளால் இதை சாத்தியமாக்க முடிந்தது.

அவளுக்கு நெருக்கமான சிலரிடம் இது குறித்து பலமுறை பேசி இருக்கிறாள். எந்த ஒரு பிணைப்புமில்லாமல் தன்னுடைய உடலை முழு விழிப்புணர்வுடன் விடுவதே அவளின் ஒரே நோக்கம் என்று வெளிபடுத்தியிருக்கிறாள். என்னிடமும், "நான் விடைபெற வேண்டும்" என்பதே அவளின் நிலையான மந்திரமாக இருந்தது.

ராதேவை ஊட்டியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வரும் வழியில் எப்போதும் போல "ஷம்போ" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தாள். அப்போது கண்ணீர் மளமளவென வழிந்தது. என் கைகளை பிடித்து வாகனத்தை நிருத்தும்படி கேட்டுக்கொண்டாள். எனக்கு வேறு எந்த ஷம்போவையும் தெரியாது. சில நேரங்களில் நான் உங்களை அந்த வடிவில் கண்டுள்ளேன். நீங்கள் மட்டும்தான் என் மோக்‌ஷத்திற்கு உதவ வேண்டுமென்று கூறி அழுதாள். “உனக்கு அவரை தெரியுமோ தெரியாதோ ஆனால் அவருக்கு உன்னை நன்றாக தெரியும். நீ என்ன செய்கிறாயோ அதை முழுமனதுடன் செய், நீ என் உருவத்தையும் கடந்து அவரை அனுபவப்பூர்வமாக உணர முடியும், அறிய முடியும் என்று நான் கூறினேன்.

வழக்காமாக பௌர்ணமி தினங்களில் சில தீவிரமான சாதனாக்களில் அவள் ஈடுபடுவாள். காலை 8:45 மணிக்கு குளித்துவிட்டு சாதனாவிற்கு அமருவாள், பின் 11:45 மணிக்கு அதைப்போல் குளித்துவிட்டு அமருவாள், மறுபடியும் மதியம் 3:45 மணிக்கு குளித்துவிட்டு தனது பயிற்சிகளை தொடங்குவாள். அவள் சமாதியடைந்த அன்று, அந்த மூன்று வேளைகளிலும் நான் அவளுக்குப் பயிற்சிகளை தொடக்கி வைத்துவிட்டு வகுப்பெடுக்கச்சென்றேன். மாலை 6:15 மணிக்கு "ஷம்போ" என்ற உச்சாடனையில் கலந்துவிட்டாள்; அவனுடையவள் ஆகிவிட்டாள்.

"வெற்றித்திருமகள்"

இன்றும், அவள் விட்டுச்சென்ற சக்தியை உணர போது, அன்பின் இடமான அனஹத்தா சக்கரத்தின் வழியாக அவள் உயிர் பிரிந்தது என்பது தெளிவாக தெரிகிறது. உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டுவதற்கு எந்த உயிருக்கும் இதை விட சிறந்த வழி எதுவுமில்லை. அந்த உயிருக்கு, உடலுடைய பிணைப்பு இனியில்லை. அவளது பெயர் விஜய குமாரி, அதாவது "வெற்றியின் திருமகள்" – எந்த உயிருக்கும் கிடைக்கக்கூடிய அதிகபட்ச வெற்றியை அவள் அடைந்து விட்டாள்.

அவள் எனது வீட்டை வெறுமையாக்கி விட்டு நமது இதயங்களை நிரப்பியிருக்கிறாள். ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் தியானலிங்க பிரதிஷ்டையில் அவளுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. அதற்கான பணிகள் மகத்தான வகையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அதில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவளை தன்னவள் ஆக்கி கொண்ட ஷம்போதான் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

எனக்கு இறப்பு ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் அவள்விட்டுச் சென்ற அன்பு என்ற சக்தி, அதைதான் என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. இனிமேல் நாம் இங்குசெய்கின்ற எல்லா சாதனாவிலும் இந்த புதுமையான பரிபூரணமான அன்பின் மணம் வீசும். ஆன்மீகப் பாதையிலிருக்கும் அனைவருக்கும் மகா சமாதி அடைவதுதான் ஒரே இலக்கு. அவர்கள் செய்கின்ற அனைத்து சாதனாவின் முழு நோக்கமும் தெய்வீகத்துடன் கலப்பது தான். பிறப்பு மற்றும் இறப்பை கையிலெடுக்கும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவான நம்பிக்கை என்னவென்றால், இது போன்ற விஷயங்கள் பண்டைய கால ரிஷிகள் மற்றும் முனிவர்களுடன் முடிந்து விட்டது என்பது. ஆனால் ஆன்மீகத்தின் உயரிய வாய்ப்பு இன்னும் மிக உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

பொரும்பாலானவர்கள் உண்மையான ஞானிகளின் காலம் முடிந்துவிட்டது என்று தீர்மானித்துவிட்டனர். ஆனால் இந்த நிகழ்வு, அது இப்போதல்ல எப்போதும் முடிவடையாது என்று நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில், இங்கிருக்கும் யாரும் அவர்கள் உடலை விட்டு பிரிந்து செல்வதை என்று நான் விரும்பியிருக்கவில்லை. ஆனால் அவள் இதற்காக ஆசைப்பட்டாள். "ஷம்போ" என்ற மகா மந்திரத்துடன் கலந்துவிட்டாள். நான் மட்டுமல்ல யாரும் இது சரியா தவறா என்று கேள்வி எழுப்ப தேவையில்லை. அவரை கேள்விகேட்கும் அளவுக்கு நான் பெரியவனில்லை.

இது வியக்கத்தக்கது, உண்மையில் மிகவும் வியக்கதக்க ஒன்றுதான்! என்னுடைய உதவி இல்லாமல் இறப்பு என்ற பந்தத்தையே கடந்துவிட்டாள். அன்பினால் அவள் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிட்டாள். நாம் நமது அன்பினால் நம் கையில் இருக்கும் பணிகளை நிறைவேற்றுவோம்.

ஆஊம் ஷம்போ ஷிவ ஷம்போ

ஜெய ஷம்போ மகாதேவா