சத்குரு: நான் பள்ளியில் படித்த காலத்தில், எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பள்ளிச் செல்வதைத் தவிர்த்தேன். எதுவாக இருந்தாலும் மிக லாவகமாக ஏறுவேன். பள்ளிக்குச் செல்லும்போது டிப்பன் டப்பாவும் தண்ணீர் பாட்டிலும் கொடுப்பார்கள், அதோடு என்னிடம் ஒரு சைக்கிளும் இருக்கும், அதனால் அன்றைய தினத்திற்கு அதுவே எனக்குப் போதும். காலையில் பள்ளிக்கு அசம்பிளிக்குச் சென்று வருகையைப் பதிவு செய்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளி வளாகத்தின் மிகப்பெரிய மரத்திற்குச் சென்று, என்னால் ஏற முடிந்த உச்சிக்கிளைக்கு ஏறி அதன் மிக மெல்லிய கிளையின் விளிம்பில் உட்கார்ந்துகொள்வேன்.

காற்றில் கிளை தொடர்ந்து முன்னும் பின்னும் அசைந்துகொண்டே இருக்கும், இரண்டு மூன்று மணி நேரத்தில் நான் எப்படிப்பட்ட நிலையை அடைவேன் என்றால், மிகவும் பரவசமாகி அங்கிருந்து பறந்து செல்லத் தோன்றுமளவு ஆகிவிடும். நாள் முழுதும் அங்கேயே உட்கார்ந்துகொண்டு இருப்பேன். அந்த சிறு வயதில் எனக்கு அவர்கள் வாட்ச் கொடுக்கவில்லை, அதனால் மற்ற குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்குப் புறப்படுவதைப் பார்த்து நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்து நானும் கீழே இறங்கி வீட்டிற்குச் செல்வேன். பல காலத்திற்குப் பிறகு நான் தியானம் செய்யத் துவங்கியபோதுதான், மரக்கிளையோடு அசைந்தபோது நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாமலே தியானித்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்.