யக்ஷா திருவிழாவின் துவக்க நாளான இன்று, மாளவிகா சருக்கை அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி கண்களுக்கு கலைவிருந்தாய் அமைந்தது. பிரபஞ்ச நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத்திற்கு அதிபதியான அந்த ஆதிசிவனுக்கு மலர்களை அர்ப்பணிக்கும்வண்ணம், தனது நடனத்தை துவங்கிய மாளவிகா அவர்கள், தொடர்ந்து நீலாம்பரி ராகத்தில் அமைந்த சிவபக்தியை வெளிப்படுத்தும் ஒரு பாடலுக்கு தனது அற்புத நடனத்தை வெளிப்படுத்தினார்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கதையை தன் பரதத்தின் மூலம் வெளிப்படுத்திய மாளவிகா, பாபநாசம் சிவன் அவர்களின் புகழ்பெற்ற பாடலான 'என்ன தவம் செய்தனை யசோதா' என்ற பாடலுக்கு வெளிப்படுத்திய தன் அபிநயத்தால் அந்த கோகுலத்தையே கண்முன் நிறுத்தினார். பரதத்தில் தேர்ந்த அந்த ஒப்பற்ற கலைஞரின் நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

சத்குரு பேசும்போது...

பரதநாட்டிய நிகழ்ச்சியின் நிறைவில் மாளவிகா சருக்கை அவர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் வாழ்த்தி ஆசிவழங்கிய சத்குரு, நமது தேசத்து கடவுள்கள் மட்டுமே ஆடவும் பாடவும் கூடியவர்கள் என்று கூறினார். இந்தக் கலாச்சாரத்தில், பரதநாட்டியம் என்னும் இந்த கலை வடிவம் 20 வருடங்களுக்கு முன்பு வரைகூட, கோவில்களில் இறைத்தன்மைக்கு அர்ப்பணிக்கும் கலைப்படைப்பாக இருந்தததை நினைவுகூர்ந்தார்.

லிங்கபைரவி தேவிக்கு தனது நடனத்தை அர்ப்பணித்த மாளவிகா அவர்களுக்கு தனது ஆசிகளை தெரிவித்தார், சத்குரு.

yaksha, mahashivarathri, isha

மாளவிகா சருக்கை அவர்களின் சிறப்புகள்

மாளவிகா சருக்கை, தனது கலை ஆளுமையினாலும் யுக்திகளாலும் கற்பனைத் திறம் மிக்க நடன அமைப்பு இயக்கத்தாலும் பார்வையாளர்களுக்கு நடனத்தின் இதயத்துடிப்பை உணரச்செய்யும் திறன் வாய்ந்தவர்.

மாளவிகா சருக்கை அவரது தாயாரின் ஊக்குவிப்பால் தனது ஏழாம் வயதில் குரு கல்யாணசுந்தரம் (தஞ்சாவூர் பள்ளி) மற்றும் குரு ராஜரத்தினம் (வழுவூர் பள்ளி) அவர்களிடத்திலும் நாட்டியம் கற்றுக்கொண்டார். குரு கலாநிதி நாராயணன் அவர்களிடம் அபிநயத்தையும், குரு கெலுசரன் மொகபத்திரா மற்றும் ரமணி ராஜன ஜேனா ஆகியோரிடம் ஒடிசி நடனத்தையும் கற்றுக்கொண்டார். இந்திய ஜனாதிபதியிடமிருந்து “பத்மஸ்ரீ” விருது, 2002ல் “SNA” விருது, (டெல்லி) மத்திய நாடக சங்கீத அகாடமி விருது, மாநில அரசிடமிருந்து “கலைமாமணி” விருது, இந்திய அரசின் கலை துறையிடமிருந்து “ஹரிதாஸ் சம்மேளன” விருது ஆகிய மதிப்புமிக்க பல விருதுகளைப் பெற்றவர் மாளவிகா சருக்கை அவர்கள்.

யக்ஷா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இணையதளத்தில் இலவசமாய் காண இங்கே சொடுக்குங்கள்