மிக உயர்ந்த ஒரு விஷயம் மிகச் சாதாரணமாக நமக்கு கிடைத்துவிட்டால் அதன் மகத்துவம் நம்மில் பெரும்பாலானோருக்கு விளங்காமலேயே போய்விடுகிறது. உச்சபட்ச ஆன்மீகமானாலும் சரி, கொல்லைப்புற பப்பாளி ஆனாலும் சரி... தவறவிடுகிறோம் என்பதுதான் உண்மை.

பழங்களிலேயே இன்றைய தேதியில் குறைந்த விலைக்கு அதிகம் கிடைக்கும் ‘சீப்’பான பழங்களில் பப்பாளி முக்கியமானது. விலையில் ‘cheap’... ஆனாலும், இவை ஆரோக்கியத்திலும், ஊட்டச்சத்திலும் ‘Chief’!

சிட்ரஸ் பழங்களுக்கு இணையான வைட்டமின் ‘சி’ உள்ளதால், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை நீக்கும் ஆற்றலும் பப்பாளிக்கு உண்டு!

பப்பாளியில் கிடைக்கும் அபரிமிதமான வைட்டமின் ‘ஏ’ சத்து கண்பார்வையை கூர்மையாக்குகிறது. ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் மாலைக்கண் நோய் வராமல் காக்கும் தலையாய உணவு இது!

பழங்களில் குறைந்த கலோரி கொண்டது. அதாவது, 100 கிராமிற்கு 29 கிலோ கலோரி உள்ளது. டயட் மூலம் உடல்பருமனை குறைக்க விரும்புவோர்க்கு ஒரு ‘‘cheap & best’ தேர்வு பப்பாளி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

‘இதை சாப்பிடக்கூடாது.. அதை சாப்பிடக் கூடாது..’ என ஏங்கித் தவிக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு, பப்பாளியின் நார்ச்சத்தோடு கூடிய மிகக் குறைந்த அளவு சர்க்கரை சத்து ஓர் உற்ற நண்பன்.

மாதவிடாய் ஏற்படுவதில் சிக்கல், மாதவிடாய் மிகமிக குறைவாய் வெளிப்படுவது போன்ற சிக்கல் உள்ள பெண்கள் தங்கள் உணவில் பப்பாளியை தொடர்ந்து சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறது இயற்கை மருத்துவம்.

‘பபெயின்’ எனப்படும் இதன் இயற்கையான ‘நொதி’, புரதத்தை செரிக்க வைக்கும் வல்லமை பெற்றது. இதனால், புரதம் அதிகமுள்ள மாமிசம், பருப்பு வகைகளை உண்ணும்போது பப்பாளி துண்டுகள் எடுத்துக்கொள்வது செரிமானத்திற்கு உதவும். மருந்து தயாரிப்பில் செரிமானத்திற்கு உதவும் டானிக்குகளில் இவை சேர்க்கப்படுகின்றன.

பப்பாளியின் பிஞ்சுக்காயில் இருந்து எடுக்கப்படும் வெள்ளை நிற பால், தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இறைச்சியை மென்மையாக்குவதற்கு பப்பாளி பால் பயன்படுகிறதாம்.

  • மேலும், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிரம்பி உள்ளதால், தோலில் சுருக்கம் உண்டாகி வயதான தோற்றம் ஏற்படுவதை பப்பாளி பயன்படுத்துவதால் தள்ளிப்போட முடியும்.
  • பப்பாளி பழத்துண்டுகளைக் கொண்டு Facial செய்வது பட்ஜெட்டுக்குள் உங்கள் முகப்பொலிவை அதிகரிக்கும் ஓர் வாய்ப்பு!!
  • சிட்ரஸ் பழங்களுக்கு இணையான வைட்டமின் ‘சி’ உள்ளதால், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு நீங்கும்.
  • பொட்டசியம் சத்து நிறைந்திருப்பதால் இரத்தக்கொதிப்பு, இருதய நோயாளிகள் உண்ண ஏற்றது.
  • சித்த மருத்துவத்தில், கல்லீரலை வலுவாக்கும் திறன் கொண்டது என பப்பாளி அறியப்படுகிறது.
  • குறுமிளகு போன்று இருக்கும் பப்பாளியின் விதைகளை குழம்பு வைத்து குழந்தைகளுக்கு அளிப்பது, குடற்புழுக்களுக்கு மருந்தாக அமைகிறது.
  • மலச்சிக்கலை நீக்குவதற்கும் இது பெரிதும் பயன்படுகிறது.
  • உடலில் பித்தம் சமநிலை அடைய உதவுகிறது. 

அறிவியல் ஆதாரம்

கர்ப்ப ஸ்திரீகள், கர்ப்பமடைய விழையும் பெண்கள் பப்பாளியை தவிர்க்க வேண்டும் என்பது நம் பாரம்பரிய வழக்கம். விலங்குகளில் நடத்தப்பட்ட அதிநவீன மருத்துவ சோதனையில், பப்பாளிக்காயும், பாதி பழுத்ததுமான பழமும் கர்ப்பப்பையின் தசைகளில் அழுத்தத்துடன் கூடிய சுருக்கத்தை ஏற்படுத்துவதால் கரு தங்குவதில் சிக்கல் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

டெங்கு காய்ச்சல் முற்றினால், இரத்தத்தில் தட்டை அணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இரத்தக்கசிவு ஏற்படுகிறது. பப்பாளி இலைச்சாற்றை நோயாளிக்கு அளிக்கும்போது, தட்டை அணுக்கள் மீண்டும் பழைய நிலையை அடைகின்றன என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டது. பலரும் இதனால் பயனடைந்தார்கள் எனவும் அறியப்பட்டது. papaya

தமிழக அரசும் கூட டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்துடன், பப்பாளி சாறையும் உபயோகிக்க ஊக்கப்படுத்தியது. பப்பாளி இலைச் சாற்றின் இந்த தன்மைக்கு அறிவியல் ஆதாரம் தேட விழைந்தபோது, விலங்குகளில் இவை தட்டை அணுக்களின் எண்ணிகையை உயர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், Molecular Docking எனும் கோட்பாட்டின் அடிப்படையில் டெங்கு வைரஸ் கிருமியின் புரதத்துடன் வினை செய்து,  அந்த வைரஸையே அழிக்கும் மூலக்கூறை பப்பாளி இலைச் சாறு கொண்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வில் தெரிகிறது.

மேற்கூறிய இந்த இரு விஷயங்களுமே, நமது பாரம்பரிய அறிவு. இந்த ஞானத்தை அறிவியல் உலகமும் ஏற்றுக் கொண்டாகிவிட்டது. இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். எனினும், நம் பாரம்பரியம் என்றாலே மூடநம்பிக்கை, இந்துத்துவம் என பரிகாசம் செய்வதில் தம் சக்தியை செலவிடும் நம் சகோதரர்கள், அதே சக்தியை நம் கலாச்சார ஞானத்தை முன்முடிவின்றி மீளாய்வு செய்வதில் செலவிட்டால் பரவாயில்லை. இது நடந்தால், நம் மண்ணின் பொக்கிஷங்களை உலகம் பயன்பெறும் வண்ணம் வழங்கிட முடியும்.