ஈஷா யோகா மையத்தில் நிகழும் தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான யக்‌ஷா  கொண்டாட்டத்தில், நேற்றைய மூன்றாம் நாள் திருவிழாவில், நான்கு தரமிக்க கலைநிகழ்சிகள் அரங்கேறின.

முதல் நிகழ்வாக காலை 11 மணியளவில் "சேலை - ஒர் அனுபவம்" என்ற நிகழ்ச்சி சூரிய குண்டம் மேல்தளத்தில் துவங்கப்பட்டு மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பகுதிகளிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் சேலையின் வரலாற்றுப் பின்புலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 108 முறைகளில் சேலைகட்டி காண்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சேலைகள் தனித்துவத்துடன் நெய்யப்படும் விதம், கட்டப்படும் முறைகள் மற்றும் அவற்றிற்கான வரலாற்று பின்னணிகள் விவரிக்கப்பட்டது சுவாரஸ்ய அம்சமாக அமைந்து, அங்கு கூடியிருந்த பெண்மணிகளை ஆவல்கொள்ளச் செய்தது மட்டுமல்லாமல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஈஷா சம்ஸ்கிருதி இசைநிகழ்ச்சி…

மதியம் 2 மணியளவில் சூரிய குண்டம் முன்பாக ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் இசைநிகழ்ச்சி அரங்கேறியது. முத்துசுவாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் மற்றும் தேவாரப் பாடல்களை தெய்வீக மணத்துடன் வழங்கிய மாணவர்கள், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் அபிமானத்தைப் பெற்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ராஜஸ்தான் நாட்டுப்புற பாடல்கள்…

ஃபகீரா கேத்தா கான் மற்றும் குழுவினர் சுமார் 3 மணியளவில் உற்சாகம் ததும்பும் ராஜஸ்தான் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சூரியகுண்டம் முன்பாக வீற்றிருந்த மக்களை துள்ளாட்டமிடச் செய்தனர். 

மஹாசிவராத்திரி இரவில் இவர்கள் மீண்டும் வழங்கவிருக்கும் மாபெரும் கலைநிகழ்ச்சிக்காக மக்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பது அவர்கள் வழங்கிய கரகோஷத்திலிருந்து புரிந்தது.

மாலைநேர கலைநிகழ்ச்சி…

நேற்றைய மாலைநேர கலைநிகழ்ச்சியில் லீலா சாம்சன் மற்றும் ஸ்பந்தா நாட்டியக் குழுவினர் வழங்கிய "நதி" என்ற நாட்டிய படைப்பு அரங்கேறியது.

ஒரு ஆற்றின் ஓட்டமும் அதன் வெவ்வேறு நினைவலைகள்  எப்படி வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை வெளிக் கொண்டு வரமுடியும் என்பதை மையமாக வைத்து இப்படைப்பு உருவாக்கப்பட்டது.  பல காலமாக பாரதத்திலிருந்த கவிஞர்களின் படைப்பில் காதலையும், அதன்  ஏக்கங்களையும், பரிமாண வளர்ச்சியையும், ஆழ்ந்த சித்தாந்தங்களையும் ஆறுகள் எப்படி வளர்த்தன என்று இவரின் படைப்பான  “நதி” பரிசோதித்து பார்ப்பதாக இருக்கிறது. 

இந்த நாட்டிய நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடன கலைஞர்கள் – அதிதி ஜெயிட்லி, சத்யப்ரியா ஐயர்; அஷ்வினி விஸ்வநாதன்; ராதே ஜக்கி; அதுல் பாலு; பவஜன் நவரத்னம்; சர்வேஷான் கங்கென்; ஹரிக்ரிஷ்னா பாலக்ரிஷ்ணன் மற்றும் சீஸன் உன்னிக்ருஷ்ணன்.

பாடல்களை எழுதியவர் நவீன இசை மேதை ராஜ்குமார் பாரதி மற்றும் சாய் ஷ்ரவணம் ஒலி அமைப்பாளர். 
 

யக்‌ஷாவைப் பற்றி:

'யக்‌ஷா', இந்தியாவின் புராண இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தேவலோக கலைஞர்களை குறிக்கும் விதத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. காண்பவரின் உள்ளம் கவரும் வண்ணமயமான இசை மற்றும் நடனத் திருவிழா, இந்த யக்‌ஷா. புனிதமான தியானலிங்க வளாகத்தில், பசுமையான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், ஈஷா அறக்கட்டளை இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 

இவ்வருடம் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் யக்‌ஷா திருவிழாவில், தொடர்ந்து 3 நாட்களின் மாலைப் பொழுதுகளிலும் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஆர்வமிக்க பார்வையாளர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பது மற்றுமொரு சிறப்பு அம்சம்.


பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலைப் பெற்றிருக்கும் இந்தியக் கலை வடிவங்களை, நம் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் படைக்கிறது யக்‌ஷா. இவை நம் கலாச்சாரத்தின் மாறுபட்ட கலை வகைகளை பிரதிபலிப்பதுடன், ஆன்மீகத் தூண்டுதலுக்கு ஆழமான அடித்தளமாகவும் அமைகிறது.