வசதி வாய்ப்பற்ற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதில் ஈஷா பலவித செயல்திட்டங்களை செயல்படுத்திவரும் நிலையில், மத்திய அரசு திட்டத்துடன் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறை குறித்து சில வரிகள் இங்கே!

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (RMSA - ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்) எனும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பலவித செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் கைகோர்த்துள்ள ஈஷா அறக்கட்டளை, ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு சிறப்பு பயிற்சிப் பட்டறை ஒன்றை ஈஷா யோகா மையத்தில் ஜூன் 7 முதல் 11 வரை ஏற்பாடு செய்திருந்தது.

கணிதம் மற்றும் அறிவியலை விளையாட்டாக கற்பிக்கும் வழிமுறைகள், மொழி பாடங்களில் சிறந்த பயிற்சி வழங்குதல் மற்றும் குறிப்பாக வகுப்பறையை இனிமையான சூழலாக, மாணவர்கள் விரும்பக்கூடிய ஒன்றாக அமைப்பது குறித்த பயிற்சிகள் ஆகியவை ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இடைநிலை கல்வி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான இந்த ஐந்து நாட்கள் பயிற்சிப் பட்டறையில், கற்பித்தலை இனிய அனுபவமாக மாற்றி மாணவர்களை கல்வியில் முன்னேற்றமடையச் செய்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. ‘கற்றல்’ என்பது ஆனந்தமான ஒரு அனுபவமாக இருக்க வேண்டும் என சத்குரு எப்போதும் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பல்வேறு அழுத்தங்கள் மாணவர்களின் மீது திணிக்கப்படுகின்றன. இதுகுறித்து கடந்த ஜூன் 5ஆம் தேதி சென்னையில் நிகழ்ந்த உலக யோகா தின துவக்க விழாவில் பேசிய சத்குரு, மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் அபாயத்தை சுட்டிக் காட்டி, அதற்கான தீர்வாக யோகா இருக்கும் என்பதையும் அங்கே தெரிவித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் உப-யோகா வழங்கப்பட்டது. ஆனால் அங்கே நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்காமல் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களிடத்தில் இந்த பயிற்சி சென்றுசேரும் பட்சத்தில், மாணவர்களுக்கு முறையாக அது சென்று சேர்ந்துவிடும் என்பதுதான் அதன் நோக்கம்.

ஆசிரியர்களே மாணவர்களின் வழிகாட்டியாக இருந்து அவர்களை வடிவமைக்கின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இணைந்து பயிற்சி வகுப்பை வழங்கியுள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரிய பயிற்றுநர்களுக்கே பயிற்சியை வழங்கியுள்ளது. இதன்மூலம் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் அடையாளம்கண்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி அவர்களை சிறப்படையச் செய்வார்கள்.

9ஆம் வகுப்பு வரை அனைவரும் ‘பாஸ்’ என்ற நடைமுறையினால், பல மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளிகளில், 9ஆம் வகுப்பில் இருக்கும் போதிலும் சரியான பயிற்சி இல்லாததால், ஆரம்பப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்திலேயே சில மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்காக ஈஷா அறக்கட்டளை இந்த பயிற்சிப் பட்டறையை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது. கணிதம் மற்றும் அறிவியலை விளையாட்டாக கற்பிக்கும் வழிமுறைகள், மொழி பாடங்களில் சிறந்த பயிற்சி வழங்குதல் மற்றும் குறிப்பாக வகுப்பறையை இனிமையான சூழலாக, மாணவர்கள் விரும்பக்கூடிய ஒன்றாக அமைப்பது குறித்த பயிற்சிகள் ஆகியவை ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு வழங்கப்படுகின்றன.

32 மாவட்ட பள்ளி ஆசிரியர்களில் குறிப்பிட்ட ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த, ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் பங்கேற்க வாய்பளிக்கபட்டது. நிகழ்ச்சியில் ஈஷா - அரசு பள்ளி வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பூபதி அவர்கள் வரவேற்புரையையும், கோவை மாவட்டத்தின் அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துமாணிக்கம் அவர்கள் வாழ்த்துரையினையும் வழங்கினர். கோவை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் திரு. அருள்முருகன் அவர்கள் இப்பயிற்சியினை சிறப்புரை ஆற்றி துவக்கிவைத்தார்.

இந்த பயிற்சிக்கு பின்னர் தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியினை இந்த ஆசிரிய பயிற்றுநர்கள் வழங்குவர். பயிற்சி பெரும் ஆசிரியர்கள் குறைதீர் கற்பித்தல் திட்டத்தின் கீழ் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிப்பர்.

மேலும், அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் ஈஷா உப-யோகா பயிற்சிகளும் கற்றுதரப்பட்டது, எனவே அவர்கள் மாணவர்களுக்கு உடல், மனநலத்திற்க்கான ஈஷா உப-யோக பயிற்சிகளையும் கற்றுகொடுப்பார்கள்.

இப்பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்:

“பல்வேறு சூழ்நிலைகளில் நாம் (ஆசிரியர்கள்) மாணவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகளை ஒருங்கிணைத்து அவற்றிற்கான தீர்வுகளையும் முன்னெடுத்து சென்றது நல்ல வழிகாட்டியாக அமைந்தது.” - சத்தியநேசன், பெரம்பலூர் மாவட்டம்.

“நான் இதுவரை கண்டிராத புதுமையான, வித்தியாசமான பயிற்சி இது! மேலும் இப்பயிற்சியில் கற்றுகொண்டதை நேரில் பார்ப்பதற்கு ஈஷா வித்யா பள்ளிக்கு சென்றபோது, அங்கே விதிகளை ஆசிரியர்கள் உருவாக்காமல் மாணவர்களே உருவாக்கி உள்ளதை கண்டேன், குழந்தை மைய கல்வி என்றால் என்ன என்பதை நேரடியாக உணரமுடிந்தது.” - இராசன், தர்மபுரி மாவட்டம்.

“வகுப்பறை சூழலில் ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்கள் வளர்ச்சிக்கு முழு பொறுப்பு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்னார்கள். அடிப்பது, அனிச்சை செயலாகிவிட்ட இந்த நிலையில், அது அருவருக்கதக்க செயல் என்பதை நாசூக்காய் புரியவைத்தமைக்கு பாராட்டுகள். இந்த பயிற்சிபெற வாய்ப்பளித்த RMSA கல்வித்துறைக்கும், பயிற்சி வழங்கிய ஈஷா கல்வி அறக்கட்டளைக்கும் நன்றி.” - இராஜகோபால், புதுகோட்டை.